கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர் எனத் திசைகள் பலவற்றிலும் சிறகு விரித்திருப்பவர் வைரபாரதி. ஆன்மீகம் ஒருபுறம், இலக்கியம் மறுபுறம் எனச் செயல்படுகிறவர். திரைப்படங்கள், குறும்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பல களங்களிலும் தனது நடை போடுகிறவர். தெய்வீக சங்கமம், கேட்டதெல்லாம் கொடுக்கும் சாயி, ஸ்ரீ சக்ர கீத லஹரி, சர்வம் சக்தி மயம் போன்ற பல தெய்வீகப் பாடல் ஆல்பங்களைத் தந்திருக்கிறார். இவரது கவிதைகள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தென்றலோடு உரையாட வந்திருக்கிறார். வாருங்கள், பேசுவோம்....
★★★★★
முதல் கவிதை நூல் வெளியீடு
கே: உங்கள் இளமைப் பருவத்தை நினைவு கூரலாமா? ப: என் இளமைப் பருவம் அடர்ந்த தனிமையானது. திருவிழாவில் தொலைந்து அழுதபடி இருக்கும் குழந்தையைப் போன்றது. சுவாமி பக்திக்கும், ஆன்மீகப் பக்குவத்திற்கும் இளமைப் பருவ அனுபவ அஸ்திவாரம்தான் காரணம்! எவர் ஒருவர் தான் வந்த பாதையை மறந்துவிடுவதில்லையோ அவரிடம் அகந்தையே இருப்பதில்லை. உறவுகள் சதமில்லை. நட்பு நிஜமில்லை. பெற்ற தாய்கூட வாழ்வில் தொடர்வதில்லை. குடும்பம் நிரந்தரமில்லை என்பது ஏதோ ஒரு ஆன்மீகப் புத்தகத்தில் படித்து அடியேன் புரிந்து கொள்ளவில்லை. அந்தப் பரம சத்தியத்தை இளமைப் பருவ வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்! மனிதன் எவை எல்லாம் தத்துவம் என ஒதுக்கித் தள்ளி இருக்கிறானோ அவை எல்லாம் நிதர்சன வாழ்வியல் என்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்த பாலபாடம் இளமைப் பருவம்!
கே: கவிதை மீதான ஆர்வம் எப்போது, எப்படி வந்தது? ப: இளமைக் காலத் தனிமையே எழுத்தை இட்டு நிரப்பியது. அடியேனுடைய எட்டாம் வயது. எந்த நாளில் இருந்து சுவாமிமேல் பக்தி வந்ததோ அந்த நாளில் இருந்து எழுத ஆரம்பித்தேன் நான்கு வயதில் இழந்த தாயை எட்டு வயதில் எழுத்தின் வழியே தொடர்பு கொள்ள முயற்சித்தேன். எட்டு வயதிலிருந்து சுவாமியே எனக்குத் தாயாக இருந்திருக்கிறார் என்பதைப் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டேன். ஆக, பொழுதுபோக்குக்காக எழுதாமல் என் பொழுதே எழுத்தால்தான் நிரம்பி இருந்தது அப்படி ஒரு சுமைதாங்கியாக எழுத்துக்கள் என் மன பாரங்களைத் தாங்கி இருக்கிறது. கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் அடியேனுக்குக் கவிதை தீபம் ஏற்றச் சிறு பொறி தந்து உதவியது என்றால் மிகையில்லை. அப்படியே அவர் எழுதிய மெட்டில் அதே சூழ்நிலைக்கு என் வரிகளை இட்டு நிரப்ப ஆரம்பித்தேன். குயிலுக்குக் குருநாதர் கடவுளே என்பது போல், இந்தக் குயிலுக்கும் குருநாதர் சுவாமியாகிய இறைவனே!
கே: உங்கள் முதல் படைப்பு பற்றி, அதற்கான வரவேற்பு பற்றிச் சொல்லுங்கள்? ப: அடியேனுடைய முதல் படைப்பே சுவாமியுடையது தான். காரணம், என் கவிதையின் நதிமூலம் காதலில் இருந்து பிறக்கவில்லை. சுவாமி பக்தியிலிருந்து அது பிறந்தது என்பதால். என் கவிதையின் ரிஷிமூலத்திற்குத் தோழனோ, தோழியோ காரணமில்லை. தாயே காரணம். முதல் படைப்பு 'இறைவன் ஒரு கவிதை' கல்லூரிக் காலம் முழுவதும் சுவாமியைப்பற்றி எழுதிய புதுக்கவிதை நூல் அது. இதயப் பேரன்பே மரபை மீறியது தான். அன்பு தன் மகனை மட்டுமல்ல; அடுத்த வீட்டுக் குழந்தையையும் தன் மகனாக உணரும். அது விதிகளைப் பார்க்காது. அருவிகளின், நதிகளின் தாள ஜதியே தனி. ராணுவ நடை காற்றின் கால்களுக்கு அவசியமில்லை. ஆக புதுக்கவிதையிலிருக்கும் வீச்சும் எளிமையும் நேர்த்தியும் இக்கால (கம்பன் காலம் அல்ல) மரபில் இல்லை. மரபு என்னும் சடங்குக்குள் எந்த ஞானமும் சிறைப்படுவதில்லை. ஆக, சென்னை மயிலாப்பூரில், கவிமாமணி இளையவன் அவர்கள் தலைமையில், இலக்கியச் சாரல் அமைப்பில் புதுக்கவிதைப் புத்தக அரங்கேற்றம். "உன் முதல் பிள்ளையார் சுழியே சாயி சுழி தான்" என அய்யா இளையவன் சொல்லி வாழ்த்தியது நினைவுக்கு வருகிறது!
கே: 'வைரபாரதி' என்னும் உங்கள் புனைபெயருக்கான காரணம் என்ன? ப: என் தாயின் இயற்பெயர் வைர வள்ளி வள்ளியூர் அவர்களின் சொந்த ஊர். தேசமும் தெய்வமும் இரண்டு கண்களாகப் பார்த்த மகாகவியிலிருந்து தான் அக்னித் தமிழ் எரிய ஆரம்பித்தது. எப்படிக் கவிதைகள் பிரவாகமாக வருகிறதோ, அப்படி வந்ததுதான் வைரபாரதி எனும் பெயரும். அது எப்படிப் பிரவாகமாக வரும் என எழுத்தாளர் பாலகுமாரனே ஒருமுறை என்னிடம் கேட்டிருக்கிறார். சுவாமி வரும் கனவு அனுபவத்தையும் தியான அனுபவத்தையும் எப்படிப் படம் பிடித்துக் காட்ட முடியாதோ அப்படித்தான் கவிப் பிரவாக அனுபவமும். அந்த அனுபவத்திற்குச் சாட்சியாக மட்டுமே நம்மால் இருக்க முடியும். பிற்காலத்தில் என் தாய் வழிப் பாட்டியார், "நான் உன்னிடம் சொல்லாமல் நீ பாரதியார் வம்சம்தான் என உனக்கு எப்படித் தெரியும்?" என ஆச்சர்யப்பட்டார். என் பாட்டியாரின் அத்தைப் பாட்டி வழி உறவு செல்லம்மா பாரதியார் என்பதை அவர்கள் வழியே கேட்டு ஆச்சர்யப்பட்டேன். கவிதையிலேயே அவர்போல் சென்று விடுவேனோ என்ற பய உணர்வே அந்த விஷயத்தைப் பாட்டி மறைத்ததற்கான காரணம் எனப் புரிந்துகொண்டேன் எட்டு வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன். பாட்டி வீட்டில் இருந்தபடிதான். சுவாமி சரியாகத்தான் யாவற்றையும் சங்கல்பிக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த ஜென்மத்து வம்சாவளி எல்லாம் இத்தோடு முடிந்து விடும். கடந்த ஜென்மம் வேறு வம்சாவளி. ஆக, எல்லாம் மாறிக்கொண்டே இருப்பவை என்பதை உணர்ந்ததால், இதை நினைத்து ஒன்றும் பெரிய பூரிப்பு இல்லை. கம்பன் வீட்டுக் கட்டுத்தறி எல்லாம் கவிபாடாது. சுவாமி சங்கல்பித்துவிட்டால் ஒரு அசடுகூட ஞானியாவான். முட்டாள்கூட மகானாவான். அப்படியேதான் அது நிகழ்கிறது. வைரபாரதி நிகழ்வது போல்!
கே: 'இலக்கியச் சாரல்' அமைப்புடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ப: 2003ல் இருந்து 18 ஆண்டு காலத் திகட்டாத அனுபவம் அது. அடியேன் எழுதுவது கவிதைதான் என்பதை அங்கீகரித்த முதல் அரங்கம் அது. ஏற்கனவே சுடர்ந்து கொண்டிருந்த ஜ்வாலையைத் தூண்டிவிட்ட தூயவர் கவிமாமணி இளையவன். அவரே 'கவிப்புயல்' என்ற பட்டத்தையும் 2007ல் வழங்கினார். ஒரு தலைப்புச் சொல்லி நிமிடத்திற்குள் கவிதை கேட்பார். 'அதோ பார் மண்குதிரை' என்பார், 'ஒரு கவிதை எழுது' என்பார். "அதனால்தான் புல்லிற்கும் இதன் பேர் பிடிக்கும்; பூமியில் இன்னும் அதிகம் வேர் பிடிக்கும்" என்று எழுதிக் காண்பித்தேன். ஆஹா என்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். முதல் விஜயமே 'பருந்துகளும் புறாவாகட்டும்' என்ற கவிதை அரங்கேற்றம்தான். தலைப்பைக் கேட்டே 'ஆஹா' என்றார். இளைஞர்களை வாழ்த்தி அவர்களை ஊக்கப்படுத்த ஓர் இதயம் வேண்டும். அது அவரிடம் உடம்பு முழுக்க நிரம்பி இருந்தது.
புரியாமல் ஒன்றை எழுதித் தனது புலமையைக் காண்பிப்பதால் எந்த நன்மையும் வாசிப்பவர்க்கு இல்லை. கண்ணதாசன் இன்றும் நிற்பதே எளிமையில்தான்! எளிமையே மகிமை என்பதைக் கற்பித்த போதிமரம், இலக்கியச் சாரல். அதன் அமைப்பாளர் இளையவன், ஒரு குழந்தை. கண்ணதாசனுக்குச் சற்றும் குறைந்தவரில்லை அவர். அவரோடு பயணித்த, கற்ற, கிரகித்த உள்வாங்கி உரமாக்கிய அனுபவங்கள் எல்லாம், சுவாமி தந்த வரமாக உணர்கிறேன்!
கே: உங்கள் முதல் திரை வாய்ப்புக் குறித்துச் சில வார்த்தைகள் ப: பொதிகை தொலைக்காட்சியில் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த அற்புத வாய்ப்பு நிகழ்ந்தது. மெட்டுக்கு எழுதுகையில் எதை எழுதவேண்டும் என்பதை விட, எதை எழுதக் கூடாது, எந்தச் சொல் செவியில் கடினமாகக் கேட்கும் என்பது முதலில் தெரிந்திருக்க வேண்டும். அது அனுபவத்தால் வந்தது. மக்கள் இயக்குநர் விக்ரமன் அவர்கள் வழங்கிய வாய்ப்பு. 150 பேருக்குமேல் நேர்காணல் கண்டு சூழல் சொல்லி எழுத வைத்தார். சுவாமி வழங்கிய இந்தக் கவிப் பிரவாகம், துரிதமாக எழுதி அவரிடம் காண்பிக்க வழிவகை செய்தது. ஒருவருக்கு ஒரு பாடல் வீதம் இரண்டு புதுப்பாடலாசிரியருக்கு இரண்டு பாடல் என்பது அவர் எண்ணம். அடியேனுடைய பாடல் வரிகள் பிடித்துப்போக இரண்டு பாடல் வாய்ப்பையும் மொத்தமாக வழங்கினார். வர்த்தக ரீதியாக எழுதுவது எப்படி, கலைநயம் ததும்ப எழுவது எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்! பாடகர் பாடிக் கொண்டிருக்கும் போது கூட ஒலிப்பதிவுக் கூடத்தில் சரண வரிகளை மாற்றச் சொல்லி இருக்கிறார். எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் மாற்றித் தர முடிந்ததற்கு காரணம், தமிழ் ஞானமல்ல. சுவாமி பக்தியே! அது செய்யும் ஆயிரம் வித்தைகளை. அவரிடம் வேலை பார்ப்பது என்பது ஆயிரம் குதிரைகளை ஒன்றாக ஓட்டுவதற்குச் சமம். சாத்தியப்பட்டது சுவாமி சங்கல்பத்தினால். முதல் படம் "நினைத்தது யாரோ." நினைத்தது நிச்சயம் சுவாமிதான்!
