|
|
|
பிறைநிலவு வானில் பெண்ணின் அழகிய நுதலைப் போல் உதயமாகிக் கொண்டிருந்தது. பெண்ணுக்கு ஒரு திலகம்தான். ஆனால், இந்த நிலவுப் பெண்ணுக்குத்தான் எத்தனை எத்தனை நட்சத்திரத் திலகங்கள்!
இந்தப் பெண்களை மனத்தில் நினைத்தவளாய் இந்தக் கருத்தை வெளியிட்டாள் அழகு நங்கை ஆக்ரா. அவளுடைய இந்தக் கற்பனையைக் கேட்டுக் கலகலவென்று நகைத்து விட்டான் இளவரசன் சிக்கந்தர். லோடி வமிசத்துச் சிக்கந்தர் இவன். பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்குமேல் வாழ்ந்தவன்.
யமுனை நதியின் சலசலத்த கீதத்தைத் தவிர அந்தப் பிராந்தியத்தில் வேறு ஓசை கேட்கவேண்டுமே! எங்கும் பரிபூரண அமைதி நிலவியது.
"ஆக்ரா! எத்தனை மனோலயமான சூழ்நிலை பார்த்தாயா!" - இளவரசன் சிக்கந்தர், அதர மதுவின் மாசிலாப் போதையுடன் முனகினான்.
ஆக்ராவும் அஞ்சன விழிகளைச் சற்றே உயர்த்திக் கூர்ந்து கவனித்துச் சொன்னாள்: "ஓர் இனிமை நிறைந்த பாரசீகக் கவிதையை ரசிப்பது போலில்லையா?"
சிக்கந்தர் கண்களை மெல்ல மூடித் தலையசைத்தான்.
"பெண்ணே! உன்னுடைய நிலைக்கேற்ப நீ பாரசீகக் கவிதைதான்! எனினும் நான் ஒரு ஆப்கானியன். என் நிலைக்கு இதை ஏற்க முடியாவிட்டாலும் உன் நிலைமைக்காக ஏற்கிறேன்!"
"புரிகிறது. புரிகிறது பிரபோ, புரிகிறது. நம் தூய காதலுக்கே துணை நிற்க மறுப்பது இந்தப் பேதம்தான். நான் ஏன் பாரசீகப் பெண்ணாகப் பிறந்தேன் என்று இப்போதுதான் நொந்து கொள்கிறேன். இல்லையேல் இப்போது நாடு தங்களைக் கைவிடும் அளவுக்கு நான் ஆளாகி இருப்பேனா?"
"கவின் மகளே! நாடு என்னைக் கைவிடவில்லை. என் தந்தையை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறது!"
ஆக்ரா ஒன்றுமே புரியாமல் விழித்தாள்.
"சற்றுப் புரியும்படி சொல்லுங்கள்!"
"உனக்கு இது புரியாது; புரியவும் கூடாது. கண்ணே, அப்பா, தன் அண்ணன் மகனைப் பட்டத்தில் அமர்த்த இருக்கிறார். இந்த சிக்கந்தர் ஆக்ராவையும் இழக்கமாட்டான்; அதே நேரத்தில் அழகு நகர் தில்லியையும் கோட்டைவிட மாட்டான். நாளைய இரவு இதைத் தீர்மானிக்கப் போகிறது!"
புரிந்துகொள்ள முடியாத தவிப்புடன் எழுந்தாள் ஆக்ரா.
எங்கோ சாக்குருவியொன்று அவலமாக ஓலமிட்டது.
★★★★★
போர் வெறியன் தைமூரின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு, அழகிய தில்லி மாநகரம் பல வழிகளில் அவலத்துக்கு அடங்க நேரிட்டது. அவனால் அதற்கு முன்னமிருந்த துக்ளக் மரபே துகளானது. தில்லியைக் கொள்ளையடித்துக் கொண்டு திரும்பியபோது அந்த மங்கோலிய வெறியன் தைமூர், தில்லிக்கு ஒரு பிரதிநிதியை நியமித்தான். சையத் வமிசத்தின் மூலகர்த்தனான அவனாலும் அவனுக்குப் பிறகு வந்த சையத் அரசர்களாலும் தில்லியில் ஏற்பட்ட குழப்பத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது. குறுநிலப் பிரபுக்களாலும், ரஜபுத்திரர்களாலும் ஏற்பட்ட குழப்பம் நாளுக்கு நாள் வளர்ந்தே வந்தது. இந்நிலையில் உடனிருந்து குழப்பத்தை அடக்க முன்வந்தவர் தான், அப்போதைய லாகூரின் கவர்னராக இருந்த மாவீரர் பெலுல்லோடி. இவர் ஓர் ஆப்கானியப் பிரபு. தில்லியை அடக்கியதோடல்லாமல், கைப்பற்றிக் கொள்ளவும் செய்தார்.
அரியணை இழந்த கடைசி சையத் அரசன் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டான். 'உதவிக்கு வந்தவன் பதவிக்கு ஆளானானே' என்ற வஞ்சத்துடன் சூழ்ச்சி செய்யத் தலைப்பட்டான். இதைப் பெலுல்லோடி லட்சியப் படுத்த வேண்டுமே. மாவீர மைந்தன் சிக்கந்தர் இருக்கும்போது, பயமில்லை என்ற செருக்கு அவரிடம் இருக்கத்தான் செய்தது.
ஆனால்...
அரண்மனையின் மேன்மாடத்துப் பிரதான கூடத்தில் மகனுடைய வருகையை எதிர்பார்த்தவராய் உலவிக் கொண்டிருந்தார் தில்லியரசர் பெலுல்லோடி.
அவருடைய வாய் அடிக்கடி ஆக்ராவைப் பற்றியே முனகிக் கொண்டது. "யார் இந்த ஆக்ரா! பாரசீகத்திலிருந்து கூட்டமாக வந்த ஒரு நாடோடித் தாயின் மகள். பாரசீகமொழிகூடச் சரியாகத் தெரியாத இவள், தன்னுடைய மகளுக்கு 'ஆக்ரா' என்று பெயரிடுவானேன்? தகப்பன் பெயரைச் கூடச் சொல்லத் தெரியாத பெண் எங்கே? தில்லி அரியணையில் இவளை அமர்த்தி வேடிக்கை பார்க்க நான் என்ன பைத்தியக்காரனா?"
எதிர்பார்த்திருந்த மகன் சிக்கந்தர் வந்ததும் வராததுமாக இந்தக் கேள்வியைத்தான் எழுப்பினார் அரசர் பெலுல்லோடி.
சினச் சீற்றம் கொண்ட சிங்கம்போல் சிலிர்த்து நிமிர்ந்து தந்தையை ஏறிட்டு நோக்கிய சிக்கந்தர் மதிப்பற்ற போக்கில் சிரித்தான். "நானும்கூடப் பைத்தியக்காரனல்ல, தந்தையே!"
எத்துணை துடுக்காகவும், துணிவாகவும் பதில் சொல்லி விட்டான் இவன்! ஆயினும் பொறுமையாகவே லோடி கேட்டார்: "ஆக்ரா, அரியணைக்குரிய அந்தஸ்துடையவளா சிக்கந்தர்?"
"அவளையடைய அரியணைக்கு ஓர் அந்தஸ்து தேவை தந்தையே!"
"என்னடா சொன்னாய்?"
"அரியணைக்கு மட்டும் என்ன அந்தஸ்து இருக்கிறது? மங்கோலியன் வந்தாலும் மடி விரிக்கிறது; சையத் நெருங்கினாலும் சமிக்ஞை செய்கிறது. ஏன், கவர்னர் பிரபுவாக, இருந்த ஆப்கானிய லோடியான தாங்கள் வந்தாலும் அமர்த்திக் கொள்கிறது. இதில் அந்தஸ்து என்ன வேண்டிக் கிடக்கிறது?"
அதிகப்படியான பேச்சு! அளவுக்கு மீறிய துணிவு. கடைசியாகத் தில்லியரசர் பெலுல்லோடி சொன்னார்: "சிக்கந்தர்! நாளை முழுவதும் உனக்குச் சிந்திக்க ஓய்வு தருகிறேன்; அரியணையா? ஆக்ராவா? இரண்டில் ஒன்று தெரிய வேண்டும்!"
"இல்லையென்றால்...?"
"இரண்டில் ஒன்று தீர்மானிக்கப்பட்டுவிடும்!"
"அதையும் தான் பார்க்கிறேன்!" அழுத்தம் திருத்தமாகக் கூறி விறைப்பாக வெளியேறினான் சிக்கந்தர்.
அவனுடைய அந்த நிலை லோடிப் பிரபுவுக்குப் பொடி நடுக்கத்தைக் கொடுத்தது. அடுத்து, "காசீம்!" என்று அலறி அழைத்தார். தமக்கென்று அமர்த்தப்பட்டிருந்த முரட்டு ஊமையன் வந்து நின்று வணங்கினான்.
"காசீம்! நாளைய இரவு நடுநிசிப் போதில் சிக்கந்தர் கொலையுண்டு மாளவேண்டும்!" என்று மெதுவாகக் காதோடு காது வைத்தாற்போல் கூறினார். முந்திய அலறலுக்கும். இப்போதைய ரகசியத்துக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்! பணியாளன் - அடியாளன் காசீம், அதிர்ச்சியுடன் மருண்டு காணப்பட்டான்.
"உம்... தயங்கக்கூடாது. இல்லையென்றால் உன் தலை உருண்டுவிடும்!" என்று கூறிவிட்டுப் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டார் பெலுல்லோடி. அந்த நறநறப்பில் அறைபட்டு வெளிவந்தன, "ஆக்ரா! நாளைய மறுநாள் காலை நாற்சந்தில் நிறுத்திவைத்துக் கசையடி கொடுக்கிறேன்!" என்ற சூடான சொற்கள்.
கோளுக்குக் கோள் பார்த்துப் பெற்று, நாளுக்கு நாள் பார்த்து வளர்த்து, வாளுக்கு வாள் நிற்கத் தேற்றி தோளுக்குத் தோள் தோற்றம் கண்டுவிட்ட ஒரே மகனை, ஒப்புயர்வற்ற மகனை அரசுக்காகவும், அரியணைக்காகவும் பலியிடப் போகும் நிலைமையைக் கண்டு மனத்தளவில் பொங்கி, கண்ணளவில் நீர் கோத்து வருந்திப் பயனில்லை. லோடி வமிசத்து ஆட்சிமுறை சிக்கக்கந்தர் காலத்தோடு சிதைவுற்று விடக்கூடாது. சிக்கந்தரின் காதலைப் பொசுக்குவதில் மிருகமாக உருவெடுத்து விட்டார் அவர்.
★★★★★
தனக்கென்று ஒதுக்கிய மாளிகையை அடைந்து வெகு நேரம்வரை இளவரசன் சிக்கந்தருக்கு உறக்கமே வரவில்லை. அளவுக்கு மீறி மதுவைக் குடித்தான். உக்காவைப் புகைத்தான். கண்கள் அயர வேண்டுமே!
அவன்வரை பொழுது ஆமையாக நகர்ந்தது. தீபக் கண்களை உருட்டிப் பிரகாசப்படுத்திக் கொண்டு இருட்டழகியும் புறப்பட்டு விட்டாள். தன்னுடைய மாளிகைத் தனியறையைவிட்டு சிக்கந்தர் வெளிவர வேண்டுமே! அவன் ஆக்ராவின் அழகுப் போதையிலும், இளமைத் தாகத்திலுமாகத் தன்னை மறந்திருந்தான்.
நடுநிசி நேரமோ நெருங்கிக் கொண்டிருந்தது. செய்யப்போகும் செயல் - ஒரு கொலை! அதுவும் பெற்ற தந்தையை! தப்பித்தவறி அகப்பட்டுக் கொண்டால்...
உயிரோடு புதைப்பட நேரிடும் என்பதைச் சிக்கந்தர் அறியமாட்டானா என்ன? எனினும் துணிந்தே புறப்பட்டான்.
அழகி ஆனந்தமாக நித்திரை செய்து கொண்டிருந்தாள். அவளுடைய மாதுளைக் கன்னத்தை ஆவலோடு வருடினான். பிறகு போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்தினான். விடிவிளக்கை நீக்கி, ஏனைய விளக்குகளை அணைத்தான். கட்டாரியை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு வெளியேறினான். அப்போது தான் அவனுடைய மனநிலை எத்தனை பயங்கரமாகவும், வேதனையாகவும் இருந்தது!
இரவு நிசி வேளையையும் தாண்டி விட்டது. சிக்கந்தர் பதுங்கிப் பதுங்கி அரண்மனையுள் நுழைய வேண்டும் என்ற அவசியமில்லையே! ஆயினும் தந்தையறையுள் நுழையும்போது மட்டும் அவன் திருடனாகவே மாறினான். துண்டுத் துணியால் முகத்தை நன்றாகவே மறைத்துக் கொண்டான். கைகள் கட்டாரியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன.
அரண்மனை மாடச் சுவர்ப் பிடியின் உதவியால் மெல்ல மெல்லப் பிடித்தும் தொற்றியும் தாண்டியும் சாளரக் கதவுகளை அடைந்து விட்டான் சிக்கந்தர். அச்சமயம் தன்னை யாராவது பார்த்துக் கொள்கிறார்களா என்பதையும் கவனிக்கச் சுற்றுப்புறங்களை நோட்டம் விட்டுக்கொண்டவனாய்ச் சாளரத்துள் நுழைந்தான் சிக்கந்தர்.
'என் மகனே!' என்ற அலறல் குரல் திடுமென்று எழுந்ததைக் கேட்ட சிக்கந்தர், அதிர்ச்சியால் பதறியடித்துக் கொண்டு பக்கலில் நிறுக்தி வைக்கப் பெற்றிருந்த மரப்பேழையின் பின்புறமாகச் சென்று ஒளிந்து கொண்டான். அவனுடைய இதயம் நூறு குதிரை ஓட்டத்தில் அடித்துக்கொண்டது.
இந்நேரத்தில் இப்படியொரு சத்தம் வருவானேன்? எவர் எழுப்பிய சத்தம் இது!
அரசர் பெலுல்லோடி சற்றே முனகியவராய்ப் புரண்டு படுத்தார். வேறு யாருமல்ல; தந்தை தான் வாய் பிதற்றல் கொண்டிருக்கிறார்! தூக்கத்திலும் மகனுடைய சிந்தனையா....
இளவரசன் சிக்கந்தரைச் சிந்திக்க வைத்தது. 'ஆகா மகன் பேரில் தான் அவருக்கு எத்தனை பாசம்!'
அரை நாழிகைப் போதுவரை அவன் அப்படியே அசையாமல் சிந்தித்த வண்ணமாகவே நின்றிருந்தான். உடல் முழுதும் வியர்த்துக் காணப்பட்டது. "நேற்று வந்த அழகி - ஆக்ராவுக்காகப் பெற்றெடுத்த தந்தையைக் கொலை செய்வதா? எல்லாம் இந்த அரசுப் பதவியால் வந்து முளைத்த தொல்லைதானே? 'அரசு வேண்டாம்' என்று சொல்லி விட்டால், தந்தையைக் கொலை செய்யும் பாவமும நேராது; ஆக்ராவின் காதலுக்குத் துரோகம் செய்தோம் என்ற அபவாதமும் நேராது அல்லவா?" - இவ்வாறான சிந்தனைகளில் சுழன்ற வண்ணம் காணப்பட்ட இளவரசன் சிக்கந்தருடைய கண்களில் மற்றுமோர் அதிசயமான நிகழ்ச்சி பட்டுவிடவே, வியப்பும் விழிப்புமாகக் கவனித்தான்.
அவன் இறங்கிவந்த அதே சாளரத்து வழியாக இன்னோர் உருவம் இறங்கி வருகிறதே! முழுக்க முழுக்கக் கறுப்பு அங்கியுடன் முகமூடி தரித்து வரும் இந்த உருவம் யார்? எதற்காக வரவேண்டும்? ஓ... ஓ... இடுப்பில் செருகியிருந்த கட்டாரியை உருவிக்கொண்டு சுற்றுமுற்றும் கவனிக்கிறதே! ஐயோ! தன்னைப் போலவே இந்த உருவமும் தந்தையைப் பழிவாங்க வந்திருக்கிறதே!
சிக்கந்தருடைய சிந்தனை கந்தலாகக் கிழிபட்டுவிட்டது. தான் எதற்காக வந்தோம் என்பதை மறந்தான். தந்தையைக் கொலை செய்து ரத்த சாந்தி பெற எடுத்து வரப்பட்ட கட்டாரி, அவரைக் கொலை செய்ய வந்தவனை ஊடுருவியது. தாக்குண்டு அந்த உருவம் பேயாக அலறித் தரையில் சாய்ந்து துடி துடித்தது.
பயங்கரமான இந்தச் சத்தத்தைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு எழுந்த அரசர் பெலுல்லோடி, ஒன்றும் புரியாமல் விழிக்கலானார். தரையில் கொலையுண்டு துடித்த உருவத்தையும். கொலை செய்த மகனையும் மாறி மாறிப் பார்த்தார். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அதற்குள் அரண்மனையே விழித்துக்கொண்டு ஓடோடி வந்து கூடிவிட்டது அங்கே.
தன்னைக் கொலை செய்ய வந்தவனுடைய முகத்திரையை நீக்குமாறு கட்டளை பணித்தார் அரசர்.
பதறிய துடிப்புடன் தின்று கொண்டிருந்த அரண்மனை வீரர்களில் ஒருவன் விரைவாக முன்வந்து கொலையுண்டு தரையில் புரண்டு கொண்டிருந்த உருவத்தின் முகமூடியைக் கிழித்தான்.
அரசர் பெலுல்லோடி, "ஆ... காசீம், நீயா!" என்று அலறிவிட்டார்.
அனைவருக்கும் உண்மை புரியும்படியான ஓர் இரகசியத்தை வெளியிட்டான் இளவரசன் சிக்கந்தர்.
"நான் அப்போதே இவனைச் சந்தேகித்தேன். இவன் சையத் வம்சத்துக் கையாள்."
எட்டி ஓர் உதை உதைத்தான் சிக்கந்தர். காசீமின் உயிர் நிலைத்திருக்கவில்லை.
"மகனே! சிக்கந்தர்! உன்னைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பை இவன் எனக்கு ஏற்படுத்திவிட்டான். நீ என் மகன்! நீ விரும்பியது போல் ஆக்ராவை மணந்து கொள்!"
அரசர் பெலுல்லோடி சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் இளவரசனின் மாளிகையின் காவற்காரன் ஓடோடி வந்து ஒரு செய்தியை அறிவித்தான் :
"ஆக்ரா கொலையுண்டு மரணத் தறுவாயில் இருக்கிறாள்!"
"ஐயோ ஆக்ரா!" ஓடோடிச் சென்றான் இளவரசன் சிக்கந்தர்
ரத்தத் தடாகத்தில் ஜலக்கிரீடை செய்யும் தேவமங்கைபோல் பஞ்சணையில் காணப்பட்ட ஆக்ராவை அணைத்துக் கொண்டு குழந்தைபோல் கேவியழுதான் சிக்கந்தர். பெலுல்லோடியால் தேற்றவே முடியவில்லை. அவர் சொன்னார்: "அரசன், இளவரசன் இருவருக்குமே ஒரே மூச்சில் குறிவைத்திருக்கிறான் காசீம். அவனுடைய குறி தவறினாலும், இளவரசனுடைய குறிக்கோளுக்குப் பாத்திரமான ஆக்ரா பலியுண்டுவிட்டாள்!"
ஆக்ரா கடைசி மூச்சில் சொன்னாள்: "பிரபோ! என் கடைசி ஆசையைச் சொல்லுகிறேன். தயவு செய்து நான் எந்த இடத்தில் பிறந்தேனோ, அந்த இடத்தில் புதைத்து விடுங்கள்!"
அவளது அந்தக் கடைசி ஆசையை இளவரசன் செய்துமுடித்து அவளுடைய ஆத்மாவுக்குச் சாந்தியைச் செய்தான்.
அது மட்டுமா செய்தான்? அரியணை ஏறியதும் அதே இடத்தில் அவள் பெயராலேயே 'ஆக்ரா' என்ற நகரையும் நிர்மாணித்தான். இதுவே பிற்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாய் விளங்கியது. |
|
கோவி. மணிசேகரன் |
|
|
|
|
|
|
|