Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ஓர் உயிர்
- தாமரைமணாளன்|செப்டம்பர் 2022|
Share:
சமீபத்தில் புயலாலும் மழையாலும் இயற்கையன்னை தன் சீற்றத்தைக் காட்டியதில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பாதிக்கப்பட்டதாகச் செய்தி. அந்தக் கணக்கில் ராக்கப்பனும் சேர்த்தியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ. சிருஷ்டி அமைப்புப்படி ராக்கப்பனும் மனிதன்தான் என்பதாலும், புயல் பிரதேசத்தில் வசித்து வந்ததாலும், அவனும் பாதிக்கப்பட்டது என்னவோ உண்மை. பாதிப்பின் தன்மைதான் மற்றவர்களிடமிருந்து சிறிது வித்தியாசமானது. அது அவனுக்கு நன்மையா, தீமையா என்று எனக்குக் கூறத் தோன்றவில்லை. ஆனால் அவன் சம்பந்தப்பட்ட வரையில் அன்றைய நிகழ்ச்சி அவன் வாழ்வில் ஒரு திருப்பம் என்றுதான் சொல்லமுடியும்.

அவன் தன் செல்வத்தை இழக்கவில்லை; காரணம் ஏற்கனவே அவனிடம் அப்படிப்பட்டது எதுவும் கிடையாது, அவன் பிச்சையெடுக்கும் பாத்திரத்தையும் ஒரு கந்தல் மூட்டையையும் தவிர. அவன் தன் இருப்பிடத்தையும் இழக்கவில்லை. அதற்குக் காரணம் அவன் இருப்பிடம் அவ்வளவு உறுதியானது. கிட்டத்தட்ட அரை லகரச் செலவில் அந்த இடம் கட்டப்பட்டது.

ஆமாம். அந்த நகரத்தில் ராக்கப்பனுடைய ஜாகைதான் ரொம்பப் பெரிய இடம். அறுபதடி உயரமான மணிக்கூண்டைத் தாங்கிக் கொண்டிருக்கும் பத்தடி உயரத் திண்ணயென்றால் சாதாரணமானதா?

அந்த இடம் ராக்கப்பனுடைய குடியேற்றத்தை உத்தேசித்துக் கட்டப்பட்டதாகக் கூற முடியாது. அந்தக் காலத்தில் யாரோ ஒரு வெள்ளைக்கார ராஜாவின் ஞாபகார்த்தமாக உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் கட்டியதாம். அது எப்படியிருந்தாலும், தற்சமயம் அது ராக்கப்பனின் வில்லங்கமற்ற சுவாதீனத்தில் இருந்து வருவது நிதர்சனமான உண்மை .

அந்தப் பத்தடி உயரத் திண்ணையில் மூன்றடி உயரத்தில் குகை போன்று உள்வாங்கிய பொந்துத் திண்ணையொன்று; சுவரில் பதித்திருக்கும் மாடக்குழி போல. அந்தப் பொந்துத் திண்ணைக்குள் ஒரு நபர் உட்கார, படுக்கப் போதுமான வசதியுண்டு. ஆதியில் சுமைதாங்கியாகப் பயன்படத்தான் அந்தப் பொந்துத் திண்ணையைக் கட்டியிருக்கலாம். ஆனால், அது இப்பொழுது ராக்கப்பன் என்ற உயிர்ச் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த இடம் ராக்கப்பனின் ஆக்கிரமிப்புக்குட்பட்டது ஒரு ரசமான விருத்தாந்தம். ராக்கப்பனுக்கு முன் வேறொரு குடும்பம் அந்தத் திண்ணைக்கு உள்ளும் புறமுமாகக் குடியிருந்தது. அவர்களும் ராக்கப்பன் இனத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் தாம். ஆனால் அவர்களுக்கில்லாத ஒரு விசேஷமான தகுதி ராக்கப்பனிடம் இருந்தது. அதைக் கொண்டுதான் அவனால் அந்த இடத்தைக் கைப்பற்ற முடிந்தது. அதுதான் அவன் உடம்பில் இருந்த ரோகம். வியாதிகளுக்கெல்லாம் தலைமை தாங்கக் கூடிய தகுதிபெற்ற 'பெரிய வியாதி!'

