Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
அலமாரி
நெய்யாடி வாக்கம்
- நெ.து. சுந்தரவடிவேலு|ஜூலை 2023|
Share:
எங்கள் ஊரின் மேற்குக் கோடியில் ஒரு சிவன் கோயிலும், கிழக்குக் கோடியில் மற்றொரு சிவன் கோயிலும் உள்ளன. ஊர் நடுவில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. மூன்று கோயில்களிலும் சிறியது அதுவே.

மூன்று கோயில்களிலும் பூசை உண்டு. சிவன் கோயில்களில் பூசை செய்யும் குருக்களே பெருமாள்கோவில் பூசைக்கும் உரியவர்கள். அக்கோயிலுக்கு என்று தனியாக பட்டர் இல்லை.

இவை போக, ஒரு தருமராசா கோயிலும், மூன்று அம்மன் கோயில்களும் உண்டு. முந்தியது கலனாகிவிட்டது. மற்றவை இன்றும் இயங்குகின்றன. இந்நான்கிலும் பூசை செய்வோர், குருக்கள் அல்லாதவர்கள்; வன்னியரும் ஆதிதிராவிடரும்.

கோயில் பூசைக்கென்றே நெடுங்காலமாக, எங்கள் சிற்றூரில் இரு குருக்கள் குடும்பங்கள் உள்ளன. பூசைமுறை ஓராண்டு ஒரு குடும்பத்திற்கும். அடுத்த ஆண்டு மற்றொரு குடும்பத்திற்கும் வரும்.

அதற்காகச் சிறிய மானியம் இருந்தது. அதைக்கொண்டு அமைதியாக, நிறைவாக வாழ்ந்த குருக்கள் குடும்பங்களே என் நினைவுக்கு வருகின்றன. குருக்கள் குடும்பங்கள் போக, தெலுங்கு அய்யர் குடும்பம் ஒன்று இருந்தது. 'கோளவேட்டு அய்யர்' என்று அழைக்கப்பட்ட அவர், குருக்கள் வீடுகளுக்கு எதிரில் தம் சொந்த வீட்டில் குடியிருந்தார். அவருக்குக் கொஞ்சம் நிலமும் இருந்தது. அதோடு சில ஆண்டுகள், மளிகைக் கடை வைத்திருந்தது நினைவுக்கு வருகிறது. அக்குடும்பமும் எல்லாரோடும் நன்றாகப் பழகியது.

நான் பிறந்த தெருவில், இந்த மூன்று வீடுகள் தவிர மற்றவை எல்லாம் எங்கள் உறவினர் வீடுகள்.

பெருமாள் கோயில் பூசைமுறை வரும் ஆண்டில் அக்குருக்களுக்குச் சிவன் கோயில் பூசை வராது.

என் அப்பாவின் அப்பாவிற்கு மூன்று சகோதரர்கள். எனவே பங்காளிகள் வீடு நான்கு. தாத்தாவிற்கு இரு சகோதரிகள். அவர்களும் உள்ளூரிலேயே வாழ்க்கைப் பட்டார்கள். அவர்கள் வீடுகள் இரண்டும் எதிரில் இருந்தன. என் தாய் வீடும் அவ்வூரிலேயே. தாயின் மாமாவினுடைய வீடு ஒன்று. ஆக எட்டு வீடுகள் என் உறவினர் வீடுகள். பதினொரு வீடுகளைக் கொண்ட எங்கள் தெரு, அந்தக் கிராம நிலைக்கு அகலமானதே.

என்னுடைய பிள்ளைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தெருவில் குழி, பள்ளங்கள் நிறைய இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்காரரும் அவ்வீட்டுக்கு எதிரில் உள்ள தெருவைச் சாணி பூசி மெழுகி வைத்துக் கொள்வார்கள். எங்கள் தெரு தூய்மையாக இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் புறக்கடைத் தோட்டம் உண்டு; அதில் குடிநீர்க் கிணறும் தனியே உண்டு.

