|
|
|
அந்த வாலிபன் முகத்தைப் பார்த்தேன். சுருள்சுருளான கேசமும், அடர்த்த நெற்றியும், சிவந்த மேனியும் என்னுள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனாலும்.. ஆனாலும்... அவன் வாழ்க்கை வரலாற்றினைக் கேட்டபோது...
அவன் ஓர் ஏழை! பரம ஏழை. தாய் தந்தை அற்ற அநாதை... தன் முயற்சியால் முன்னுக்கு வந்து படித்துப் பட்டம் பெற்றவன். அவ்வளவுதான்... சொத்து, சுகம்...?
மூச்!
பெருமூச்சு விட்டேன் நான்... என் மகள் மாலினிக்கு இவன் ஏற்றவனா? எங்களுடைய அந்தஸ்து என்ன? அதிகாரம் என்ன? நினைத்தால் லண்டனுக்கும், நியூயார்க்குக்கும் பறந்து செல்லும் இவர் தன்மைதான் என்ன? இவர் அந்தஸ்துக்கு ஏற்ற மருமகனா இவன்! என் மனத்திலிருந்த அந்த எண்ணத்தை நான் அப்போதே துடைத்து விட்டேன்.
ஆனால் வாடகைக்குத் தங்க இடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை.
பரீட்சைக்குப் படிக்க வேண்டுமாம். தனி இடம் வேண்டுமாம்! அமைதியான இடம்!
மாலினியின் மாடி அறையை ஒழித்துத் தர ஏற்பாடு செய்தேன்.
மாலினியின் முகம் கடுகடுவென்று இருந்தது. என் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசி அறியாதவள். விருப்போ, வெறுப்போ அவள் என் உத்தரவைச் செயலாற்றி விட்டாள். மாலினிக்குக் கீழே படிக்கும் அறை! இல்வளவு பெரிய வீட்டில் எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. பாவம், அந்த வாலிபன்...
ஆ.. அவன் பெயர் ஸ்ரீதர்!
★★★★★
ஸ்ரீதர் வந்து விளையாட்டுப்போல் ஒரு மாதமாகி விட்டது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று மாடி அறையில் முடங்கிக் கிடப்பான் அவன். படிப்பு, படிப்பு... எப்போதும் படிப்பா?
என் மனசுதான் கேட்காது. ஏதாவது நல்ல பக்ஷணங்கள் செய்தால் அவனுக்கு எடுத்துக் கொண்டு போவேன்...
"இதெல்லாம் எதற்கம்மா அநாவசியமாய்... உங்கள் அன்பு ஒன்றே போதும்" என்றான், அன்றொரு நாள்.
"உன் இனிப்பு உள்ளத்துக்கு ஏற்ப இனிப்பு மைசூர்ப்பாகு! நீ படித்து இப்படி இனிப்பான முடிவைக் கண்டு உன் வாழ்வே இனிக்கட்டும்....."
அவன் மெள்ளச் சிரித்தான், வரிசையான பற்கள் ஒரு கணம் மின்னி மறைந்தன.
என்னை அறியாமல் அவனிடத்தில் ஒரு பிடிப்பு ஏற்பட்டதை உணர்ந்தேன்....
ஒருவேளை போன ஜன்மத்தில் அவன் என் மகனாகப் பிறந்திருப்பானோ?
அவனுக்குப் பாட்டுப் பாடத் தெரியுமாம்! சித்திரம் எழுதத் தெரியுமாம்!
பொழுதுபோக்காகக் கற்ற இவை அவன் உயிர் நாடியாம்! ஒரு நிமிடத்தைக்கூட அவன் வீணாக்க மாட்டானாம்.
நான் ஆழ்ந்த பெருமூச்சு விட்டேன்!
ஸ்ரீதர்! இவ்வளவு திறமையுள்ள நீ ஒரு சுமார் குடும்பத்தில் பிறந்திருக்கக் கூடாதா? தாய், தந்தையற்ற அநாதை! - நான் அதற்கு மேல் சிந்திக்கவில்லை!
★★★★★
மூன்று மாதங்கள் வேடிக்கையாய்க் கழிந்து விட்டன. வெளிநாடு சென்றிருந்த என் கணவர்கூட இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடுவார்... வந்தால் மாடியில் ஸ்ரீதர் இருப்பதைக் கண்டு கோபிப்பாரோ?
