|
|
|
வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைபிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? 'கூனிகெழவி'தான் இப்ப அவ பேர்.
மொத மொதல்ல தனக்கு வெள்ள முடி வரும்போது கூட முத்துலட்சுமிக்கு மனசுல கிலேசம் இருந்தது கிடையாது. ஆனா, 'ஏ கெழவி'ன்னு பிள்ளைங்க கூப்பிட ஆரம்பிச்சதும் தான், முத்துலட்சுமிக்கு மனசுக்குள் கிலி பிடித்த மாதிரி இருந்தது.
சின்னப்பிள்ளையில, கூடப்படிக்கிற பிள்ளைங்க யாராவது 'முத்து'ன்னு சுருக்கமா கூப்பிட்டாலே அப்பாவுக்குப் பிடிக்காது 'அதென்ன பேர் வைக்கறது ஒண்ணு, கூப்பிட்றது ஒண்ணு'ன்னு கோபப்படுவார்.
'முத்துலட்சுமி'ன்னு பளிச்சின்னு கூப்பிடுவார்.
'நெனச்சா செத்துப் போறதுக்கு என்ன வழி'ன்னு தெரியல. அந்தக் காலத்துல சீராட்டியும், பாராட்டியும் வாழ்ந்ததெல்லாம், இன்னிக்கு இந்தத் துண்டு, துக்கடா பசங்ககிட்ட சீரழியத்தான் போலிருக்கு.
வீடு விழித்தெழத் தொடங்கியிருந்தது.
காலைநேரத்துக்கே உண்டான சின்னச்சின்ன ஒலிகளுடன் வீடு அந்தந்த இடத்தில் உயிர்த்திருந்தது. தன் பெண்ணைத் தேடிக் கண்களால் துழாவினாள். சமையலறைக்குள் புடைவை நுனி பறந்து பறந்து கண்ணில்பட்டது. சமையலைத் தொடங்கிவிட்டிருப்பாள். டிஃபன், சாப்பாடு, டீ. காபி, பால்... என்று வகைவகையாகச் சமையலறை அவளை விழுங்கி இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு வெளியே விடாது.
மருமகப்பிள்ளையைக் காணோமே? தன் வீட்டுக்காரரை நினைத்துக் கொண்டாள். ஒரு வேலைக்கும் முழுமையாக உதவமாட்டார். இருப்பினும், வீட்டில் ஒரே இடத்தில் அவரால் முடங்கிவிட முடியாது. வீடு முழுக்கச் சுற்றுவார். சமையலறைக்கு வருவார். காய்கறி நறுக்குவார். தோட்டத்துக்குப் போவார். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார். பிள்ளைகளை எழுப்பிப் பல் தேய்த்துவிட்டுக் குளிக்கவைப்பார்.
மருமகன் நேர் எதிர். அவர் உட்கார்ந்த இடத்துக்குப் பேப்பர் போக வேண்டும். டீ, சாப்பாடு எல்லாம்... சாப்பிட்டு தட்டிலேயே கை கழுவி, தட்டை ஒரு அங்குலம் முன்னால் நகர்த்திவிட்டு, அப்படியே கட்டையைச் சாய்ப்பார். நேரம் ஆகுதான்னு பார்த்துக்கிட்டே இருந்து சட்டையை மாட்டிக்கிட்டுப் பறப்பார். அதிகபட்சம் அவர் வீட்டில் நடமாடும் தூரமே 10 அடி, 15 அடிதான்.
இரண்டு பிள்ளைகளும் அச்சு அசல் அப்பாதான். அவர்கள் செய்யும் ஒரே வேலை, முத்துலட்சுமியுடன் சண்டை போடுவதுதான். அவர்களுக்கு பாட்டி ஒரு வேஸ்ட். தேவையில்லாத தொணதொணப்பு. முடிஞ்சுபோன நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிப் போடுவதைப் போல், இந்தக் கெழவியையும் தூக்கிப் போட்டுவிட வேண்டும்.
வீட்டுக்குள்ள யார் வந்தாலும், போனாலும் யாரு என்னன்னு கேள்வி கேட்டுத் தொணதொணக்கிற 'கேள்விக்கொலை' கெழவி.
ஓடி ஓடி உழைத்த உடம்பு. முத்துலட்சுமியால் சும்மாவே உட்கார்ந்திருக்க முடியாது. எல்லா வேலையையும் உடனுக்குடன் முடிக்கவேண்டும். ஊற வைத்துக்கிடக்கும் துணியைப் பார்த்தாலும், காய்ந்து கிடக்கும் பாத்திரங்களைப் பார்த்தாலும், கை, கால்கள் பரபரக்கும். கால்களில் தூசி ஒட்டினால், தொடப்பம் எடுத்து உட்கார்ந்து கொண்டாவது பெருக்கிவிடுவாள்.
வீடு ஒரு கால இயந்திரம் போல் வேலைகளை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கும். வேலையற்று இருக்கும் வீடுகளைப் பார்க்கவே முடியாது. பூட்டிய வீடுகளைக் கூட தொலைபேசி அழைப்புகள் அசைத்துக் கொண்டே இருக்கின்றன.
அலமேலுவுக்கு வீட்டுக்குள் நுழைந்தாலே சோர்வு வந்துவிடும்.
தன்னைத் தன்னுடைய ஆற்றலை விழுங்குவதற்காகவே காத்திருக்கும் வீட்டைக் கண்டாலே எரிந்து விழுவாள். இதில் ஓயாமல் அம்மாவின் தொணதொணப்பு வேறு. இந்த வேலை முடிந்ததா? அந்த வேலை முடிந்ததா? துவைத்தாயா, தேய்த்தாயா, படித்தாயா, என்று கேள்விகள்... கேள்விகள்... அம்மாவுக்கு என்ன, மேனேஜர், ஃபைல், பஸ்னு எந்த டென்ஷனாவது இருந்ததா என்ன!
முதுகை வளைத்துக் கொண்டு கைகளைக் கீழே ஊன்றி, சமையலறையை நோக்கி அம்மா வருவது தெரிந்தது. 'காய் நறுக்கிட்டனா' என்னன்னு பார்க்க வரும். கண் பார்வையும் மங்கிப் போச்சு. காலுக்குத் தெரிகின்ற நிதானத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறது.
"குழந்தை..."
"என்னம்மா...?"
"என்ன சாம்பாரு? வெங்காயம்ல்லாம் அரிஞ்சிகிட்டயா?"
"நான் பாத்துக்கிறேன் எல்லாம். இந்தா, இந்த 'டீ'யைக் குடிச்சுட்டு, வெளிய போய் காத்தாட உட்காரு."
'டீ'யை நீட்டினாள்.
வாங்கி பக்கத்துல வைத்துவிட்டு, அரிவாள்மணை பக்கத்துல இருந்த வெங்காயம், காய்கறிகளை நகர்த்தி வைத்துக்கொண்டு அரிய ஆரம்பித்தாள் முத்துலட்சுமி.
"பொண்ண எழுப்பி விட்றதுதானே?"
"ஆமா... என்ன கொழந்தன்னு சொல்லு, பேத்திய பொண்ணுன்னு சொல்லு. நல்லாருக்கு கேட்க."
"போற வீட்லயும் இப்படித்தான் தூங்குவா, சீக்கிரம் எழும்பப் பழக்கு." |
|
"நான் மட்டும் விடிய விடிய தூங்கல, இப்ப என்ன செய்யாமயா போய்ட்டேன். செக்குல போட்ட பிறகு, எல்லாம் எண்ணெய்யா போகத்தான் செய்யும்."
"ஐயோ, அம்மா..." முத்துலட்சுமியின் கைகளில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
"வேணான்னு சொன்னேன், கேட்டியாம்மா, சாண புடிச்ச அரிவாமணை. வேண்டாத வேலையெல்லாம் ஏம்மா செய்யற" ஈரத்துணியால் விரலைச் சுற்றினாள் அலமேலு.
"காய் அரியறது வேண்டாத வேலையா?"
"ஆமா, நிதானந் தெரியாதப்ப பேசாம உட்காரணும்."
"எவ்ளோ நேரந்தான் உட்கார்ந்து இருக்கிறது."
"ஏன், ஓடிப்போய்த்தான் ஓடி வாயேன். "
"என்னை ஓடிப் போய்வான்னு சொல்ற அளவுக்கு கேவலமாப் போய்ட்டேன்..."
முத்துலட்சுமி வலியை மறந்து முணங்கிக் கொண்டே பின்னால் நகர்ந்தாள். பக்கத்தில் குடிக்காமல் வைத்திருந்த டீ, அவள் கைபட்டுச் சாய்ந்தது.
"டீயைக் குடுத்தா, வாங்குனம்மா, குடிச்சம்மான்னு இருக்கணும். அங்க வைக்கிறது, இங்க வைக்கிறதுன்னு... ஏம்மா, இருக்கிற வேலையில நீ வேற?"
முத்துலட்சுமி ஒன்றும் சொல்லாமல் கரித்துணியை எடுத்து டீயைத் துடைத்தாள். பிறகு தண்ணீரைத் தெளித்து தரையைத் துடைத்து விட்டாள்.
"நீ வெளியே போய் உட்காரும்மா, நான் வேற டீ போட்டுக் கொண்டாறேன்."
முத்துலட்சுமி வெளியே நகர்ந்தாள்.
அவள் வெளியே வரவும் பேரன் ஓடி வரவும் சரியாக இருந்தது. ஓடி வந்தவன் வேகத்தைக் குறைக்க முடியாமல், பாட்டியின் மேல் மோதினான்.
"அயோ, கொன்னானே, கொன்னானே..." வயிற்றைப் பிடித்துக்கொண்டு, அழுகையுடன் கேவினாள். வேகத்துக்கு மடங்கிய முட்டி பாட்டியின் வயிற்றைப் பதம் பார்த்தது. முத்துலட்சுமியின் கேவல் அதிரவைத்தது. இருப்பினும் தன் நியாயத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. 'இந்தக்கெழவி எங்கனா மூலையில ஒக்காருதா, குறுக்கும் நெடுக்கும் வந்துகிட்டிருந்தா கால்படத்தான் செய்யும்' சமாதானத்துடன் வெளியேறினான்.
முத்துலட்சுமிக்கு தலை கிறுகிறுவென்றிருந்தது. வளைந்த முதுகு இன்னும் உள்வாங்கிவிட்டது. அலமேலுவின் கையைப் பிடித்துக்கொண்டு, தவழ்வதுபோல் நடந்து வந்தாள்.
சுவரில் சாய்ந்து உட்கார முடியவில்லை. கொஞ்சம் நிமிர்ந்தாலும் வயிறு இழுத்துப் பிடித்தது. உட்கார்ந்திருப்பதே உடம்பைப் புண்ணாக்கியிருந்தது. எவ்வளவு நேரந்தான் உட்காருவது! தரையும் சதையும் உராய்ந்து உராய்ந்து, அனல் தகித்தது. விளக்குப் போடாமல் தன் அறைக்குள் அடைந்து கிடப்பதே தேவலாம் போல இருந்தது.
தன் கை, கால்களைக் கட்டிப்போட்டு ஒவ்வொரு வினாடியும் தன்னைக் கடப்பது முத்துலட்சுமிக்கு வேதனையாயிருந்தது. தன் இயலாமையை எதிரில் உட்கார்ந்து கேலி செய்து ரசிப்பதுபோல் நாட்கள் வெறுப்பூட்டின. தன் குடும்பத்துக்கு தான் தேவைப்படாத நபராகிவிட்ட பிறகு, வாழ்வதற்கு அர்த்தமென்ன?
இதே குழந்தை பிறந்தவுடன் ஆஸ்பிட்டலில் கைகளில் வாங்கியதிலிருந்து..., ஐந்து வயதுவரை கீழிறக்கிவிட்டதில்லை. இவன் இன்று வளர்ந்து நிற்க எவ்வளவு உழைப்பு, வலி. வளர்ந்துவிட்ட காலால் உதைபட வேண்டியிருக்கிறது.
எல்லோருடைய வழியையும்தான் அடைத்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. நடுக்கூடத்தில் கிளை விரித்த மரம்போல் தான் நின்றுகொண்டிருப்பது எதற்காக? வாழ்ந்து முடிந்த வாழ்வை, தீய்ந்த பண்டம் போல் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
முத்துலட்சுமி உட்காரப் பிடிக்காமல் எழுந்து வெளியில் வந்தாள்.
அவள் தலை வெளியே தெரிந்ததோ இல்லையோ மாப்பிள்ளையின் குரல் அதிர்ந்தது. "ஆமா, எப்ப வண்டிய தள்றேன்னு பாத்துட்டு இருப்பியா... கரெக்டா எதிர்ல வருவியே..."
சட்டென்று தலையை உள்ளிழுத்துக்கொண்டாள் முத்துலட்சுமி. பெரிய தப்பு செய்தாற்போல் உடல் கிடுகிடுவென்று நடுங்கியது. பூமி பிளந்து உள்ளிழுத்துக் கொள்ளக்கூடாதா என்ற வெறி வந்தது. 'சாவு வர்லீயே, சாவு வர்லீயே' பொங்கினாள் மனசுக்குள்.
பையை மாட்டிக்கொண்டு அலமேலு பின்னால் வந்தாள். வெளியில் வண்டி ஸ்டார்ட் செய்கிற சத்தம் கேட்டது.
"அம்மா, சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன், சாப்பிடு."
"கதவ திறந்து வச்சிருக்காதே, ஜாக்ரதை."
"ஏய், சீக்கிரம் வா" – மருமகன் குரல்.
"சாயந்திரம் சீக்கிரம் வந்துடுவியா?"
"ம்.. வர்றேன். நீ போய் கொஞ்சநேரம் படு. ஒரு வேலையும் செய்ய வேணாம். நான் வந்து பாத்துக்கறேன்" சொல்லிக்கொண்டே வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.
வண்டி ஒலி மறைந்தது. கொஞ்சநேரம் எதையோ யோசித்தபடி இருந்தாள். யார் யாரோ நினைவுக்குள் வந்து போனார்கள். காலம் முன்பின்னாக அவளுக்குள் புரண்டது. அதன் வெம்மையைத் தாங்கமுடியாமல் பெருமூச்சுவிட்டாள். கண்ணைத் திறந்து வீட்டைப் பார்த்தாள். என்னவோ நினைவுக்கு வந்தது மாதிரி கைகளை ஊன்றியபடி எழுந்து நின்று தொடப்பம் எடுத்தாள் – பெருக்குவதற்கு.
நிசப்தமான வீடு தன் பெரிய கைகளை விரித்து வைத்திருந்தது.
அ. வெண்ணிலா |
|
|
|
|
|
|
|
|