|
கருமலை களவாணிகள் (அத்தியாயம்-4) |
|
- ராஜேஷ்|ஏப்ரல் 2022| |
|
|
|
|
"கீதா, நாம வேற ஏதாவது பண்ணலாமே?" ரமேஷ் கேட்டார்.
"ஆமாம் அம்மா, கருமலை உச்சி வரைக்கும் போகணும்னா ரொம்ப நேரம் ஆகுமே."
"கீதா, ஒரு சினிமாவுக்குப் போலாமா? உனக்குப் பிடித்த மாதிரி சினிமா. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம்... என்ன மொழியானாலும் சரி."
"அப்பா, பெங்காலியை விட்டுடீங்களே?” அப்பாவும், பையனும் சாக்குமேல சாக்கு சொல்லி கீதா ஆசைப்பட்டதைத் தவிர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
கீதா எரிச்சல் படாமல் மௌனமாக இருந்தார். தனது கணவரும் மகனும் இப்படித் தன்னலமானவர்களாக இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டார்.
"என்ன கீதா, அப்ப Netflix-ல படம் பாக்கலாமா? நீ செலக்ட் பண்ணு, நானும் அருணும் உனக்கு பிடிச்ச ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரோம்."
கீதா, ரமேஷையும் அருணையும் முறைத்துப் பார்த்தார். அதில் கோபமோ தாபமோ இல்லை. வருத்தம்தான் இருந்தது. பக்கரூவைப் பார்த்தார். அவனோ எங்கே தன்னையும் அழைத்துப் போவார்களோ என்று ஒருவித எதிர்பார்ப்புடன் வாலை ஆட்டிக்கொண்டு பார்த்தான்.
கீதா மெதுவாக எழுந்தார். கீழே குனிந்து பக்கரூவைத் தூக்கினார். அவனை கொஞ்சிக்கொண்டே பேசாமல் நகர்ந்து சென்றார்.
"கீதா..."
"அம்மா..."
கீதா திரும்பிக்கூடப் பார்க்காமல் தனது அறைப் பக்கமாக நடந்தார்.
"லொள்...லொள்..." பக்கரூ உற்சாகத்தோடு குறைத்தான். தன்னை கீதா வெளியே அழைத்துப் போகப் போகிறார் என்று ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு.
சில நிமிடம் கழித்து பக்கரூவுடன் கீதா கீழே இறங்கி வந்தார். அவர் மலையேறத் தகுந்த உடையில் இருந்தார்.
"பக்கரூ கண்ணா, எங்கே சங்கிலி எடுத்திட்டு வா."
பக்கரூவை கீழே இறக்கிவிட்டு அவனிடம் செல்லமாகப் பேசினார். "நாம ரெண்டு பெரும் இன்னைக்கு ஒரு ரொம்ப தூரம் போகப் போறோம்."
இறக்கி விட்டதுதான் தாமதம், பக்கரூ நாலு கால் பாய்ச்சலில் சங்கிலியைக் கொண்டுவர ஓடினான். சில நொடிகளில் சங்கிலியுடன் திரும்பி வந்தான். துள்ளிக் குதித்து தனது உற்சாகத்தைக் காட்டினான்.
"வா பக்கரூ கண்ணா, நாம அம்மா ஆசைப்பட்டது போல கருமலை வரைக்கும் போய்ட்டு வரலாம். அப்படியே வர வழியில நல்ல சாப்டுட்டு வரலாம்."
கீதா, ரமேஷையும் அருணையும் கொஞ்சம்கூடக் கண்டு கொள்ளவேயில்லை. கார் சாவியை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டார். தலைக்குத் தொப்பி, கண்களுக்கு மறைப்பு, குடிக்கத் தண்ணீர், சாப்பிடக் கலவை என்று எல்லாம் எடுத்துக்கொண்டார். பக்கரூவுக்கும் குடிதண்ணீர் எடுத்துக் கொண்டார்.
