|
கருமலை களவாணிகள் (அத்தியாயம்-5) |
|
- ராஜேஷ்|மே 2022| |
|
|
|
|
வேகமாகக் கார் ஒட்டியதில் சீக்கிரமாகவே கருமலைக்குப் போகும் பாதை அருகே வந்து சேர்ந்தார்கள். மலை அடிவாரத்துக்குச் சற்றுத் தொலைவில் காரை பார்க் செய்தார் கீதா. கொஞ்சம் வெய்யில் இருந்தாலும், மதியம் கழிந்து சற்றே நேரம் ஆகி இருந்ததால் காற்று சிலுசிலுவென்று அடித்தது.
காரை நிறுத்திய இடத்திலிருந்து இரண்டு மைல் தூரம் கடந்து மலைப்பாதை ஆரம்பித்தது. அந்த இரண்டு மைல் தூரமும் ஒரே பாறையும் மேடும் நிறைந்த வெட்டவெளி. கொஞ்சம்கூட மரமே கிடையாது. நல்லவகை செருப்பு அணியாவிட்டால் மிகக் கடினமான பாதை. வெய்யிலில் உடம்பைச் சூடாக்கிக்கொள்ள ஓணான்களும் பாம்புகளும் ஆங்காங்கு படுத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. அதை உயிர்ச்சூழலியல் ஆச்சரியம் என்று சொல்லலாம், அப்படிப்பட்ட ஒரு பகுதி.
கீதா குடும்பத்தினர் அங்கே வந்து பல மாதங்கள் ஆகியிருந்தன. அருண் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி அங்கே வந்திருக்கிறார்கள். கீதா அருணை முதுகில் ஒரு கேரியரில் சுமந்துகொண்டு பல தடவை நடந்திருக்கிறார்.
பக்கரூவுக்கும் அந்த இடம் மிகப் பரிச்சயமானது. அவனுக்குப் பாறைகள் மேல் துள்ளித்துள்ளிப் போவதென்றால் தனி மகிழ்ச்சி. அவனது மோப்ப சக்தியால் பாம்புகள் இருக்கும் இடங்களைத் தவிர்த்து விடுவான். எங்கே எது ஒளிந்திருக்கிறது என்று அவனுக்குச் சரியாகத் தெரியும்.
பாறைப்பாங்கான இரண்டு மைல் வெட்டவெளியைக் கடந்து சென்றால் மலைப்பாதை ஆரம்பிக்கும். மலைப்பாதை மிகவும் மாறுபட்டது. மரங்கள், ஆழமான பள்ளத்தாக்கு ஒரு புறம். மூச்சு முட்டவைக்கும் உயரம் மறுபுறம். அங்கு 'ட்ரையாதலான்' பயிற்சி செய்பவர்களை வேடிக்கை பார்ப்பவர்களுக்கே மூச்சு இறைக்கும். அந்த மலைப்பாதையில் நடப்பது ஒரு தியானம்போல இருக்கும்.
வீட்டில் அன்று நடந்ததை கீதா மனதில் கொள்ளாமல் சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்தார். ரமேஷ், அருண் மீது கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், அதைப் பெரிது படுத்தக்கூடாது என்று விட்டுவிட்டார்.
"கீதா, என்ன இங்க வந்து ஒரு வருஷமாவது இருக்குமா?" ரமேஷ் கேட்டார்.
"அப்படித்தான் நினைக்கிறேன்."
காரில் இருந்து நால்வரும் இறங்கினார்கள். பக்கரூவிற்கு பட்டையை மாட்டினார்கள். பக்கரூ முதலில் முரண்டு பண்ணப் பார்த்தான். எப்போதும் அவன் அங்கு பட்டை இல்லாமல்தான் ஓடுவான். அன்று அதை மாட்டியது அவனுக்குப் பிடிக்கவில்லை.
"வா, பக்கரூ, வா." அருண் பக்கரூவைப் பிடித்துக்கொண்டு முன்னால் நடந்தான்.
கொஞ்ச தூரம்தான் நடந்திருப்பார்கள். அங்கே ஏதோ ஒருவித மாற்றம் தெரிந்தது. வெட்ட வெளிப் பாறையாக இருந்த இடத்தில் பல விதமான இயந்திரங்கள் தென்பட்டன. அங்கே ஏதோ தெய்வீகம் காணாமல் போனதுபோல இருந்தது. இயற்கை சுத்தமாக மாறிவிட்டது போல இருந்தது.
ரமேஷிற்கு மாற்றம் அவ்வளவு தென்படவில்லை. அவர் அன்று வீட்டில் நடந்த கூத்தினால்தான் திரும்பவும் ஏதும் தப்பு ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆனால், அருணுக்கு நன்றாகத் தெரிந்தது. நிலம் தோண்டும் எந்திரங்கள் எங்கிலும் காணப்பட்டன. மௌனமாக, பக்கரூவைப் பிடித்தபடி சுற்றுமுற்றும் பார்த்தான் அருண்.
"என்னம்மா இது?"
ஒரு திகில் படம் பார்ப்பதுபோல இருந்தது கீதாவுக்கு. ஏன்? எதற்கு? என்று பல கேள்விகள் மனத்தில் எழுந்தன. கொஞ்சதூரத்தில் ஓர் அறிவிப்பு பலகை. அதில் என்ன இருக்கிறது என்று படிக்க கீதா அருகில் சென்றார். அருணும் போனான்.
அறிவிப்பு:
எர்த்தாம்ப்டன் நகரவாசிகளே! நீங்கள் சந்தோஷமாக அனுபவிக்கும் இந்த இயற்கையின் அருமையை எதுவோ விஷப்படுத்தி இருக்கிறது. ஈய நஞ்சாதம் (Lead Poisoning) இங்கு ஆகியுள்ளது என்று தகவல் வந்தபடியால், அதனைப் புலனாய்வு செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த ஆய்விற்காக நாங்கள் சில இயந்திரங்களை உபயோகிக்க வேண்டியுள்ளது. ஆய்வு முடியும்வரை யாரும் இந்தப் பக்கம் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இதன் விளைவால் கருமலைப் பாதையை நாங்கள் மூட வேண்டியதாக உள்ளது. இதனால் ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு எர்த்தாம்ப்டன் நகராட்சி.
ஈய நஞ்சு அங்கே எப்படி வந்திருக்கும் என்று கீதா வியந்தார். அவரும் ஒரு விவசாய விஞ்ஞானி ஆயிற்றே. அங்கே செடி கொடிகள் இல்லாவிட்டாலும், ஓரளவு பொது அறிவு அவருக்கு உண்டே. அவரால் அந்த அறிவிப்புப் பலகையில் உள்ளதை நம்பவே முடியவில்லை.
"ஈயத்தின் நஞ்சா? இங்கேயா? வாய்ப்பே இல்லை. இங்க அது வர வழியே இல்லையே? கிறுக்குத்தனமா என்னமோ போட்டிருக்காங்க. யார் இந்த ஆய்வுக்கெல்லாம் அனுமதி கொடுக்கிறது?" அருண் பொருமினான். அம்மாவுடன் பேசிப்பேசி அவனுக்கும் பொது அறிவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
"அருண், என்னாலும் நம்ப முடியல" என்றார் கீதா.
ரமேஷ் ஒன்றும் பேசாமல் அறிவிப்புப் பலகையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். வீட்டுக்குத் திருப்பிப் போனால் போதும் என்று தோணியது. பக்கரூவும் வீட்டுக்குத் திரும்பப் போகிறோம் என்று வருத்தத்தில் முனகியது.
"வாங்க ரமேஷ், இன்னைக்கு என்னமோ சரியில்லை. நான் மட்டும் வந்தது போதாதுன்னு உங்க எல்லாரையும் இழுத்துட்டு வந்திட்டேன்."
அருணுக்கு கருமலை மேலே போக முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது.
"அருண், வாப்பா போகலாம்," என்று ரமேஷ் அழைத்தார்.
திரும்பும்போது ரமேஷ் வண்டியை ஓட்டினார். கீதாவும் அருணும் பக்கரூவோடு பின் சீட்டில் உட்கார்ந்து இருந்தார்கள். கீதா தனது செல்ஃபோனில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்.
"அம்மா, நானும் படிக்கட்டுமா?"
கீதா செல்ஃபோனை அருணிடம் காண்பித்தார். அவனும் அதைப் படித்தான். அதில் அவர்கள் பார்த்த அறிவிப்புப் பலகையில் போட்டிருந்த அதே தகவல் போட்டிருந்தது.
அருண் ஒரு வரி விடாமல் படித்தான். அவனுக்கு உள்ளுணர்வு (intuition) கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
"நான் இதைப்பத்தி விசாரிக்காம விடப் போறதில்லை, அம்மா."
ரமேஷின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன. கீதா செல்லமாகப் பெருமிதத்துடன் அருணின் தலையை வருடினார்.
(தொடரும்) |
|
எர்த்தாம்டனின் சுடர் கதைத்தொடரின் முந்தைய எபிசோடுகளைக் கேட்டு மகிழ:
earthamton.podbean.com |
|
|
|
|
|
|
|