அந்தத் திண்ணையருகே அவன் காலடி எடுத்து வைத்தபோது அவன் வரவுக்குப் பலத்த ஆட்சேபம் தெரிவித்து எதிர்த்தனர் பழையவாசிகள். ஆனால் ராக்கப்பன் விடாப்பிடியாகத் தன் மூட்டையை இறக்கித் தன் ஜாகையை ஊன்றினான்.

அவ்வளவுதான்; பத்தே நிமிஷங்களில் அந்த இடத்தைக் காலி பண்ணி விட்டுச் சற்றுத் தொலைவிலிருந்த புளிய மரத்தடிக்குப் போய்விட்டது பழைய குடும்பம்.

போகும்போது அந்தக் கூட்டத்திலிருந்த கிழவியொருத்தி, "மிருகப் பய! ஒடம்பெல்லாம் ரோகமிருக்கே, குஞ்சும் குளுவானுமாயிருக்கிறவங்க பக்கத்திலே குந்துகிறேமேன்னு கொஞ்சமாவது ஓச்சை இருக்கா?" என்று வயிற்றெரிச்சலுடன் முணுமுணுத்தாள்.

"ஏய் கிழவி, வாயைக் கிழிச்சிருவேன்! எனக்கு ஒடம்பெல்லாம் ரோகம்தான். அதனால்தான் உங்களை நிமிட்டிலே விரட்டி விட்டேன். இனிமேல் இந்தப் பக்கம் வந்தீங்கன்னா, தொலைச்சிடுவேன்!" என்று அட்டகாசமாகத் தன் வெற்றியின் சூட்சுமத்தைப் புலப்படுத்தியவாறு புதுமனை புகுந்தான் ராக்கப்பன்.

அன்றுமுதல் இதுவரை கிட்டத்தட்ட ஒரு வருஷமாவது ஆகியிருக்கும். இந்த ஒரு வருட காலமும் அந்த இடம் அவனுடைய ஆட்சியில்தான் இருக்கிறது. யாரும் அவனிடம் நெருங்கவில்லை: நெருங்க முடியவில்லை என்பதுதான் நிலை.

கோவில் வாசலில் பிச்சையெடுப்பது. அங்கேயும் அவனுடைய வியாதியின் கௌரவத்தை உத்தேசித்துக் கொடுக்கப்பட்ட தனியிருப்புத்தான். தொழில் முடிந்ததும் தன் குகை வீட்டுக்குள் போய் முடங்கிக் கொள்வது. இவைதான் அவனுடைய நித்திய வாழ்க்கை தர்மங்கள். பொழுதுபோக்கு? அதுவும் உண்டு. யாரையாவது வம்புக்கிழுத்துக் கூச்சல் போட்டுக் கத்துவது தான் அவன் பொழுதுபோக்கு. அவனுடைய வம்பு விவகாரம் ஒரு புது ரகம். எவராவது தன் விஷயத்தில் குறுக்கிட்டால் அவர்மீது ஆத்திரப்படுவது மனித இயற்கை. ஆனால் ராக்கப்பன் தன்னை ஏறெடுத்துப் பார்க்காதவர்களைத்தான் வம்புக்கு இழுத்துத் திட்டுவான்.

வழிப்போக்கர்களில் யாராவது மணிக்கூண்டு வழியாக அவனைக் கவனிக்காமல் போனால் போதும். "என்னய்யா, பொணத்தைக் கண்டவன் மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு போறே. ஏதாச்சும் குடுத்துட்டுப் போய்யா! ஆள் இருக்கிறது. தெரியலையா?" என்று பொந்துத் திண்ணைக்குள்ளிருந்து கத்துவான்.

இது போதாதா சராசரி மனிதன் ஒருவனின் ஆத்திரத்தைக் கிளறிவிட? வழிப்போக்கன் ஏதாவது அலட்சியமாக அல்லது கோபமாகப் பேசுவான். ராக்கப்பன் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல் கத்துவான். இப்படிப்பட்ட ரகளைகள் அவன் வரவுக்குப் பின் மணிக்கூண்டுப் பக்கம் ரொம்ப சகஜம். அது அவன் திமிரா அல்லது மனக்குறையா? அவனுக்கே தெரியுமோ என்னவோ?

சமயங்களில் புளிய மரத்தடிக் குடும்பத்தைச் சேர்ந்த - அதாவது பொந்துத் திண்ணையிலிருந்து குடிபெயர்ந்த குடும்பம் - சிறிசு ஏதாவது அவன் இருப்பிடத்தருகே வரும். அந்தக் குழந்தை அவனை நோக்கி நெருங்க நெருங்க ஏனோ அவன் முகம் பரபரப்படையும். அதில் இனம்புரியா ஆர்வம் தோன்றும்.

சிறிசு அவன் அருகில் வந்திருக்கும்; அந்தச் சமயம், "இந்தாறே, அந்தக் குஷ்டரோகியண்டே போவாதே!" என்று புளிய மரத்தடியிலிருந்து அதட்டல் குரல் கேட்கும். சிறிசு பயந்து ஓடிப் போய்விடும். சட்டென்று ராக்கப்பனின் முகமும் விகாரமாகி விடும். "ஏய், பசங்களா! யாராச்சும் இங்கே வந்தீங்கன்னா கொன்னு போடுவேன், கொன்னு" என்று கத்துவான். அந்தக் கத்தல் நிலையற்ற மனத்தின் குரங்கு விளையாட்டா, அல்லது கொதித்து வரும் பால் சிறு உப்புக் கல்லால் திரிந்து விடுவது போன்ற உணர்ச்சிகளின் விசித்திரக் காரணார்த்தமான குமைச்சலா?... மனமே புதிர்தான்!

எவ்வளவோ காலத்துக்குப் பிறகு அன்றுதான் புயலும் மழையும் இரவு நேரத்தில் வன்மத்துடன் படையெடுத்துக் கொண்டிருந்த போது, ஓர் உருவம் ராக்கப்பனின் பொந்து வீட்டை நோக்கித் தைரியமாகச் சென்றது.

அந்த உருவத்திடம் யாருமே, "அவன் குஷ்டரோகி; பொல்லாதவன். அவனிடம் போகாதே!" என்று புத்திமதி சொல்லவில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும், அந்த உருவம் அந்த அறிவுரைகளை மதித்திருக்கும் என்று சொல்ல முடியாது; காரணம், அது மனிதர்களின் கோபதாபத்தையும், வெறுப்புணர்ச்சியையும் புரிந்து கொண்டு நடக்கத் தெரியாத அற்ப மிருகம்; ஒரு வெள்ளாடுதான்!

மழைக்கு ஒதுக்கிடம் தேடித்தான் அது ராக்கப்பனின் பொந்துத் திண்ணையருகே வந்தது. ஆடு வந்ததை ராக்கப்பன் முதலில் கவனிக்கவில்லை. அவன் அப்பொழுது மழைக்கும் புயலுக்கும் பயந்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்த புளியமரத்தடி வாசிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

தள்ளாடித் தள்ளாடி ஓடிக் கொண்டிருந்த கிழவியைப் பார்த்து, "என்ன, கெழவி, மழைக்குப் பயந்து ஓடறயா? வேணும்னா நம்ப திண்ணைக்கு வர்றியா?" என்று எக்காளமாகக் கேட்டான்.

"நாசமாப் போறவனே, கேலியா பண்றே! உன்னை இந்தப் புயலு வாரிக்கிட்டுப் போவாதா? மழையிலே விழுந்து செத்தாலும் சாவேனே தவிர, உன்னண்டை வருவேனா?... தோ, நிக்குதே வெள்ளாடு, அதுகூட உன் முகத்திலே விழிக்காது" என்று ஏசிவிட்டுத் தூரத்தில் தெரிந்த ஒரு வீட்டுத் தாழ்வாரத்தை நோக்கி ஓடினாள் கிழவி.

அப்பொழுதுதான் ராக்கப்பனுடைய பார்வை வெள்ளாட்டின் மேல் விழுந்தது. அது அவனுடைய திண்ணையை ஒட்டி நின்று கொண்டிருந்தது.