கீதா வீட்டுக் கதவைத் திறந்தார். பக்கரூவைக் கையில் பிடித்துக்கொண்டு தனது வண்டிப் பக்கம் சென்றார்.
"கீதா, கொஞ்சம் இரு. நாங்களும் வரோம்." ரமேஷ் திடீரென்று மனம் மாறினார். அவருக்கு எங்கோ இடித்தது. அவர் அருணைப் பார்த்தார். அவனுக்கோ அப்பாவின் இந்த மாற்றம் ஏமாற்றமாக இருந்தது. அருணுக்குச் சுத்தமாக விருப்பம் இல்லை. வீட்டில் உட்கார்ந்து கொண்டு சும்மா டி.வி. பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
கீதா ஒருமுறை திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்.
"பரவாயில்லை, நீங்க ரெண்டு பெரும் எதுக்கு எனக்காகச் சிரமப்படணும்? என் பிறந்த நாள்தானே? உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்?"
"அது இல்லை... நீ தனியா..."
"என்னமோ நான் செவ்வாய்க் கிரகத்திற்குப் போற மாதிரி..."
"அம்மா, நானும் கூட வரேன்."
கீதா ஒன்றும் சொல்லாமல் கைக் கடிகாரத்தைப் பார்த்தார். திரும்பி வருவதற்குள் இருட்டி விடுமோ என்று உள்ளூரப் பதட்டம் இருந்தது.
"எங்கடா, வேளைக்கு சோறு இல்லாம போயிடுமேன்னு பயமா?" கீதா ஒருவித நக்கல் கலந்த குரலில் கேட்டார். "இருக்கிற பழசை சாப்பிடுங்க... அப்படி இல்லைன்னா, to-go பண்ணிக்கோங்க இரண்டு பேரும். என்னை விட்ருங்க."
"அதுக்காக இல்லை, நாங்க விருப்பப்பட்டுதான் வரோம்."
"அப்படியா?" கீதா நக்கலாகக் கேட்டார். "வாடா பக்கரூ கண்ணா, நமக்கு நேரம் ஆயிருச்சு. சூரிய வெளிச்சம் மங்கறதுக்கு முன்னாலே நாம திரும்பிடணும்."
கீதா டிரைவர் பக்கக் கதவைத் திறந்து, பக்கத்துச் சீட்டில் மற்ற சாமான்களை எடுத்து வைத்தார். பின் சீட்டில் பக்கரூ. எஞ்சின் பொத்தானை அமுக்கினார்.
டம்...டம்...என்று வண்டியின் கதவுகள் திறக்கும் சத்தம் கேட்டது. தனது பக்கத்துச் சீட்டில் ரமேஷும், பின் சீட்டில் அருணும் உட்கார்வதைக் கவனித்தார். ரமேஷ் அவசரமாக கீதா வைத்திருந்த சாமான்கள் மீது உட்கார்ந்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் கொஞ்சம் அசடு வழிந்தார்.
"சாரி, கவனிக்கல..."
கீதா பின்புறம் திரும்பி அருணைப் பார்த்தார். அவன் ஒரு தண்ணீர் பாட்டிலோடு உட்கார்ந்து இருந்தான். ரமேஷிடம் ஒரு தண்ணீர் பாட்டில் இல்லை. "ரமேஷ், உங்களுக்கு தாகம் எடுத்தா நீங்கதான் பாத்துக்கணும். என்கிட்டே எனக்கு மட்டும்தான் இருக்கு."
"நான் பார்த்துக்கறேன், கீதா."
கீதா வண்டியைக் கிளப்பினார். செல்ஃபோனில் கருமலை போகும் வழியைத் திறந்து வைத்துக்கொண்டு, அதில் வரும் அறிவிப்பை கேட்கத் தொடங்கினார்.
வண்டி நெடுஞசாலையில் சீறிப் பாய்ந்தது.
(தொடரும்) |
|
ராஜேஷ் |
|
|
|
|
|
|
|