மற்றொரு தெரு வன்னியத் தெரு. அதில் ஒரு தச்சர் குடும்பம், இரு சலவைத் தொழிலாளி குடும்பங்கள், இரு நாவிதர் குடும்பங்கள், ஒரு முஸ்லீம் குடும்பம் போக மற்ற முப்பது, நாற்பது வீடுகள் வன்னியர்களின் வீடுகள். அவர்கள் பயிர்த்தொழில் ஒன்றையே நம்பி வாழ்ந்தார்கள்.

ஆதி திராவிடர்கள் ஊருக்குக் கிழக்கே ஒரே குடியிருப்பாக வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே சாதி. எனவே அவர்களுக்குள் உட்சாதிச் சண்டை இல்லை. பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகள்.

கல்வியின் தேவையை உணராத மக்கள்
நான் சிறுவனாக இருந்தபொழுது நெய்யாடிவாக்கத்தில் தொடக்கப் பள்ளிக்கூடமும் கிடையாது.

தன்னாட்சியின் கீழ் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கல்விக் கண்களைக் கொடுப்பதைத் தன்னுடைய கடமைகளில் ஒன்றாகக் கருதவில்லை, அன்றைய ஆங்கில ஆட்சி.

'நான்காவது வரையிலாவது, நாட்டில் உள்ளோர் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் மசோதா ஒன்றை, நாட்டுப் பற்றாளராகவும் கல்வியின் புரவலராகவும் விளங்கிய கோபால கிருஷ்ண கோகலே என்ற அறிஞர், இந்தியச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அது சட்டமாகவில்லை.

ஏன்?

அன்னிய ஆட்சித்துறை எதிர்த்தது. 'இது இயலாது' என்றது. நான்காம் வகுப்புவரை பாடஞ் சொல்லிக் கொடுக்கவும் இசையவில்லை.

நாம் அன்னிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, கால் நூற்றாண்டு ஆனபோதிலும் ஆட்சிகளோடு கருத்து வேற்றுமை கொள்ளும் உரிமை சான்றோர்களுக்கே இல்லை. ஆங்கில ஆட்சியில் அரசை எதிர்த்து ஓட்டளிக்க யாருக்காவது முடியுமா?

சுதந்திர இந்தியாவில் ஆகாதவர்களைக் கொடுமைப்படுத்த 'தேசத்துரோகம்' என்னும் மயக்குச்சொல் பயன்படுவதுபோல், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் 'இராஜத் துரோகம்' என்று குற்றம் சாட்டிவிட்டு, எவ்வளவு சித்திரவதைக்கு ஆளாக்கினாலும் அதைத் தட்டிக் கேட்க அப்போது நாதியில்லை.

எனவே, அன்றைய அரசின் பகைக்கு அஞ்சி, கோகலேயின் மசோதாவைத் தள்ளிவிட்டது இந்தியச் சட்டமன்றம்.

அதனால் ஏற்பட்ட விளைவு?

இலட்சக்கணக்கான சிற்றூர்களில் இக்காலத் தொடக்கப் பள்ளிகளும் இல்லை. இருள் சூழ்ந்த இலட்சக்கணக்கான ஊர்களில் ஒன்றாக இருந்தது நெய்யாடிவாக்கமும்.

முற்காலத்தில் கல்விச் சுனைகளைப் பெற்று விளங்கிய காஞ்சிபுர வட்டத்தையும் கல்லாமை கௌவிக் கொண்டிருந்தது. கல்விச் சாலைகள் இல்லாமையைவிடக் கொடுமை, கல்வியின் தேவையைச் சிறிதும் உணராது மக்கள் மறந்திருந்த மாக்கள் நிலை.

★★★★★


எனக்கு ஐந்து வயது நிரம்பியதும் எழுத்தறிவிக்கத் தொடங்கினார்கள். தொடக்க விழா ஆடம்பரமாக இருந்தது. விழாவிற்காக, எனக்கு முழு வெல்வெட் கால்சட்டையும், வெல்வெட் மூடு கோட்டும் தைத்தார்கள். சென்னைக்குச் சென்று தைத்து வந்தார்கள்.

