Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கவிஞர், எழுத்தாளர் ஆத்மார்த்தி
- அரவிந்த்|செப்டம்பர் 2021|
Share:
கவித்துவமான வசீகர மொழிக்குச் சொந்தக்காரர் ஆத்மார்த்தி. கவிதை, கதை, கட்டுரை, நாவல், நூல் விமர்சனம், திரைப்படம் என இலக்கியம், கலை சார்ந்த அனைத்துக் கிளைகளிலும் தனது சிறகை விரித்திருப்பவர். ஈரோடு தமிழன்பன் விருது, வளரும் கலைஞர்-எழுத்தாளருக்கான மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நகைச்சுவை மன்ற விருது உள்பட பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்றவர். வதனம் பதிப்பகம் மற்றும் வதனம் இலக்கிய அமைப்பு மூலம் பல இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார். கல்லூரிகளில் காட்சி ஊடகத் துறை, தமிழ்த்துறை உள்ளிட்ட பல துறை மாணவர்களுக்கு எழுத்து, சுயமுன்னேற்றம், ரசனை, வாசிப்பு, திரைக்கதை உள்பட பல தலைப்புகளில் உரைகள், பட்டறைகள், பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதோ, ஆத்மார்த்தி பேசுகிறார்...

★★★★★


கே: இலக்கிய ஆர்வத்துக்கான விதை விழுந்தது எப்போது? எப்படி?
ப: ஏழு வயதிலிருந்து வாசிக்கிறேன். வாசிப்பு அடுத்தடுத்த ஜன்னல்களை, வாசல்களைத் திறந்துகொண்டேதான் இருக்கும். சுஜாதா தன்னை மட்டுமன்றி ஒரு பெரிய எழுத்துக் கூட்டத்தையே தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தார். அவர்களிலிருந்து எனக்கான பிரியத்தின் பட்டியல் தயாராகத் தொடங்கியது. வெகுஜன எழுத்தின் ராஜராஜனாகவே திகழ்ந்த சுஜாதா, தீவிரச் சிற்றிலக்கிய இதழ்களின்பால் பெரும்பான்மை வாசக சமூகத்தின் கவனத்தை மடைமாற்றியது மாபெரும் வினோதம். முதல் குவளை மதுதான் கசக்கும் என்பார்கள். நடுங்கும் கரத்தை இன்னொன்றால் இறுகப் பற்றியபடி, மதுக்கடை திறப்பதற்காக வாசலில் முன்பே வந்து காத்திருப்பவனைக்கூட அந்த முதல் மிடறு மதுதான் உற்பத்தி செய்கிறது இல்லையா? சிறு பத்திரிக்கைகளின் வாசிப்பு, குளிர்கால வெம்மைபோல இணக்கமானதல்ல. மாறாக, அது ஒரு குறளியின் வசியத்துக்கு ஆட்பட்டுக்கொண்டே இருக்கிற பிணையாளியின் கண்வெறித்தல். இப்போதுதான் ஆரம்பித்தாற்போல் இருக்கிறது, புத்தகங்களைப் பிழிந்து பிழிந்து, காகிதச் சாற்றை அருந்துவதற்கு ஈடாக இத்தனை வருடங்கள் கால அவதியானது தெரியவே இல்லை. இப்படித்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, இலக்கியத்துக்கு ஒப்புக்கொடுத்தபடி கொடுத்த ஒப்புக்கு ஈடான வாழ்தல்.கே: அச்சில் வந்த முதல் படைப்பு பற்றி...
ப: முதன்முதலில் ஒரு வாசகர் கடிதம் எழுதி, அதனைப் பிரசுரத்தில் பார்த்தபோது அத்தனை சந்தோஷம் ஏற்பட்டது அப்போது எனக்கு வயது 14. தொடர்ந்து 'சூப்பர் நாவல்' இதழில் 'மாமியாருக்கு ஒரு மிரட்டல் கடிதம்' என்ற போட்டியில் பங்கேற்று 50 ரூபாய் பரிசு வாங்கினேன். அதெல்லாம் எழுத்தாளக் கணக்கில் வராது. 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் கீற்று இணைய இதழில் எனது முதல் கவிதை 'நிசப்தங்களின் காகிதப்ரதிகள்' வெளிவந்தது. அதே வருடம் ஏப்ரல் மாத உயிரெழுத்து இதழ், இரண்டு பக்கங்களில் என்னுடைய ஐந்து கவிதைகளைத் தாங்கி வெளிவந்தது. 'ஆத்மார்த்தி' என்கிற பெயரை முதன்முதலில் அச்சில் பார்த்தது ஒரு வினோதமான பரவசம்தான். தூக்கக் கலக்கத்தில் யாரோ உதட்டில் தேனைத் தடவி, அதன் மூலமாக உறக்கம் கலைந்து எழுந்தாற்போல் அத்தனை பெரிய இனிப்புத் தருணம். முதல் கவிதை, முதல் தொடர், முதல் சிறுகதை எனப் பல முதல்-முதல்-முதல் சந்தோஷங்கள் இருந்துகொண்டும், வந்துகொண்டும், தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

