Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அனுபவம் | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
குகை நமசிவாயர்
- பா.சு. ரமணன்|ஆகஸ்டு 2022|
Share:
மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் எனப் பல வழிமுறைகளை அவர்கள் உபதேசிக்கின்றனர். அவர்கள் போதிக்கும் வழிபாட்டு முறைகளில் பல்வேறு வகைகளுண்டு. இம்முறையில் லிங்கத்தையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள் 'லிங்காயத்' என அழைக்கப்பட்டனர். 'வீரசைவர்' என்றும் இவர்களுக்கு மற்றொரு பெயருண்டு. அந்த வீரசைவ மரபில், கர்நாடகாவில் உள்ள மல்லிகார்ஜுனம் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த சிவத்தொண்டர் குடும்பத்தில் தோன்றியவர் நமசிவாயர்.

குருதீட்சை
நமசிவாயர் இளவயதிலேயே பக்தி மிக்கவராகத் திகழ்ந்தார். பின் இறைநாட்டம் அதிகரிக்கவே ஸ்ரீசைலத்தில் வசித்து வந்த தவயோகி சிவானந்த தேசிகர் என்பவரைச் சரணடைந்து, அவருக்குச் சேவை செய்து வந்தார். சிவானந்த தேசிகர் ஒரு வீரசைவர். எனவே வீரசைவ வழிமுறைகளைத் தனது சீடனுக்கு போதித்தார். சிவயோகப் பயிற்சி எனப்படும் அம்முறை தாராணை, தியானம், பாவலிங்க வழிபாட்டு முறைகளைக் கடந்து, மனோலிங்கத்தைச் சமாதி நிலையில் நிறுத்தி வழிபடுவதாகும். அதாவது லிங்கம் என்பது தம் இதயத்துள் எழுந்தளியிருக்கும் சிவபெருமானே என்கிறது இந்தக் கோட்பாடு. குருதீட்சை பெற்ற நமசிவாயர், இம்முறைப்படியே இறைவனைத் தியானித்தார்.

அண்ணாமலை பயணம்
ஒருநாள் கனவில் அண்ணாமலைக்கு எழுந்தருளுமாறு நமசிவாயருக்கு இறைக்கட்டளை வந்தது. குருவிடம் அதனைத் தெரிவித்து, அவரது ஆசியுடன் அண்ணாமலைக்குப் புறப்பட்டார்.

வழியில் ஒருநாள் 'பூந்தண்மலி' (இன்றைய பூந்தமல்லி எனப்படும் பூவிருந்தவல்லி) என்ற ஊரை அடைந்தார். அங்கு ஆலய நந்தவனத்தில் அழகான மலர்கள் பூத்துக் குலுங்கின. அவற்றில் சிலவற்றைப் பறித்து தம் இதயத்துள் எழுந்தருளியுள்ள மனோலிங்கத்திற்குப் பூஜை செய்தார். ஆனால் அவர் தனக்குத் தானே பூஜை செய்து கொள்வதாய் நினைத்த அவ்வூர் மக்கள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனிடம் அதுபற்றிப் புகார் அளித்தனர். வெகுண்ட மன்னன், அவரை அழைத்துவரச் செய்து விசாரணை நடத்தினான். அவர் அவ்வாறு நடந்து கொண்டதற்குரிய காரணத்தைக் கேட்டான்.

உண்மையில் தாம் சிவனுக்கே பூஜை செய்ததாகவும், தாம் பூஜித்த மலர்கள் சிவனுக்கே அர்ப்பணமாகி ஆலய இறைவன் கழுத்தில் மாலையாகியிருப்பதை மன்னன் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் நமசிவாயர் பதில் கூறினர். மன்னன் அவர் சொன்னதை ஏற்கவில்லை. "நீங்கள் சொல்வது உண்மையானால், அந்த மாலையானது அனைவரும் காணும்படி, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் இங்கே உங்கள் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் தான் நம்புவேன்" என்றான். நமசிவாயரும் அதற்கு உடன்பட்டு, வேறு மறுமொழி எதுவும் பேசாது தியானிக்க ஆரம்பித்தார்.

