'சித்தாந்த ரத்தினம்', 'தமிழ்ச் சைவ சிந்தையர்', 'இறைமாமணி' உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர் முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா. எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், இதழாளர் எனப் பல களங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். 35-க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரை வாசித்துள்ளார். பல்வேறு சைவ, தமிழ் பணிகளை முன்னெடுத்து வருகிறார். அவருடன் நாம் உரையாடினோம். அதிலிருந்து...
★★★★★
கே: உங்களுக்கு எழுத்தார்வம் வந்தது எப்போது? ப: எனது தாயார் கல்யாணி, சுவாமிமலை அரசு உயர்நிலைப் பள்ளி நூலகத்தில் நூலகராகப் பணிபுரிந்தார். அந்தப் பள்ளியில்தான் நான் படித்தேன். எனக்கு வகுப்பு இல்லாத நேரங்களில் நூலகத்திற்குச் செல்வேன். அம்மா சிறார் கதை, கட்டுரை, நாவல்களை எடுத்துத் தருவார். அங்கேயே படிப்பேன். கவனச்சிதறல் இல்லாமல் நிறைய வாசிக்க முடிந்தது. அப்போது வாசித்தது இப்போது என்னை எழுத்துலகுக்கு அழைத்து வந்திருக்கிறது.
என் தாய், தந்தை எனக்குத் தந்த மிகப்பெரிய சொத்து ஆன்மீகம். அதுவும் இளவயதிலேயே இறைவழிபாடு, பக்தியில் ஈடுபாடு கொள்ளச் செய்தார்கள். உயர்நிலைப் பள்ளி படிக்கும்போதே கதை, கவிதை எழுதத் தொடங்கி விட்டேன்.
கே: முதலில் வெளியான படைப்பு பற்றி... ப: எனது முதல் நூல் ஒரு தொகுப்பு நூல். 'சிவனை அறிந்தவர் சீவனை அறிவர்' என்னும் அந்த நூல் 2004ல் வெளியானது. சிவவழிபாடு குறித்து 240 பக்கங்களில் சைவ சித்தாந்த விளக்கத்துடன் கூடியது. அந்த நூலுக்குக் காஞ்சி காமகோடி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் 'ஸ்ரீமுகம்' வழங்கியிருந்தார். இந்த நூல் வெளியாவதற்கு என்னை ஊக்குவித்தவர் எழுத்தாளர் தெள்ளாறு எ. மணி அவர்கள்.
அந்த நூல் எழுதிய காலத்தில் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட (எம்.ஃபில்) ஆராய்ச்சி மாணவி. 'திருவாசகத்தில் மகளிர் ஆடல்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டிருந்தேன். ஏற்கெனவே சிவ வழிபாடு குறித்து நான் தொகுத்து வைத்திருந்ததுடன் கூடுதலாகப் பலவற்றைச் சேர்ந்து அந்த நூலைக் கொண்டுவந்தேன். அதற்கு நூலக ஆணை கிடைத்து பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின. மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை 35-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துவிட்டன. எல்லாம் குருவருள், இறையருள், முன்னோர்களின் ஆசிதான்.
கே: மிகச் சிறப்பு. சிறார்களுக்கான பல கதைகளை மொழிபெயர்த்துள்ளீர்கள் அல்லவா? ப: மொழிபெயர்ப்புத் துறையில் என் தாய்தான் எனக்கு குரு. அவர் ஒரு ஹிந்தி பண்டிதர். பள்ளிப் பருவத்திலிருந்தே தமிழோடு ஹிந்தி மொழியையும் எனக்குக் கற்பித்தார். அப்போது நான் ஆரம்பப் பாடம் (பிராத்மிக்) படித்திருந்தேன். திருமணத்திற்குப் பிறகு 'பிரவீன்', 'விஷாரத்' (எம்.ஏ.வுக்கு இணை) வரை படித்தேன்.