கே: ரவிஷங்கர், ஆத்மார்த்தி ஆனது ஏன்?
ப: புனைபெயர்கள் குறித்துச் சிறியதோர் ஆய்வை மேற்கொண்டதாக ஞாபகம். 'காயத்ரி' எனும் பெயரில் ஒரு நோட்டு நிறையக் கவிதைகள் எழுதி வைத்திருந்தேன். பாரதியின் மீதுள்ள பிரியத்தில் பெயருக்குப் பின்னால் 'பாரதி' என வருகிறாற் போல் பல பெயர்களை எனக்கு நானே சூட்டியும் உதிர்த்தும் மகிழ்ந்திருக்கிறேன். 'சுஜாதா' என்கிற பெயரை எத்தனையோ வியந்து அவர்போலவே நானும் அதுபோலவே ஒரு பெயர் தேடி நெடுநாள் காத்திருந்தேன். 'ஆனந்தம்' எனும் சொல்லை ஆனந்தனும் ஆனந்தியுமாகப் பகிர்ந்துகொள்கிறாற் போல், 'ஆத்மார்த்தம்' எனும் சொல் ஆத்மார்த்தன், ஆத்மார்த்தி எனப் பகுபடும்தானே. இரண்டாயிரத்தின் ஆரம்பங்களில் ரமேஷ் - ப்ரேம் எழுதிய 'அதீதனின் இதிகாசம்' மற்றும் 'சொல் என்றொரு சொல்' என்னும் இரு புதினங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயர் 'ஆத்மார்த்தி.' தானியம் தேடி அலையும் பறவை ஒன்று, அகப்பட்டதும் சட்டென்று கொத்திக்கொள்வதைப் போலவே அந்தப் பெயரை அடைந்தேன்.

ஆத்மார்த்தியின் முதல் கவிதை

நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
உன் ஆரம்ப வருகைகள்
எனக்களித்த பரவசங்களை.

பாலைவனத்தில் முன்னிழுக்கும்
காலடித் தடங்களாய்
மெல்ல ஊடுருவின சம்பவங்கள்.

இறுக்கமாகிப் போன
ஸ்னேகிதத்துக்காக நாம்
ஒருவருக்கொருவர் நன்றி பகின்றோம்.

கால காலத்துக்கும்
நீடிக்கப் போகும்
சாஸ்வதங்களில் ஒன்றாக
அடையாளப்படுத்தப்பட்டோம்.

காற்றுக்குமிழி ஒன்றை தாங்கவியலாத
ஊழித்தீயாய்
முடிந்தேறியது சகலமும்.

அமானுஷ்யமாய்
எனது அறையின் தற்போதைய
நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்
தொலைந்து போயின.

நீ வேறெங்கேனும் துவங்கியிருக்கக் கூடும்
உனது ஆரம்ப வருகைகளின்
பரவசங்களை.


ஆத்மார்த்தி


கே: கவிதை மீதான உங்கள் தனிப்பட்ட ஆர்வத்துக்கு என்ன காரணம்?
ப: வாழ்வு இசையாலாகிறது. தாலாட்டுத் தொடங்கி எதில்தான் இசை இல்லை? மொழி, இசையை அடைவதற்கான பாலமாகிறது. என் ஊர் மதுரை. உடம்பு சரியில்லை, ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்பதைக்கூட 'உடம்பெல்லாம் நோவு, வேணும் ஒருநா லீவு' என்று ரிதமிக்காகப் பேசிப் பழகுகிற மனிதர்கள். பதின்ம வயதில் பாரதி பற்றவைத்தது ஒரு சிறு நெருப்பு என்றபோதும் அது ஒரு திரு நெருப்பாக மாறியது. மனப்பாடப் பகுதிப் பாடல்கள், 'இது மாதிரி நாமும் எழுதிப்பார்த்தால் என்ன?' என்கிற ஆசையை ஏற்படுத்தின. சுஜாதா பல கவிஞர்களைத் தன் எழுத்தினூடே அறிமுகம் செய்துகொண்டே இருந்தார். அவர்களில் ஆத்மாநாம் பேய் பிடித்தாற்போல் சிறு சன்னத ஆதிக்கத்தைத் தன் கவிதைகளின் வழியே நிகழ்த்தலானார். பிற எழுத்து வடிவங்களுக்கும் கவிதைக்கும் இடையே நிலவிய ஒரு முக்கிய வேறுபாடு - கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நாவல் எவையாகினும் ஒரு திறந்த சவாலாக வாசகனோடு உறவாடுபவை. ஆனால், கவிதையென்பது மட்டும் மூடிய சவால். இப்படிச் சொல்லலாம், கவிதையை அணுகுவதே ஒரு சவால்தான். அது என்னைத் தன்பால் ஈர்த்து உள்ளிழுத்துக்கொண்டது.கே: ஒரு கவிதையை நீங்கள் எப்படி வரையறை செய்கிறீர்கள்?
ப: கவிதை மொழியின் உச்சம். சரி ஏதுமற்ற பிழை. பார்த்ததும் கண்ணைப் பறிக்கிற மேலுதட்டுக்கு மேல் இருக்கும் சற்றே அளவில் பெரிய மச்சம் போலத்தான், எது அழகோ அதுவே ஒச்சமும். அன்பின் நிழலடி, தீரா வெறுப்பு ஒன்றின் எதற்கும் இயலாத இருத்தல் போன்றது கவிதை. கிடைத்தவர்க்குச் சாபம், கிடைக்காதவர்க்கு ஏக்கம். கவிதை, மொழியில் நிகழவல்ல மிகச் சமீபமான வளர்சிதை மாற்றம். பைத்திய ப்ரியம்.
கவிதை என்பது உணரத் தருவது. ஒரு நல்ல கவிதை ஆழ்ந்த உறக்கம் தரும், அல்லது முற்றிலுமாக உறக்கத்தைக் கலைத்து விழிக்கவும் வைக்கும்.

கே: தொழில் முனைவோராக இருந்த நீங்கள் முழுநேர எழுத்தாளர் என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
ப: மனத்தில் ஏற்றிய தீபமாக, கலை மீதான ஆர்வம் சுடர்ந்துகொண்டே இருந்தது. புதிய ஆடையை வாங்கப் போகும்போது ஒவ்வொன்றாய் அணிந்து பார்த்து 'இது இல்லை இது இல்லை' என்று களைந்து, தனக்கான ஒன்றைத் தேடி, அது கிடைக்கும்வரை அமைதியற்றுப் போகும் அதே ஊசலாட்டத்துடன்தான் அமைதியற்று, தொழிலில் ஈடுபட நேர்ந்தது. எது விருப்பமோ அதுவே விடுதலை என்கிற பொருளின்படி, கலையின் தலைவாயிலென எழுத்தைப் பற்றிக்கொள்ள நேர்ந்தது.