இதனை அறிந்த மன்னருக்கு வேண்டிய அர்ச்சகர்கள், ஆலயத்தில் இறைவனுக்குச் சூட்டப்பட்ட மாலையை ஒரு கயிற்றால் கட்டி, சிறுவன் ஒருவனை அந்தச் சிவலிங்கத்தின் பின்னால் அமரச்செய்து, அக்கயிற்றை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்படி ஏற்பாடு செய்தனர்.

ஆனால், நமசிவாயரின் பக்தி அங்கே வென்றது. சிறுவன் பிடித்துக் கொண்டிருந்த அந்தக் கயிறு திடீரென அறுந்து, மாலை பறந்துவந்து நமச்சிவாயரின் கழுத்தில் மாலையாக விழுந்தது.

இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் பதறிப் போனான். நமசிவாயர் மிகப்பெரிய மகான் என்பதை உணர்ந்து அவரைப் பணிந்து, தன் செயலை மன்னிக்குமாறு வேண்டினான். அவரைப் பழி சொன்ன மக்களும், அர்ச்சகர்களும் அவரை வணங்கித் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். அனைவரையும் மன்னித்து ஆசி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். திருவண்ணாமலையை அடைந்தவர், மலைமேல் உள்ள ஒரு மண்டபத்தில் வசிக்கத் தொடங்கினார்.

அண்ணாமலையில் தவ வாழ்க்கை
நமசிவாயர் காலையில் எழுவார். காலைக் கடன்களை முடிப்பார். நீண்ட நேரம் தியானம் செய்வார். பின் தன் குரு தீட்சை அளித்த முறைப்படி இறை வழிபாடு செய்வார். பசித்தபோது கீழிறங்கிச் செல்வார். வீடுகளுக்குச் சென்று யாசிப்பார். யாரேனும் உணவளித்தால் உண்பார். இல்லாவிட்டால் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பார். இவ்வாறு அவரது வாழ்நாட்கள் கழிந்தன.

தினமும் கீழிறங்கி வரும்போது, அண்ணாமலையார் ஆலயத்தின் முன் சென்று சைகையால் வணங்குவார் நமசிவாயர். அவர் வீரசைவர் ஆகையால் அவர் குரு போதித்த முறைப்படி கோயில் உள் செல்லாது ராஜ கோபுரத்தின் முன்னின்றபடியே வணங்குவார். அதை தினம்தோறும் கவனித்து வந்தார் சிவாக்ரக யோகி என்னும் மற்றொரு மகான். 'இவர் இறைவனை அவமானப்படுத்துகிறார்' என எண்ணி, ஒருநாள் தன் கையில் உள்ள பிரம்பால் நமசிவாயரின் முதுகில் நையப் புடைத்தார். நமசிவாயரோ அவரை எதிர்த்து ஏதும் கூறாமல், தன்னுடைய தீய மனோபாவங்களை விலக்கவே இறைவன் தன்னை தடியால் அடித்திருக்கின்றார் எனப் பொருள்படும்படி தமிழில் ஒரு வெண்பா பாடினார். பின் எல்லாம் இறைவன் செயல் என எண்ணி அமைதியாக அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

உண்மையான ஒரு துறவியை அடித்து விட்டோமே என்று எண்ணி சிவாக்ரக யோகி உள்ளம் வருந்தினார்.

நமசிவாயரின் வழிபாடோ இதேபோன்று அண்ணாமலையில் தொடர்ந்து நடந்து வந்தது. சதா பிரம்மத்தில் லயித்த பார்வை. உடல், உடை என்ற உணர்வுகளின்றித் தன்னை மறந்த தவம் என்று, திருவண்ணாமலையில் அவர் வாழ்க்கை தொடர்ந்தது.சிவ தரிசனம்
ஒருநாள்... குகை நமசிவாயர், அண்ணாமலையார் ஆலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது குருவான சிவானந்த தேசிகர் எதிரே சில சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அதுகண்டு மகிழ்ந்த நமசிவாயர் குருவை வணங்கித் துதித்தார். சீடருடன் அன்போடு பேசிய குரு, ஆலயத்துள் நுழைந்தார். சீடர் நமசிவாயமும் அவரைப் பின் தொடர்ந்தார். இருவரும் அண்ணாமலையார் திருவுருமுன் சென்று நின்றனர். உள்ளம் உருக, கண்களில் நீர் சொரிய கண்மூடி இறைவன் மீது பாடல்களைப் பாடித் தொழுதார் நமசிவாயர். அவர் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது குரு அங்கே இல்லை. அவர் மறைந்து விட்டிருந்தார். சிவலிங்கத்தை நோக்க அங்கே குருவின் உருவம் தெரிந்து மறைந்தது. இறைவனே தம்மைத் தடுத்தாட்கொள்ள அங்கு குருவாக வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார் நமசிவாயர். இறைவனின் கருணயை எண்ணி வியந்தார். அழுதார். தொழுதார். பக்தி மேலீட்டால் பரவசத்துடன் பல பாடல்களைப் புனைந்தார்.

அதுமுதல் தினந்தோறும் அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு வருவதும், பூமாலையோடு பாமாலை சாற்றுவதும் நமசிவாயரின் வழக்கமானது. ஒருநாள் நமசிவாயரின் கனவில் தோன்றிய இறைவன், ''எம் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குகைக்குச் சென்று தவம் செய்து எம்மை அடைவாயாக'' என்று ஆணையிட்டார். அவ்வாறே நமசிவாயரும் மலைமேல் உள்ள சிறு குகைக்குச் சென்று தங்கி, அங்கேயே தவம் புரிந்தார்.
அதனால் அவருக்கு ''குகை நமசிவாயர்'' என்ற பெயர் ஏற்பட்டது.

★★★★★


நமசிவாயர் செய்த அற்புதங்கள்
தவ வாழ்க்கை நடத்தி வந்த நமசிவாயரை ஆட்டிடையன் ஒருவன் ஒருநாள் அணுகினான். சினையாடான தனது ஆடுகளில் ஒன்று இறந்து விட்டது என்றும், அதன் குட்டிகளையாவது அவர் காப்பாற்றித் தரவேண்டும் என்றும் வேண்டித் தொழுதான். இறந்த சினையாட்டை அங்கேயே விட்டு விட்டு மறுநாள் வந்து தன்னைக் காணுமாறு சொன்னார் குகை நமசிவாயர்.

அவன் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, குட்டிகள் இரண்டு விளையாடிக் கொண்டிருந்ததுடன், அந்தத் தாய் ஆடும் உயிர் பிழைத்திருந்தது. தனது தவ ஆற்றலால் குகை நமசிவாயர் அதனை உயிர்ப்பித்திருந்தார். மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி விடைபெற்ற ஆட்டிடையன், ஊருக்குச் சென்று நடந்த விவரங்களைக் கூறினான்.

அதை நம்பாததோடு பொறாமையும் கொண்ட சில மூடர்கள், ஒரு வாலிபனை நோயாளிபோல் கட்டிலில் படுக்கச் செய்து பொய்யாக குகை நமசிவாயரிடம் கூட்டி வந்தனர். "இவன் இறந்து விட்டான். நீங்கள்தான் எழுப்பித் தரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர்.

தன் தவ ஆற்றலால் நடந்ததை உணர்ந்த குகை நமசிவாயர், "போனவன் போனவன்தான். இனி உயிர் பிழையான்" என்றார்.

அது கண்டு கொக்கரித்த அக்கும்பல், "நீங்கள் ஒரு போலித்துறவி. இவன் இறக்கவில்லை. நாங்கள் அப்படி நடிக்கச் செய்தோம். இதோ பாருங்கள், இவன் எழுந்திருப்பான்" எனக் கூறி எழுப்ப முயற்சித்தனர். ஆனால் பயனில்லை. உண்மையாகவே அவன் இறந்து போயிருந்தான். மூடர்கள் அவமானப்பட்டு அவ்விடம் விட்டு அகன்றனர். நமசிவாயரும் அது கண்டு வருந்தினார். அவரது துயரம் ஒரு வசையாக வெளிப்பட்டது.

"கோளர் இருக்குமூர்,கொன்றாலும் கேளாவூர்" என்று தொடங்கிப் பாடியவர், இறுதி வரியாக, "அழியும் ஊர் அண்ணாமலை" என்று பாட வாயெடுக்கு முன் இறைவன் அசரீரியாய், "அடேய், நான் ஒருவன் இங்கிருக்கிறேனடா!" எனக் குரல் கொடுக்க, குகை நமசிவாயர் சினம் தணிந்து, வரியை மாற்றி, 'அழியா ஊர் அண்ணாமலை' என்று பாடி முடித்தார்.

கோளர் இருக்குமூர் கொன்றாலும் கேளாவூர்
காளையரே நின்று கதறுமூர் - நாளும்
பழியே சுமக்குமூர் பாதகரே வாழுமூர்
அழியா ஊர் அண்ணாமலை


- என்பது அந்தப் பாடல்.சீடர் நமசிவாயர்
இவ்வாறு பல ஆண்டுகாலம் தவம் செய்துவந்த குகை நமசிவாயரைத் தேடி ஒருவர் வந்தார். அவர் பெயரும் நமசிவாயம்தான். அவர் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தார். வேண்டுதல், வேண்டாமை அற்ற தன்மை, எப்போதும் பிரம்மத்தில் லயித்த பார்வை என்று இருந்த குகை நமசிவாயரே தனக்கேற்ற குரு என முடிவுசெய்த நமசிவாயம், அவரைச் சரணடைந்தார். அவர் போகுமிடமெல்லாம் கூடவே செல்வார். குருவுக்குக் கை, கால் பிடித்து விடுவது, அவர் தம் துணியைத் துவைத்து சுத்தம் செய்து தருவது போன்ற பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்.

குகை நமசிவாயரும் அவரைப் பல்வேறு வகைகளில் சோதித்துச் சீடராக ஏற்றுக் கொண்டார். நாளடைவில் சீடர் ஆன்மஞானத்தின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் என்பதைக் கண்டு கொண்டார். அதனால் தம் சீடரிடம், ‘‘அப்பா, நீ இனிமேல் சீடன் நமசிவாயம் அல்ல. குரு நமசிவாயம்! ஆன்ம ஞானத்தில் நீ மிகமிக உயர்நிலையை அடைந்து விட்டாய். ஆகவே இனி நீ இங்கே என்னுடன் இருப்பதைவிட, சிதம்பரம் சென்று அங்கேயே தங்கி சேவை செய்து வருவாயாக!" என்று கூறி ஆசிர்வதித்தார். குருவின் சொல்லைச் சிரமேற்கொண்டு குரு நமசிவாயரும் சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு தம்மைக் காண வந்தோர் அளித்த பொன்னையும், பொருளையும் கோயிலுக்கே அளித்து அதனைச் சீர் செய்தார். பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டார். நீடித்த தவ வாழ்வு வாழ்ந்த குரு நமசிவாயர், இறுதியில் திருப்பாற்கடல் குளக்கரை அருகே ஓரிடத்தில் மகா சமாதி ஆனார்.

திருவண்ணாமலையின் புகழ் பரப்பும் முக்கியப் பாடல்களை, குறிப்பாக அண்ணாமலையின் பெருமைகளை தாம் இயற்றிய ‘அண்ணாமலை வெண்பா' என்னும் நூலில் மிக அழகாகப் பாடியிருக்கிறார் குரு நமசிவாயர்.

குகை நமசிவாயர் மகா சமாதி
நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து பல்வேறு அருட்செயல்களை, அற்புதங்களைச் செய்த குகை நமசிவாயர், ஒரு புனிதநாளில் சீடர்களால் எழுப்பப்பட்ட சமாதிக் குழியில் அமர்ந்து, இறைவனை தியானித்து ஜீவசமாதி ஆனார்.

இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில், ஸ்கந்தாசிரமம், விருபாக்ஷி குகை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் இவரது குருபூஜை நடந்து வருகிறது.

குகை நமசிவாயர் இயற்றிய நூல்கள்
குகை நமசிவாயர் இயற்றிய பாடல்கள் 'அருணகிரி அந்தாதி' என்னும் அற்புத நூலாய் விளங்குகிறது. 'திருவருணை வெண்பா', 'சாரப் பிரபந்தம்', ‘சோணகிரி வெண்பா' போன்ற நூல்களையும் இவர் இயற்றியிருக்கிறார்!
பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline