Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அஞ்சலி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | முன்னோடி | சிறப்புப்பார்வை | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒரு சூரியகாந்தி மலர்கிறது!
பெருங்காயச் சொப்பு
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|மே 2023|
Share:
கூடத்துச் சுவர்க்கடிகாரம் எட்டடித்தது. என்னதான் உலகமே நவீனமாகி, இருபத்தொன்று, இல்லை, ஐம்பத்தொன்றாம் நூற்றாண்டையே எட்டிவிட்டாலும், கைக்கடிகாரம் கட்டும் வழக்கம் போய் கைபேசி, கணினி என்று நேரம் பார்க்க முடிந்தாலும் அப்பாவுக்கு சாவி கொடுக்கும் இந்தத் தாத்தாகாலக் கடிகாரத்தை விட மனம் வராது. அதுவும் வாரம் ஒருமுறை 'வாங்கிக்கொள்ளும்' உணவுக்கு வஞ்சகமில்லாமல் அரை மணிக்கு ஒரு தடவை அடித்து செவ்வனே கடமை ஆற்றி வருகிறது!

ஆனாலும் அதற்கும் வயதாகி விட்டது; அவ்வப்பொழுது நின்று போகும். அது மட்டும் ஓடாமல் ஒருநாள் இருந்தால்கூட அப்பாவுக்கு இருப்புக் கொள்ளாது. "வேணு, கடிகாரத்தை ரிப்பேருக்கு குடுத்துடுப்பா" என்று நச்சரித்து, அதைப் பழுதுபார்த்து மறுபடி யதாஸ்தானத்தில் மாட்டும்வரை ஓயமாட்டார்!

"வருஷத்துக்கு நாலு தரம் இது நின்னு போறதும், ரிப்பேருக்கு ஊரில் இருக்கிற ஒரே கடைக்கு மொய் எழுதுவதுமா ஆன செலவுக்கு நூறு அலாரம், டிஜிட்டல் கடிகாரம் வாங்கலாம். பேசாமல் தூக்கிப் பரணில் போடாமல் அவரும் சீராட்டுறதும், நீங்களும் இதற்கு செலவுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யறதும் முடியாக் கதையா நீள்றது!" இது அவ்வப்பொழுது சுஜியின் அலுப்பு விமர்சனம்.

ஊரெல்லாம் அஞ்சறைப் பெட்டிகளைப் போல் மூன்று, இரண்டு படுக்கையறை ஃப்ளாட்டுகளில் முடங்கிக் கிடக்கையில், மதுரை நகரின் மையமான சிம்மக்கல்லில், மூன்று கட்டு வீடு, தனித்து நிற்கிறதென்றால் அது சுந்தரேசன் வீடுதான். வாயிற்புறத்துக்கே கம்பீரம் தரும் வழவழப்பான தூண்கள். 'மஹால் தூணுக்கு தம்பியாக்கும் இது' என்று பெருமையுடன் அடிக்கடி சொல்வார் சுந்தரேசன். ஏழெட்டுப் பேர் தாராளமாகப் படுக்குமளவு விஸ்தாரமான திண்ணையும், எதிர்ப்புறம் இருவர் அமரும் படியான ஒட்டுத் திண்ணையுமாக, தெருவிற்கே இவர்கள் வீடு ஒரு கம்பீரத்தை அளித்து நிற்கிறது.

சுந்தரேசன் கலெக்டர் துரைக்கு துபாஷாக முப்பது வருஷம் பணியாற்றி வந்ததால் அந்தக் காலத்தில் 'துபாஷ் வீடு' என்று ஊருக்கே அடையாளமாக இருந்த வீடு இது. வீடு கட்டி புதுமனை புகுவிழாவை முடித்து, இரவு கலெக்டர் துரை, நீதிபதிகள், ஊர்ப் பெரிய மனிதர்களையெல்லாம் அழைத்துப் பெரிய விருந்தும், அன்றைய பிரபல திரையிசைத் திலகத்தின் கச்சேரியுமாக கொண்டாடினார் சுந்தரேசன். அப்பொழுது கலெக்டர் துரை பரிசளித்ததாம் இந்த கடிகாரம். அதன் பளபளப்பான மின்னும் கருமை நிறத்திடையே, பெண்டுலம் பொன்னாலான குண்டு போல அசைந்து கதி தவறாது நடனமிடும் கம்பீரத்தை ஓயாது புகழ்வார் சுந்தரேசன்.

சுந்தரேசனின் மகன் வைத்தி என்கிற வைத்தியநாதனும் வக்கீலாகக் கொடிகட்டிப் பறந்தவர்தான். இந்த மூத்த குடியின் மூன்றாம் தலைமுறை வேணு, பிரபல நிறுவனத்தின் தலைமைப் பதவியில் உள்ளான். நாலாம் தலைமுறை சுஜித் ப்ளஸ் டூ முடித்துவிட்டு மேல்படிப்பு உள்நாட்டிலா, வெளி நாட்டிலா என்று நாலா பக்கமும் கல் வீசிவிட்டுக் காத்திருக்கிறான். மாறிவிட்ட இன்றைய தலைமுறைக்கு பழமையின் அழகு, கம்பீரம் எல்லாவற்றையும் ரசிக்க, மதிக்க மன மில்லை.

"வாசலிலேர்ந்து புழக்கடைக்கு வரவே கால்மணி ஆறது; 'பெருமைக்குப் பெருங்காயச் சொப்பு' போல இந்த வீட்டைக் கட்டிக் காக்க யாரால முடியறது? அக்கம்பக்கத்தில் எல்லாம் அவரவரும் எட்டு, பத்து ஃப்ளாட் கட்டி அவங்களும் இருந்து, வாடகையும் வாங்கறா. இந்தத் தூண் பெருமையும்,திண்ணைப் பெருமையும் யாருக்கு வேணும்?" என்று சுஜி அடிக்கடி முணுமுணுக்கிறாள். இவர் காலம் உள்ளவரை அது நடக்க விடமாட்டார் என்று ஒரு கடுப்பு எப்போதும் அவர்மேல். மனைவி பார்வதி இருந்தவரை இந்த அலட்சியமும், நொடிப்புகளும் இவர் காதுக்கு எட்டாமல் கட்டிக் காத்து தன் அளவிலேயே சமாளித்து வந்தாள். மூன்றாண்டு ஆகிவிட்டது, இப்போதுதான் சின்னச் சின்ன விமர்சனங்கள், குறைகாணும் சொற்களைக்கூடத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த வைத்தி மணி அடிப்பதை எண்ண ஆரம்பித்தார்; அட, பதினொன்றாகி விட்டதே! மாலை, சுஜி சினேகிதியின் வீட்டு விசேஷத்துக்குக் கிளம்பும் அவசரத்தில் வார்த்துப் போட்ட ஒரு தோசை வயிற்றின் மூலையில் ஒட்டிக் கொள்ளத்தான் போதுமாக இருந்தது. இப்போது வயிற்றில் உலக மஹாயுத்தமே நடக்கிறது, அதுவும் தூக்கம் வராததற்கு ஒரு காரணம். பார்வதி இருந்தால் இந்த மாதிரி எப்போதாவது தூக்கமின்றி ஏற்படும் 'நிசிப்பசி' நேரங்களில் ஓசைப்படாமல் ஃப்ரிட்ஜிலிருந்து ஏதாவது பழத்தை நறுக்கிக் கொடுத்தபடி "ராத்திரி அரையும் குறையுமா கொறிச்சுட்டு எழுந்தா எப்படி தூக்கம் வரும்? எலையைப் பார்த்துப் பரிமாற இல்லாம நான் ஒருத்தி கோயிலுக்குப் போனவ வர நாழியாயிட்டுது, என்ன மனுஷரோ?" என்று தன்மீதே பழியைப் போட்டுக்கொண்டு நொந்து கொள்வாள். ஹூம்,..வயோதிகத்தில் மனைவி இழப்புதான் மஹா கொடுமை! மணி இரண்டடிக்கும் போது பசியோ, மயக்கமோ, கண்ணை அயர்த்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.

★★★★★


காலையிலிருந்தே வேணு காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்தான். ஏதாவது முக்கியமான மீட்டிங், கொழுத்த கிளையண்ட் யாராவது வருகை என்னும் நாட்களில் இப்படித்தான் வீடு அமளி துமளிப்படும். இம்மாதிரி சமயங்களில் வைத்தியநாதன் கூடத்துப் பக்கம்கூட வரமாட்டார். என்னவோ உலகத்து அத்தனை பிரச்னைகளையும் தானே தலையில் போட்டுக்கொண்டு தவிப்பது போலவும், மற்றவர்களெல்லாம் அத்தனை சுக சௌகர்யங்களையும் அனுபவிப்பது போலவும் எதிர்ப்படுபவர் மேலெல்லாம் எரிந்து விழுவான். வைத்தியநாதன் வாசல் வராந்தாவில் செய்தித் தாளுடன் அமர்ந்தால், அவன் கிளம்பிப் போன பின்தான் வீட்டினுள் நுழைவார்.

இரண்டு மணிக்கு வேணுவிடமிருந்து அழைப்பு; "எங்கள் கம்பெனியின் சிங்கப்பூர் கிளையண்ட் வந்திருக்கிறார். இந்தத் தொற்றுக் காலத்தில் உணவகங்களில் சாப்பிடத் தயக்கமாக இருக்கிறதாம். இரவு உணவுக்கு அழைத்திருக்கிறேன்; அவர்கள் குடும்பம் இந்தியாவிலிருந்து போய் செட்டில் ஆனவர்கள் தானாம். அதனால் நம் பக்கத்து சமையலாகவே தயார் பண்ணிவிடு. எட்டு மணிக்கு வருவோம்" என்று செய்தி சொல்லி விட்டான்.

சுஜிக்கு ஒரே எரிச்சல். "போன வாரம் முதலே சொல்லிண்டிருக்கேன், எங்கள் க்ளப்பின் ஆண்டுவிழா இருக்கு. டின்னரை வெளியிலிருந்து வரவழைக்கலாம்னு. தெரிஞ்சும் இப்படி திடீர்னு யாரையோ அழைச்சு வரேன்னு சொன்னா என்ன பண்றதாம்?" என்று ஒரே புலம்பல்.

"ஒண்ணு செய்யலாம், மாமா, நீங்க அடுத்த தெருவிலிருக்கும் பட்டு மாமியிடம் சொல்லி நான் தர மெனுவுக்கு நாலு பேருக்கு ஆறாப்பல சமைச்சு வைக்கச் சொல்லுங்க. சாதம் மட்டும் நீங்க வெச்சுடுங்கோ. ஆறரைமணி வாக்கில் சுஜித்தைப் போய் எடுத்துவரச் சொல்லிடுங்கோ. நான் முடிஞ்சா ஏழரைக்குள்ளே வரப் பார்க்கிறேன்" என்று அவரை அனுப்பி வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்

பட்டு மாமி வீட்டுக்குப் போன வைத்தியநாதனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாமியின் தம்பி வீட்டு விசேஷத்துக்காக அவர் வெளியூர் போய்விட்டாராம்! மணி மூன்று! என்ன செய்வது? பார்வதி இருந்த நாட்களில் அவளுக்கு உதவியாக இருந்தபடியே சில சமையல் வகைகளை அறிந்திருந்தார். அந்த 'ஞானம்' இப்பொழுது கைகொடுக்க, அடிக்கடி சுஜி சொல்வதுபோல், 'பெருங்காயச் சொப்பு' தன் மணத்தை வெளிக்கொணர ஆரம்பித்தது!

சற்றும் தயங்காமல் அவர் மளமளவென்று செயலாற்ற ஆரம்பித்துவிட்டார். பேரன் சுஜித், தாத்தாவுடன் உற்சாகமாக கைகோத்து உதவி செய்ய, ஆறு மணிக்குள் கமகமக்கும் வெங்காயம் முருங்கைக்காய் அரைத்துவிட்ட சாம்பார், அருமையான தஞ்சாவூர் கொத்சுடன் காரக் கொழுக்கட்டை, மணக்கும் கல்யாண ரசம், தேங்காய் வெல்லம் அரைத்த பாயசம் என்று கலக்கிவிட்டார். சரியாக ஏழே முக்காலுக்கு வேணு, தங்கள் கிளையண்ட் பிரமோத் ஸ்வாமியுடன் நுழையவும், பின்னாலேயே சுஜி வந்து சேர்ந்தாள்.

வழக்கம்போல வைத்யநாதன் தன் அறைக்குள் சிறை புகுந்தார். வேணு மனைவி, மகனை அறிமுகப்படுத்தியதும் பிரமோத் "உங்கள் தந்தையும் இருப்பதாகச் சொன்னீர்களே; பார்க்கணுமே" என்று கேட்ட பின் அவரைக் கூடத்துக்கு அழைத்து வந்தான் வேணு. அவர் பாதங்களைத் தொட்டு வணங்கிய பிரமோத், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வாசனை பிடித்த வண்ணம் "ஹூம், ஊர் முழுக்க மணக்கிறதே சமையல் வாசனை! நம் தென்னிந்திய சமையலின் வாசனையே முதலில் பசியைத் தூண்டிவிடும்." என்று பாராட்டுத் தெரிவித்தார்.

ரசித்து, ஒவ்வொரு அயிட்டத்தையும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

"நான் கொடுத்த மெனுப்படி சமைக்காம தன் இஷ்டத்துக்கு சமைத்து அனுப்பியிருக்காளே மாமி, கேட்கணும் அவாளை" என்று விமர்சித்தபடியே, ஆனால் நன்றாகவே அனுபவித்து சுஜியும் சாப்பிட்டாள். சுஜித், தாத்தாவைப் பார்த்து குறும்பாகக் கண்ணடித்தான்.

கூடத்தில் அமர்ந்து வேணுவுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் கடிகாரம் அடிக்கும் ஓசையைக் கேட்டு, அத்திசையில் பார்வையைச் செலுத்திய பிரமோத் அந்த கடிகாரத்தைப் பார்த்து வியப்புடன் "எங்க வீட்டிலும் இதேபோன்ற கடிகாரம் எங்கள் தாத்தா வைத்திருந்தார். அவர் இங்கிருந்தபோது லண்டன் நண்பர் ஒருவர் அவருக்குப் பரிசளித்ததாகக் கூறியிருக்கிறார். சிங்கப்பூர் போகுமுன் பல பொருள்களை இங்கேயே பிறருக்குக் கொடுத்து, விற்று விட்டாலும், அதை மட்டும் எடுத்து வந்தார். என் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ அதன்மீது ஈடுபாடு எதுவும் இல்லாததாலேயே அது போன இடம்கூடத் தெரியாமல் போய்விட்டது. எங்கள் அம்மாவுக்கு, சிங்கப்பூரின் பல புதிய கவர்ச்சிகரமான சிங்காரப் பொருள்களின் முன் அந்தக் கடிகாரம் திருஷ்டி பரிகாரம் போல் இருப்பதாகவே பட்டது; அதனால் அதைப் பராமரிப்பின்றிப் போட்டு வைத்து விட்டார். அதுவும் சிலகாலம் பழுதாகி, ஒரு கட்டத்தில் கார் ஷெட் மூலையில் கிடந்தது; யார் அதை எடுத்துப் போனார்கள் என்றே தெரியவில்லை."

"இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, எந்த வேலை இருந்தாலும், பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அந்தக் கடிகாரம் மணி அடிக்கையில் எதிரே நின்று எண்ணி, அந்தப் பெண்டுலம் அசையும் அழகைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அதை எடுத்துச் சென்றவர்களாவது அதன் அருமை தெரிந்து பராமரிப்பவர்களாக இருந்தால் நல்லது என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். நீங்கள் பரவாயில்லை, அதன் பழமையுடன், நயத்தையும் உணர்ந்து, மதித்துப் பாதுகாத்து வைத்திருக்கீங்க." என்று புகழ்ந்து பாராட்டினார்.

"எங்கள் வீட்டிலும் இது எங்கள் தாத்தாவின் மனம் கவர்ந்த சொத்தாகவே இருந்தது. இன்றும் என் தகப்பனார் இதை மிகவும் விரும்பி, பாதுகாத்து வருகிறார்" என்று பெருமையுடன் கூறினான் வேணு. அதைச் செவியுற்ற வைத்யநாதனின் முகம் பிரகாசித்தது.

வீட்டைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டு, விசாலமான கூடம், எதிரும் புதிருமாக நான்கு பெரிய அறைகள், வெளிச்சம் பாயும் முற்றம் என்ற அமைப்பைக் கண்ட பிரமோத், "அந்தக் கால வீடுகளைப் பார்த்தாலே ஜனங்களின் திட்டமிடல் பத்தி நல்லா தெரிஞ்சுக்க முடியும். பாருங்களேன், வீட்டுக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தாலே பாதி நோய் நொடி அண்டாது. அந்தக் காலங்களில் இப்போது போல திருமணம், வீட்டு விழாக்களுக்கு சத்திரம் தேடிப் போக மாட்டார்கள். இந்த மாதிரி இரண்டு மூன்று வீடுகளிலேயே விருந்தினர், சம்பந்திகள் என்று தங்கவைத்து, விழாவையும் வீட்டில் நடத்தும்போது, வீட்டுக்கே ஒருவித மங்கலக் களை வந்து விடுமே."

"நாலு தலைமுறை பிள்ளைகள் பிறந்த வீடு; பத்துப் பதினைந்து திருமணம், மங்கல விழாக்கள் கண்ட வீடு என்று ஊர் மக்கள் பெருமையுடன் காட்டிப் பேசும் பல வீடுகள் இருந்த ஊர்கள்தான், இன்று பத்துப் பேர் வரும் நிகழ்ச்சிக்கு மினிஹால், வருபவர்கள் தங்க அங்கொன்றும், இங்கொன்றும் சர்வீஸ் அபார்ட்மெண்ட் தேடி அலையும் நிலையில் இருக்கு" என்று வீட்டையும் மிகவும் சிலாகித்து ரசித்தார்.

தொடர்ந்து, "பாரம்பரியத்தை நன்றாகக் கட்டிக் காப்பாற்றும் இந்த ரசனை எல்லோருக்கும் வராது. சமையல் நல்ல தஞ்சாவூர் பாணியில் நளபாகமாக இருந்தது. திரும்பவும் நன்றி; இவ்வளவு சுவையான உணவைச் சாப்பிட்டு வெகுகாலம் ஆகிவிட்டது" என்று மீண்டும் புகழ்ந்தார்.

சுஜித் ஒரு நிலையில் பொறுமையிழந்து குறும்பாக, "அங்கிள், எங்கள் வீட்டு 'நளமஹாராஜா'வுக்குத் தான் இத்தனை பாராட்டும் சேரணும். அவர் சமைக்கும் அழகையும், பதார்த்தங்கள் சேர்த்து, அரைத்து, பொடித்து, என்று பம்பரமாகச் சுழன்ற சுறுசுறுப்பையும் நானே இன்னிக்குத்தான் பார்த்தேன்; எல்லாப் புகழும் தாத்தாவுக்கே" என்று உண்மையைப் போட்டு உடைத்து விட்டான்.

இப்போது சுஜித் பிரமோதுடன் நன்றாக, சகஜமாகப் பேசுமளவு தேறி விட்டிருந்தான். "அங்கிள், நீங்க சொன்ன, பெரிய, பழமையான வீட்டை, அடுக்ககங்களாக மாற்றி வாடகைக்கு விடும் விஷயம் இங்கும் ஓடிக் கொண்டிருக்கு; என்ன, தாத்தாவின் எதிர்ப்பால்தான் இன்னும் அது நடக்காமல் இருக்கு." என்று கூறினான்.

"அப்படி ஒரு எண்ணம் இருந்தால், வீட்டை நானே வாங்கிக்கிறேன். ஓய்வு பெற்றபின் இவ்வளவு அழகான ஊரில் இந்தப் பழமையான வீட்டில் குடும்பத்துடனும், வருவார் போவார் என உறவு, நட்புடனும் வாழும் மகிழ்ச்சி, நிம்மதிக்கு எவ்வளவு வேணுமானாலும் கொடுக்கலாமே" என்றார்.

சற்று நேர அளவளாவலுக்குப் பின் அவர் புறப்பட்டுச் சென்றார். "என்னப்பா, நீங்களேவா இன்று இவ்வளவும் செய்தீங்க? உங்களுக்குள்ள இவ்வளவு திறமையிருக்கே?" என்று தகப்பனாரைப் புகழ்ந்துவிட்டு, "ஏன் சுஜி, உன்னை சமைக்கச் சொன்னால் நீ கிளம்பி வெளியே போய்விட்டு வருகிறாய்; இத்தனை வித சமையலும் எப்படி மேஜைக்கு வந்ததுன்னு கூட நீ எண்ணிப் பார்க்கலையே?" என்று சுஜியைக் குறை கூறினான் வேணு.

"ஆமாம், ஒரு வாரமா எங்க கிளப் விழா இருக்குன்னு சொன்னது உங்க நினைவிலேயே இல்லை; திடீர்னு சாப்பிட ஒருத்தர் வரார், சமைத்து வைன்னு சொல்லிட்டா என்ன செய்யறது? பட்டு மாமியைத்தான் சமைத்து அனுப்பச் சொல்லி மாமாவிடம் சொன்னேன்; அவரை ஒண்ணும் நான் சமைக்கச் சொல்லலியே?" என்று கடுப்புடன் பதிலளித்தாள்.

"அம்மா, அந்த மாமி ஊரிலேயே இல்லை; தாத்தா சற்றும் தயங்காமல் இத்தனை விதம் சமைத்து வைத்து விருந்தாளி முன் அப்பாவின் மதிப்பைக் காப்பாத்தினாரே, அதை முதலில் பாராட்டுங்கம்மா" என்று சுஜித்தும் தாய்க்கு நியாயத்தை எடுத்துரைத்தான். அத்துடன், "அந்த அங்கிள் சொன்னதைக் கேட்டீங்களாம்மா? இந்தப் பழைய கடிகாரம், பெரிய த னிவீடு எல்லாத்தையும் அவர் எவ்வளவு மதிக்கிறார்? நாமானால் வீட்டை இடிப்போமா, கடிகாரத்தைப் பரண்மேல் போடுவோமா, இல்லை குப்பைத்தொட்டியில் எறிவோமான்னு யோசனை பண்ணறோம். எனக்கேகூட இன்று தாத்தாவைப் பார்த்தும், அந்த அங்கிள் சொன்னதைக் கேட்டும்தான் பழமை என்கிறது பல தலைமுறைகளின் வரலாற்றைக் கூறும் புத்தகம்; அது நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் வழிகாட்டி என்பதே புரிந்தது. என்னிக்கோ பெருங்காயம் வெச்சிருந்தது ஆனாலும் அதன் வாசனை அப்படியே தங்கியிருப்பது போல தாத்தாவுக்கு அம்மா கொடுத்த 'பெருங்காயச்சொப்பு' பட்டம்கூட சமயத்தில் தன் வாசனையை வெளிப்படுத்தியிருக்கே. இனி நான் தாத்தா கட்சிதான்" என்று தாத்தாவை அன்புடன் அணைத்துக் கொண்டான் சுஜித்.
அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

ஒரு சூரியகாந்தி மலர்கிறது!
Share: 




© Copyright 2020 Tamilonline