கே: தமிழ் இலக்கியச் சூழலில் முழுநேர எழுத்தாளராக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அதன் சாதக, பாதகங்களாக எதைச் சொல்வீர்கள்?
ப: சாதகம் என்றால் வேறு எந்தக் கவனக் கலைதலும் இல்லாமல் எழுத்தில் ஒருமித்து ஈடுபட முடிகிறது. பாதகம் என்பது பொருள் சிக்கல், மனத்தடை, பாதுகாப்பின்மை போன்றவை.கே: எழுத்து என்பது பயிற்சியில் கைவருமா அல்லது கற்றுக்கொண்டு புனைவை எழுதமுடியுமா?
ப: இதற்கு நிச்சயமாக முடியும், முடியவே முடியாது என்று இரண்டு பதில்கள். நீங்கள் இடது பக்கம் திரும்பினால் ஒரு நகரத்தை அடைவீர்கள், வலதுபுறம் இன்னொன்று. இதே நியதிதான். விடாமுயற்சி, தன்முனைப்பு, வெறி போன்றவை ஒருவனைத் தூங்கவிடாது. எழுத்தும் நிச்சயமாக முயன்றால் முடியாத ஒன்று அல்ல. என்றபோதும், எழுத்தென்பதும் வானோர் வரமே. என் எழுத்தை நீங்கள் எழுத முடியாதல்லவா?

கே: உண்மைதான். உங்களைக் கவர்ந்த சமகால மற்றும் முன்னோடிப் படைப்பாளுமைகள் யார், யார்?
ப: வள்ளுவன் பாரதி தொடங்கி, கண்ணதாசன் வாலி வரை; பா.ராகவன், ஆத்மாநாம், பசுவய்யா, பிரமிள், ஞானக்கூத்தன், ஷண்முக சுப்பையா, ரமேஷ் வைத்யா, ரவி சுப்பிரமண்யன், மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி, கலாப்ரியா என என் முன்னோடிக் கவிஞர்களைச் சொல்வதற்கு ப்ரியம் எனக்கு. ஜி. மீனாக்ஷி, சுகந்தி சுப்ரமண்யம், செல்வி, சிவரமணி, குட்டி ரேவதி, சுகிர்தராணி - இவர்கள் நான் வாசித்துப் பிரமித்த கவிஞர்கள். வசுமித்ர, இளங்கோ கிருஷ்ணன், யவனிகா ஸ்ரீராம், கண்டராதித்தன், இசை, வெய்யில் தொடங்கி தாமரை பாரதி, சவீதா வரை என் சமகாலக் கவிஞர்கள் பலரது எழுத்தையும் தேடிப் படிப்பவன் நான்.

ஆற்றுப்படுத்தும் ஆசிரியர்கள்
எனக்கு ஒரே அக்கா உமா. மன்னர் கல்லூரியில் கணிதவியல் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். அன்றைக்கு செமஸ்டர் பரீட்சை. பேருந்துகள் ஏதோவொரு சாதிக்கலவர புண்ணியத்தில் திடீரென்று ஓடாமற் போயின. பள்ளியில் ஸ்டடியில் இருக்கும் என்னைச் சந்தித்து என் சைக்கிளில் தன்னைக் கல்லூரிக்குக் கொண்டு விடச் சொல்லலாம் என, நடந்தே பள்ளி வாசலில் வந்தவளை எதிரே பார்த்த நடனகுருநாதன் சார் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் கல்லூரியில் விட்டிருக்கிறார். அதற்குள் தாமதமாகிவிட்டது. 10.30க்குள் வந்தால்தான் அனுமதிக்க இயலும் என்று சொன்ன தேர்வுக் கண்காணிப்பாளரிடம் பேருந்துகள் ஓடாமல் திடீர் ஸ்ட்ரைக் ஆன விஷயத்தைப் புரியவைத்து என் அக்காவை மட்டுமின்றி அன்றைக்கு எவ்வளவு தாமதமாக மாணவர்கள் வந்தாலும் தேர்வெழுத அனுமதிக்கச் சொல்லி வேண்டிவிட்டு அதன் பின் பள்ளிக்குத் திரும்பியிருக்கிறார்.