ரொம்பப் பொல்லாதவர் அவர்! தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதிக்கும் பிடிவாதக்காரர் கூட!
அதிருக்கட்டும்! ஏனோ தெரியவில்லை... இப்போது இந்த மாலினியிடம் ஒரு மாற்றம்! 'கலகல'வென்று என்னுடன் அடிக்கடிச் சிரித்துப் பேசும் அவள் இப்போது வாய்மூடி மௌனியாய், எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் அமர ஞானியாய் ஏன் இருக்கிறாள்? ஒருவேளை...!
ஆமாம். நான் ஒரு பைத்தியம்! எப்போது பார்த்தாலும் ஸ்ரீதர் பற்றிய புகழுரைகளை அவளிடம் கூறிக்கொண்டேயிருந்தேன்.
என் உள்ளத்திலோ அவனை மருமகன் ஆக்கும் எண்ணம் கிடையாது! ஆனால் எதற்காக வீணில் இந்த இளம் உள்ளத்தில் கொந்தளிப்பை உண்டுபண்ணினேன்? அவனைப்பற்றிப் பேசும்போது அவள் முகத்தில் படர்ந்த அந்தக் காந்தி... அதற்கு என்ன பொருள்?. இப்போது யோசிக்கிறனே பைத்தியம்!
அவனை அவள் அடிக்கடி பார்க்காமலே, அவனுடன் பேசாமலே அவனை அவள் உள்ளத்திலே உயர்த்தி நெஞ்சில் ஓர் ஆலயம் கட்ட ஏற்பாடு செய்துவிட்டேனோ?
அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த அந்தஸ்து மலையைப் பார்க்கவில்லையா அவள்?
'முன்னம் அவன் நாமம் கேட்டு, ஊர் கேட்டுத் தலைவனுக்குத் தலைப்பட்ட நங்கைபோல்' - என் மகளும், என் மகளும்...? நான் வேதனைப்பட்டேன்....
இதன் மூலகாரணம் நான்தான்.
ஸ்ரீதர் அப்படி இப்படி ஆனை, குதிரை என்று வருணித்து, அதுவும் என் மகளின் சலனமில்லா நெஞ்சிலே பெரும் சலனத்தை உண்டுபண்ணி விட்டேன்!
நான் மாபெரும் தவறு செய்துவிட்டேன்
மாலினியின் மாற்றத்துக்கு இதுதான் காரணம்!
அவள் அடிக்கடி ஆழ்ந்த யோசனையில் இருப்பதற்கு இதுதான் காரணம்! அவள் என்னிடம் முன்போல் சிரித்துப் பேசாமல் இருப்பதற்குக்கூட இதுதான் காரணம்!
அன்று -
மாலினியின் அறைக்குள் அவசரமாக நுழைந்தேன். என்னைக் கண்டதும் அவள் முகம் அப்படி வெளுப்பானேன்? சந்தேகம் கடுமையாய்ச் சூழ நான் அவள் அறையிலிருந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டேன்! ஆனால் ஜன்னல் வழியாக அவள் செய்கையைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்,
ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் அவள்!
என்ன கடிதமாக இருக்கும்? ஒருவேளை... ஒருவேளை... 'குப்'பென்று வியர்த்தது எனக்கு!
"மாலினி! மாலினி.."
நல்லவேளை! மாலினியின் சிநேகிதி ஒருத்தி கூப்பிட்டாள்! அவசர அவசரமாகக் கடிதத்தை ஒரு புத்தகத்தில் செருகி வைத்துவிட்டு மாலினி வாசலுக்கு ஓடினாள்.
நான் மெள்ள மாலினியின் அறைக்குள் நுழைந்தேன். மனம் 'படபட'வென்று அடித்துக் கொண்டது. இதயத்தில் 'குபுக் குபுக்'கென இரத்தம் வேகமாகப் பாய்ந்தது.
கால்கள் தடுமாறின; கண்கள் இருண்டன.
கடிதத்தைப் பிரித்தேன் நான். என் கண்கள் வியப்பால் விரிந்தன.
கடிதத்தின் முதல் வரி....! அன்புள்ள காதலன் என்று அல்ல! என் அன்புள்ள தந்தைக்கு - என்று இருந்தது.
பரபரப்புடன் கடிதத்தைப் படித்தேன்.
"நீங்கள் இல்லாத இந்த நேரம் ஸ்ரீதர் என்றொரு பையன் மாடிக்குக் குடி வந்திருக்கிறான். அம்மாதான் என் அறையை ஒழித்துத் தரச் சொன்னாள். அவனிடத்தில் அம்மாவுக்கு ஏன்தான் அப்படி ஒரு பாசமோ தெரியவில்லை! அம்மாவுக்கு இப்போதெல்லாம் என்னிடம்கூடப் பேச நேரம் இருப்பதில்லை! எப்போதும் அவனிடம்தான் பேச்சு! அல்லது அவனைப் பற்றி என்னிடம் பிரசங்கம்! எனக்கு 'போர்' அடிக்கிறது! நீங்கள் விரைவில் திரும்பி வாருங்கள்! எனக்குத் 'துணை' இங்கு ஒருவரும் இல்லை! எனக்கு அந்தப் பையன்மீது....." |
|
நான் விக்கித்து நின்று விட்டேன்.
அவள் மாற்றத்தைப்பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன், என் மாற்றத்தைப்பற்றி அல்லவோ அவள் குறை கூறுகிறாள்! அவளுள் ஏற்பட்ட மாற்றத்தின் காரணம் காதல் நோயல்ல! தன் அன்புத் தாயின் அன்பை மற்றொருவன் திருடி விடுகிறானே என்ற பாசப் போராட்டம்தான் காரணம்! இப்படிப்பட்ட உயர் உள்ளம் படைத்த பெண்ணைப் பற்றியா நான் சந்தேகப்பட்டேன், மாலினிக்காக நான் அவனை வெறுக்க வேண்டும். முடியுமா என்னால்?
அவன், 'அம்மா' என்று அழைக்கும்போது உள்ளமெல்லாம் இனிக்கிறதே!
"தாய் தந்தையற்ற இந்த அநாதைமீது முதன்முறையாக அன்பு செலுத்தும் ஒரு நல்ல உள்ளத்தை இப்போது நான் பார்க்கிறேன் அம்மா! அந்தஸ்து பேதம் பாராட்டும் இந்த உலகில் அன்பு செலுத்தத் தெரிந்த உயர்ந்த உள்ளத்தை இன்றுதான் காண்கிறேன் அம்மா!"
அவன் பேச்சு என் காதுகளில் ஒலித்தது.
அவனுடன் பேசினால் மாலினிக்கு வேதனை! அவனை வெறுத்தால் அவனுக்கு வேதனை!
இந்த வேதனை குறைய...? அவர்களைப் பிணைத்து விட்டால்...?
அந்தஸ்து வாயைத் திறந்து சிரித்தது. அவர் என்ன சொல்லுவாரோ? அவர் மனம் வைத்தால் பிச்சைக்காரனைக்கூட மருமகனாகத் தேர்ந்தெடுப்பார்! ஆனால்...?
நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் உள்ளத்தில் ஏற்பட்ட இந்த திடீர்த் திருப்பத்தை என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை! நான் ஏமாற்றத்தை மெல்ல மெல்ல மென்று விழுங்கினேன்.
★★★★★
கெட்டிமேளம் முழங்கிற்று. மாலினிக்குக் கலியாணம்! என் மாலினிக்குக் கலியாணம்! அவள் வெறுத்த அதே ஸ்ரீதருடன்! அநாதை ஸ்ரீதருடன்!
இனி மகள், மருமகன் இருவரின் மீதும் அன்பு செலுத்த எனக்கு உரிமை உண்டல்லவா? இனி இதில் போட்டி எழாதே!
ஆனால். ஆனால் ஏனோ என் உள்ளத்தில் ஒரு சலனம்! அதோ.. அதோ... என் கணவர்!
"அந்தஸ்தாவது மண்ணங்கட்டியாவது! நாளைக்கே அவனை வெளிநாடு அனுப்புகிறேன்! தன்னால் அந்தஸ்தும், ஆஸ்தியும் தேடி வருகின்றன அவனை!"
இந்த முடிவுக்கு அவர் வரக் காரணம்?
மாலினியின் கடிதம்...?
அத்துடன் அன்றே ஸ்ரீதரைப்பற்றி எழுதிய என் கடிதம்!
இந்த இரு கடிதங்களும்தான் அவர் உள்ளத்தை மாற்றியிருக்க வேண்டும். அதன் நல்ல முடிவுதான் இந்தத் திருமணம்!