நான் தினமலரில் பணிபுரிந்தபோது நான் கற்ற இந்தி உதவியது. எனக்காக ஹிந்திப் பத்திரிகைகள் பலவற்றை வரவழைத்துத் தருவார்கள். அவற்றில் உள்ள முக்கியமான, வித்தியாசமான செய்திகளை மொழிபெயர்த்துத் தருவேன். அப்போது ஒரு பத்திரிகையில் வடமாநில நாடோடிக் கதைகள் தினமும் சிறிய அளவில் வெளிவரும். அவற்றைக் கத்தரித்துத் தொகுத்து வைத்தேன். நேரம் கிடைக்கும்போது மொழியாக்கம் செய்தேன். அதைப் பின்னர் எனது தாயின் பெயரில் நான் ஆரம்பித்த 'கல்யாணி பதிப்பகம்' மூலம் நூலாக வெளியிட்டேன். நூலின் பெயர் 'ஞானத்தின் வாயில்'. அதிலுள்ள ஒரு கதை (ராஜஸ்தான் நாடோடிக் கதை) ஞானத்துக்கான வாயில் எது என்பதைக் கூறுகிறது. அந்த நூலுக்கு எனது அம்மா அணிந்துரை வழங்கியிருந்தார். மகளின் நூலுக்குத் தாயே அணிந்துரை வழங்கியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
தொடர்ந்து பல நீண்ட கதைகளை மொழிபெயர்த்தேன். அவை தினமணி-சிறுவர்மணியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றன. அவை தொகுக்கப்பட்டு 'சிங்கம் கூறிய தீர்ப்பு' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.
'சைவத் தமிழ் சிந்தையர்' விருது.
கே: நல்ல முயற்சிகள். உங்கள் முனைவர் பட்ட ஆய்வைப் பற்றிச் சற்று விளக்க இயலுமா? ப: எனது இளமுனைவர் பட்ட (எம்.ஃபில்) ஆய்வு திருவாசகம் தொடர்பானது என்பதால், என் முனைவர் பட்ட (பிஎச்.டி) ஆய்வையும் திருவாசகத்திலேயே செய்ய நினைத்தேன். எனது தாய் என்னை மிகவும் ஊக்குவித்தார். முனைவர் வ. குருநாதன் அவர்கள் நெறிப்படுத்த, 'மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன்.
அகப்பொருள் (நாயக-நாயகி பாவம்) மூலம் மணிவாசகர் உணர்த்தும் பேரின்பப் பொருளை, நுட்பமான செய்திகளை, சைவ சித்தாந்தக் கொள்கையின் அடிப்படையில் அவர் காலத்தை, திருக்கோவையார் ஞானநூலே என்பதை, நால்வர் பெருமக்களில் மாணிக்கவாசகரே முதலாமவர் என்பதை, மலையாளச் செப்புப் பட்டயத்தைச் சான்று காட்டியும், அவரே இறைவனை முதன்முதலில் கண்ணால் கண்டு காட்டிப் பாடியவர் என்பதையும், அவரே பொய்யடிமை இல்லாத புலவர் என்பதையும், அவருடைய பாடல்களைக் கொண்டும், சிறந்த ஆராய்ச்சி அறிஞர்களின் முன்முடிவுகளைக் கொண்டும் என் கருத்தை நிறுவியிருந்தேன்.
என் ஆய்வேடு நூலாக மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியானது. சென்ற ஆண்டு (ஜுன், 2022) பேரா. அ.ச. ஞானசம்பந்தம் அவர்கள் நிறுவிய 'சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம்' அந்த நூலை முதல் பரிசுக்குரிய நூலாகத் தேர்வுசெய்து, சேக்கிழார் விருதும் 25,000 ரூபாய் பொற்கிழியும் வழங்கியது .
பாற்கடல் வானொலி சிறுவர் சங்க விழாவில்
கே: 'தினமணி'யில் பணியாற்றிய அனுபவம் பற்றி... ப: என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும்பேறு என்று சொன்னால் அது, 14 ஆண்டுகால தினமணி பணிதான். என் பெயருக்கு ஒரு முகவரியைத் தந்தது தினமணிதான். தினமணி பணியில் சேர்ந்ததும் நான் சென்ற (நிருபராக) முதல் நிகழ்வே எனக்குப் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரனின் (உடையார் நாவல்) நேர்காணல்தான். தொடர்ந்து முனைவர் ம. இராசேந்திரன், முனைவர் தெ. ஞானசுந்தரம், சிவாலயம் ஜெ. மோகன், தமிழண்ணல், அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன் போன்றோரை நேர்காணல் செய்து எழுதினேன்.
தினமணி ஆசிரியர் ஐராவதம் மகாதேவனால் தொடங்கப்பட்ட 'தமிழ்மணி' பகுதிக்கு நான் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டேன். பள்ளி, கல்லூரியில் படித்து நான் தெரிந்து கொண்டதைவிட தினமணி 'தமிழ்மணி' மூலம் தமிழ் குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்தும் தெரிந்து கொண்டது அதிகம். என் பணியை ஆத்ம திருப்தியோடும், விருப்பத்தோடும், மன மகிழ்ச்சியோடும், முழு ஈடுபாட்டோடும், 'தமிழ்மணி' ஒன்றே குறிக்கோளாகக் கொண்டும் செயல்பட்டேன். அதன் மூலம் பல தமிழறிஞர்களின், சான்றோர்களின் அறிமுகமும் நட்புறவும் எனக்குக் கிடைத்தது ஒரு பெரும்பேறு.
தினமணி இதழில் 14 ஆண்டுகள் பணியாற்றியதை என் வாழ்நாள் சாதனை என்று சொல்வேன்.
கே: நீங்கள் தற்போது ஆசிரியராக இருக்கும் 'ஆன்மிகக் களஞ்சியம்' மாத இதழ் பற்றி.. ப: என் முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் மண்ணடியில் இருந்த மறைமலையடிகள் நூல் நிலையத்துக்குச் சென்றபோது, எழுத்தாளர் தெள்ளாறு இ. மணி அவர்களது அறிமுகம் ஏற்பட்டது. அவர் என்னைப் பல இதழ்களுக்கு எழுத ஊக்குவித்தார். நாமே ஓர் இதழ் தொடங்கலாமே என்று நான் கூறியதை அவரும் ஆமோதித்தார். அடுத்த ஓரிரு மாதங்களில் அவரை ஆசிரியராகவும், என்னை இணையாசிரியராகவும் கொண்டு 'ஆன்மிகக் களஞ்சியம்' மாத இதழ் வெளியானது.
அதில் 'ஆதிரை நாயகி' என்ற பெயரில் கிடைத்தற்கரிய நூலான 'சிவரகசியம்' நூலிலிருந்து எடுத்து தொடராக எழுதிவந்தேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. பல அரிய ஆன்மிகச் செய்திகளை அவ்விதழில் வெளியிட்டோம். பிறகு நான் தினமணியில் சேர்ந்ததால் அந்த இதழில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆசிரியர் மட்டுமே அதைக் கவனித்து வந்தார். தற்போது நான் தினமணியில் இருந்து வெளிவந்த பிறகு, மீண்டும் இப்போது அந்த இதழுக்கு இணையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். கட்டுரைகள் எழுதுவது மட்டுமல்லாமல், நானே தட்டச்சு செய்து, வடிவமைத்தும் வருகிறேன். என் முதல் இதழியல் பணி 'ஆன்மீகக் களஞ்சியம்' இதழில் இருந்துதான் தொடங்கியது.
