Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | அஞ்சலி | கவிதைப் பந்தல் | Events Calendar
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ஸ்ரீ மா ஆனந்தமயி
- பா.சு. ரமணன்|மார்ச் 2023|
Share:
மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. அப்படி ஒரு யோகினிதான் ஸ்ரீ மா ஆனந்தமயி.

தோற்றம்
மா ஆனந்தமயியின் இயற்பெயர் நிர்மலா சுந்தரிதேவி. இவர், 1896 ஏப்ரல் 30ஆம் நாளில், வங்காளத்தில் உள்ள கேவ்டா என்ற ஊரில், பிபின் பிஹாரி பட்டாசார்யா - மோக்ஷதா சுந்தரிதேவி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். பிறந்த குழந்தை அழுவதற்குப் பதிலாக, இந்தக் குழந்தை பிறந்தவுடன் சிரித்ததைக் கண்டு பெற்றோர் வியந்தனர். இது சாதாரணக் குழந்தை அல்ல; தெய்வீகக் குழந்தை என்பதை நாளடைவில் உணர்ந்துகொண்டனர். அதற்கேற்ப நிர்மலா சுந்தரி தேவி இளவயது முதலே ஆன்மீக நாட்டம் கொண்டவராக இருந்தார். மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்வதும், பூஜை, பிரார்த்தனை செய்வதும் இவரது வழக்கமாக இருந்தது. மரம், செடி, கொடிகளுடன் உரையாடுவது தொடங்கி பல்வேறு சித்தாற்றல்கள் அப்போதே அவருக்கு வசப்பட்டிருந்தன.திருமண வாழ்க்கை
1918-ல் நிர்மலாவுக்கு, ரமண்மோஹன் சக்ரவர்த்தியுடன் திருமணம் நிகழ்ந்தது. மணமான பின்னரும் இவரது ஆன்மீக சாதனைகள் தொடர்ந்தன. இவரது தெய்வீக நிலையை அறிந்த கணவர் ரமண் மோஹன், அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அவர்களது இல்லறம் தெய்வீக இல்லறமாக இருந்தது. நிர்மலாதேவியை அவர் 'மா' என்றே அழைத்தார். 'ஆனந்த மயி'யும் அவரை 'போலோநாத்', 'பிதாஜி' என்று அழைத்தார்.

அன்னையின் அருளுரைகள்
தூய்மையான ஒருமைப்பட்ட எண்ணத்தின் சக்தி, எதையும் சாதிக்கும் தன்மையைப் பெறுகிறது.

சலனமற்ற மன அமைதியை ஒருவன் அடைவதற்கு முன்னோடியாக ஏதேனும் மனக் குழப்பம் இல்லாவிட்டால் சுத்தமான மன அமைதியை அடைய முடியாது.

சுத்தமான நெய், சந்தனக் கட்டை அல்லது வைக்கோலைப் பயன்படுத்தித் தீயை மூட்டினால், தீ கொழுந்து விட்டெரியத் தொடங்குகிறது. அந்தத் தீயின் ஒளி இருளைப் போக்குவதுபோல், உள்ளத்தில் மூண்ட தீயின் ஒளி, எல்லா மன இருளையும், மதமதப்பையும், மனச் சோகத்தையும் போக்கும். பின்பு அனைத்துத் தடைகளையும் நாளடைவில் சிறுகச் சிறுக எரித்துவிடும்.

அகந்தை ஒரு தினையளவு இருப்பினும் அது ஒருவனுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக அமைந்துவிடும்.

உலகம் ஓர் பாவனையே. உருவாக்கப்பட்ட இவ்வனைத்தும் அப்பாவனையின் தூலத் தோற்றமே. ஒருமுறையாவது உள்ளத்தில், அந்தத் தெய்வீகப் பாவனை பொங்குமானால் இந்த ஜகம் அத்தெய்வீகத்தின் லீலையென்பதை ஒருவர் உணர்வார்.

பிரம்மம் ஒன்றே! இரண்டாவதாக ஒன்றில்லை. எங்கு பிரம்மம் அறியப்படுகிறதோ அங்கு அறியப்படாமல் போவதற்கு வேறேதுமில்லை.

உன்னை உணர்ந்து அடைவதே கடவுளை அடைவதாகும். கடவுளை அடைவதே உன்னை அடைவதாகும். அனைத்தும் இறைவனே! அவர் ஒருவரே உள்ளார். எங்கும் உள்ளார். எல்லாமுமாய் உள்ளார்.

மனிதனாய்ப் பிறப்பது கடவுளின் ஆசிர்வாதம். ஆகவே, ஒருவர் தனது பிறப்பின் மகத்துவத்தை உணர்ந்து நேரத்தைப் பயனற்ற காரியங்களில் செலவழித்து வீணாக்கக் கூடாது.

இறைவனை நோக்கிய பிரார்த்தனை ஒருபோதும் வீணாவதில்லை.

எந்த வேலையைச் செய்தாலும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதாக அது இருக்க வேண்டும்.


தியான வாழ்க்கை
நாளடைவில் தீவிர தியான நிலைக்குச் சென்றார் நிர்மலா தேவி. தன்னை மறந்து சதா ஆனந்த மோன நிலையில் இருப்பதும் வழக்கமானது. அவரை அறியாமலேயே அவரது வாயிலிருந்து பல்வேறு மந்திரங்கள் வெளிப்பட்டன. விரல்கள் பல்வேறு முத்திரைகளைக் காட்டின. உடல் பல்வேறு ஆசனங்களில் அமர்ந்தது. எப்போதும் பரம்பொருளுடன் ஒன்றிய நிலையில் இருந்தார். உண்பது குறைந்தது என்றாலும் அன்றாடக் கடமைகளை அவர் தவறாமல் செய்து வந்தார்.

ஆன்மீக சக்திகள் வளர வளர, மக்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக அவரைத் தேடி வந்தனர். இரண்டாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்றிருந்தாலும் தன்னை நாடி வருவோரிடம் பல்வேறு தத்துவங்கள் குறித்து உரையாடுமளவுக்கு அவர் அறிவாற்றல் பெற்றிருந்தார். நாடி வருவோர் சொல்லாமலே அவர்களது வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்து, நல்வழி கூறி ஆற்றுப்படுத்தினார். பலரது நோய்களை நீக்கினார்.

இறைவனை வழிபடும் முறையை அம்மா பக்தர்களுக்கு போதித்தார். ஆழ்ந்த பாவசமாதி நிலையில் மூழ்கி இருப்பதும் பரவசத்தின் ஆழ்நிலைகளில், இறைவனைப் புகழ்ந்து பாடுவதும், நாம பஜனை செய்வதும் அவர் வழிமுறைகளாக இருந்தன. பக்தர்களும் அவ்வாறே அம்மாவைப் பின்பற்றி ஆனந்த பரவசத்தை எய்தினர்.மா ஆனந்தமயி
நாடி வந்தோரின் துயரம் போக்கி ஆனந்த நிலையை அளித்ததால் பக்தர்கள் அன்புடன் அவரை 'மா ஆனந்தமயி' என்று அழைக்க ஆரம்பித்தனர். பலர் அம்மாவைச் சரணடைந்து சீடர்களாகினர். அவர்களுள் ஜோதிஷ் சந்திர ரே என்னும் சீடர் முதன்மையானவராக அமைந்தார். அவரே அம்மாவின் பெயரில் ஆசிரமம் ஒன்றை நிர்மாணித்தார். அம்மாவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.

ஆசிரமங்களும் வழிபாடும்
1929ல், அம்மாவின் பெயரில் ஸ்ரீ ஆனந்தமயி ஆசிரமம் உருவானது. 1938-ல், டேராடூனில் மற்றுமொரு ஆசிரமம் அமைந்தது. பாரதத்தின் பல மாநிலங்களில் ஆச்ரமங்கள் உருவாகின. மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்காக இரவு பகல் பாராது அம்மா உழைத்தார். ஏழை, எளியோர், கல்விமான், கல்வியறிவு இல்லாதோர், சிறார், இளைஞர், முதியோர் எல்லா மத, இனத்தைச் சார்ந்தவர்களும் பாரதத்தின் பல பகுதிகளிலிருந்து அம்மாவை நாடி வந்தனர். அவரருள் பெற்றனர்.அம்மாவின் புகழ் பாரதமெங்கும் பரவியது. மகாயோகி அரவிந்தர் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்ததும், 'இது சச்சிதானந்த சொரூபம்' என்றார். மகாத்மா காந்தி, ஜாம்னாலால் பஜாஜை நேரடியாக அனுப்பி தனது ஆசிரமத்துக்கு வருமாறு அம்மாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அம்மா அதனை ஏற்று காந்தியின் ஆச்ரமத்துக்கு விஜயம் செய்தார். நேருவும் கமலா நேருவும் அம்மாவின் ஆசிரமம் சென்று அடிக்கடி அவரைத் தரிசித்து அருள் பெற்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி இந்திரா காந்தி வரை பலர் அன்னையை தரிசித்து அவரது அருள் பெற்றனர். பரமஹம்ச யோகானந்தர் அம்மாவைத் தரிசித்து ஆசி பெற்றார். அந்த அனுபவத்தை 'ஒரு யோகியின் சுயசரிதம்' நூலில் அவர் விவரித்திருக்கிறார்.

சாதாரணத் மக்களுக்குத் துயர்நீக்கி அருள் புரிந்ததுடன், ஆன்மீக நாட்டமுடையவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தினார் மா ஆனந்தமயி. மறைந்து கிடக்கும் தடைகளை நீக்கி அவர்கள் சாதனையில் முன்னேற உதவினார்.

அம்மாவின் கணவராக விளங்கிய போலாநாத் ஆன்மீகத்தில் உயர்நிலை எய்தி, 1938-ல் இறையுடன் கலந்தார்.பயணங்கள்
மா ஆனந்தமயி, இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சீடர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1952ல், தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் சமாதி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். புதுச்சேரிக்குச் சென்றவர் ஸ்ரீ அன்னையைத் தரிசித்தார். இருவருக்குமிடையே சூட்சும உரையாடல் நிகழ்ந்தது. அன்னை ரோஜா மற்றும் அல்லி மலர்களுடன் இரண்டு சாக்லேட்டுக்களை ஆனந்தமயி அம்மாவிற்கு அளித்தார். மா ஆனந்தமயி அவற்றில் ரோஜா மலர் மற்றும் ஒரு சாக்லேட்டைத் திருப்பி அளித்தார்.

அன்னை சாக்லேட்டை வைத்துக்கொண்டு ரோஜாவை மீண்டும் திருப்பிக் கொடுத்தார். மலர்களின் இப்பரிமாற்றம் மேலும் சிலமுறை நிகழ்ந்தது. இறுதியில் ஸ்ரீ அன்னை ரோஜா இதழின் சில பகுதிகளைத் தாம் வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை ஸ்ரீ ஆனந்தமயி அம்மாவிடம் அளித்தார். அம்மாவும் புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டார். இந்த மௌன முறையிலான ஆன்மீகப் பரிமாற்றத்தைக் கண்டு பக்தர்கள் வியந்தனர்.

ரிஷிகேசம் சென்ற மா ஆனந்தமயி, சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். பின்னர் கேரளத்துக்குச் சென்று சுவாமி ராமதாசரைச் சந்தித்தார். பல்வேறு புனிதநதிகளில் நீராடினார். பல சாதுக்களைச் சந்தித்தார். பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.ஆன்மீகப் பணிகள்
பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்ற மா ஆனந்தமயி, பல ஆலயங்களைப் புதுப்பித்தார். வாரணாசி ஆச்ரமம், தாராபீட ஆச்ரமம், கிஷன்பூர் ஆச்ரமம், ராஞ்சி ஆச்ரமம், நைமிசாராண்ய ஆச்ரமம், கல்யாண் ஆச்ரமம் போன்ற பழம்பெரும் ஆச்ரமங்களைப் புதுப்பித்தார். பெண்களும், குறிப்பாக இளம்பெண்களும், வேதம் கற்கலாம் என்று மா ஆனந்தமயி அறிவித்தார். கன்னிப் பெண்களுக்கென ஒரு குருகுலமும் வாரணாசியில் அமைக்கப்பட்டது.

மஹாசமாதி
ஆகஸ்ட் 27, 1982-ல் ஸ்ரீ மா ஆனந்தமயி இறைவனுடன் கலந்தார். அவரது உடல், ஹரித்வாரம் அருகில் உள்ள கங்க்காலில் இருக்கும் ஸ்ரீ ஆனந்தமயி ஆச்ரம வளாகத்தில் சமாதி செய்விக்கப்பட்டது.

இன்றும் தன்னை மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு அன்னை சூட்சும வடிவில் வழிகாட்டி வருகிறார்.

கேள்வி-பதில்
பெரும்பாலும் மௌனமாக இருந்த அன்னை சமயங்களில் பக்தர்களிடம் உரையாடுவதுண்டு. கேள்விகளுக்கு விடை அளிப்பதும் உண்டு. அவற்றில் சில:

கேள்வி: கடவுள் தரிசனம் ஒருவருக்கு எப்போது கிட்டும்?
பதில்: ஒருவன் பக்குவமான காலத்தில்தான் கடவுளின் தரிசனத்தைப் பெறுவான். இந்த உலகத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்ற சமூகத்தினர்களும் யாவரும் ஒன்றே. ஒரே பரம்பொருளாகிய கடவுளையே அவர்கள் அனைவரும் கருணையை நாடிப் பூஜிக்கிறார்கள்.

கேள்வி: குரு பற்றி...
பதில்: குருவிடம் ஆழ்ந்த ஈடுபாடு இருக்க வேண்டும். மந்திரங்கள் மற்றும் தியானத்தை குரு போதித்தவாறே செய்யவேண்டும். குரு தனது ஜாதியில் பிறந்தவர் என்பதற்காக அவரது உபதேசங்கள், வழிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் வெறும் பாவனையாகப் பூக்களைத் தூவி வழிபடுவதால் எந்தப் பயனும் இல்லை. குரு அதனை ஏற்பதும் இல்லை.
பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline