Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அனுபவம் | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பொன்னர் செத்த கதை
- சோ. சிவபாதசுந்தரம்|ஆகஸ்டு 2022|
Share:
கா.சு.பொ. என்றால் கொழும்பிலே பெரிய புள்ளி. நாலைந்து கடைக்கு முதலாளி. அஞ்சுலாம்படியிலே சாய்ப்புச் சாமான் சுருட்டுக்கடை; இரண்டாம் குறுக்குத் தெருவில் எரு புடைவைக் கடை; செட்டித் தெருவிலே ஒரு கிட்டங்கி - இதற்கு 'ஸ்டோர்' என்று மாத்திரம் பெயர்; ஐந்தாம் குறுக்குத் தெருவிலே கருவாட்டுக்கடை; கும்பனித்தெருவிலே ஒரு கடை. தனிப்பட்ட ஒரு இனமில்லாத கதம்ப வியாபாரம். இனி எல்லாக் கடைக்கும் சீனி பேர்மிட் வேறுண்டு. எல்லாமாக நூறு மூடை சீனிக்கு வழிபண்ணி வைத்துக்கொண்டார். இது, குறைந்த கணக்குப் பதினாயிரம் ரூபா கொண்டுவரும். எப்படியென்ற ரகசியம் சீனி வியாபாரிகளுக்குத் தான் தெரியும். இதைவிட, புடைவை பேர்மிட், கூப்பன் வகையறாக்கள். பலவிதமான சுளியோட்டங்களுமுண்டு.

பொதுவாகச் சொல்லப் போனால் காவன்னா சூனா போனா கொழும்பிலே வியாபாரம் செய்யும் யாழ்ப்பாணத்தவர்களில் ஒரு பெரிய புள்ளிதான். எச்செலவுந் தள்ளி மாதம் ஐம்பதினாயிரம் மிஞ்சும். அதுவும் கடைகளைப் பார்க்கும் கணக்குப்பிள்ளை ஐந்தொகைப்படி நம்ம முதலாளி புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பதில்லை என்று கேள்வி.

காவன்னா சூனா போனா விலாச முதலாளி ஸ்ரீமான் காசிப்பிள்ளை சுப்பிரமணியம் பொன்னம்பலப்பிள்ளையின் இந்த ஐஸ்வரியங்களெல்லாம் போன மூன்று வருஷத்துச் சமாச்சாரம்தான். ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு வெறும் 'சுப்பற்றை பொன்னர்' யாழ்ப்பாணம் பறங்கித்தெருவிலே 'திறம் சாப்பாட்டுக்கடை' போர்ட் ஒன்று தொங்கவிட்டுக் கொண்டு ஈயோட்டி வந்தவர். அவர் சமுசாரம் செல்லாச்சி தற்போது ஸ்ரீமதி செல்வநாயகியம்மாள். குடித்தன சிக்கனத்தில் மகா கெட்டிக்காரி. ஏதோ கிடைத்ததைக் கொண்டு இரண்டு பேருடைய வாயையும் வயிற்றையும் கழுவிச் சமாளித்து வந்தாள். குழந்தை குட்டி ஒன்றுமில்லை. பன்னிரன்டு வருஷ காலமாகத்தான் செல்லாச்சி சோமவார விரதம் தவறாமல் பிடித்துவருகிறாள். ஆனால் பலனில்லை. கோட்டை முனியப்பர்கூட உதவி செய்ய மறுத்துவிட்டார்.

'திறம் சாப்பாட்டுக்கடை' சுப்பற்றை பொன்னருக்கு வாய்க்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கொஞ்சநாள் இருந்து பார்த்தார். முடியவில்லை இந்த நிலையில்தான் ஒருநாள் அவர், மூன்று வருஷங்களுக்கு முன்பு, செல்லாச்சியைத் தமையன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மூட்டையும் முடிச்சுமாக கொழும்புக்கு வந்தார். செக்கடித்தெரு 'நெடுகே முருகேசம்மான் சோத்துக்கடை' இப்போ முப்பது வருஷகாலமாகப் பெயர்போன கடை. சுப்பற்றை பொன்னர் நாணயமான மனுஷனாகக் காணப்பட்டதிலிருந்து முருகேசம்மானுக்குப் பிடித்துவிட்டது. கடையிலே வைத்துக்கொண்டார்.

1942ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி ஜப்பான்காரன் ஆகாயத்தில் வந்து முழங்கின அன்றைக்கு கொழும்புப் பட்டணம் பட்ட பாடுதான் எல்லாருக்கும் தெரியுமே. முப்பது வருஷ காலமாக அம்மிக்கல்லுப்போல உட்கார்ந்து சம்பாதித்து வந்த நெடுவல் முருகேசம்மான் கூட அசைந்து விட்டார். கதிகலங்கிப்போய், அகப்பட்டதைக் கையிலெடுத்துக் கொண்டு இரண்டாம் பேருக்கும் சொல்லாமல் ரயிலேறி விட்டார். சுப்பற்றை பொன்னர் மாத்திரம் கலங்கவில்லை. முருகேசம்மான் சோத்துக்கடை பொன்னரம்மானுக்காயிற்று. மூன்று மாசத்திலே கிளம்பிவிட்டார் மேலே.

அப்புறம் என்ன, ஆனைவிலை குதிரைவிலை காலத்திலே 'சுப்பற்றை பொன்னர்' பொன்னம்பலம்பிள்ளையாகி, காவன்னா சூனா போனா விலாசம் தரித்து நாலைந்து கடைக்கு முதலாளியானது பெரிய கதை. அதையெல்லாம் சொல்லாமல் அவர் 'செத்த' கதையை மாத்திரம் கேட்போம்.

ஊரிலே 'பேயடிச்சான் ஒழுங்கை'யிலிருக்கிறது காவன்னா சூனா போனாவின் 'பங்களா'. கட்டிக் குடிபுகுந்தது போன தையிலேதான். ஸ்ரீமதி செல்வநாயகியம்மாள் ஏக சக்கிராதிபத்தியப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றாள். சித்திரை வருஷப்பிறப்பிற்காக ஒரு வாரத்திற்கு முன்புதான் 'போனா' ஊருக்குப் பயணம் கட்டினார். சகதர்மிணிக்கு வேண்டிய பட்டுப்புடைவைகள் வீட்டுச் செலவுக்கு வேண்டிய மிளகாய், உள்ளிப்பூடு, சீனி முதலிய விலை பெற்ற சாமான்கள், வருஷப்பிறப்புக் கொண்டாட்டத்திற்கு வேண்டிய மற்றும் சாமான்கள். அக்கம் பக்கத்திலேயுள்ள சிலருக்குப் புடவை -துணி பெரிய முதலாளி ஊருக்கு விஜயம் செய்வதென்றால் சும்மாவா? அன்று வீடு ஒரே அமர்க்களப்பட்டது.

அன்று மத்தியானம் ஸ்ரீமதி செல்வநாயகியம்மாள் பிரத்தியேக அன்போடு கொடுத்த கோழிக்கறியும் சோறும் பறங்கித்தெரு 'திறம் சாப்பாட்டுக்கடை' அனுபவம் இதற்குள் மறந்து போகுமா?. சாப்பிட்டுவிட்டு நல்ல கட்டை கொரனேஷன் சுருட்டொன்றை வாயில் வைத்துக்கொண்டு ஈசிசேரில் சாய்ந்து விட்டார். சற்றுநேரம்தான் கண்ணயர்ந்தார், பாவம் அதற்குள் அப்படியெல்லாமா நடக்க வேண்டும்? யாரோ இரண்டு தடியன்கள் வந்து உச்சந்தலையில் ஒருபோடு போட்டார்கள். அவ்வளவுதான்! பொன்னரின் உயிர் பிரிந்துவிட்டது!

போன உயிர் அந்த இடத்தைவிட்டு அசையமாட்டேன் என்று விட்டது. தடியன்கள் இருவரும் பல்லை இழித்துக்கொண்டு நூறு மூட்டை சீனிபேர்மிட், கத்தை கத்தையாக வைத்திருந்த புடைவைக்கூப்பன், இரும்புப்பெட்டிச்சாவி இவற்றைச் சுருட்டிக் கொண்டனர். இதைப்பார்த்துவிட்டு பொன்னரின் உயிர் போய்விடுமா? எவ்வளவோ வாதாடிப் பார்த்தார்; கெஞ்சினார்; முரட்டாத்மாக்கள் கம்பி நீட்டிவிட்டனர் பொன்னர் பாடு திண்டாட்டமாகிவிட்டது.

'செத்த வீட்டுக்கு' ஊர்முழுவதுமே திரண்டு வந்து விட்டது. 'சுப்பற்றை பொன்னர்' யாரோ என்று தள்ளிவைத்திருந்தவர்கள் எல்லாரும் இப்போ சொந்தம் கொண்டாடி வந்து பங்குபிரிக்க அவதிப்பட்டனர். ஸ்ரீமதி செல்வநாயகியம்மாள் என்ற செல்லாச்சி தலைதலையென்று போட்டுக் கொண்டாள். இந்தக் காட்சியின் நடுவே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பொன்னரின் 'ஆவி'யை யமதர்மராஜன் வந்து பற்றிக் கொண்டான். திரும்பிப் பார்த்தார் பொன்னர். எங்கேயோ அந்த ஆசாமியை பார்த்த ஞாபகமாய் இருக்கிறது. யோசித்து யோசித்துப் பார்த்தார். ஆனால் மட்டுக்கட்ட முடியவில்லை. யமதர்ம ராஐன் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு திக்குத்திசை தெரியாத இடமெல்லாம் சுற்றிவிட்டு ஒரு பெரிய பட்டணத்திற்குக் கொண்டு சென்றான். தெரு வாசலில் ஒரு குதிரை வண்டி நிறுத்தப்பட்டு இருந்தது. அதற்குள் ஒரு சவப்பெட்டி, கன்னங்கரேலென்று இருந்தது. அந்தப் பெட்டியைப் பார்த்ததும் திகைத்துப் போய் பொன்னர் தன் கூடவந்த யமதர்ம ராஐனை நிமிர்ந்து பார்த்தார். சட்டென்று ஞாபகம் வந்ததும் ஆச்சரியத்துடன் "அடே டேய், நம்ம முருகேசம்மானா!" என்று கதறிவிட்டார். 'நெடுவல் முருகேசம்மான்' சற்றும் ஈவிரக்கமின்றி பொன்னரின் குரல்வளையை நெருடினார். பொன்னர் விழி பிதுங்க விலவிலத்துப் போனார். தடியன்கள் அடித்துக் கொன்ற போது அவ்வளவு கஷ்டப்படவில்லை அவர். ஆனால் முருகேசர் கைப்பிடியில் உடல் நொறுங்கியது. "அம்மான்! விட்டுவிடு. நான் கொடுத்து விடுகிறேன். உனக்குப் புண்ணியம் உண்டு" என்று விம்மினார்.

"உண்மையைச்சொல், எவ்வளவு எடுத்தாய்?" என்று கேட்டார். முருகேசர்.

"நான் எண்ணிப்பார்த்தது ஆகப் பதினாயிரம். அதற்குமேல் எவ்வளவிருந்ததென்று தெரியாது".

"அம்மான். எல்லாம் உனக்காகவே வைத்திருக்கின்றேன். உன்னாணை சொல்கிறேன், எல்லாம் உன் சொத்துதான். வா, இன்றைக்கே வேண்டுமானால் எல்லாம் எழுதித் தருகிறேன். எனக்கேன் அம்மான் இந்தச் சொத்து? எனக்கு யார் பிள்ளையா? குட்டியா, வா, திரும்பி கொழும்புக்குப் போவோம்" என்றார் பொன்னர் சமயோசிதமாக

யமதர்மராஜன் நெடுவல் முருகேசம்மான் வாயைப் பிளந்தார். "என்ன? எனக்கா! எல்லாமா?".

★★★★★


"இந்தமாதிரிக் கழுத்தை முறித்துக்கொண்டு தானா தூங்கவேண்டும்? போய்க் கட்டிலில் படுக்கிறதற் கென்னவாக்கும்?" என்று சொல்லிக்கொண்டே ஸ்ரீமதி செல்வநாயகியம்மாள் வந்து தன் கணவனைத்தட்டி யெழுப்பினாள்.

திடுக்கிட்டெழுந்த பொன்னர், உடம்பெல்லாம் வியர்வை பாய்ந்தொழுக, "செல்லி, நான் சாகவில்லையா?" என்று திகைப்புடன் கேட்டார்.

"சீ சீ, இதென்ன, வருஷமும் பெருநாளுமாக இந்தப் பிரமசத்தி பிடித்த வார்த்தைகள். உங்களுக்கென்ன பைத்தியமா?" என்றாள் செல்லாச்சி.

பொன்னர் சமாளித்துக்கொண்டு, அடுத்த கேள்வி ஒன்று போட்டார். "நெடுவல் முருகேசம்மான் இப்போ எங்கேயிருக்கிறார் தெரியுமா?"

"அவர்தான் போய் ஆட்டைதிவசமும் முடிந்துவிட்டதே!" என்றாள் ஸ்ரீமதி செல்வநாயகியம்மாள்,

"நல்லவேளை" என்று தனக்குள் சொல்லித் திருப்திப்பட்டார் பொன்னர்.

(நன்றி: ஈழகேசரி, 13.04.1945)
சோ. சிவபாதசுந்தரம்
Share: 




© Copyright 2020 Tamilonline