ஆஷ்ட்டு குட்டி
|
|
|
|
'ராமசாமி இம்போர்ட் எக்ஸ்போர்ட்' ஒரு பெரிய கம்பெனி. அவர்கள் தயாரிக்கும் பெருங்காயம் பிரசித்தி பெற்றது. இருபத்தி ஐந்து வருஷம், பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நல்ல சம்பாத்தியத்தைத் திரட்டினார் ராமசாமி. அழகான குடும்பம். ஒரே மகன் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படித்தான். இப்போது அமெரிக்காவில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் கைநிறையச் சம்பளம். ஒரு அமெரிக்கப் பெண்மணியையும், திருமணம் செய்துகொண்டு டென்வரில் வாசம் செய்கிறான்.
ராமசாமிக்கு இந்தக் கல்யாணத்தில் ஆரம்பத்தில் இஷ்டம் இல்லை. ஆனால் ஒருமுறை அவரும் அவர் மனைவியும் டென்வர் சென்று மருமகளிடம் பழகியபின் மனதை நன்றாகத் தேற்றிக்கொண்டார். ஏனென்றால், மருமகள் குடும்பத்தில் இந்தியக் குடும்ப சம்பந்தம் நிறைய இருந்ததால் மாசாமாசம் டாலரையும் இந்திய நோட்டுகளையும் அதிகமாகப் பார்க்க ஆரம்பித்தார்.
மகன் அமெரிக்கா சென்று கல்யாணம் செய்துகொண்ட பிறகு காய வியாபாரமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருக ஆரம்பித்தது. என்றுமில்லாமல் அந்த வருடம் அபரிமிதமான லாபம் கிடைத்தது. மருமகள் டெய்சி வந்தவேளை என்பது அவரது எண்ணம். ஒரு குறை மாத்திரம் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஒரு பேரனோ, பேத்தியோ இல்லை என்பதுதான் அது. ஜாடை மாடையாக மகனிடமும் மருமகளிடமும் ஃபோனிலும், வாட்ஸாப்பிலும் பேசியும் பிரயோசனம் இல்லை என்பதை நினைத்து அவர் மனம் வெதும்பியது.
"என்னங்க, என்ன யோஜனை" மனைவி குரல் கேட்டவுடன் நினைவிலிருந்து, வெளியே வந்தார்.
"ஒண்ணுமில்லை, என்ன விஷயம்?"
"நம்ப ஆபீஸ் ஸ்டாஃப் எல்லோரும் சேர்ந்து ஒரு மெமோ
தயாரித்து உங்களிடம் நாளை கொடுப்பதாக இருக்கிறார்கள்."
"அப்படியா உனக்கு, யார் சொன்னார்கள்?
"டெஸ்பாட்ச் கிளெர்க் மாணிக்கம் உங்களுக்கு ஃபோன் பண்ணும்போது நீங்கள் பாத்ரூமில் இருந்தீர்கள்."
என்ன விஷயம் இவ்வளவு நாளாக இல்லாத புதுப்பழக்கம் நம்ம ஆட்களுக்கு, ராமசாமி எண்ணிப் பார்த்தார்.
மறுநாள் அலுவலகத்தில் உள்ளே நுழையும்போது என்றுமில்லாமல் எல்லாரும் குட்மார்னிங், வணக்கம், நமஸ்காரம் என்று கோஷமிட்டார்கள்.
ராமசாமி "யாராவது ஒருவர் என் ரூமுக்கு வந்து என்ன வேணும்னு சொல்லுங்க" என்றார்.
மாணிக்கம், "நான் வரேன் சார்" என்றார்.
ராமசாமி தன் ரூமில் உட்கார்ந்தவுடன் மாணிக்கம் கையில் வைத்திருந்த காகிதத்தைக் கொடுத்தார். அதைப் படிக்காமலேயே, "பரவாயில்லை நீங்களே சொல்லுங்க" என்றார்.
உடனே மாணிக்கம் "சார், இந்தக் கம்பெனி ஆரம்பித்த காலத்திலிருந்து நான் உங்களுடன் இருக்கிறேன். இன்னிக்கு நம்ப ஆஃபீஸில் 50 பேர் வேலை பார்க்கிறார்கள். ஆரம்பத்தில் என் சம்பளம் 100 ரூபாய். படிப்படியாக உயர்ந்து இன்னிக்கு என் சம்பளம் 1300 ரூபாய். எனக்குதான் ஜாஸ்தி என்று எல்லோரும் சொல்கிறார்கள். உண்மையில் இந்தக் கம்பெனியில் எல்லோருக்கும் சம்பளம் குறைச்சல்தான். வருடாந்திர போனஸும் இல்லை. எங்கள் கோரிக்கை என்னவென்றால் எங்கள் எல்லோருக்கும் உடனே 1500 சம்பளம் கூட்டிக் கொடுக்கவேண்டும். அதுவும் போன டிசம்பர் மாதத்திலிருந்து. மேலும் இந்த வருஷம் ஆறு மாச போனஸ் வேண்டும் இதுதான் எங்கள் கோரிக்கை" என்று சொல்லி முடித்தார்.
ராமசாமி பிரமித்துப் போய்விட்டார். "என்னையா, இது என்ன கார்ப்பொரேட் கம்பெனியா? எங்கிருந்து நான் கொடுப்பேன்? வியாபாரம் சுமாராப் போய்க்கொண்டிருக்குது. என்னால் முடியாது."
"எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம். இருபத்தி ஐந்து வருஷம் எங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் மோசம் செய்துவிட்டீர்கள், நீங்களாகவே கொடுப்பீர்கள் என்று காத்திருந்ததுதான் மிச்சம்."
"கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் கேட்டதைக் கொடுக்க 3 கோடி ரூபாய் வேண்டும். அது என்னிடம் இல்லை. இந்த மாதத்தில் இருந்து எல்லோருக்கும் 500 ரூபாய் உயர்த்துகிறேன்."
"நாங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை."
"என்ன பண்ணுவீங்க?"
"ஸ்ட்ரைக் செய்வோம்" மிரட்டினார் மாணிக்கம்
"அப்படியா? நான் கம்பெனியை மூடிவிடுவேன்." பதிலுக்கு மிரட்டினார் ராமசாமி.
"என்ன சார் பயமுறுத்துகிறீர்களா? மூட உங்களால் முடியாது. அரசாங்கம் ஒப்புக்கொள்ளாது. கம்பெனி நல்ல பெருத்த லாபத்தில் போகிறது."
"இது என் கம்பெனி, என் இஷ்டம்."
"50 தொழிலாளர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டால் அரசாங்கம் சும்மா இருக்காது."
"என்ன சட்டம் பேசறயா?"
"சட்டப்படி நீங்கள் மூட முடியாது."
"சரி, ஆறு மாச போனஸ் கொடுக்கிறேன். மற்ற உயர்வு முடியாது. வழக்கம்போல் என்ன உயர்வோ அதைக் கொடுக்கிறேன். இதற்கு ஒப்புக்கொண்டால் சரி, இல்லாவிட்டால் மூடிவிட்டு அமெரிக்கா போய் மகனுடன் செட்டில் ஆகிவிடுவேன்."
மாணிக்கம் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் ராமசாமியின் மனம் கரையவில்லை. அவர் தயாரிக்கும் காயம்கூட கரைந்துவிடும். அவர் மனது கல்லாக இருந்தது, அதனால் கரையவில்லை.
முடிவில் தொழிலாளர்கள் போனஸ் வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டார்கள். காரணம், கொரோனா பயம் தவிர மாசச் செலவுகள், ஸ்கூல் ஃபீஸ் என்கிற பயமும் இருப்பதால்.
மறுநாள் வீட்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ராமசாமிக்கு அமெரிக்காவிலிருந்து ஃபோன் வந்தது. மகன், கூடிய சீக்கிரம் நீங்கள் தாத்தா ஆகப்போகிறீர்கள் என்கிற நல்ல செய்தியைச் சொன்னான்.
ராமசாமிக்கு ஒரே சந்தோஷம். உடனே மனைவியைக் கூப்பிட்டு "கேட்டியா, நாம் தாத்தா பாட்டி ஆகப் போகிறோம்" என்றார்.
பிறகு நேராக ஆஃபீஸ் வந்த ராமசாமி, எல்லா ஊழியர்களையும் கூப்பிட்டு "உங்கள் கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டது" என்றார்.
அவர்கள் பிரமித்து விட்டார்கள், எப்படி அவர் மனசு மாறியது என்று.
அந்தப் பரந்தாமனுக்குத்தான் அந்த ரகசியம் தெரியும். மகனும், மருமகளும் அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டார்கள். ராமசாமியும் மனிதர்தானே, ஊழியர்களின் கோரிக்கையைப் பூர்த்திசெய்ய வேண்டியது தன் கடமை என்று அவருக்குத் தோன்றிவிட்டது. |
|
கே. ராகவன், பெங்களூரு |
|
|
More
ஆஷ்ட்டு குட்டி
|
|
|
|
|
|
|