கல்யாணமாகி ஒரு மாதம் ஓடிவிட்டது. மாடி அறைதான் அவர்கள் அறை.
அன்று என் கணவரும் நானும் பூங்காவுக்கு உலவப் போனோம். சிரிப்பொலி கேட்டது. என் மகள் மாலினியும், மருமகன் ஸ்ரீதரும்! அவர்கள் பேசியது தெளிவாகக் கேட்டது! அவர்கள் எங்களைப் பார்க்கவில்லை.
"பார்த்தாயா, மாலினி எப்படி நம் திட்டம் நேர்வழியில் உன் பிடிவாதத் தந்தையையும், தாயையும் அணுகி நாம் இருவரும் 'காலேஜ் மேட்ஸ்' என்ற உண்மையைச் சொல்லிச் சம்மதம் கேட்டிருந்தால் ஏழையான என்னுடன் உன் வாழ்வை இணைத்திருப்பார்களா?"
மாலினி சிரித்தாள்.
"அன்று அம்மா நான் கடிதம் எழுதும் போது அவசரமாக ஓடோடி வந்தாள், உங்களுக்குத்தான் கடிதம் எழுதுகிறேனாக்கும் என்று. அம்மா பார்க்க அதை மேஜையில் வைத்தேன்... அதைப் படித்த பிறகுதான் அப்பாவுக்குக் கடிதம் எழுதி... இப்படி நம் கலியாணம் முடிந்தது. ஆனாலும் நீங்கள் ரொம்பப் பொல்லாதவர். அம்மாவிடம் இனிக்க இனிக்கப் பேசி அவர்கள் அன்பைப் பெற்றுவிட்டீர்கள்! முன்பின் அப்பாவைப் பார்க்காமலேயே அவரது நற்சாட்சிப் பத்திரத்தையும் அடைந்துவிட்டீர்கள்."
நான் கல்லாய்ச் சமைந்துவிட்டதைப் போல் நின்றிருந்தேன். அவள் சிரிப்பின் ஒலி எங்கள் ஏமாற்றத்தின் எதிரொலியோ?
என் கணவர் என்னைத் தட்டினார். சுய உணர்வு பெற்றவளாய் நிமிர்த்தேன், என் கண்களில் முட்டிநின்ற கண்ணீரை அவர் அன்புடன் துடைத்தார்.
"சீ, அசடு! இதற்குப் போய் அழுதுகொண்டு...! நடந்தது நடந்துவிட்டது! எதுவும் தெரியாததுபோல் நடித்துவிடு! நம் ஏமாற்றத்தைத் தவிர்க்க அதுதான் வழி."
என் மனம் அழுதது.
"ஐயோ, என் அன்பே! நான் இப்போதுகூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அன்று மாலினி உங்களுக்கு எழுதிய அக்கடிதத்துடன் அவள் அன்புக் காதலன் ஸ்ரீதருக்கு எழுதிய காதல் கடிதம் ஒன்றினையும் கண்டுவிட்டேன் நான். அவர்கள் திட்டம் புரிந்தது எனக்கு! அவர்களுக்குத் தெரியாமலேயே அந்த நாடகத்தில் நானும் பங்கு கொண்டேன்! நடித்தேன்! உங்களை ஏமாற்றினேன்! தனிமையில் உங்கள் ஒருவரால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கமுடியாது என்பதற்காகவே எனக்கும் ஒன்றும் தெரியாததுபோல் நடித்தேன்; ஏன் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் ஏமாற்றப்பட்ட உள்ளத்தை நசுக்கிக்கொண்டு எனக்கு ஆறுதல் கூறுவீர்களா?, எங்கள் மூன்று பேரின் கூட்டு நடிப்பு 'முக்கூடலில்' நீங்கள் மூழ்கிவிட்டீர்களே என்றுதான் வேதனையாக இருக்கிறது! ஆனால் நான் நடித்தது தங்கள் வேதனையைக் குறைக்க. என்னை மன்னித்து விடுங்கள், அன்பே!"
மனம் குமுற, உள்ளம் கொந்தளிக்க, உடல் சோர 'நடிகையர் திலகமாக' அவர் பின்னே நடந்து சென்றுகொண்டிருந்தேன்!
விமலா ரமணி |
|
|
|
|
|
|
|