கே: பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறீர்கள் அல்லவா? ப: என் மகளின் பெயரில் 'ஸ்ரீவித்யா பதிப்பகம்' என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன். 'மூவர் அருளிய பஞ்சபூதத் திருத்தல தேவாரம்', 'திருவாசகத்தில் புராணக் கதைகள்', 'திருவாசகத்தில் மகளிர் ஆடல்' ஆகிய மூன்று நூல்களை அதன் மூலம் வெளியிட்டேன். 'மூவர் அருளிய பஞ்சபூதத் திருத்தல தேவாரம்' நூலுக்கு அன்றைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி வாழ்த்துச் செய்தி வழங்கியிருந்தார். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துக் கோயில் மற்றும் புத்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கவேண்டும் என்றதோர் ஆணையும் வழங்கினார். நானும், ஆன்மீகக் களஞ்சியம் ஆசிரியரும் திருவான்மியூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்செங்கோடு, வடபழனி முதலிய கோயில்களுக்கு நேரடியாகச் (சொந்த செலவில்) சென்று நூல்களைக் கொடுத்தோம். ஆனால், அதன் விற்பனைத் தொகையை ஓரிரு கோயில்களில் மட்டும்தான் பெறமுடிந்தது. அதனால் அச்சிட்ட பிரதிகளைச் சிவனடியார்களுக்கு விலையின்றி அளித்தேன். பல கோயில்களில் அடியார்கள் என் நூலை வைத்துக்கொண்டு முற்றோதல் செய்வதைப் பார்க்கும்போது மனதுக்கு இதமாகவும், நிறைவாகவும் இருக்கிறது.
'திருவாசகத்தில் மகளிர் ஆடல்' என்கிற என் இளமுனைவர் பட்ட ஆய்வுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை, பதிப்புத் தொகையில் பாதி வழங்கி, நூல் வெளிவர உதவியது. அதன் பிறகு 'திருக்கயிலாய சிறப்பு', 'ஞானத்தின் வாயில்', 'திருவாசகத்தில் புராணக் கதைகள்', தோழி சி. மகேஸ்வரியின் 'கற்பூரக் கனவுகள்' (கவிதை நூல்), திருமதி விமலா என்பவரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஆகியவற்றைப் பதிப்பித்தேன். எழுத்தாளுமை கொண்டவர்கள் பதிப்புத் துறைக்கு வந்தால் சிறப்பாக எழுத முடியாது என்பதைப் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், அனுபவ பூர்வமாகவும் உணர்ந்ததால் தற்போது எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.
கே: சிறுவர் கதை உலகில் உங்கள் படைப்புப் பயணம் பற்றிக் கூறுங்கள்... ப: 'சுந்தரியும் சுண்டெலியும்' கதையைத் (பெட்டிச் செய்தி பார்க்க) தொடர்ந்து சிறுவர் மணியில் வெளிவந்த எனது 'செல்லாக்காசு' என்ற கதை, சாகித்திய அகாடமி வெளியீடான 'சிறுவர் கதைக் களஞ்சியம்' நூலில் இடம்பெற்றது. தொடர்ந்து புதுவையில் நிகழ்ந்த சிறுவர் இலக்கியம் குறித்த கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு வந்தது. அதுவே பின்னாளில் 'சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்' என்ற தலைப்பில் நூலாக (பழனியப்பா பிரதர்ஸ்) வெளிவந்தது. சாகித்ய அகாடமி வெளியிட்ட 'சிறார் கதைப் பாடல்கள்' தொகுப்பு நூலிலும், எனது 'பறவைகள் வெடித்த பட்டாசு' கதைப்பாடல் இடம்பெற்றது. சிறார்களுக்காக நாடகமும் எழுதியிருக்கிறேன். சிறார்களுக்கு நல்ல கதைகளைக் கற்பனையாகச் சொல்லாமல், கற்பனையுடன் அறிவியலையும், அனுபவத்தையும் கலந்து எழுதி வருகிறேன். இளவயதில் சிறார் இலக்கியம் நிறையப் படித்ததனால்தான் சிறார் இலக்கியம் படைக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
கைதியுடன் ஒரு சந்திப்பு எனது முதல் நூல் 'சிவனை அறிந்தவர் சீவனை அறிவர்'. அந்த நூல் வெளியானதும் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவர் கைப்பட எழுதிய கடிதம். சிறைச்சாலை நூலகத்தில் என் நூலைப் படித்ததாகவும், அந்நூல் தன்னைப் பலவகையில் சிந்திக்க வைத்ததாகவும் மேலும் சில ஐயங்கள் உள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
கடிதத்தைப் படித்ததும் நான் பயந்து போனேன். ஒரு கைதியிடம் இருந்து வந்திருக்கிறதே, பதில் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்து, பின் பதில் எழுதி அனுப்பினேன். மீண்டும் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நான் இளமுனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருந்ததால் உடனடியாகப் பதில் எழுதவில்லை.
ஒரு சமயம் நான் அம்மாவைப் பார்க்கத் திருச்சிக்குப் போனேன். மத்திய சிறைச்சாலையைக் கடந்துதான் தாயார் இருக்கும் இல்லத்திற்குச் செல்ல வேண்டும். அப்படிப் போனபோது இந்தக் கடிதம் பற்றி தெரிவித்தேன். அம்மா மகிழ்ந்தார். கூடவே, தன்னிடமிருந்த (எனது) சில நூல்களை எடுத்துத்தந்து 'இதைக் கொண்டுபோய் அந்தக் கைதியிடம் படிக்கக் கொடு' என்றார். அன்றைக்கு மதியம் நான் சென்னை ரயிலைப் பிடித்தாக வேண்டும். இருந்தாலும் அம்மா சொன்னபடி காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி, திருச்சி மத்திய சிறைச்சாலைக்குச் சென்றேன்.
சிறை நிர்வாக நடைமுறைகளை முடித்துவிட்டு இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பின் அந்தக் கைதியைச் சந்தித்தேன்.
அவருக்கு 25 வயதுதான் இருக்கும். அப்போது எனக்கு முப்பது வயது. என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர், "உங்கள் நூல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது மேடம், செய்த தவறுக்காக வருந்த வைத்தது. நீங்கள் வயதான பெண்மணியாக இருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால், இந்தச் சின்ன வயதில் எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய வேறு நூல்கள் வெளிவந்துள்ளனவா?" என்று கேட்டார். என் தாய் கொடுத்தனுப்பிய சில நூல்களை அவரிடம் தந்து, "நீங்கள் இரண்டாவது கடிதத்தில் கேட்ட கேள்விகளுக்கான விடைகள் இந்த நூலில் உள்ளன" என்று சொன்னேன். அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
அன்று நான் சென்னை ரயிலைத் தவற விட்டேன். ஆனாலும், என் முதல் நூலின் தாக்கத்தால் ஒரு கைதியை நேருக்கு நேர் சென்று சந்தித்த மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றேன்.
இடைமருதூர் கி. மஞ்சுளா
கே: இதழியல் மற்றும் பதிப்புத் துறையில் மகளிருக்குச் சவாலாக இருக்கும் விஷயங்கள் என்னென்ன? ப: இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சுகிறார்கள். இது மிகப்பெரிய வளர்ச்சிதான். ஆனால் அவர்கள் பணிபுரியும் இடங்களில் பல சிக்கல்களை, சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதும் உண்மைதான். இதழியல் மற்றும் பதிப்புத் துறைகளில் ஆண்களைவிடப் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைவுதான். காரணம் அவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட முடிவதில்லை. யாராவது ஒருவர் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே செயல்பட வேண்டியிருக்கிறது.
பெண்கள் எவ்வளவுதான் பணியில் திறமை காட்டினாலும், அதில் ஏதாவது குற்றம் குறை கூறப் பலர் இருக்கிறார்கள். பெண்களை முன்னேற்றப் பாதையை நோக்கி வளரவிடாமல் பல முட்டுக்கட்டைகளைப் போட எல்லாத் துறைகளிலும் ஓர் எதிர்மறை சக்தி இருக்கத்தான் செய்கிறது. அதையும் மீறி இன்றைய பெண்களில் பலர் உயர்நிலையை அடைவது, அவர்களது தன்னம்பிக்கையை, துணிச்சலை, போராடும் குணத்தை, அபரிமிதமான சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது.
"அறிவியல் வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு மேலோங்கிய இன்றைய சூழலிலும் பெண் படைப்பாளர்களின் விழுக்காடு மேலோங்கவில்லை என்பதுதான் உண்மை. இதற்குப் பெரிதும் காரணம், மகளிர் வாழ்வியல் சூழல் அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதுதான். எல்லாவிதமான அழுத்தங்களையும், தடைகளையும், சூழல்களையும் மீறி, பெண் படைப்பாளர்கள் பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்கள்" என்ற 'முகம்' இதழின் கூற்று முற்றிலும் உண்மை.
எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு இன்றைக்குப் பெண்கள் முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறார்கள். மேலும் உயர்நிலைக்கும் போவார்கள்.
சுந்தரியும் சுண்டெலியும்! பத்திரிகை அலுவலகத்தில் என் சக ஊழியருக்கு சுண்டெலி என்றால் மிகவும் பயம். நாங்கள் அமர்ந்திருந்த (எடிட்டோரியல்) இடத்திற்கு அவ்வப்போது ஒரு சுண்டெலி வந்து போகும். ஒருநாள் அது அந்த ஊழியரின் காலில் ஏறி ஓடியது. அப்போது அவர் போட்ட கூச்சலில், எல்லாருமே அதிர்ந்து போய்விட்டோம். ஒரே சலசலப்பு. "இந்தச் சின்ன சுண்டெலிக்கா இவ்வளவு பயம்!" என்று நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் சமாதானம் ஆகவில்லை. அடுத்த நாள் அவர் விடுப்பு எடுத்துக் கொண்டார். இது என்னை யோசிக்க வைத்தது.
அந்தப் பெண்மணியின் பயத்தையே கருவாகக்கொண்டு 'சுந்தரியும் சுண்டெலியும்' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதை 'தினமணி சிறுவர் மணி'யில் வெளியானது. அந்தச் சக ஊழியரும், "கதையாவே எழுதிட்டீங்களா…" என்று கூறிச் சிரித்து வெட்கப்பட்டார். அந்தக் கதைக்கு நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்தன. தொடர்ந்து சிறார்களுக்காகப் பல கதைகளை எழுதினேன்.
இடைமருதூர் கி. மஞ்சுளா
கே: பெண் சுதந்திரம் குறித்து உங்கள் கருத்து... ப: மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் துறைகளிலும் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கிற பெண்கள் ஏராளம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து தங்களைக் கட்டிவைத்திருந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து, பல சமுதாயச் சீர்கேடுகளை எதிர்த்து, சீறிப் பாய்ந்து வருகிறார்கள். அத்தகைய சுதந்திரம் இப்போது பெண்களுக்கு இருக்கிறது. அதே சமயம், பாரதி சொன்ன புதுமைப் பெண் என்பதற்கான இலக்கணத்துக்குத் தவறாகப் பொருள் கொண்டு, பெண் சுதந்திரத்தைத் தவறான பாதையில் செலுத்துபவர்களும் இருக்கிறார்கள். இது வேதனைக்குரியது.
பெண் சுதந்திரம் என்பது வீட்டுக்கும் அடங்காமல், யாருக்கும் அடங்காமல் மனம்போன போக்கில் சுற்றித் திரிவதல்ல; விரும்பிய உடைகளை உடுத்துவதல்ல; விரும்பிய ஆணோடு விரும்பிய இடத்துக்குச் செல்வதல்ல. பெண் பருவம் எய்திய பிறகும் சுதந்திரமாக வெளியே செல்ல சமூக ஒப்புதல் முழுமையாகக் கிடைத்திருந்தாலும், அவளுக்கும் அவளது பெண்மைக்கும் நம்பிக்கையான பாதுகாப்பு இன்னும் இல்லை என்பதுதான் உண்மை.
பெண் அடைந்துள்ள கல்வி முன்னேற்றம் அதனையொட்டி அவளுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதனால் கிடைக்கும் ஊதியம் போன்றவை இன்னும் பெண்ணை முழு தன்னம்பிக்கை உடையவளாக ஆக்கிவிடவில்லை. சார்ந்து வாழும் நிலையில் இருந்து இன்னும் அவளுக்குக் கௌரவமான முழுச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.
இடைமருதூர் கி. மஞ்சுளா பெற்ற விருதுகள் திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சந்நிதானம் வழங்கிய 'சைவத் தமிழ் சிந்தையர்' விருது. சென்னை கம்பன் கழகம் வழங்கிய 'தமிழ்நிதி' விருது. சென்னை, சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய 'சேக்கிழார் விருது' புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய 'இதழியல் சுடர்' விருது. சைவ சித்தாந்தப் பெருமன்ற நூற்றாண்டு விழாவில் (சிதம்பரம்) 'ஆடல்வல்லான்' என்ற கட்டுரைக்கு முதல் பரிசு, பொற்கிழி. திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 'ஆத்ம தாகம்' என்ற குறுநாவலுக்கு வழங்கிய 'சக்தி விருது' ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் வழங்கிய 'மங்கையர் திலகம்' விருது. அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் வழங்கிய 'சக்திச் சுடர்' விருது. சென்னை ஆழ்வார்பேட்டை பொது நூலகத் துறை வட்டார நூலக வாசகர் வட்டம் வழங்கிய 'எழுத்துச் சிற்பி' விருது. மற்றும் பல விருதுகள்.
கே: உங்கள் குடும்பம் பற்றி... ப: என் தாய் அரசுப் பள்ளி நூலகர். தந்தை அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர். எனக்கு மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர். நான்தான் கடைக்குட்டி. சகோதரிகளில் ஒருவர் சுங்கத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், இளைய சகோதரி என் தந்தையைப் போலவே ஓவிய ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், மூன்றாவது சகோதரி இல்லத்தரசி. சகோதரர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்.
யாருடைய ஆதரவும், பாதுகாப்பும், ஒத்துழைப்பும், உதவியும் இல்லாமல் தனி ஒருத்தியாக இருந்து, என் மகளுக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து கவனித்து வளர்த்து, உயர்கல்வி படிக்க வைத்து, குடும்பப் பொறுப்பை, குடும்பச் சுமையை தனி ஒருத்தியாகத் தாங்கி, பத்திரிகை உலகிலும், படைப்புலகிலும் என்னால் பயணிக்க முடிந்திருக்கிறது. கடவுள் நம்பிக்கையும், தாய்-தந்தை மற்றும் பெரியோரின் ஆசியும், என் கடின உழைப்பும், தன்னம்பிக்கையுமே இதற்கெல்லாம் காரணம், கூடவே, மறைமுகமாக என் கணவர் எனக்குத் தந்துசென்ற தனிமை என்ற மிகப்பெரிய பரிசும் இருக்கிறது.
என் மகளை எம்.டெக். (நானோ டெக்னாலஜி) படிக்க வைத்திருக்கிறேன். தற்போது கோவையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஒருவரது சிறார் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 'அணில்களின் ஓட்டப்பந்தயம்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக வெளியிட்டிருக்கிறார். தாய்-மகள் இருவரின் நூல்களும் ஒரே மேடையில் கடந்த மாதம் (ஜனவரி, 2023) ஆழ்வார்பேட்டை சென்னை வாசகர் வட்டம் நூலகத்தில் வெளியிடப்பட்டன.
தெளிவான திடமான பதில்கள். "இன்று பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கக் கல்வியும், அறநெறிக் கல்வியும், சமயக் கல்வியும் இல்லாமைதான் பல பிரச்சனைகளுக்குக் காரணம். ஆண் ஆனாலும் பெண் ஆனாலும், சிறுவயது முதலே ஒழுக்கம், பணிவு, கீழ்ப்படிதல், பெரியோருக்கு மதிப்பளித்தல், சகிப்புத்தன்மை, பொறுமை, கவனம், பொறுப்புணர்வு ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்துப் பெற்றோர் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும். குழந்தைகளை வளர்ப்போர் இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது எனது வேண்டுகோள். எனது நேர்காணலை வெளியிடும் 'தென்றல்' இதழுக்கு என் நன்றி." என்று கூறிப் புன்னகைக்கிறார்.
அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெறுகிறோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் |