இதையெல்லாம் அன்றிரவு என்னிடம் உமா சொல்லக் கேட்ட நான் நெகிழ்ந்தேன். மறுநாள் நடனகுருநாதன் சாரிடம் "ரொம்ப ரொம்ப நன்றி சார்.." என்றேன். என்னிடம் சிரித்துக்கொண்டே "அதுவும் என் மகதானேடே! பாவம் முளிச்சிட்டு நிக்குது. சும்மா விட்ற முடியுமாடே...? அதும் தவிர... உன்னைய அவகூட அனுப்பிச்சா உன் ஸ்டடி ஒரு மணி நேரம் பாளாகுமில்ல? விடுவேனா நானு...?" என்று கண் சிமிட்டினார்.

ஆசிரியப்பணி உயர்ந்தது, ஆசிரியர்கள் புனிதர்கள் என்று இவ்வுலகில் பலரும் பலமுறை எழுதியதுதான். எனினும், ஆசிரியன் தன் பணிக்காலம் முழுவதும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரின் மனங்களை ஆற்றுப் படுத்துகிறான். ஆயத்த காலத்தின் மேய்ப்பர்களாகக் கிடைக்கிற ஆசிரியர்களைப் பொறுத்தே ஒருவனின் வாழ்வுயரங்கள் இருக்கின்றன. நல்லாசிரியர்களால் ஆனது இவ்வுலகு. இதை இல்லை என மறுக்கிறவர்கள் கல்லாததன் பேர்தான் கல்வி.

(ஆத்மார்த்தி, மனக்குகைச் சித்திரங்கள், எழுத்துப் பிரசுரம் வெளியீடு)


சுஜாதா, பாலகுமாரன், கோணங்கி, பா. வெங்கடேசன், சு. வெங்கடேசன், இந்திரா பார்த்தசாரதி, சம்பத், ஜி. நாகராஜன், நகுலன், எஸ். செந்தில்குமார் எனப் பலரது படைப்புக்கள் என்னைச் சிலிர்க்க வைத்தவை. சரவணன் சந்திரன், மனுஷி பாரதி, மயிலன் ஜி. சின்னப்பன், ஜீவகரிகாலன், அதீதன், கடங்கநேரியான், தென்றல் சிவக்குமார், லதா அருணாச்சலம், காயத்ரி, ராம்ஜீ நரசிம்மன், வேல் கண்ணன், கணேச குமாரன், யஷோ, பாலமுரளி, அஹிலா ஸ்ரீதர், அகரமுதல்வன், தீபா நாகராணி, அனுசுயா, அபி, கார்த்திகைப் பாண்டியன், சசிகலா பாபு, விஜய் மகேந்திரன், நவீனா அமரன், சரஸ்வதி காயத்ரி, இளங்கோவன் முத்தய்யா, பி.ஜி. சரவணன், உமா ஷக்தி, திலகபாமா, கஸ்தூரி சுமதி, கணேஷ் பாலா போன்ற சினேகிதர்களின் எழுத்துக்களை விரும்பித் தொடர்கிறேன்.

வெ. இறையன்பு அவர்களது எழுத்துக்களின் முதல் வாசகனாகப் பதின்மகாலம் தொட்டு இன்றுவரை இருந்துகொண்டிருப்பது பெருமித நிஜம். படக்கதைகள் மேல் தீராப்ரியம் உண்டு. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா தொடங்கி, கலாதர், இந்திரா சௌந்தரராஜன் வரை பலரும் ரசிக்க வைப்பவர்கள். வைரமுத்து, பழனிபாரதி, நா. முத்துக்குமார், தாமரை, கபிலன், மதன் கார்க்கி, சினேகன், கார்த்திக் நேத்தா எனப் பலரது திரைப்பா தமிழும் குன்றாது குறையாது தொடரும் ரசனை நதி.

சொல்லிக்கொண்டே போகலாம், பிடித்தமான பெயர்களைப் பட்டியல் இடுவதென்பது பெயர்களின் நூலகம் ஒன்றைத் தொடங்குவதற்குச் சமமானதே!கே: உங்கள் படைப்பிற்கான மறக்கமுடியாத பாராட்டு/விமர்சனம் என்று எதைச் சொல்வீர்கள்?
ப: எந்தவொரு பாராட்டுமே மறக்க முடியாதது தானே? சின்ன மீனுக்கும் பெரியதற்கும் ஒரே கடல்தானே இருக்கிறது? இருந்தாலும் எனது 'தென்னம்பாளை' சிறுகதையை வாசித்துவிட்டு சாருநிவேதிதா எனது நூல்வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பாராட்டியது மறக்க முடியாதவற்றில் சேரத்தக்கது. 'அதனினும் இனிது' என்கிற எனதொரு நூல் வெளியீட்டில் தலைமை தாங்கி என் எழுத்தைக் குறித்த பகுப்பாய்வாகவே தனது தலைமை உரையை நல்கினார் முதுமுனைவர் எழுத்தாளர் வெ. இறையன்பு அவர்கள். அந்த உரையினூடே நான் பெற்ற உந்துதல் எனக்கு மேலும் நகர்வதற்கான பேரொளியைப் பாய்ச்சியது.

'மிட்டாய் பசி' நாவலைப் படித்துவிட்டு முன்னோடி எழுத்தாளர்கள் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், முருகேசபாண்டியன், இரா. முருகன் ஆகியோர் அளித்த விரிவான பார்வைகள் மறக்க முடியாதவை. எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரை 'மிட்டாய் பசி' நூலுக்கான சிறப்பான மறுவினையை நல்குவதாயிருந்தது.

எனக்கு அணுக்கமான நண்பர்கள் பலரும், நுட்பமான வாசகர்களாகவும் திகழ்வது கொடுப்பினை. அந்த வகையில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எல்லாவற்றுக்காகவும் தனித்தனி வகைமையிலான அன்பர்கள் பலரும் தொடர்ந்து மறுவினை அளிப்பது, எழுத்துக்கான நிறைமகிழ்தலை நேர்த்தி விடுகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் நான் எழுதியவற்றில் 'பீஹாரி', 'கம்பெனி அதிகாரி' போன்ற கதைகளைப் பற்றிய பரவலான தெளிந்த பார்வைகளை அவ்வப்போது கேட்க வாய்க்கிறது. எழுதுபவனுக்குத் தேவையான இடுபொருள் என்பது சிறந்த பாராட்டுக்களாலும் திறந்த விமர்சனங்களாலும் ஏற்படுகிறவைதான் இல்லையா?

ஆத்மார்த்தியின் படைப்புகள்
பிறந்தது 1977. சொந்த ஊர் மதுரை. படிப்பு இளங்கலை வணிகவியல். 2011ல் எழுத்துப் பயணம் ஆரம்பம். ஆனந்தவிகடனில் எழுதிய 'நட்பாட்டம்' முதல் தொடர். புதிய தலைமுறை இதழில் 'மனக்குகை சித்திரங்கள்', 'ஞாபக நதி', 'நிஜம் நிழல் ஆகிறது'; பாக்யாவில் 'வரலாற்றில் வினோதங்கள்'; கல்கியில் 'கடைசி பக்கம்'; தினத்தந்தியில் 'மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள்'; உயிர்மை இதழில் 'கவிதையின் முகங்கள்' - இவை இவரது குறிப்பிடத்தகுந்த தொடர்கள். தமிழின் முன்னணி இதழ்களில், இதுவரை சுமார் 80 சிறுகதைகள் வெளியாகி உள்ளன. இணையதளங்களிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இதுவரை 30 புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

கவிதை நூல்கள்: தனிமையின் நீட்சியில் ஒரு நகரம், 108 காதல் கவிதைகள், நட்பாட்டம், கனவின் உபநடிகன், விளையாடற் காலம், அவர்கள், பொய்யாய் பறத்தல்
சிறுகதைத் தொகுதிகள்: ஆடாத நடனம், சேராக் காதலில் சேர வந்தவன், குலேபகாவலி, அப்பாவின் பாஸ்வேர்ட், அதிகாரி, டயமண்ட் ராணி
குறுநாவல் தொகுதி: பீஹாரி
நாவல்: ஏந்திழை, மிட்டாய் பசி
கட்டுரைத் தொகுதிகள்: புலன் மயக்கம் (நான்கு பாகங்கள்), வனமெல்லாம் செண்பகப்பூ, தூவானத் தூறல், மனக்குகை சித்திரங்கள், ஞாபக நதி, தீராக்கடல், பூர்வநிலப்பறவை, பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள், எழுதிச் செல்லும் கரங்கள், அதனினும் இனிது, வாழ்தல் இனிது


கே: 'வதனம்' இலக்கிய அமைப்பு மூலம் நீங்கள் செய்துவரும் பணிகள் பற்றி...
ப: 'ஆத்மார்த்தி' என்கிற பெயருக்கு அடுத்தாற்போல் எழுத்தியக்கத்தில் மிகுந்த ஈர்ப்புக்குரிய அடுத்த பெயர் வதனம். நூல் அறிமுக, விமர்சனக் கூட்டங்களை நடத்துவதில் நானும் நண்பர்களுமாய் ஆரம்பித்தது, வதனத்தின் இலக்கிய நடை. மனுஷ்யபுத்திரன் எழுத்து வாழ்வின் முப்பதாம் ஆண்டுக் கொண்டாட்டம், எஸ். ராமகிருஷ்ணன் ஐம்பதாம் அகவை, லக்ஷ்மி சரவணக்குமார் யுவபுரஸ்கார் விருது பெற்ற தருணம், வெ. இறையன்பு 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்கிற நூலின் அறிமுகம் எனப் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை மதுரையிலும் சென்னையிலும் நடத்தி இருப்பது வதனத்தின் சிறப்பு.

கே: உங்கள் திரைப்பட, குறும்பட முயற்சிகள் பற்றி?
ப: திரைப்படத் துறையில் பலரும் நண்பர்களாக இருக்கிறார்கள். சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படத்தில் ஆத்மார்த்தியாகவே cameo பாத்திரத்தில் தோன்றியிருக்கிறேன். தொடர்ந்து, திரைப்படத்துக்காக எழுதுவது குறித்துப் பேசுவதுண்டு. விரைவில் அது நிகழும்.கே: கல்லூரி மாணவர்களுக்கு எழுத்து, திரைக்கதை, சுயமுன்னேற்றப் பயிற்சி அளித்து வருகிறீர்கள். இன்றைக்கு அவர்களது இலக்கிய ஆர்வம், ஈடுபாடு எந்த அளவிற்கு இருக்கிறது?
ப: காலம் தன்னைப் புனரமைக்கிற சாக்கில் யாவற்றையும் மறுசீரமைக்கும் என்னும் விதிக்கேற்ப இலக்கிய ஆர்வம் குறைந்துவிட்டிருக்கிறது என்பது வெறும் மேலோட்டம் அல்லது புறத் தோற்றம். உள்ளார்ந்தால், ஆழமான கேள்விகளில் தொடங்கி, அயரடிக்கிற அபிப்பிராயங்கள் வரை தீர்க்கமான கருத்தாக்கங்களில் தொட்டெடுத்து, புத்தம்புதிய கண்டடைதல்கள் வரை புதியவர்கள், குறிப்பாகக் கல்லூரிப் பருவத்தில் இருந்து வாசிப்பும் எழுத்துமாய் எழுந்துவரும் இளையோர்கள், நிச்சயமாக நிகழ்காலப் படகில் நீந்தி எதிர்காலக் கரையைச் சென்றடைகிற ஒளிமிகுந்த விழிகளோடு உலவுகிறார்கள் என்பதே ஆழ சத்தியம்.