"கிழட்டுப் பொணம் சொல்லி விட்டுப் போவுது. இந்த ஆடுகூட என் முகத்திலே விழிக்காதாமே. ஒரு சனியனும் என் மூஞ்சியிலே முழிக்க வேணாம். நானும் அவுங்க மூஞ்சியிலே முழிக்க வேணாம்" என்று முணுமுணுத்துக் கொண்டு, "த்தா, ஹை!" என்று ஆட்டை நோக்கிக் கத்தினான் ராக்கப்பன். அவனுடைய கத்தல் ஆட்டின் முன் எடுபடவில்லை.

அது அவனை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தது. பின் தன் தலையை வளைத்து முகத்தை உடம்பில் தேய்த்தவாறு திண்ணையோடு இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டு நின்றது.

"ஹை! சனியன் ஓடிப் போறயா, இல்லையா?" என்று பொந்துக்குள்ளிருந்து மிரட்டினான் ராக்கப்பன். அவனுடைய மிரட்டலைப் பொருட்படுத்தாமல் காதுகளையும் வாலையும் சுவாரசியமாக ஆட்டிக் கொண்டு மழையை வேடிக்கை பார்த்தது ஆடு.

ராக்கப்பனுக்குச் சரியான கோபம், நியாயம்தானே! மனிதன்கூட அவனுக்குப் பயப்படுவான், அந்த அற்ப மிருகம் எவ்வளவு அலட்சியமாக நிற்கிறது!

அவன் ஆத்திரத்தைக் கிளறிவிடும் அடுத்த நடவடிக்கையில் இறங்கியது ஆடு. ஒரே தாவலில் ராக்கப்பனின் திண்ணைக்குள் ஏறியது. அவ்வளவு தான்; அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டது. ஓங்கி ஓர் அறை அறைந்து அதை வெளியே தள்ளினான். வெளியே குதித்து ஓடிய ஆடு சிறிது தூரம் சென்றதும், நின்று ராக்கப்பனைப் பார்த்தது. ஒரு விநாடிக்குள் அது சொட்டச் சொட்ட நனைந்து விட்டது.

மழையின் வேகம் தாங்காமல் அது மீண்டும் திண்ணையை நோக்கித் தயங்கியவாறு வந்தது. சற்று முன்னால் நின்ற அதே இடத்தில் திண்ணையோரமாக நின்றுகொண்டு ராக்கப்பனைப் பரிதாபமாகப் பார்த்தது.

ஆட்டின் பார்வையில் ராக்கப்பனுக்குச் சற்றுப் பெருமைதான். முன்னால் அவனுடைய மிரட்டலுக்குக் கொஞ்சமும் மசியாமல் நின்று கொண்டிருந்த ஆடு, இப்பொழுது அவனுக்குப் பயந்து பயந்துதானே நின்று கொண்டிருக்கிறது!

தன்னிடம் அதற்கு உண்மையாகவே மரியாதை தோன்றியிருக்கிறதா என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவனுக்கு ஆசை ஏற்பட்டு விட்டது. ராக்கப்பன் எந்தப் பள்ளிக்கூடத்திலும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் படித்ததில்லை. எனவே அவனுக்கு அந்த விஷயங்களெல்லாம் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அவன் தன் சொந்த மனப்போக்குக்கிணங்கவே ஆட்டிடம் தன் விவகாரத்தை ஆரம்பித்தான்.

அவன் வேண்டுமென்றே தன் கோபத்தை வரவழைத்துக் கொண்டு "ஹே. ஓடிப் போ!" என்று கையை ஓங்கியவாறு மீண்டும் ஒரு மிரட்டல் - இப்போது அது போலி மிரட்டல் - போட்டான்.

அவன் கையை ஓங்கியதுமே ஆடு ஓடிவிட்டது. அடி வாங்கியது மறந்து விடுமா?

தன் அதிகாரம் ஆட்டின் மேல் வெற்றிகரமாக அமுலாவதில் ராக்கப்பனுக்கு ரொம்பத் திருப்தி ஏற்பட்டு விட்டது.

இரண்டாவது தடவையும் விரட்டப்பட்டு விட்டதால் ஆடு மழையிலேயே திகைத்து நின்றது. ஆனால் அதன் பார்வை ராக்கப்பனின் திண்ணைமீதுதான்.

ராக்கப்பனுக்கும் சற்று மனமிளகி விட்டது. ஆரம்பத்தில் சண்டித்தனம் பண்ணினாலும், பின் தன் கட்டளைக்குப் பணிந்து நடக்கும் தன் திடீர் பிரஜை மீது அவனுக்கு அக்கறை ஏற்பட ஆரம்பித்தது. பயம் மட்டுமின்றி, அவன்மீது. அதற்கு அன்பும் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. அவன் விரட்டி விட்டாலும் திரும்பவும் அவனையே தானே நோக்குகிறது. கிழவி என்னவோ சொன்னாளே, அவளைப் போல் அது அந்த வீட்டுத் தாழ்வாரத்துக்கு ஓடவில்லையே!

ஆட்டின் பார்வை ராக்கப்பனுக்கு வியப்பை அளித்தது. அவனை இதுவரையில் யாருமே உற்றுப் பார்த்ததில்லை. அப்படியே யாராவது பார்த்தாலும், மறுவிநாடியே சொல்லொணாக் கொடுமையுடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு சரேலெனத் திரும்பி ஓடி விடுவார்கள். அவனுக்குப் பிச்சையிடுகிறவர்கள் கூட அவனை அனுதாபத்தோடு பார்த்ததில்லை; அருவருப்போடுதான் பார்த்தார்கள். ஆட்டின் அதிசயப் பார்வை ராக்கப்பனுக்கு விளங்காத புதிராயிருந்தது; இது வரையில் அவன் வாழ்நாளிலேயே நுகர்ந்தறியாத ஒரு புது அனுபவமாகவும் இருந்தது.

அன்பையோ, அனுதாபத்தையோ. ஆதரவான சொல்லையோ என்றுமே அறியாதவன் ராக்கப்பன். இதுவரையில் மனித இனத்தின் கொடுஞ் சொற்களுக்கும், அருவருப்பான உணர்ச்சிக்குமே ஆளாகிவந்த ராக்கப்பன், இன்று முதன்முதலாக ஒரு ஜீவராசியின் பார்வைக்கு இலக்காகியிருக்கிறான். அவனைத் தவிர மற்றவர்களுக்கு இதைப்பற்றி என்ன சொன்னாலும் விளங்காது. இந்த அபூர்வ நிகழ்ச்சி ராக்கப்பனின் மரத்துப் போன உள்ளத்தை ஓரளவு இளக வைத்துவிட்டது.

எவ்வளவு நேரம்தான் ஆடு மழையில் நிற்கும்? மனிதனின் கொடுமைக்குப் பயப்படுவதைவிட இயற்கையின் கொடுமைக்கு அதிகமாகப் பயந்து பழகிவிட்ட ஜீவன் அது. மீண்டும் திண்ணையருகே வந்தது. சிறிது நேரம் திண்ணையருகே நின்று ராக்கப்பனையே பார்த்தது.

ராக்கப்பன் ஒன்றும் சொல்லவில்லை. ஆட்டுக்குக் கொஞ்சம் தைரியம் ஏற்பட்டிருக்க வேண்டும். மெல்லத் திண்ணை மீது ஏறியது. முதலில் அவனுக்குப் பயந்து திண்ணையின் விளிம்பருகே ஒட்டிக் கொண்டு நின்றது. அப்பொழுதும் ராக்கப்பன் அதை விரட்டவில்லை. ஆகவே அது சுதந்திரமாகத் திண்ணையின் உட்புறத்தில் நுழைந்து கொண்டது.

வெளியே மழை 'விர் விர்' என்று வேகம் கொண்டு பெய்தது. பொந்துத் திண்ணைக்கும் சரசரவென்று தூவானம் அடித்தது.

வெளிப்புறத்தை நோக்கிக் கொண்டிருந்த ஆடு தன் முகத்தைத் திருப்பி மறைவிடத்துக்காக ராக்கப்பனின் கன்னங்களில் உரசியவாறு அவனுடைய தோள்பட்டைகளில் தன் தலையைப் புதைத்துக் கொண்டது.

இது என்ன மாயமா, மந்திரமா? ஆட் டின் ஸ்பரிசம் பட்டதும் அந்த முரட்டு ராக்கப்பனின் கண்கள் ஏன் இப்படிப் பாசக் கிளர்ச்சியில் துடிப்பவை போல் பளபளக்கின்றன? அவனுடைய கோபம், விளையாட்டு எல்லாம் எங்கே? எல்லாமே செயற்கைதானா?

சிறிது நேரம் பித்தன் போல் ஆட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ராக்கப்பன். திடீரென்று அந்தச் 'சிடுமூஞ்சி முரடன்' தான் போர்த்தியிருந்த துணியை ஆட்டின் முதுகிலும் சேர்த்துப் போர்த்தி அதைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு 'ஹோ' வென்று கதறி அழுது விட்டுப் புலம்ப ஆரம்பித்து விட்டான்.

"இந்த உலகத்திலே நீ மட்டும் தான் என்னப் புரிஞ்சிக்கிட்டிருக்கே! உனக்கு மட்டும்தான் நான் வேணும். இனிமே நீ மட்டும்தான் எனக்கு வேணும்" என்று அவன் புலம்பியதை ஆடு புரிந்து கொண்டதோ என்னவோ, அது அவனுடைய முகத்தோடு தன்னுடைய முகத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டது.

மழையின் வேகம் வர வர அதிகரித்தது. தூவானம் கிழிசல் போர்வையையும் மீறி அவர்கள் இருவரையும் தாக்கியது. ஆடு வெடவெட வென்று நடுங்கியது.

சிறிது நேரம் ராக்கப்பன் யோசித்தான். பின் இருவருக்கும் மூடியிருந்த துணியை எடுத்து ஆட்டின் மேல் இடைவெளியில்லாமல் போர்த்தினான், ஆட்டைத் தன் முதுகுப்புறமாக நிறுத்தி அவன் திண்ணையின் முன் பக்கமாகத் தள்ளி உட்கார்ந்து கொண்டான், அவன் உட்கார்ந்திருந்தது, ஆட்டின் மீது மழைத்துளி விழாதவாறு அமைப்பாக இருந்தது. இனி ஆட்டின்மீது மழைத்துளிகள் படவேண்டுமானால் அவன் உடம்பை ஊடுருவி அடித்தால்தான் உண்டு.

இட நெருக்கடி, திண்ணையின் வெளியோர விளிம்பில் கரங்கள் ஊன்றியவாறு குந்திக் கொண்டிருந்தான் ராக்கப்பன். ரோகத்தால் மக்கிப் போன சொத்தைக் கரங்களின் பலத்தில்தான் அவன் உடம்பு உட்கார்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த உயிரிலோ அசாதாரணத் தீரம்!

வெளியே உலகத்தையே உருட்டிப் புரட்டி விடுவது போல் மழையும் புயலும் பேய்க்கூத்து ஆடின. உள்ளே பின்புறத்தில் அஞ்சி ஒடுங்கி ஒதுங்கிக் கொண்டிருந்தது உலகத்தின் கண்களுக்கு அற்பத்திலும் அற்பமான ஒரு ஜீவன். நடுவில் வாழ்வு. அழிவைப் பற்றிய சிந்தனையைக் கடந்த நிலையில் வீறு கொண்டு போராடிக் கொண்டிருந்தது ஓர் உயிர்.

விடியும் வரையில் ஊழிக்கூத்து ஆடி ஓய்ந்தது மழை.

விடிந்தது.

இரவின் பெரும்பகுதி வரை உணர்ச்சிப் பெருக்குடன் உறவாடிக் கொண்டிருந்த இரு உயிர்களில் ஓர் உயிர் திண்ணையிலிருந்து குதித்தது. சிறிது நேரம் மழை நீரில் நனைந்து, சகதியில் கிடந்த தன் துணையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தது.

சடசடவென்று வண்டிச் சத்தம் கேட்டதும் வாழ்ந்து கொண்டிருந்த உயிர், வாழ்ந்து முடித்துவிட்ட தன் துணையை விட்டுத் தயங்கித் தயங்கிச் சென்றது.

வெகு காலமாகப் பிணமாக வாழ்ந்து, பின் ஒரே ஒரு இரவு மட்டும் மனிதனாய் வாழ்த்துவிட்ட திருப்தியில் மடிந்துவிட்ட அந்தச் சடலத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு நகர்ந்தது நகரசபை வண்டி.
தாமரைமணாளன்
Share: 




© Copyright 2020 Tamilonline