பரிசு
|
|
|
மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பினாள் சுமதி. கடிதப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அட! அம்மா லெட்டர். மேலே கோணல்மாணலான எழுத்துக்களில் விலாசம். மற்ற கடிதங்களையும் அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். உடை மாற்றிக் கொண்டு முகம், கைகால் அலம்பி, முகத்தில் பொட்டு வைத்துக்கொண்டு நேரே கூடத்துக்கு வந்தாள். மாமியார் கோமதி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். "சுமதி உள்ளே காபி டிக்காஷன் இருக்கு கலந்துக்கோ. வெளியில குளிர் எப்படி இருக்கு? சுரேஷ் வர லேட்டாகுமா, போன் பண்ணினானா?"
"இதோ காபி எடுத்துக்கறேன் அவருக்கு மீட்டிங் இருக்கு, வர லேட்டாகும்னு போன் பண்ணினார். குளிர் பயங்கரமா இருக்கு. உங்களுக்குச் சப்பாத்தியும் சப்ஜியும் செஞ்சுடறேன்..." கூறிவிட்டு அடுக்களைக்குள் சென்றாள்.
"அடடா, அம்மா லெட்டர் படிக்கலையே!" என்று மனதுக்குள் நினைத்தவள் வேலைகளை முடித்துவிட்டு, நிதானமாக லெட்டரைப் படிக்க ஆரம்பித்தாள்.
"அன்புள்ள சுமதிக்கு இங்கு எல்லாரும் நலம். உன்னிடமிருந்து மூன்று மாசமாய் லெட்டரே இல்லை. நீ என்னிடம் சொல்லி விட்டுப் போனதை சுத்தமா மறந்துவிட்டே போல இருக்கு. உனக்காக நானும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்? நிறையச் செலவழித்து இன்ஜினியரிங் படிக்க வைத்து அமெரிக்க மாப்பிள்ளையையும் பார்த்து தடபுடலாய்க் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம். என்னுடைய வைரத்தோட்டை உனக்குப் போட்டேன். அது என் பிறந்த வீட்டில் எங்க அம்மா எனக்குப் போட்டது. பழைய நாளைய ப்ளு ஜாக்கர். இப்போ அதன் விலையே ஐம்பதாயிரம் இருக்கும். நீ கல்யாணத்தின் போது உன் கணவருடன் பேசினாய். அந்தப் பணத்தைக் கூடிய சீக்கிரம் அனுப்பறதாகக்கூறினாய். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இது உனக்கே நன்றாக இருக்கா? என் பேரில் அக்கறையோ அன்போ இருந்தால் இப்படிப் பேசின வாக்கு மாறுவாயா? உனக்கும் நல்ல வேலை கிடைத்து சம்பாதிக்கிறாய். உன் சம்பளம் வந்து அவர் களுக்கு ஆகப் போறது ஒன்றுமில்லை. அது அதிகப்படிதானே. நான் தோடு இல்லாமல் வருத்தத்தில் இருக்கிறேன். அமெரிக்கா சொர்க்கபுரின்னு சொல்கிறார்கள். இந்த வாழ்க்கை உனக்கு யாராலன்னு நினைத்துப் பார். உன் உடம்பைப் பார்த்துக் கொள். உன்னிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு உன் அம்மா
கடிதத்தைப் படித்து முடித்த சுமதிக்கு வேர்த்துக் கொட்டி உடம்பே பதறியது. நல்லவேளையாய் மாமியாரும் டிவியில் மூழ்கி இருந்தபடியால் ஏது லெட்டர் என்றெல்லாம் கவனித்துக் கேட்கவில்லை. 'அப்பாடி, நிம்மதி.'கடிதத்தைத் தன் கைப்பைக்குள் மறைத்து வைத்தாள்.
"சே... என்ன அம்மா... பணம் பணம்னு இப்படியா லெட்டர் போடறது... ரொம்ப அவமானம்". கோபத்தில் பற்களைக் கடித்தாள்.
கணவனிடமும் லெட்டர் வந்த விஷயம் சொல்லவேயில்லை. இரண்டு நாட்கள் ஒரே மன உளைச்சலுடன் வளைய வந்தாள். அன்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் ஆத்திரம் தீர அம்மாவுக்கு லெட்டர் எழுதினாள்.
அன்புள்ள அம்மா,
உன் லெட்டரைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. நீங்கள் என்ன எனக்கு யாரும் செய்யாததைச் செய்து விட்டீர்கள்? ஒரு அப்பா, அம்மா, மகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைத் தானே செய்திருக்கிறீர்கள். நானும் நன்றாக மெரிட்டில் தேறியதால் பொறியியல் கிடைத்தது. காலணா வரதட்சணை வேண்டாம் என்று சுரேஷ் வரனும் வந்தது. கல்யாணமும் நடந்தது. நீயாகப் பெருமைக்கு ஆசைப்பட்டு உன் தோட்டைப் போட்டாய். அதற்கு இப்போ நீ ரூபாய் கேட்பது சரியில்லை. அப்போதைக்கு நானும் உனக்குப் பணம் கொடுப்பதாய்ச் சொன்னேன். நல்லவேளையாய் உன் லெட்டரை என் மாமியாரும் சுரேஷ¥ம் பார்க்கவில்லை. நானும் மறந்துவிட்டேன். பார்த்திருந்தால் எனக்கும் அவமானம். ஏன் உங்களுக்கும் கேவலமில்லையா?
என்னமோ அமெரிக்கா சொர்க்கபுரி என்கிறாயே. என் சம்பளம் அவருக்கு அதிகப்படி என்றும் எழுதியிருந்தே. இங்கே வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களும், போராட்டங்களும் உனக்குப் புரியுமா? பொழுது விடிந்து பொழுது போனால் ஒவ்வொரு கம்பெனியாய் ஆட்களைக் குறைத்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தினமும் கொட்டுகிற பனிப்பொழிவிலும் குளிரிலும் காரை ஒட்டிக் கொண்டு விபத்தில்லாமல் தப்பித்து வேலைக்குப் போக வேண்டியிருக்கு. திடீர்னு ப்ராஜக்ட் முடிந்து விட்டால் மாசக்கணக்கில் வீட்டில் உட்கார்ந்து வேலை தேடிக் கொண்டு திண்டாடுகிறோம். ஒருமுறை இந்தியாவுக்கு வந்தால் லட்ச ரூபாய் காலி. இந்த அழகில் தோட்டுக்கு நீ பணம் கேட்பது எனக்குச் சொல்ல முடியாத அவமானமும், கஷ்டமுமாக இருக்கு. வேறு விஷயமில்லை. இனிமேல் இந்த மாதிரி லெட்டர் எழுதாதே.
இப்படிக்கு சுமதி |
|
எழுதி முடித்து அஞ்சல் பெட்டியில் வைத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.
ஒருவாரம் சென்றது. மீண்டும் அப்பா கைப்பட ஒரு லெட்டர். "இது ஏதடா அப்பாவும் அம்மாவுடன் சேர்ந்து பணம் அனுப்பச் சொல்கிறார் போல இருக்கு..." என்று மனதில் சிறிது வெறுப்புடனே லெட்டரைப் பிரித்தாள்.
அன்புள்ள சுமதி,
ஆசிகள். உன் லெட்டர் வந்த அன்றைக்கு வீடே சுனாமி வந்த மாதிரி ரகளையாகிவிட்டது. உன் அம்மா ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்து ருத்ர தாண்டவம் ஆடினாள். சபாஷ் சுமதி. நீ என்னுடைய மகள் என்பதை நிரூபித்துவிட்டாய். எனக்கு மிகவும் பெருமையாய் இருக்கிறது. பெண்ணைக் கொடுத்த வீட்டில் பிறந்த வீட்டார் பணம் வாங்கிக் கொள்வது மகா கேவலம். உன் அம்மா மனதில் கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாதவள். உன் அண்ணி, அவளுக்கும் பாங்கில் நல்ல வேலைதானே, அவளுடைய அப்பாவிற்கு பைபாஸ் ஆபரேஷன் என்றவுடன் பண உதவி செய்ய ஆசைப்பட்டாள். உடனே உன் அம்மா எப்படி நடந்து கொண்டாள்? பைசா கொடுக்கக்கூடாது. இங்கே வீட்டில் ஏகப்பட்ட செலவு இருக்கு என்று கூச்சல் போட்டு அண்ணியை ஒரே அடக்காக அடக்கிவிட்டாள். மனதில் துளியும் பச்சாதபம், ஈவு, இரக்கம் இல்லை. உன் லெட்டர் வந்தவுடன் நானும் அதை ஞாபகப்படுத்தி நன்றாகப் பேசித் திட்டித் தீர்த்துவிட்டேன். அம்மாவின் முகத்தை நீ பார்த்திருக்க வேண்டும். நீ எழுதியதே அவளுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். நீ உன் பிறந்த வீட்டின் கெளரவத்தை காப்பாற்றிவிட்டாய். என் வாழ்த்துகள்.
இப்படிக்கு உன் அன்புள்ள அப்பா
கடிதத்தை படித்து முடித்த சுமதியின் மனம் பெருமையால் விம்மியது.
தங்கம் ராமசாமி |
|
|
More
பரிசு
|
|
|
|
|
|
|