ஆன்மீகமும் நானும் பகவான் ரமண மகரிஷி, ஸ்ரீ சக்கரை அம்மா, யோகி ராம்சுரத்குமார், சுவாமி விவேகானந்தர், இன்னும் பல மகான்கள், தியான அனுபவம் வழங்கிவரும் சுவாமியின் சமீபத்திய 'ஸ்ரீ சத்ய சாயி கவசம்' என அவரின் பரிபூரண சங்கல்பத்தோடே அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன. சுவாமி சங்கல்பத்தோடு இயங்கிவரும் 'ஸ்ரீ சத்ய சாயி யுகம்' பிளாகில் எழுத்துச் சேவையும். அடியேன் ஒரு பேனா. அவ்வளவே. இதில் பெருமைப்படவோ, நினைத்துப் பூரிக்கவோ ஒன்றுமே இல்லை. துறவு என்பது அகம் சார்ந்ததே தவிர, புறம் சார்ந்ததல்ல. வள்ளுவரே இதைத்தான் சொல்லி இருக்கிறார். ஆன்மீகம் என்பது பக்குவத்தோடு வாழ்வது. அதற்கு நிறைய வலிகளை அனுபவித்துப் பக்குவம் பெறவேண்டி இருக்கிறது. காய்ச்சிய பாலையே பருகுகிறோம். பக்குவமானதையே சுவாமியும் ஏற்கிறார். எல்லா வலிகளும் சுவாமி அளிக்கும் பக்குவத்திற்கான சிகிச்சைகளே! அறியாமை எனும் உளியாலேயே ஞானச்சிலை செதுக்கப்படுகிறது. அந்த ஆன்மீக வாழ்வை, பேச்சு மற்றும் எழுத்து என்னும் வாகனத்தில் ஏற்ற சுவாமி வழிவகை செய்கிறார். சுவாமி எனக்குத் தாய். பிற மகான்கள் எனக்கு உறவுக்காரர்கள். ஒவ்வொரு மகானும் அடியேனுக்கு ஒவ்வொன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஜன்மாந்திர கர்மாவைக் கண்டுணர்ந்து கொண்டுவிட்டால் ஆன்மீக வாழ்வு சுலபம். தியானம் சுலபம். தியானத்தால் நிகழ்கிற பக்குவம் சுலபம்.
திரைப்பாடல் எழுதுவது பெரிய சாதனையே அல்ல. அதில் கற்பனை மட்டுமே அதிகம். ஆன்மீக இலக்கியம் அப்படி இல்லை. பிறர் சொல்வதைக் கோடிட்டுக் காட்டி எழுதுவதற்கு அந்த மூலநூலே போதுமே! ஆன்மீகத்திற்குச் சுய அனுபவம் மிகவும் முக்கியம். நாம் ஆன்மீகத்தை அனுபவிப்பதற்கு நாமே ஆன்ம சாதனை (தியானம்) பழகவேண்டும். நமக்காக இன்னொருவர் சாப்பிட்டால் நமக்கு வயிறு நிரம்பாது என்பதுபோல், எல்லாம் சுவாமி பார்த்துக் கொள்வார் என அறியாமையில் வாழ்வது நம் தவறே. முதலில் தியானத்தில் அமர்ந்துவிட வேண்டும். மற்றவற்றை தியானமே கவனித்துக் கொள்ளும். ஆக தியான அனுபவமே அடியேனுடைய ஆன்மீக இலக்கியம். எல்லாம் கனவு என்பதை ஏற்கனவே தூங்கிக் கனவு கண்டவரால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும் என்பதைப் போல். தியான அனுபவமும் அவ்வாறே! - வைரபாரதி
கே: "காதல் கனிரசம் யௌவன நவரசம்" பாடல் உங்களைப் பலருக்கும் அடையாளம் காட்டிய ஒன்று. அந்தப் பாடல் பற்றி, அது உருவான பின்னணி பற்றிச் சொல்லுங்கள். ப: இப்படி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று தீராத தாகம் இருந்தது உண்மை. கவிஞர் வாலி அவர்களுக்குக்கூட முழுதாக இப்படி ஒரு வாய்ப்பு, காதல் பாடலில் அமைந்ததில்லை. லட்டுக்குள் முந்திரிப் பருப்புபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனது பாடலில் சேர்த்து ஒலியை அழகுபடுத்தி இருக்கிறார். இதற்கு வடமொழி தெரிந்திருக்க வேண்டும். கவிஞர் வாலிக்கு நன்கு தெரியும். அப்போது அவர் அமரராகிவிட்டிருந்தார். சூழ்நிலை சொல்லி, "பழைய பாடல்போல் வரவேண்டும்" என்று மெட்டை மெயில் செய்திருந்தார்கள். பத்தே நிமிடத்தில் எழுதிய பல்லவி அது. நம்ப முடிகிறதா? ஆம். முதலில் பெண் குரல் மட்டுமே என இருந்த திட்டம். வரிகளை மெட்டோடு பாடிப் பார்க்க, 'டூயட்டாக வைக்கலாம்' என இயக்குநர் சொல்ல, இப்படி அது அழகழகாய் எழுந்தது. (பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=6GJWHev8ZY4&ab_channel=JSKPrimeMedia) அடியேனுக்கு வடமொழிப் புலமை எல்லாம் இல்லை. சுவாமி அஷ்டோத்திரம், சுவாமி சஹஸ்ரநாமம், எம்.கே.டி. பாடல் கேள்வி ஞானம் என வடமொழியும் இதயத்தில் பதிந்தது.
பாடலில் 'ஜூல ஜால சதனா' என்ற வரி வரும். ஒலிப்பதிவுக் கூடத்தில் வந்த ஒருவர், "இதற்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா?" எனக் கேட்டார். ஜூலா என்றால் ஊஞ்சல் என ஒவ்வொன்றாக விளக்கினேன். வடமொழி இலக்கணம், தமிழ் இலக்கணத்தைவிடக் கடினம். ஒரு ஆண்-பெண் பாலுக்குக் கூட, சிறு அசைச் சொற்களில் மாறிவிடும். இதற்கு முன்பே வடமொழியிலேயே ஸ்ரீ சக்கரை அம்மா, யோகி ராம்சுரத்குமார் போன்ற மகான்களுக்கு அஷ்டோத்திரம், அஷ்டகம் எழுதியதும் சுவாமி சங்கல்பம் அன்றி வேறொன்றுமில்லை.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன்
கே: ஒரு கவிஞராக, திரைப்பாடல் ஆசிரியராக கவிதையை எப்படி வரையறை செய்கிறீர்கள்? ப: கவிதை என்பது உள்ளத்துப் பிரவாகம். தான் உணர்ந்ததை ஒருவர் தன் மொழியில் அழகுபடுத்திச் சொல்வது கவிதை. அதே சமயத்தில் பிறர்க்கு அது புரியவும் வேண்டும். வெறும் எதுகை, மோனை, இயைபு என்பதை இட்டு நிரப்புவதல்ல கவிதை. யாரும் செருப்புக்காக காலை வெட்டிக் கொள்வதில்லை என்பதுபோல். அரசாட்சிக்கும் மக்களாட்சிக்கும் ஒற்றுமையும் உண்டு, வேற்றுமையும் உண்டு என்பதுபோல். ஆழ்வார்கள் ஒரு பாசுரத்தை இரண்டு மணி நேரம் எழுதவில்லை. அது ஒரு பிரவாகம். மரபு அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களை எழுதத் தூண்டியது பக்தியே அன்றி மரபு அல்ல. அவர்களின் இதய ரசத்தை அவர்களுக்குத் தெரிந்த பாத்திரத்தில் அளித்தார்கள். ரசம்தான் முக்கியம். பாத்திரத்தை யாரும் கடித்துச் சாப்பிடப் போவதில்லை. பக்தி என்பது பிரவாகம். மரபல்ல. ஆகவேதான் கண்ணப்ப நாயனார், நாயன்மாரில் ஒருவர் ஆக முடிந்தது. மரபுவழிப் பூசாரிக்கு கிடைக்காத அருள், கண்ணப்பனுக்குக் கிடைத்தது. காரணம் பக்தியே அன்றி, மரபு அல்ல.
எழுத்துதான் முதலில் வந்ததே தவிர, மரபு பிறகே வந்தது. மனிதன்தான் முதலில் வந்தான், பிறகே சட்டம் பிறந்தது என்பதுபோல். காலத்துக்குத் தகுந்தாற் போல் சட்டமும் மாறும். அந்த மாற்றத்தை மனப்பக்குவமே ஏற்றுக் கொள்கிறது. "ஒரு ரேஷன் கடைக்காரனுக்கு குழந்தை பிறந்தது எடை குறைவாக" எனும் ஹைகூ கவிதையில் எளிமையாகவும், மிக வலிமையாகவும் சொல்லப்பட்ட கர்மாவை, எந்த மரபிலும் சொல்லிவிட முடியாது. கால மாற்றம். அவதாரங்களே தங்களின் ஆடை, அலங்கார, தோற்றங்களை யுகத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொண்டுதான் கீழிறங்கி வருகின்றன. இலக்கியங்கள் எம்மாத்திரம்!
வைரபாரதியின் படைப்புகள் இறைவன் ஒரு கவிதை (சுவாமிக்கான முதல் புதுக்கவிதை நூல்) ஸ்ரீ சக்கரை அம்மா துதிகள் (3 புத்தகங்கள்) ஸ்ரீ சாயி மகா காவியம் (இறைவன் ஸ்ரீ சத்ய சாயி வாழ்க்கை காவியம்) தூரிகை அம்புகள் (கஸல் கவிதை நூல்) காவிய ஜோதி (யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கை காவியம்) மகாபெரியவா துதிகள் (தமிழ்ப் பாராயணம்) ஸ்ரீ சத்ய சாயி கவசம், ரமண அஷ்டகம் போன்ற பல ஆடியோ மற்றும் காணொலி வடிவங்கள் முகநூல் | வலைப்பதிவு
கே: நிறைய குறும்படப் படைப்பாளிகளுடன் இயங்கி வருகிறீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்கள். ப: குறும்படங்கள் திரைப்படங்களுக்கான பெரியதொரு கதவுகளைத் திறந்து விட்டிருப்பது உண்மை. நாளைய இயக்குநர்களுக்கான பயிற்சி முறைகள்தான் அவை எல்லாம். 2009ல் இருந்தே குறும்படங்களோடு இயங்கி வருகிறேன். எப்படி அந்தக் கால நடிகர்கள் திரைப்படத்திலும் அதே சமயத்தில் நாடகத்திலும் நடித்து வந்தார்களோ அப்படி. திரைப்படங்கள், குறும்படங்கள் இரண்டிலும் பாரபட்சமின்றி சமமாகவே அடியேனின் படைப்பாற்றல் செலுத்தப்படுகின்றது. எந்தப் படைப்பாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்படியாக இருக்க வேண்டும் என்பதே என் உணர்வு! அடியேனோடு பணியாற்றிய குறும்படக் கலைஞர்கள் இப்போது பெரிய நடிகர்களாக, இயக்குநர்களாக வளர்ந்து வருவதைப் பார்க்கும்போதே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உள்ளத்தனையது உயர்வு. இதுதான் உண்மையான உயர்வு. அந்த அகப் பக்குவமே மனிதனின் இலக்காக அமைய வேண்டும். அப்படிக் கலைஞர்களுக்கு ஏற்பட்டு அதனால் ஏற்படும் கலைப் படைப்புகள் மட்டுமே வாழும்!!
கே: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள், திரைப்பாடல் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் யார், யார்? ப: கவிஞர் மகாகவி பாரதி. காரணம், அவர் அரசர் முன்னும் கூனிக் குறுகாமல், பதவிக்காக ஆசைப்படாமல், நெஞ்சத்து நேர்மையைக் கொஞ்சமும் தயங்காமல் பேசி எழுதி வாழ்ந்த ஒரே கவிஞர். மகான்களின் நிலையைவிட ஒரு படி குறைவுதான் என்றாலும், சராசரி மனிதரைவிட ஒருபடி மேல் பாரதி. அவருக்குக் குடும்பப் பற்று இருந்தது. மகான்களுக்கு அது இல்லை. ஆனால் பாரதியிடம் எரிந்து கொண்டிருந்த ஞானாக்னி அப்பழுக்கில்லாதது. பிழைப்பதற்கு வாழ்பவன் அல்ல மனிதன்; நிலைப்பதற்கு வாழ்பவன் என்பதை உணர்த்திய ஒரே கவிஞர் பாரதி. இங்கே நிலைப்பதாக ஞானத்தைச் சொல்கிறேன் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே! ஞானமில்லா மனிதனும் அப்படியே!!
கண்ணதாசன் ஒரு நிலைக்கண்ணாடி. சுயதவறை உணர்ந்து அதைத் தவறு என வெளிப்படுத்திய ஒரே தைரியக் கவிஞர். அவருக்கு அவரே மனசாட்சியாக இருந்து பொதுவெளியில் அனுபவம் பகிர்வதற்கு ஒரு தனித் திராணி வேண்டும். அது அவரிடம் இருந்தது. எழுதுவது ஒன்று, வாழ்வது ஒன்று என இருப்பவர் யாரும் கவிஞரல்ல.
பலதரப்பட்ட நூலாசிரியரை வாசித்திருக்கிறேன் அனைத்துலக ஆன்மீக நூல்களும் பரிச்சயம். ஆயினும் இவை எல்லாம் வாழ்க்கையாகாது. எனக்குத் தெரியும் என்னும்படி வெறும் வெற்றுப் பேச்சு, சொல்பவருக்கோ கேட்பவருக்கோ எந்த நன்மையுமில்லை. ஆகவே வாழ்க்கையை இலக்கியமாக்க வேண்டும்; வாழ்வதைப் பேச வேண்டும். இலக்கியமும் ஆன்மீகமும் வேறு வேறல்ல. ஆன்மீகம் அல்லாத எவையும் இலக்கியமல்ல! ஆன்மீகம் என்பது சடங்கு, சம்பிரதாயம் அல்ல. அவை ஒரு கருவியே! ஆன்மீகம் என்பது மனித வாழ்க்கையைப் பக்குவப்படுத்துவதற்கான அக ரசவாத சிகிச்சை. பொழுது போக்குவதற்கு அல்ல கலை எழுத்துக்கள். நம் பழுது போக்குவதற்கே. அப்படிப்பட்ட எவர் எழுத்தையும் வாழ்க்கையாகவே உணர்கிறேன்!
கே: உங்கள் குடும்பம் பற்றி, உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் பற்றிச் சொல்லுங்கள் ப: எனக்குக் குடும்பமே சுவாமி தான். வெறும் இந்த உடல்சார்ந்த உறவு எனில் இரண்டு பேர். ஒன்று இந்த உடலைப் பெற்றெடுத்த தந்தை மற்றும் இந்த உடலைப் பெற்றெடுத்த தாயின் தாய். (பாட்டி) வேறு யாரும் சொல்லும்படியாக உறவுகள் இல்லை. உறுதுணையாக இருந்தது என்று பார்த்தால், இளைஞர்களின் படைப்பாற்றலைத் தடுக்காத யாருமே அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள்தான் என்ற உண்மையைச் சொன்ன வண்ணம் அய்யா இளையவன் இருந்திருக்கிறார். தடுத்து நிறுத்தாத தந்தை இருந்திருக்கிறார் என்று சொல்லலாம். உறுதுணையாக இருப்பவர்கள் அல்ல இருப்பவர் - அது சுவாமி மட்டும்தான். மற்றும் அடியேனின் தியானம். தியானம் தராத உறுதுணையை யாரும் இந்த உலகத்தில் சுயநலமின்றித் தருவதில்லை!
எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுடன்
கே: எதிர்காலத்தில் என்னென்ன செய்ய வேண்டுமெனத் திட்டம் வைத்துள்ளீர்கள்? ப: உண்மையில் எதிர்காலம் என்பதே இல்லை. எதிர்காலம் மனதைச் சார்ந்தது. நிதர்சனமாய் நிகழ் நொடியே சர்வ சத்தியம். இன்று என்பது விதை. நாளை என்பது மரம். நாளை மறுநாள் என்பது கனி என்கிற வகையில் விதையைச் சரியாக விதைக்க வேண்டும். முள்ளை விதைத்தால் முள்தான் வளரும். இறைவன் முள்ளங்கியைத் தருவதில்லை. நேற்றில் மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான். அதுவே கர்மா. இதில் நேற்று என்பது பல ஜென்மங்களையும் உள்ளடக்கியதே. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும்படி நாம் இன்றைக்குத் தெளிவாக இருப்பதற்கான பழக்கத்தை மேற்கொண்டால், நாளை பற்றிய தேவையில்லாத சுய கற்பனையை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை. எல்லா நாளும் இன்றே தவிர, நாளை அல்ல. ஆன்மீகம் என்பது இன்றைக்கு இந்த நொடியில் வாழ்வது. இதுவரை அடியேன் எதை எதைச் செய்வதற்கு சுவாமி தீர்மானித்தாரோ, நீங்கள் சொல்லும் எதிர்காலத்திலும் அதை அதைச் செய்ய சுவாமியே தீர்மானிக்கிறார்.
நதியின் பாதையை நதி நிர்ணயிப்பதில்லை. உலக வரைபடம் வாசித்துப் பறவைகள் பறப்பதில்லை. ஏற்கனவே சுயதிருப்தியை அடைந்த எவரும் எதையும் தேடிப் போவதில்லை. தியானம் மட்டுமே அந்த சுயதிருப்தியை, பூரண நிறைவைத் தரமுடியும். மேடை தோறும் ஏறி, மாலை பாரங்கள் சுமந்து, கைதட்டல்களைக் காதுகள் நுகர்ந்து, பிறர் பாராட்டுதல்களால் குளிப்பாட்டப் பெற்று, திறமையை நிரூபித்து மகிழும் குழந்தைத்தனமான குணங்களை எல்லாம் கடந்து போய்விட்டேன். ஏற்றிய விளக்கு எரியா விளக்கொன்றை ஏற்றும். அடியேனிடம் உண்மையாக ஏதேனும் சத்ய ஞான நெருப்பு இருக்குமாயின், அது நிச்சயம் பிற இதயங்களைச் சுடர்விடச் செய்யும். நாடிப் போவது நின்றுவிட்டது. தேடிப்போவது தொலைந்து போனது. சுவாமி சங்கல்பித்து அன்போடு வரும் நிகழ்வுகளைப் பற்றின்றி ஏற்கிறேன். எனக்கென எந்தவித எதிர்பார்ப்புகளும் மனிதன்மேல் மட்டுமல்ல; சுவாமிமேல் கூட இல்லை. எண்ணமற்ற நிலையில் ஏராள சுகம் எப்போதுமே கொட்டிக்கிடக்கிறது.
ரயில் பயணத்தில் செல்பவர்களுக்கு அதன் ஓட்டுநர் பெயர்கூடத் தெரிவதில்லை. ஆனாலும் நிம்மதியாகவே செல்கின்றனர். அதேபோல் வாழ்க்கைப் பயணத்தின் ஓட்டுநர் சுவாமி என உணர்ந்துவிட்டபடியால், அதைவிட நிம்மதியாகவே பயணித்தபடி வாழ்கிறேன்! "யாவும் சுவாமி சங்கல்பமே" என்பது வெறும் வாசகம் அல்ல; சத்திய அனுபவம். சாயிராம்.
வைரபாரதி பெற்ற விருதுகள் திருக்குறள் செல்வர் (1997) கவிப்புயல் (2007) கவிமாமணி (2015) திருவருட் கவி (2017) கவிஞானி (2018) காவ்யஸ்ரீ (2019) கவி காத்யாயன மாமணி (2021) திருக்குறள் சிறப்பு விருது மாணவர் கம்பர் விருது டி.எம்.எஸ். விருது ராமானுஜர் விருது AIM கலாம் விருது வலியே வலிமை விருது
மற்றும் பல.
இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்து விட்ட ஒருவரின் வார்த்தைகள் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றன வைரபாரதியிடமிருந்து வெளிப்படும் சொற்கள். வாசிக்க மட்டுமல்லாமல் நிறையச் சிந்திக்கவும் வைக்கும் அவரது பதில்களை அசைபோட்டபடியே நன்றி கூறி விடைபெறுகிறோம். |