|
|
குழந்தைகளின் திடீர் வளர்ச்சியை அன்றாடம் அவர்களைப் பார்க்கும் பெற்றோர் கவனிக்கத் தவறலாம், ஆனால், எப்போதாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் கவனிக்கத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறை இந்தியாவுக்குப் போகும்போதும் அதன் வளர்ச்சியும், மாற்றங்களும் பற்றிய வெளிநாட்டில் வாழும் நமது கண்ணோட்டம் அங்கேயே வாழ்பவர்களின் கண்ணோட்டத்தை விட வேறுபட்டிருக்கும். அண்மைக்காலத்திய மாற்றங்கள், குறிப்பாக உலகமயமாக்கலின் தாக்கத்தால் கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் மிகப் பெரியவை. ஐந்தாண்டுக்கு முன் வரை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அமெரிக்கவாசிகளும் "குருவிகள்" என்று பழிக்கப்பட்ட "கூரியர்களும்" மட்டுமே நிரம்பி வழிவார்கள். படிப்பு, பழக்க வழக்கங்கள், பண்பாடு இவற்றில் இவர்கள் இரு துருவங்கள் எனலாம். இந்திய வியாபாரிகள் சிங்கப்பூரில் கிடைக்கும் நவீன சாதனங்களை வாங்கிச் சென்னைக்கு எடுத்து வர இந்தக் குருவிகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். விமானங்களில் பறக்கும் வசதியற்ற குருவிகள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விமானப் பயணத்தை எப்படி முழுக்க முழுக்க "அனுபவிப்பது" என்பதிலேயே குறியாக இருப்பார்கள். பாவம், ஏழைகள்! இந்தப் பயணத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப லாபத்தில் இதுவும் ஒரு பங்கல்லவா!
விமானத்தில் ஏறிய உடனேயே விமானக் கழிவறையில் நுழைந்து அங்கிருக்கும் இலவசச் சாமான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வருவார்கள். இலவசமாக மது கிடைக்கிறது என்பதால் சளைக்காமல் வாங்கிக் குடிப்பார்கள். விமானப் பணிப்பெண்களை அதட்டி மிரட்டி ஏதாவது இலவசமாகக் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
விமானம் இறங்கித் தரையைத் தொடுவதற்கு முன்னரே, தலைக்கு மேலிருக்கும் தங்கள் கைப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு விமானத்திலிருந்து விரைவாக வெளியே இறங்க ஆயத்த மாவார்கள். இது எவ்வளவு ஆபத்தானது என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
இவர்களோடு போராட வேண்டியிருப்பதால், சிங்கப்பூர்-சென்னை பறப்புக்கு நியமிக்கப் படுவது தமக்குத் தண்டனை நியமனம் என்று பல பணிப்பெண்கள் கருதினார்கள். அந்தக் காலம் மலையேறி விட்டது. இந்த முறை சென்னைக்குச் சென்ற போது விமானத்தில் பாதிப்பேர் வெளிநாட்டவர்கள். இதில் பலர் யுண்டாய் சீருந்து நிறுவனத்துடன் தொடர்புள்ள கொரியர்கள், கிரேனைட் கல் இறக்குமதி செய்ய வந்த தாய்வான்காரர்கள், மின் கருவிகள், சீருந்து விற்கவந்த ஜப்பானியர், எதையும் விற்க வல்ல சீனர்கள் என்று கிட்டத்தட்ட சிலப்பதிகாரம் காட்டும் பூம்புகார் போலச் சென்னை விமான நிலையம் பரபரப்பாய் இருந்தது.
சென்னை-காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை-கேளம்பாக்கம் நெடுஞ்சாலை இரண்டிலும் இருபுறமும் சென்னையின் அசுர வளர்ச்சியின் அடையாளங்கள். இத்தனை பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இருக்கிறார்களா என்று மலைக்கத் தோன்றுகிறது. ஆனால் இவற்றிலிருந்து வரும் எல்லாப் பொறியியல் பட்டதாரிகளையும் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம் உறிஞ்சிக் கொள்கிறதாம்.
பெங்களூரின் வளர்ச்சி ஓரளவுக்குத் திட்டமிட்ட வளர்ச்சி. கிட்டத்தட்ட சிலிக்கன் வேல்லியின் எல்லா நிறுவனங்களின் கிளைகளையும் அங்கு காணலாம். அமெரிக்கக் குடியிருப்புகளைப்போல பரந்த இடங்களில் வசதியான வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்.
·போரம் என்ற அடுக்குமாடி அங்காடி லாஸ் ஏஞ்சலஸ் மாநகரின் பேரங்காடிகளை நினைவூட்டுகிறது. இங்கே கிடைக்கும் பொருள்களில் பல இங்கிருக்கும் விலையிலேயே கிடைக்கிறது. இனிமேல் சிங்கப்பூர் முஸ்த·பாவுக்குப் படையெடுக்க வேண்டிய தேவையில்லை.
இதைச் சிங்கப்பூரும் கவனித்திருக்க வேண்டும், கவலைப்பட்டிருக்க வேண்டும். அதனாலேயோ என்னவோ, சிங்கப்பூரை ஒரு உல்லாசச் சுற்றுலா செல்லும் இடமாக இந்தியாவில் விளம்பரப் படுத்துகிறார்கள். ஜெட் ஏர்வேஸ் புண்ணியத்தில், சிங்கப்பூர் சென்று வரும் பயணச்சீட்டு ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே! சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், இந்தியத் தொழிலாளிகளையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் சிங்கப்பூர் அழைத்து வந்திருக்கிறது. இந்தியா, சீனாவின் அசுர வளர்ச்சியால் தானும் வளரும் வாய்ப்பைச் சிங்கப்பூர் தவறவிடாது. |
|
கிரேனைட் கல் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் 100க்கு மேற்பட்ட வண்ணங்கள், நயங்கள் கொண்ட கிரேனைட் கல் வகைகள் கிடைக்கின்றன.
உலகிலேயே மிகவும் தொன்மையான கற்கள் தென்னிந்தியாவில்தான் இருக்கின்றனவாம். இதனாலோ என்னவோ பல்வேறு விதமான கிரேனைட் கற்கள் இங்குதான் கிடைக்கின்றன. திருவண்ணாமலைதான் உலகிலேயே மிகவும் தொன்மையான மலை என்று சில பக்தர்கள் நம்புகிறார்கள். கிரேனைட் வியாபாரிகள் போகிற போக்கைப் பார்த்தால் ஒரு மலையைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது. மலைகளைத் தவிடு பொடியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் சரளைக் கற்கள் மட்டுமே எஞ்சி நிற்கும்.
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மேல் இந்திய மனித உரிமைக் கழகம் சாற்றியுள்ள குற்றங்களின் அடிப்படையில் அவருக்கு நுழைமதி (விசா) தர மறுத்திருக்கிறது அமெரிக்க அரசு. நீங்கள் இராக்கைச் சூறைப் பந்தாடுவீர், பாகிஸ்தானியர் ஊரெல்லாம் குண்டு வெடித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் எனக்கு மட்டும்தான் நுழைமதி மறுப்பா என்று குமுறியிருக்கிறார் மோடி. சூட்டோடு சூடாக, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறிப் பாகிஸ்தானுக்கு 70 F-16 போர் விமானங்களையும் விற்க முடிவு செய்துள்ளது அமெரிக்க அரசு. அண்மையில் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் காண்டலீசா ரைஸ் இந்த அறிவிப்புகளைப் பற்றி இந்திய அரசை எச்சரிக்கவில்லை போலும். இது இந்தியத் தலைவர்களுக்கு அதிர்ச்சி யையும் ஆதங்கத்தையும் அளித்திருக்கிறது. தமிழ்த் திரையுலகப் பொற்காலத்தின் முடி சூடா மூவேந்தர்களில் மூன்றாமவரான ஜெமினி கணேஷ¤ம் மறைந்து விட்டார். பாசமலர், பாவ மன்னிப்பு, கொஞ்சும் சலங்கை, கல்யாணப் பரிசு போன்ற நினைவில் நிற்கும் படங்களில் நடித்து மக்களைக் கவர்ந்தவர் இவர்.
திருவிழாக்களில் அலறும் ஒலிபெருக்கிகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் - ஜாக்சன் துரை, திருவிளையாடல் சிவன் - புலவர் தருமி வசனங்களுக்குப் போட்டியாக நிற்கும் கொஞ்சும் சலங்கையின் "சிங்கார வேலனே தேவா!" பாடல். "உன் இசையென்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடிவந்த என்னை ஏமாற்றிவிடாதே" என்று ஜெமினி கணேசன் வசனம் பேச, சாவித்திரி வெட்கப்பட, காருகுறிச்சி அருணாசலம் சகோதரர்கள் நாயனத்துடன் "சிங்கார வேலனே" பாடல் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறை மிக அழகாகச் சித்தரிக்கும். அந்த நினைவுகளுக்கு நம் நன்றிகள். தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் சிலர் "மூன்றாவது மொழிப்போர்" தொடங்கியிருக்கிறார்கள். தமிங்கிலம் பேசுவதைத் தவிர்த்து, தமிழ் பேசுவது எப்படி என்று கற்பிக்க தமிங்கிலம் - தமிழ் அகராதிக் குறிப்புகளை வீதியெல்லாம் சுவரொட்டிகளில் ஒட்டி இருக்கிறார்கள். முதலிரண்டு மொழிப் போர்களில் பங்கேற்றுப் போராடி ஆட்சிக்கு வந்தவர்கள் தாம் தமிங்கிலத்தைப் பரப்புவதில் முன்னணியில் நிற்கிறார்கள். மூன்றாவது போராளிகளாவது தங்களை வளர்ப்பதை விடத் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்களா? வாசகர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
|
|
|
|
|