|
|
|
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.
★★★★★
கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விற்பொருள் தயாரித்து, முதல் சில வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட்டேன். இந்நிலையில், ஒரு சூறாவளியோடு (tornado) ஒட்டிக்கொண்டால் வேகமாக வளர வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சூறாவளி வணிகச் சந்தையில் களேபரம் விளைவிக்குமே, அத்தோடு ஒட்டினால் நாம் சுக்கு நூறாகிவிட மாட்டோமா? எப்படி வேகமாக வளர வாய்ப்புக் கிட்டும்? சூறாவளியில் நானே மாட்டிக்கொண்டது போலத் தலை சுற்றுகிறது. சற்று விளக்குங்களேன்!
கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், நம் செயல்பாட்டுப் பரப்பில் சூறாவளி என்றால் வெகுவேகமாக வளரும் விற்பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகச்சந்தைகள் என்று அர்த்தம் கண்டோம். ஸிட்ரிக்ஸ் & ஆப்பிள் ஐபேட், paypal & E-Bay மற்றும் Zinga & Facebook போன்றவை சூறாவளி மேடையைச் சார்ந்து எப்படி அனுகூலம் தேடிக்கொண்டன என்பதைப் பார்த்தோம். அவ்வாறு அனுகூலம் பெற வேண்டுமானால் அந்தச் சூறாவளி மேடையின் பயனர்கள் பெரும்பாலோருக்கு மிகத் தேவையான அம்சம் ஒன்றை அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டோம். பிறகு, சூறாவளி மேடையின் பயனர்களுக்கு எவ்வாறு உங்கள் விற்பொருள் சென்றடைய முதல் வழிமுறையாக, அம்மேடையினரே உங்கள் விற்பொருளைத் தங்கள் பெயரில் விற்கக்கூடும் என்பதைப் பற்றியும், அதற்கான விளம்பரம் மற்றும் தேடல் வசதியளிப்பதையும் பற்றி விவரித்தோம்.
சென்ற பகுதியில், சூறாவளி மேடை சார்பில் உள்ள பிரதிகூலங்களைப் பற்றி விளக்க ஆரம்பித்தோம். முதலாவதாக வணிகச் சார்பு மிக அதிகமாக இருந்தால் ஸிங்காவுக்கு நேர்ந்ததைப்போல் மேடை உதவியை விலக்கிக் கொண்டால் நிலைமை மிக மோசமாகக் கூடும் என்றும், மேடையே உங்களோடு போட்டி போடவும் கூடும் என்றும் கண்டோம். இப்போது அத்தகைய பிரதிகூலங்களைச் சமாளித்து, மேடையைத் தொடர்ந்து சார்ந்து பலனடைய என்ன செய்யவேண்டும் என்பதைக் காண்போம்.
முதலாவதாக, விற்பனைக்கு ஒரே மேடையைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அம்மேடை மூலம் மட்டுமல்லாமல், மற்ற பல கூட்டாளிகளைச் சார்ந்து விற்க முயல வேண்டும்.
அவ்வாறு தயார்செய்து கொண்டால், மேடை வணிக அழுத்தமளித்தால் அல்லது தாங்களே உங்கள் பொருளைப் போன்ற அம்சங்களை அளிக்க ஆரம்பித்தால், சற்று பிரதிகூலமானாலும் சமாளித்துக்கொள்ள இயலும்.
உதாரணமாக, மேகக்கணினி மேடைக்குப் பல்வேறு மேகக்கணினிகளின் வாடிக்கையாளர்களுக்கும் அந்தந்த மேகக்கணினியின் வணிகச்சந்தை மூலமாக விற்கலாம். மேலும் மேகக்கணினிக்குப் பெருநிறுவனங்களின் மென்பொருட்களை மேலேற்றி இயக்கும் அக்ஸென்ச்சர் போன்ற அமைப்பு ஒருங்கிணைப்பு (systems integration) நிறுவனங்கள், சுதந்திர ஆலோசக நிபுணர்கள் (independent consulting experts) போன்றவர்கள் மூலம் விற்கலாம். மேலும் ஒரே வாடிக்கையாளர் பல மேகக்கணினிகளின் மென்பொருள் இயக்குவதற்காக ஒருங்கிணைக்கும் அம்சங்களை அளிக்கலாம். |
|
ஒரு மேடையில் ஒரே மாதிரிப் பலனளிக்கக் கூடிய மென்பொருட்கள் அல்லது சேவைகள் இருக்கக்கூடும் என்பதால், பிரதிகூலத்தைச் சமாளிக்க இன்னொரு வழியும் உள்ளது. அதாவது, உங்கள் விற்பொருள் அல்லது சேவை வாடிக்கையாளர்களின் அதிகமான விருப்பத்தைப் பெற்றதாக இருக்கவேண்டும்.
உங்கள் விற்பொருளை முதலில் மேடையைச் சார்ந்து விற்க ஆரம்பிக்கும்போது போட்டியாளர்கள் இருப்பார்கள். அவர்களின் விற்பொருளைவிட உங்கள் விற்பொருள் ஏதாவது சில அம்சங்களில் சிறப்புடையாக இருந்தால்தானே வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவார்கள்? அப்படியானால் அதே முறையில் மேடையே அளிக்கும் விற்பொருளைவிடவும் உங்கள் விற்பொருள் சில அம்சங்களில் சிறப்புடையதாக இருக்கலாம் அல்லவா?
அதனால், மேடையைச் சார்ந்து செயல்பட ஆரம்பிக்கும்போதே மேடையோடு போட்டி வரக்கூடும் என்பதை உணர்ந்து உங்கள் மென்பொருளின் பயன் அம்சங்கள் (feature functions), பயன்படுத்துவதில் எளிமை, பல மேடை ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேம்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். உங்கள் புத்தாக்க (innovation) வேகம் குறைந்தால் மற்ற போட்டியாளர்களும் மேடையின் சொந்த விற்பொருட்களும் உங்களைப் பெரிதும் பாதிக்கக்கூடும்.
என்ன செய்தாலும் காலம் போகப் போக, உங்கள் விற்பொருளின் அம்சங்களில் ஓரளவு பொதுப்பண்டமாக்கலால் (commoditization) பாதிக்கப்பட்டே தீரும் என்பதை உறுதியாக உணர்ந்து தீவிரமாக புத்தாக்கத் திறனுடன் செயல்பட்டு உங்கள் விற்பொருளின் பலன்களை அதிகரிப்பதாலும், உங்கள் வித்தியாசமான சிறப்பம்சங்களின் மதிப்பை அதிகரிப்பதாலும், விற்பனையும் தொடரும்; விலையும் பெரிதளவில் சரியாது.
உங்களை மேடைப் போட்டியிலிருந்து காத்துக்கொள்ள மற்றொரு யுக்தி உள்ளது: ஒரு குறிப்பிட்ட மேடையை மட்டும் சாராமல், அந்த மேடை எந்த இன்னும் பொதுவான போக்கைச் சார்ந்துள்ளதோ அந்தப் போக்கையே மேடையாகச் சார்ந்து செயல்படுவதே அது. உதாரணமாக அமேஸான் மேகக்கணினியை மட்டும் சார்ந்திராமல், பொதுவாக மேகக்கணினியில் செயல்படுவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வது, அல்லது பல மேகக்கணினிகளைப் பயன்படுத்துவதை எளிதாக்குவது போன்றவற்றைச் செய்யலாம். இன்னொரு உதாரணம் தரவுத்தளத் துறை (database). ஆரக்கிள் அல்லது மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களின் தரவுத்தளத்தை மட்டும் சார்ந்து செயல்படாமல் பொதுவாக எந்தத் தரவுத்தளத்துக்கும் பயன்படுவதாக இருக்கும் விற்பொருள் அல்லது சேவையை அளிக்கலாம். அவ்வாறு பொதுப்படுத்தினால் ஒரு மேடை போட்டியிடுவதால் மட்டும் உங்கள் நிறுவனம் பெருமளவில் பாதிக்கப்படாது. சமாளித்துக்கொண்டு மேல்முயற்சி எடுக்கலாம்.
இக்கட்டுரையில் சூறாவளி மேடை என்றால் என்ன, அத்தகைய மேடையைச் சார்ந்து செயல்பட்டு அனுகூலமடைவது எப்படி, அவ்வாறு செயல்படுவதில் உள்ள பிரதிகூலங்களை எவ்வாறு தவிர்ப்பது அல்லது சமாளிப்பது என்பதைக் கண்டோம். அடுத்த இதழில், மற்றொரு ஆரம்பநிலை யுக்தியை விளக்குவோம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|