|
|
|
"ஆ... சுடுது, சுடுது" என்று கத்தியது காற்று.
" ஆமா, சுடுது, சுடுது" என்று பல குரல்கள்.
எல்லாக் காற்றும் ஒன்று சேர்ந்து கடலின் மேல்பகுதிக்கு வந்தன.
சுட்டெரிக்கும் சூரியனால் கடல் நீர் ஆவியாகி, கடலுக்கு மேலே வந்தது. அந்தக் காற்றுதான், 'சுடுது' என்று கத்தியது. அக்கம் பக்கத்திலிருந்த குளிர்ந்த காற்று அந்த இடத்துக்கு வந்தது. சூடான காற்றும் குளிர்ந்த காற்றும் இணைந்து விளையாட ஆரம்பித்துவிட்டன.
அப்போது, "ஏய் எல்லாம் நெருக்கமா வாங்க. நல்லா சுத்துங்க" என்றது வம்பன் காற்று.
"ரொம்ப நேரமா சுத்திக்கிட்டே இருக்கோம். எங்கே போகப் போறோம்?" என்று கேட்டது நம்பன் காற்று.
"இன்னைக்கே போகக் கூடாது. ரெண்டு நாளாவது ஆட்டம் போட்டுட்டு, அப்புறமா கரைக்குப் போவோம்" என்றது தும்பன் காற்று.
"இங்க நாம ரெண்டு நாள் ஆட்டம் போட்டு விளையாடும்போது, ஊருக்குள்ள மழை பெய்யுமாமே" என்று கேட்டது நம்பன்.
"ஆமா, நம்ம காற்றிலே ஒரு பகுதி நீராவியாக மேலே போய் மழையாகப் பெய்யும்" என்றது வம்பன்.
"சரி, நாம எந்தக் கரைக்குப் போகப்போகிறோம்?" என்று கேட்டது நம்பன்.
"அதெல்லாம் திட்டம் போட்டுப் போக வேண்டாம். அன்றைக்கு எங்க போக வேண்டும் என்று தோன்றுகிறதோ அங்கே போவோம்" என்றது தும்பன்.
நம்பன், "மூணு, நாலு தடவை நாம கடலூருக்குள் புகுந்து, அந்த மக்களைக் கஷ்டப்படுத்திவிட்டோம். அதனால இந்தத் தடவை வேறு பக்கம் போகலாம்" என்றது.
தும்பன் கோபத்துடன், "என்ன நீ? நாம சென்னை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை இப்படிப் பல ஊருக்கும் போய்க்கிட்டுத் தானிருக்கோம்" என்றது.
"சரி, சரி. பேசிட்டே சுத்தாம நிக்கிறீங்க. வேகமா சுத்துங்க" என்றது வம்பன்.
ஒரு நாள் முழுவதும் சுற்றிய மூன்று காற்றும் மறுநாள் வேகமாகச் சுற்றியபடி கரையை நோக்கி நகர ஆரம்பித்தன.
"அப்பப்பா! இந்த வேகம் எனக்கே பயமாக இருக்கிறது" என்றது நம்பன்.
"பயப்படாதே. நாம் கரைக்குப் போனா, நம்ம வேகம் குறைந்துவிடும். இன்னும் கொஞ்ச நேரத்தில கரைக்குப் போயிடுவோம்" என்றது வம்பன்.
"ஊருக்குள்ள நுழைஞ்சதும் உங்களால முடிஞ்ச வேகத்தில் போய், மரங்கள், தட்டிகள், கூரைகள் இன்னும் எதையெல்லாம் சாய்க்க முடியுமா அதையெல்லாம் சாய்க்கத் தயாராகுங்கள்" என்றது தும்பன்.
"பாவம் மக்கள் பாடுபட்டு வளர்த்த மரங்கள், கஷ்டப்பட்டுக் கட்டின வீடுகள், பார்த்துப் பார்த்து வாங்கின வண்டிகள் இதையெல்லாம் கீழே சாய்ப்பதால், நமக்கு என்ன லாபம்?" என்று கேட்டது நம்பன்.
"ஆரம்பத்திலிருந்தே, நீ மக்களை நினைச்சு ரொம்பக் கவலைப்படறே. மக்கள் நம்மைப் பத்திக் கொஞ்சமாவது கவலைப்படுகிறார்களா? இந்த உலகத்துக்கு நாம எவ்வளவு முக்கியம்ங்கிறது தெரிஞ்சும் சூழலை மாசுபடுத்தறாங்களே" என்று கோபமாகச் சொன்னது தும்பன்.
"சரி, சரி. கரை வந்துருச்சு. பேச்சை நிறுத்திவிட்டு உள்ளே புகுந்து நம்ம திறமையைக் காட்டுவோம்" என்றது வம்பன்.
உஸ்..... உஸ்..... உஸ்.... என்கிற சத்தத்தோடு ஊருக்குள் புகுந்தது புயல்! |
|
தேவி நாச்சியப்பன் |
|
|
|
|
|
|
|