கே: உங்கள் இலக்கியப் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள், ஊக்குவிப்பவர்கள் பற்றிச் சில வார்த்தைகள்
ப: எந்த ஒரு கனவும் தனி ஒருவனின் சொத்து அல்ல. குறைந்தபட்சம் தன் கனவைச் சொல்லிக்கொள்வதற்காவது சகமானுடத்தை நாடித்தான் தீரவேண்டும். என் முன்னோடி எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத் துறையினர், பதிப்பகத்தார், வாசகர்கள், புதிய மற்றும் பழைய புத்தகங்களை விற்பவர்கள்வரை பலரும் சேர்ந்து பற்றுவதுதான் எழுத்தென்னும் கனவுத் தேர் வலம். இன்னும் முக்கியமாக நண்பர்களும், உறவினர்களும், குடும்பத்தாரும் என எல்லோருமாகச் சேர்த்து, தோள் நிற்பதுதான் கொடுப்பினை. பெயர்களைச் சொல்லத் தொடங்கினால், ஏதேனும் ஓரிருவர் பெயர்களைச் சொல்வதானால் எளிது. ஒரு திறந்த காசோலையில் எண்ணற்ற பிரதிகளாய் என் அன்பைப் பூர்த்திசெய்துகொள்ள அதற்குரிய ஒவ்வொருவரும் அவரவர் பெயரை எழுதிக்கொள்ள வேண்டியதே நிஜம். நான் என்பது அத்தனை பேர்களின் ஒருமுகம்.

கே: உங்கள் குடும்பம் பற்றி?
ப: அம்மா மீனாக்ஷி, அப்பா பத்மநாபன் இருவரும் நினைவுகளாக நிரந்தரித்துவிட்டார்கள். எனக்கு ஒரு மூத்த சகோதரி, பெயர் உமா, கணவர் கிருஷ்ணா, குழந்தைகள் தருண், ஜனனி ஆகியோருடன் லண்டனில் வசிக்கிறார். என் மனைவி வனிதா, குழந்தைகள் ஷ்ரேயா, சஞ்சய் நிதின் எனச் சிறியதோர் குடும்பம். அதற்குரிய சவால்களுடனே இனிமையாக நகர்கிறது வாழ்க்கை.கே: இன்றைய இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?
ப: இன்றைய உலகம் எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கான பதிலுக்கு மாற்றாக ஒரு சின்னத் திகைப்பு உருவாகிறதல்லவா...? பெருந்தொற்றுக் காலத்தின் பிடியிலிருந்து உலகம் மீண்டும் முழுவதுமாக விடுபட்டு மீண்டெழும். எல்லாமே புத்தாக்கம் பெறும். அப்படியான புதிய காற்று இலக்கிய உலகத்திலும் வீசிப் புனரமைக்கும்.

கே: எது உங்களை எழுத வைக்கிறது, படைப்பாற்றலை உயிர்ப்போடு வைத்திருக்கிறது?
எழுத்தென்பது தவம் அல்லது வரம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் சம்மதமில்லை. என்னளவில் எழுத்தென்பது நம்பகம். உள்ளே இருந்து சதா ஒலிக்கத் தலைப்படுகிற குரலின் வடிவமாற்றம்தான் எழுத்து என நினைக்கிறேன். இருத்தலே எழுத்து என்றாகையில் உவத்தலும் காய்த்தலுமில்லை அன்றோ? படைப்பாற்றலை உயிர்ப்போடு வைத்திருப்பது எழுத்தின் மீதான பற்று. எழுத்தென்பது அதிகரித்துக்கொண்டே செல்லக்கூடிய பித்து. நான் என்பவனே என் எழுத்தின் நான்தான். வாழ்தல் இனிது.
உரையாடல்: அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline