Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அந்தரம்
- எஸ். ராமகிருஷ்ணன்|டிசம்பர் 2006||(1 Comment)
Share:
Click Here Enlargeஏழு மழையற்ற வருஷத்தின் தொடர்ச்சியால் பஞ்சம் பிழைக்க ஊரைக் காலி செய்து போகும் சம்சாரிகளோடு வடதிசை நோக்கிப் போக தச்சாசாரி தன் ருதுகழியாத மூன்று பெண்களோடும் வீட்டின் உள் அறையில் குடிகொண்ட தச்சாளம்மனின் பிடிமண்ணும் கொண்டு புறப்பட இருந்த இரவின் பின் பொழுதில் காற்று திரண்டு சுழன்று சப்தமிட, இருள் கூடி எங்கோ ஈரம் கசிந்து பரவ காற்றின் குளிச்சியறிந்த நாய்களும் பசுக்களும், குரலெடுத்துச் சப்தமிட, உறக்கமற்றுக் கிடந்த சம்சாரிகளில் சிலர் நாவைச் சுழற்றி, காற்றை ருசித்து, மழை மழையெனச் சப்திக்கும் முன்பாக வேகம் கூடின. மழையின் பிடியில் ஊர் வசமானது. அவர்கள் சப்தத்தினைக் கேட்டுக் கொண்டேயிருந்தனர். வீட்டருகில் மழை பெய்த போதும்கூட எங்கோ ஒலிக்கும் வெண்கல ஓசை போல அது அவர்களுக்குள் நீண்டு ஓடிப் பரவியது. ஆண்களும், பெண்களும் வீடு விலக்கி இருள் நிரம்பிய தெருவில் ஓடியலைந்தனர். நெடுநாட்களாக குளிர்ச்சி காணாத நாய்கள் கல் இடுக்குகளிலும் காலி உரல்களிலும் தேங்கிய தண்ணீரைக் கலைத்துத் தாவி ஓடின. மழை அவர்களைத் தீண்டி சந்தோஷித்தது. தச்சாசாரியின் பெண் பிள்ளைகள் தங்கள் வளர்ந்த கூந்தலை அவிழ்த்து விட்டவர் களாகப் பெய்து கொண்டிருக்கும் மழையின் ஊடாக கல் உருக்களைப் போல மெளனம் கொண்டிருந்தனர். மழை அவர்கள் கூந்தல் வழி இறங்கி ஓடியது. பெய்து கொண்டிருக்கும் மழையின் சப்தம் குறைவதை தச்சாசாரி கேட்டுக் கொண்டேயிருந்தார்.

அதன் வேகமும், சீற்றமும் அடங்கிக் கொண்டே வந்தது தவிப்பாக இருந்தது. நின்றுவிடப் போகிறது மழை என்பதே வேதனை தருவதாக இருந்தது. உலர்ந்த வேம்புகள் விழித்துக் கொண்டு நீர்ருசி கொண்டு முறுக்கேறின. இனிச் சந்திக்க முடியாத மனிதரின் பிரிவைப் போன்றதொரு துக்கம் அவர்களிடம் நிரம்பி உயர்ந்து கொண்டிருந்தது. நிலமெங்கும் ஓடி ஒளிந்து கொண்டது மழை நீர். அவர்கள் அசுவாசத்தோடு பெருமூச்சிட்டவாறு அந்த நிசப்தத்தினுள் அமர்ந்திருந்தனர். ஈரம் வடிந்த உடலாதலால் யாவரிடமும் ஒருவிதமான நளினம் சரிவு கொண்டிருந்தது. மழைக்குப் பிந்திய இருள் மிக்க கனம் கொண்டது. அவர்கள் அது போன்றதொரு மயக்கம் கலந்த இரவை கண்டவர்களில்லை. இமைகள் தானே கவிழ்ந்து தாழ்ந்து கொள்ள யாவரும் கனவின் முகத்துவாரத்தினுள் நுழைந்து கொண்டனர். மாடுகளின் ஒடுங்கிய மூச்சொலி கூட பிரம்மாண்டமாக எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது.

தச்சாசாரி தன் பெண் பிள்ளைகள் உறங்குவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அறியாத வடதிசைக்குப் போக வேண்டியதில்லை. இனி எப்படியும் மழை மறுமுறையில் ஊரைப் பற்றிக் கொள்ளும் என்ற சுய சமாதானம் கொண்டவராக விழித்துக் கிடந்தார். மழை பெய்த சப்தத்தின் சுவடே இல்லை. இருள்பூச்சிகள் கரைந்து கொண்டிருந்தன. அவர் எங்கும் ஈரம் பரவிக் கொண்டு இருந்ததை உணர்ந்தார். அன்றைய இரவின் நெடிய வெளி மிக மெதுவாக விரிவு கொண்டது. தச்சாசாரி வீட்டு முன் கிடந்த நாய் ஈரமண்ணைக் கிளப்பிக் கொண்டிருந்தது. புறப்பட்ட ஈரவாசனை உறக்கத்தினைத் தூண்டியப்படி நீண்டது. சிறுவனைப் போல மழைக்குப் பிந்திய குளிர்ச்சி ததும்பும் கல்படியில் உட்கார்ந்திருக்க ஆசை கொண்டவராக கதவு திறந்து தெருவிற்கு வந்த போது மரங்களின் அசைவேயில்லை. இலை தெரியா இருள்.

வீட்டின் எதிரில் கிடந்த கல்லில் உட்கார குனிந்த போது ஒரு சப்தத்தைக் கேட்டார். வெள்ளி மணிகள் சுழலும் ஓசை போல சிலிர்ப்பு கூடின சப்தமது. கேட்டவுடனே அது உடலெங்கும் பரவி மின்னலைப் போல பெருவிரல் வரை துடிக்கச் செய்வதாக இருந்தது. என்ன ஓசையது என அறியாதவராக நிமிர்ந்து பார்த்தார். சிறிய வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. நீலமும் துளி சிவப்பும் கலந்ததொரு நிறமது. சரியாக தச்சாசாரியின் வீட்டுக் கூரைக்குச் சில அடிகள் உயரத்தில் அந்த ஒளி துளிர்த்துக் கொண்டிருந்தது. என்ன ஒளியது எனப்புரியாத வசீகரத்தால் ஈர்க்கப்பட்டவராக அதைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிஷ இடைவெளியில் மீண்டும் அந்த வெள்ளியோசை சுழன்று மெல்லிய சிரிப்பொலி போலக் கேட்டது. அந்த ஓசையும் ஒளியும் ஒரே இடத்தினின்றே பிறக்கின்றது என அறிந்தவராக சில அடிகள் முன் நடந்து நின்று அந்தப் பொருளைக்கண்ட போது அது இருட்டில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. நட்சத்திரம் எதுவோ சிதறி வீழ்ந்து கொண்டிருக்கிறதோ என ஆகாசத்தைப் பார்த்தார். தொலைவில்கூட நட்சத்திரங்களில்லை. தச்சாசாரிக்குப் பிடிபடவில்லை என்றாலும் அந்தச் சிரிப்பு அவரைப் பற்றிக் கொண்டது. அதைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென விருப்பம் கூடிக் கொண்டே வந்தது. தொலைவில் இருந்து அந்தச் சப்தம் பிறந்த போதும் காதின் மிக அருகாமையில் அது கேட்டது. காற்றோடும் வீதியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டேயிருந்தார். வசீகரம் கூடிக் கொண்டே வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் மனம் மிதந்து அலையும் சிறகினைப் போல எடையற்று ததும்பிக் கொண்டிருந்தது.

அந்தச் சிரிப்பின் பிரேமை தொற்றியவராக உறங்கிப் போயிருந்தார். சாணக்கரைசலுடன் விடியலில் கதவு திறந்து வந்த மூத்தவள் தகப்பனின் முகத்தில் உறக்கம் மீறிய சந்தோஷம் கூடி அமைதியுறுவதைக் கண்டவளாகக் குனிந்து சாணம் தெளித்துக் கொண்டிருக்கும் போது அந்த ஓசை அவள் காதிற்கும் கேட்டது. அது சிரிப்புதானா இல்லை ஏதேனும் சங்கீதத்தின் முடிவுறா சுருளா என்பது போலக் கேட்டு அடங்கியது. அவள் நிமிர்ந்து பார்த்தபோது காலை பிறந்து கொண்டிருந்தது. அவள் சப்தம் பிறந்த பொருளைக் கண்ட போது தன்னையே நம்ப முடியாதவளாக கண்ணை விரித்துப் பார்த்தாள். ஒரேயொரு துளி மழை, பூமிக்கு வந்து விடாமலும் ஆகாசத்துக்குத் திரும்பி விடாமலும் அவர்கள் கூரையின் சில அடிகளுக்கு மேலாக நின்று கொண்டிருந்தது. வெண்முத்து ஒன்றினை நினைவுப்படுத்தும் தோற்றமும் அதைவிடத் துல்லியமும் கொண்டு திரண்டிருந்தது. தரைக்கு வராத மழைத் துளியை அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போது அது தன் சிறுநாவை அசைத்து சிரிப்பை வெளிப்படுத்தியது. அவர்கள் பரஸ்பரம் சந்தேஷித்தவர்களாக வீட்டில் உறங்கும் யாவரையும் பெயர் சொல்லி அழைத்தனர். அன்றைய பகலுக்குள் ஊரெங்கும் விநோதம் பரவிவிட்டது. தச்சாசாரியின் வீட்டுக் கூரையின் உயரத்தில் பூமிக்கு வராது அந்தரத்தில் நின்ற மழைத் துளியைக் கண்டபடியிருந்தனர். அதன் சிரிப்பு கேட்ட ஆண்களும், பெண்களும் மயக்கம் கொண்டு போயினர். யாவரும் அதை ஒத்துக் கொள்வது போலவே பேசிக் கலைந்தனர். அன்றைய பகலும் இரவும் ஆசாரி அந்த மழைத்துளியைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

நேற்றுப் பெய்த மழையில் விடுபட்டுப்போய், வீடு திரும்பாத ஒரு சிறுமியைப் போல தனியே பகலின் நீண்ட ஒளியில் மிதந்து கொண்டிருந்தது. ஊரில் மிதந்து அலைந்த பறவைகளும்கூட துளி மழையின் அருகில் சென்று சுற்றி நெருங்க இயலாது சிறகடித்து உடன் மிதந்தன. அதிர்ஷ்டத்தின் காற்று வீசத் துவங்கிவிட்டதாக பெண்கள் உணரத் துவங்கிய நாட்களின் தொடர்ச்சியில் தன் பூர்வீக வீட்டின் தூர்ந்து கிடந்த கிணற்றை வாரி மண் எடுக்க தச்சாசாரி வேலை செய்தபோது மண்கலயங்களிலிருந்து சொர்ணக் காசுகளும் வெள்ளிப் பாளமும் கிடைத்தன.

பெண்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்தார். பசுக்களும் தானியமும் பெருகினபோதும் தச்சாசாரி இரவு நேரங்களில் உறக்கமற்றவராக அந்த ஒற்றை மழைத்துளியைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அது அவர் மனதின் சங்கீதத்தைப் பாடுவதைப் போலவும் நிசப்தத்தினின்று மூழ்கி ஒரு மலரைப் பறித்து எறிவது போன்றும் சப்தமிட்டுக் கொண்டேயிருந்தது. வீட்டோர் உடல்களின் மிளிர்வும், சாப்பாட்டுப் பாத்திரங்களில் உணவின் மீதமும் கூடிக் கொண்டேயிருந்தன. என்றாலும் அந்த ஊரில் பின் மழை பெய்யவே இல்லை. சம்சாரிகள் அன்று இரவு பெய்த மழை தங்களை மீண்டும் ஏமாற்றி விட்டதாகப் புலம்பி வடதிசை பார்த்து போகத் துவங்கினர். தச்சாசாரி மட்டும் ஒரு துளி மழை தன்னை வளமை கொள்ளச் செய்துவிட்டதாக நினைவு பெருக தெருவோடிக் கிடந்த தனிமையில் உலவி அலைந்தார்.
மழையற்றுப் போன நாட்களின் பகல் மிகத் தீவிர வெக்கையின் பேரலைகளை வீசித் திரும்பின. வெக்கைக்கும் உரத்த காற்றுக்கும் அந்தத் துளி சலனமுறவேயில்லை. மாறாத சிரிப்பை விரித்தபடி தன்னிடத்திலே நின்றது. அந்த மழைத்துளியின் சம்பதம் கேட்டுப் பழகிய கழுதைகளும், நாய்களும்கூட இரவில் அதனைத் திறந்த கண்களோடு பார்த்தபடியிருந்தன. மழையற்று உலர்ந்து கொண்டிருந்த மரம் மூர்க்கம் கொண்டது போலத் தன் கிளைகளை வீசி அந்தத் துளியைப் பற்றி ருசிக்க வளைந்து நிமிர்ந்து திமிறின. மழைத் துளியிடம் அசைவேயில்லை.

எண்பத்தி ஒன்பது நாட்கள் கடந்த பிறகான இரவில் தன் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றம் செய்து விட்டவரைப் போல திருப்தியுற்று தச்சாசாரி எதிர்கல்லில் அமர்ந்தபடி அந்தச் சிரிப்பைக் கேட்டார். அது அவருக்கு வசீகரம் கொள்ளாதது போலப் பழகியிருந்தது. அவர் உடல் உறக்கத்தினுள் சரிந்துவிட முயன்று கொண்டிருந்தது. தன் தெருவில் சுற்றியலையும் நாய்களையும், கழுதைகளையும் கண்டு கோபமுற்றவராக அவற்றை விரட்டியடித்தார். அன்றிரவில் வெகு சீக்கிரமாக உறங்கிப் போயிருந்தார். வீட்டில் இருந்த கடைசி மகள் மட்டும் விழித்துக் கொண்டிருந்தாள். நிசப்தம் மட்டுமே நிரம்பிக் கொண்டிருந்தது. சிரிப்பு விட்டு விட்டுக் கேட்டதால் அவளும் உறங்கிப் போனாள்.

பின்னிரவில் தச்சாசாரிக்கு விழிப்புத் தட்டியபோது ஆழமான மெளனம் எங்கும் மலர்ந்திருந்தது. அப்போது தொலைவில் வெகு அப்பால் ஏதோ ஒரு துயரமான குரலைப் போல விம்மலைக் கேட்டார். யாரோ வடதிசை நோக்கிப் போகும் சம்சாரியின் மனைவியாக இருக்கக்கூடும் என்று நினைத்தவராகக் கண்களை மூடிக் கொண்டு கேட்டார். மிகத் தொலைவில் அவ்வோசை கேட்டு அடங்கியது. நிமிஷ நேரத்திற்குள் விம்மலோசை திரும்பவும் கேட்டது. அதன் துயரம் தீவிரமாக தன் உடலில் சென்று சேகரமாவதை உணர்ந்தவராக வெளியே வந்தபோது திரும்பவும் கழுதைகளும், நாய்களும் அவர் வாசல் முன் கூடியிருந்தன. அவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்தத் துயரோசை திரும்பவும் கேட்டது. அது சலனமற்ற மழைத்துளியில் இருந்துதான் பிறக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மறுகணம் அவர் முகம் வெளிறிப் போனவராக ஓடித் தன் வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டார். என்றாலும் அந்த இரவிலிருந்து அதன் சிரிப்பு ஒடுங்கி துயரோசை கேட்கத் துவங்கியிருந்தது. தாளமுடியாத எவரின் பிரிவிற்கான துக்கம் போல அந்த விம்மல் பரவி அதன் நெடிய துயர் பரவ ஊரே பயம் கொள்ளத் துவங்கியது. துரதிருஷ்டத்தின் கை மழைத்துளியைப் பற்றிக் கொண்டதாக ஆத்திரம் கொண்டார் தச்சாசாரி. இரண்டு நாட்களுக்குள் உடல் வெளிறி ஏதோ புலம்பல் கொள்ளத் துவங்கி நிமிர்ந்து எதையும் பார்க்க விரும்பாது அலைந்தார். துக்கத்தின் சப்தம் தாளாது ஊரார் பலரும் தச்சாசாரியே அந்த மழைத்துளியை வீழ்த்திச் சரித்துவிட வேண்டுமென்று வற்புறுத்தினர். அவர் அதற்கு மனதிடமற்றவராக இருந்தார்.

வீட்டிலிருந்த இளையவள் முகம் சுருங்கிப் போய்விட்டாள். துரதிருஷ்டத்தின் நடமாட்டம் அவர்கள் வீட்டைச் சுற்றியலைவதாக உணர்ந்தாள். தொழுவில் நின்ற நிறை பசு கல்லில் கால் மாறி ஊன்ற வலது காலை ஒடித்துக் கொண்டு குரலிட்ட போது அவள் குரலெடுத்து அழுதாள். வீட்டின் முற்றத்தில் காயவைத்த தானியங்கள் யாவும் உலர்ந்து பொக்குகளாகின. வீட்டு உலக்கை முறிந்து போனது. நோயுற்றவர்களாக தகப்பன் வீடு வந்து சேர்ந்தனர் மூத்த பெண் பிள்ளைகள். தச்சாசாரி எப்போதும் கோபமும் எரிச்சலும் கூடியவராய் இரவில் துர்வசைகளையிட்டுக் கொண்டிருந்தார். பலரும் அவரை ஊரைவிட்டுப் போய்விடும்படிச் சொல்லினர். ஆனால் அவரிடம் இன்னமும் இரண்டு கோடைகளைத் தாங்கக்கூடிய தானியங்கள் இருப்பு இருந்தன.

தினமும் அவர் மழைத்துளியின் மீது தன் கசப்பை உமிழ்ந்தப்படியிருந்தார். ஆயினும் அதன் துயரோசை கேட்கத் துவங்கியதும் நகங்கள் வரை நடுக்கம் பரவ, உடல் தளர்ச்சியுற்று தானறியாமல் கைகளை புதைத்து அழுவதைத் தொடர்ந்து செய்து வந்தார். என்றும் போல கழுதைகளும் நாய்களும் அவர் வாசலில் இரவெல்லாம் அலைகின்றன. அவர் ஏதேனும் பறவையோ, தகிக்கும் சூரியனோ அந்த மழைத் துளியை விழுங்கிவிடாதா எனப் பார்த்துக் கொண்டேயிருப்பார். பறவைகள் தாழப் பறப்பதேயில்லை. ஒரு இரவில் அவர் யோசனையின் குழப்பத்தில் கதவு திறந்து கொண்டு வெளிவரும் போது படுத்துக் கிடந்த ஏதோ ஒரு விலங்கின் மீது கால் மிதித்து பயத்தில் வீழ்ந்த போது கால் முறிவு கொண்டு உடல் ரணமானது. பெண்களும், ஆண்களும் மழைத்துளியின் மீது வெறுப்பை கசிந்த படியிருந்தனர்.

இனியும் இந்த ஊரில் இருப்பதன் துயரம் தாளாதது என முடிவுற்றவராக அவர் தன் தானியங்களை, உடமைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இரவோடு இரவாகப் புறப்பட இருந்த போதும் அந்தத் துயரோசை நீண்டு கொண்டிருந்தது. மாடுகள் தெருவைக் கடந்து செல்ல முடியாமல் திணறி நின்றன. தச்சாசாரி வீடு திறந்து கிடந்தது. பெண்கள் வண்டியில் அமர்ந்திருந்தனர். பிடிமண் எடுக்காது புறப்பட்ட நினைப்பில் வீடு திரும்ப எத்தனித்த போதும் அந்த விம்மல் நீண்டு கேட்டது. அவர் வீடு நோக்கி முன் நடந்தார். நிசப்தம் நீண்டது. அவரறியாமல் நிமிர்ந்து அந்த ஒற்றை மழைத்துளியைக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுழன்று சரிந்து ஒற்றைத் துளி வெடித்துப் பெருகி பெருமழையாய் அவர் வீட்டை சுற்றி மட்டும் பெய்து கொண்டிருந்தது. அவர் வீட்டை நோக்கி ஓடியபோது மழையின் சப்தம் கேட்டுத் திரும்பிய பெண்கள் தெருவில் இறங்கி நின்றனர். வீட்டின் மழைச் சுற்றினுள் புகுந்து சப்தமிட்டபடி வீழ்ந்தார். அவர் முகத்தில் மழை வளையமிட்டுப் பெய்தது. ஒரு வீட்டிற்கு மட்டும் தனியே பெய்யும் மழையின் விநோதம் புரியாமல் புழுதியில் கிடந்த நாய்கள் நாவு துடித்து, மழை நோக்கி வந்து கொண்டிருந்தன. பின் தச்சசாரியின் வீடு மெல்ல மழையால் இடியத் துவங்கியது. உடலெங்கும் மழைத் துளிகள் நடமாட அனுமதித்தபடி மண்ணில் முகம் புதையக் கிடந்தார் தச்சாசாரி. பின் அவர் எழுந்து கொள்ளவேயில்லை.

எஸ்.ராமகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline