|
|
அச்சில், வானொலியில், தொலைக்காட்சியில் வழங்கும் மொழி செம்மொழியாக இருக்க வேண்டுமா அல்லது வட்டாரப் பேச்சு மொழியாக இருக்க வேண்டுமா என்ற வாக்குவாதம் நமக்குப் பழக்கமானது. தமிழ் ஊடகங்கள் பேச்சு மொழியைத்தான் புழங்க வேண்டும் என்று வாதிடுவோர் பலர். ஆனால், இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் செம்மொழியை, அதிலும் பி.பி.சி. அல்லது குவீன்ஸ் இங்கிலீஷைத்தான் புழங்க வேண்டும் என்று 70% இந்தியர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இன்றும் இந்திய வானொலி, தொலைக்காட்சிகளில் செய்திகள், முக்கிய நிகழ்ச்சிகளில் பி.பி.சி. ஆங்கில நடையும் உச்சரிப்பும் தொடர்கிறது.
அண்மைக்காலத்தில், பி.பி.சி. தொலைக் காட்சியில் குவீன்ஸ் இங்கிலீஷின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது என்று குறைகூறுகிறது குவீன்ஸ் இங்கிலீஷ் சொசைட்டி! பி.பி.சி. வானொலி ஒலிபரப்பத் தொடங்கிய காலத்தில் எந்த மொழியை வானொலியில் புழங்க வேண்டும் என்று ஆலோசித்தார்கள். லண்டன் மாநகரைச் சுற்றியுள்ள தென்கிழக்கு இங்கிலாந்தில் ஆக்ஸ்·போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைகள், ஈடன், ஹாரோ, போன்ற உயர்தரப் பள்ளி களில் படித்த கற்றவர்களின் செம்மொழி ஆங்கிலமே வானொலிக்கு ஏற்றது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆங்கிலம் கற்கும் பல வெளிநாட்டாருக்கு இன்றும் பி.பி.சி. ஆங்கிலம் மட்டுமே தரமான ஆங்கிலம்!
ரீத் பிரபு என்பவர் பி.பி.சி. நிறுவனத்தின் முதல் பொது இயக்குநர். ஒலிபரப்பு என்பது பொதுத் தொண்டாற்றுவது, நீதி புகட்டும் கல்வியில் ஊறியது, மனதை மேம்படுத்தும் கேளிக்கைகளைக் கொண்டது, அரசியல் மற்றும் வணிக உந்துதல்களுக்கு அப்பாற்பட்டது என்ற அடிப்படைக்கொள்கைகளை அவர்தான் நிறுவினார். அந்த வேர்களிலிருந்து வளர்ந்த பி.பி.சி. ஆரம்ப கால உச்சரிப்பிலிருந்து சற்று விலகியிருக்கலாம், ஆனால் இன்றும் பி.பி.சி.யில் கேட்ட செய்தி தவறாய் இருக்க முடியாது என்ற உலக நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருக்கிறது. இது வியக்கத்தக்க சாதனை. பி.பி.சி.யைப் போன்று அமைக்கப்பட்ட இந்திய வானொலி இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரச்சாரத்தைப் பரப்பும் ஊடகமாகச் செயல்படத் தொடங்கியது. வேரிலேயே விஷம் இருந்ததால், இந்தியா வின் விடுதலைக்குப் பின்னர் ஆகாஷவாணி என்ற இந்திய வானொலி அரசின் பிரச்சார இயந்திரமாகத்தான் தொடர்ந்தது. நல்ல உச்சரிப்பு, சிறப்பான நிகழ்ச்சிகளைத் தந்திருந்தாலும், ஆகாஷவாணியின் செய்தி கள் அரசின் பிரச்சாரம்தான்.
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை அறிவிப்பைத் தொடர்ந்து அரசு நிறுவனங்களான ஆகாஷவாணி, சமாச்சார் ஆகியன உண்மையைப் பற்றித் துளியும் கவலைப்படவில்லை. சஞ்சய் காந்தியின் இருபது அம்சத் திட்டம், நேரப்படி ஓடும் ரெயில் வண்டிகள், கோதுமைக் கொள்முதல் விலை என்று ஜோர்ஜ் ஆர்வெல்லின் '1984' நாவலில் வரும் மனக்கட்டுப்பாட்டு மையமாக, அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டது ஆகாஷவாணி.
நெருக்கடி நிலைத் தணிக்கையை தனியார் பத்திரிக்கை நிறுவனங்கள் பல்வேறு விதங்களில் எதிர்த்தன. இதில் ராம்நாத் கோயங்காவின் தலைமையில் இயங்கிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் எதிர்ப்பு துணிச்சலானது. தணிக்கையாளர்களால் மறுக்கப்பட்ட செய்திகளுக்குப் பதிலாக வெற்றிடங்கள், கருப்பு மையிட்ட பெட்டிகள், தொடர்பில்லாத கிண்டல் செய்திகள் என்று அவர்கள் வாசகர்களுக்குப் பூடகமாகச் செய்திகளை உணர்த்தினார்கள்.