விழாவன்று மேற்கே உள்ள சிவன் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். சாமி கும்பிட்ட பிறகு, வெல்வெட்டு உறைக்குள் என்னை புகுத்தி விட்டார்கள். அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். நாதசுர இசையும் உண்டு.

எங்கள் தெருவில், பெருமாள் கோயில் முன்புள்ள திறந்த வெளியில் கொட்டகை போட்டிருந்தார்கள். அழைக்கப்பட்ட உறவினர்களும் அன்பர்களும் கண்காணிக்க 'அரிநமோத்து சிந்தம்' என்று சொல்லி, மணல்மேல் 'அ' என்ற எழுத்தை எழுத வைத்தார்கள். என் விரலைப் பிடித்து எழுத இயக்கிய குருநாதரின் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை.

காஞ்சிபுரம் ஞானப்பிரகாச மடத்திற்கு நாங்கள் சீடர்கள். இந்த மடம் மிகத் தொன்மையான மடம். ஆதிகாலம் முதல், இதன் சீடர்கள் யாழ்ப்பாணத்திலும் இருந்து வந்தனர். எங்கள் உறவினர்கள் வீடுகளில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளின் போது, மடத்திற்குக் குறிப்பிட்ட தொகையைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். செலுத்தும் முறை தவறிப்போய்ப் பல்லாண்டுகளாகி விட்டன. ஆனால், நான் எழுதப் பழகிய காலத்தில், இந்த நடைமுறை இருந்தது. குரு ஆணைப்படி, மடத்திலுள்ள சீடர் ஒருவர் வந்திருந்து வாழ்த்தினார்.

ஏறத்தாழ ஈராண்டுகள் உள்ளூரிலேயே இருந்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன்.

எங்களுக்கு எதிர்க்கரையிலுள்ள இளையனார் வேலூரிலிருந்து கதிர்வேல் வாத்தியார் வந்து, திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திவந்தார். ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நாள்களில் அவரது வருகை தடைப்பட்டு விடும்.

★★★★★


சில திங்கள் சென்றன. 'மாமா சுந்தரசேகரரோடு, வடிவேலுவும் காஞ்சிபுரம் சென்று படிக்கட்டும்' - இது பாட்டி, அம்மா, அப்பா ஆகிய மூவரும் செய்த முடிவு.

ஏற்கெனவே என் மாமா, காஞ்சியில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

காஞ்சியில் பள்ளிக்கூடங்கள் தொடங்கும் பருவம் வந்தது. ஒருநாள் விடியற்காலை, நான்கு மணிக்கு இரட்டை மாட்டு வண்டியில் புறப்பட்டோம். தூக்க மயக்கத்தில் நான் வண்டியேறினேன். என்னுடன் என் தந்தை, மாமா, சித்தி ஆகிய மூவரும் வந்தனர்.

மூன்று ஆறுகளையும், ஒரு மடுவையும் கடந்து நாட்டுப் பாதையில் சேற்றிலும் சகதியிலும் சென்று காஞ்சிபுரத்தை நாங்கள் அடைந்தோம். அப்போது காலை மணி எட்டு.

அந்தக் காலப் பயணம் எவ்வளவு தொல்லையானது என்பதை இதிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் என் மாமா, ஒரு பெரிய வீட்டின் பின்பகுதியில் இரண்டு அறைகள் வாடகைக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

சாதியின் கவுரவம்
வீட்டுக்குரியவர் வைத்தியர் வேலுமுதலியார். அவர் குடும்பத்தோடு முன்பாதி வீட்டில் குடியிருந்தார். பின் பாதியில் ஒரு பாதி எங்களுக்கு. மற்றொரு குடும்பமும் பின் கட்டில் குடியிருந்து வந்தது.

மூன்று குடும்பங்களும் சுத்தமான சைவக் குடும்பங்கள்.

அன்னிய பதார்த்தம் அதாவது முட்டை, மீன், கறி சாப்பிடாதவர்களா என்று விசாரித்துத் தெரிந்து கொண்டே, வீட்டில் குடியிருக்க வாடகைக்கு விடுவார்கள்.

இதிலே ஒரு வேடிக்கை. என் உறவினர்கள் அனைவரும் மரக்கறி உணவினர். எங்களுக்கு வீடு கொடுத்த வேலு முதலியாரும் அவரது சுற்றத்தாரும் அதே தாவர உணவுப் பழக்கத்தை உடையவர்கள். அருகில் குடியிருந்த மற்றொரு குடும்பமும் அன்னிய பதார்த்தத்தை அண்டாதவர்கள். மூவருக்கும் - ஆண்களுக்கு மட்டுமே - ஒட்டியுள்ள சாதிப்பட்டம் 'முதலியார்' என்பதாகும்.

இருப்பினும் நாட்டு மரபுப்படி மூவரும் மூன்று பிரிவினர்கள். நாங்கள் மாகறல், ஆற்பாக்கம் வகையறா. வேலு முதலியார் கவாந்தண்டலம் வகையறா. மற்றவர் கடம்பத்தூர் வகையறா. இம்மூவரும் உண்ணல், உறவு கொள்ளுதல் ஆகிய இரண்டிலும் தனித்தனியே இருந்து வந்தவர்கள்.

'வகையறா' என்பது அன்னியச் சொல். 'சாதி'யென்பதும் தழுவல்; இரண்டும் தேவையற்றவை; ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவை; மக்கள் இனநேயத்தைச் சிதைப்பவை. இவை என் பிள்ளைப் பருவத்தில் எனக்குப் புலப்படவில்லை.

வெயில் காய்வதைப் போல, மழை நனைவிப்பதைப் போல, தனித்தனிச் சாதி என்பதை இயற்கையாக ஏற்றுக் கொண்டேன்.

"சரியானபடி பார்த்தால், நாம் அய்யர் சமைத்த உணவைக்கூட உண்ணக்கூடாது."

"கொண்டை கட்டி வேளாளராகிய நாம், சிவபெருமானின் சடைமுடியிலிருந்து தோன்றியவர்கள். நம் முன்னோர்களுக்கு இது தெரியும்."

"அவர்கள் அய்யர், அய்யங்கார் வீடுகளில்கூட உண்ணாமல் வாழ்ந்தார்கள். இப்ப காலம் கெட்டுப் போச்சு. அய்யர் கடையிலே சாப்பிடுகிறோம்."

"ஆனால் அடுத்த பகுதியில் குடியிருக்கும் வேலு முதலியார் வீட்டில் செய்ததை உண்ணாதே. அப்படியே கடம்பத்தூரார் வீட்டில் கொடுப்பதையும் தின்னாதே" - என்று என் பாட்டி சொன்னது நினைவிருக்கிறது. 'சரி' என்று ஒப்புக் கொண்டேன். ஈராண்டு அக்கட்டுப்பாட்டினை மதித்தேன். பிறகு குலைந்துவிட்டது.

'அய்யர் உயர்ந்தவர்' என்று அவர்கள் நினைக்க, 'நாங்கள் அதிலும் உயர்ந்தவர்கள்' என்று என் முன்னோர்கள் கருத, காவாந்தண்டலம் வகையறாவும், கடம்பத்தூர் வகையறாவும் அப்படியே நினைத்தார்கள்! அவர்கள் தனித்தனி.

முற்காலத்தில் எங்களைச் சம பந்தியில் வைத்து உண்ண மாட்டார்கள். எங்கள் வீடுகளில் உண்ண மாட்டார்கள். எல்லோரிடமும் இல்லாவிட்டாலும், இளைஞர்கள் இடையிலாகிலும், இன்று ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் கொள்வினை கொடுப்பினை தொடர்பு மட்டும் இன்றும் கிடையாது.

ஒரே மாவட்டத்தில், சில இடங்களில் அக்கம் பக்கத்து ஊர்களில் குடியிருக்கும் ஒரே நிலைத் தூய்மையுடைய சைவ முதலியார்கள், மூன்று பிரிவினர்களாகத் தனித்தனியாக இருப்பதை நினைத்தால், இன்று எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

('நினைவலைகள்' நூலிலிருந்து ஒரு பகுதி)
நெ.து. சுந்தரவடிவேலு
Share: 




© Copyright 2020 Tamilonline