ஆகாஷவாணியில் பிரச்சாரம், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் தணிக்கை செய்த வெற்றிடங்கள், இந்துவில் உலகச் செய்திகள் என்ற செய்தி வறட்சி நிலவரத்தில் மக்கள் வதந்திகளை நம்பத் தொடங்கினார்கள். பி.பி.சி. யின் தமிழோசை போன்ற செய்திகளைக் கேட்க முடிந்தவர்களுக்கு மட்டுமே இந்தியச் செய்திகள் தெரிய வந்தன. 1977 தேர்தலில் இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் படுதோல்வி அடைந்த செய்தியை அரசின் கையிலிருந்த ஆகாஷவாணியால் தெரிவிக்க முடியவில்லை. அதையும் இந்தியர்கள் முதலில் பி.பி.சி.யில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிவந்தது. |
|
நேபாள மன்னர் மக்களாட்சியைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அறிவித்து நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, ஊடகங்களைத் தணிக்கை செய்து கொண்டிருக்கிறார். இந்தியா நெருக்கடி நிலை நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்த எதிர்ப்பை இன்றைய நேபாள நாளேடுகளில் காண்கிறோம். இணையம், தொலைக்காட்சி, வானொலி என்று எல்லாவிதமான வெளிநாட்டுத் தகவல் தொடர்புகளையும் அரசர் துண்டித்திருக்கிறார். அதனால் வதந்திகள் செய்தியாக நம்பப்படும். அரசின் பிரச்சாரத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.
நேபாளத்தில் மக்களாட்சி வேர் விட்டு வளரத் தொடங்கிய நேரத்தில் நேபாள மன்னர் செய்திருக்கும் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசும் நேபாள மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அமைச் சரவையை மன்னர் மீண்டும் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. நேபாள மக்களுக்கு உலகெங்கும் உள்ள மக்களாட்சி அமைப்புகள் ஆதரவு அளிக்க வேண்டும். மன்னரின் முறைகேடான செயலைக் கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் சாபக்கேடு பி.பி.சி.யின் ரீத் பிரபு போன்ற தொலைநோக்கு கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான். தமிழை வைத்து அரசியல் செய்து ஆட்சி யைப் பிடித்த கட்சிகளின் வாரிசுகள் தமிழ் மொழி, பண்பாடு, பொதுத்தொண்டு இவற்றைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் கொச்சைத்தனமான, கீழ்த்தர நிகழ்ச்சிகளை வாரியிறைக்கும் சாக்கடைகளாகச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன.
சுனாமி போன்ற பேரிடர் தாக்கிய வாரத்தில்கூட, தொப்புள் தெரிய காபரே நாட்டியமாடும் நாயகிகளும், மைக்கேல் ஜாக்சனின் 'பீட் இட்' பாடலுக்கான குழு நாட்டியத்தின் நீர்த்துப் போன முப்பத்து மூன்றாயிரத்து அவதாரத்தையும், செய்தி என்ற பெயரில் கட்சிப் பிரச்சாரத்தையும், ஒரே மாமியார்-மருமகள்-பழிவாங்கும் கதையை எந்நேரமும் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது தமிழகத்தின் முதன்மைத் தொலைக்காட்சி நிறுவனம். இதில் அவல நிலை என்னவென்றால் ஏனைய தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களும் இதையே வெவ்வேறு ஆட்களைக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். பாவம் தமிழ் மக்கள்! இந்திய ஆட்சியாளர்கள் மக்களின் அவல நிலையைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் என்ற கருத்துக்கு விதிவிலக்காக வெகு சிலர் இருக்கிறார்கள். கர்நாடக முதல்வர் தரம் சிங் அப்படிப் பட்ட ஒரு விதிவிலக்கு என்று நம் கவனத்தை ஈர்த்தனர் சில தென்றல் வாசகர்கள். சென்ற ஜூலை மாதம், டல்லாஸில் வாழும் தன் தந்தை அனந்தகிருஷ்ணனைப் பார்ப்பதற்காக, அமெரிக்காவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் பெங்களூர் சிறுவன் அனீஷ். கிளம்புவதற்கு முன்னர், மழையால் விழுந்திருந்த மின் கம்பியில் பாய்ந்த மின்சாரம் அனீஷைத் தாக்கிக் கொன்று விட்டது. பெங்களூர் மாநகரமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்தக் குடும்பத்தின் பேரிழப்பை முழுதும் உணர்ந்த கர்நாடக முதல்வர் தரம் சிங் நேரடியாகக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது மட்டுமல்லாமல், உடனடியாக நகரெங்கும் அது போன்ற விபத்துகள் நடக்காமலிருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைச்சரவையும், அதிகாரிகளும் அனந்தகிருஷ்ணன் குடும்பத்தினரை மனிதாபிமானத்தோடு நடத்தியது பற்றிய செய்தி நம்மை நெகிழ வைத்தது. அமெரிக்கத் தமிழர்களின் சார்பில் அவர்களுக்கு நம் நன்றி.
மணி மு. மணிவண்ணன் |
|
|
|
|
|
|
|