Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | பொது | வாசகர்கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
விமலா ரமணி
- அரவிந்த்|பிப்ரவரி 2021|
Share:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்கள், 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நாடகங்கள் என்று எழுதிக் குவித்திருப்பவர் விமலா ரமணி. 65 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் பயணித்து வரும் இவர், பிப்ரவரி 5, 1935 அன்று திண்டுக்கல்லில், விஸ்வநாதன்-ராமலக்ஷ்மி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆங்கிலேய அரசாங்கத்தின் காவல்துறை உயரதிகாரி. செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார் விமலா. கல்லூரியில் படிக்க ஆர்வம் இருந்த போதும் அப்போது திண்டுக்கல்லில் கல்லூரி இல்லை. அவ்வெண்ணம் கைகூடவில்லை. கிடைத்த நேரத்தை வாசிப்பதில் செலவிட்டார் விமலா.

தாய் ராமலக்ஷ்மி தீவிர வாசகர். பன்மொழி அறிந்தவர். இசை, ஜோதிடம் போன்றவற்றில் தேர்ந்தவர். தாயின்வழி விமலா ரமணிக்கும் கலைகளின் மீது ஆர்வம் சுடர்விட்டது. முறையாக இசை கற்றார். கூடவே ஹிந்தியும் நன்கு கற்றுத் தேர்ந்தார். தாயின் சேகரிப்பில் இருந்த பைண்ட் செய்யப்பட்ட நாவல்களை வாசித்து வாசித்து தனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். தந்தையின் சேகரிப்பில் இருந்த ஆங்கில நூல்கள், ஹிந்தி ஆசிரியர்கள் மூலம் அறிமுகமான ஹிந்தி இலக்கியங்கள் இவரது அறிவை விசாலமாக்கின. எழுத்தார்வம் சுடர்விட்டது. ஹிந்தியில் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்ப அது பிரசுரமானது. ஐந்து ரூபாய் சன்மானம் கிடைத்தது. அதுவே இவரது முதல் எழுத்து முயற்சி.1955ல் ரமணியுடன் திருமணம் ஆனது. கோவையில் குடிபுகுந்தார். கணவர் ரமணி மனைவியின் ஆர்வத்தை அறிந்து ஊக்குவித்தார். முதல் சிறுகதை 'அமைதி' கோவையிலிருந்து வெளிவந்த 'வசந்தம்' இதழில் வெளியானது. தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். கோவை மாலைமுரசு நடத்திய சிறுகதைப் போட்டிக்குக் கதை எழுதி அனுப்ப, அதற்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து கலைமகளுக்கு இவர் சிறுகதை ஒன்று அனுப்ப, கி.வா.ஜ.வின் பாராட்டுதலுடன் அந்தக் கதை வெளியானது. அந்த இதழில் நிறைய எழுதினார். கல்கி, விகடன், அமுதசுரபி போன்ற இதழ்களும் இவரது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டன. 'வாணி' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு.

இவரது எண்ணற்ற நாவல்களில் சில: 'அடிவானத்துக்கு அப்பால்', 'அன்புக் காணிக்கை', 'காதல் வரம்', 'ஜாதி புதிது', 'நீ ஒரு காதல் சங்கீதம்', 'பந்தயக் குதிரை', 'ஒரு காதல் கணக்கு', 'வஸந்த விழா', 'ராத்திரிகள் வந்துவிட்டால்', 'லாஸ்ட் வானிங்', 'ஊனங்கள்', 'மன்னிக்கப்படாத பாவிகள்', 'விழிமலர்', 'ஒரு பறவை கூண்டை விட்டு வெளியேறுகிறது', 'காதல் நீலாம்பரி', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'குமரிப் பெண்ணே குயிலாளே', 'மண் பொம்மைகள்', 'அக்கரையில் ஓர் அந்நியப்பறவை', 'உன் பார்வை பிருந்தாவனம்', 'மனதுள் பெய்த மழைத்துளிகள்', 'புதைமணல்', 'உதயா', 'முற்றுப்பெறாத அத்தியாயம்', 'வசந்தங்கள் வரலாம்', 'இரட்டை ஆபத்து', 'கண்ணே எதிர்க்காதே', 'உறவுக்கு அப்பால்', 'உனக்கெனவே காத்திருப்பேன்', 'பருவமோகம்', 'தப்புத்தப்பாய் ஒரு தப்பு', 'வெற்றி நம் கையில்', 'மெல்ல வீசும் வசந்தங்கள்', 'களவு போன கனவுகள்', 'மேகம் தேடும் வானம்', 'பிள்ளைப் பருவத்திலே', 'கள்ளிச்செடி காதல்', 'கன்னக்கதுப்பில் ஒரு கவிதை' மற்றும் பல.


சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல், கட்டுரை, நாடகம் என இவரது எழுத்து முயற்சிகள் தொடர்ந்தன. முதல் நாவல் 'யாழிசை' 1967ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து 'வனப்பு', 'கல்யாணி சிரித்தாள்', 'உதயா', 'தாழம்பூ', 'புதிய சகாப்தங்கள்', 'பாரிஜாதம்', 'விழிமலர்', 'உறவுகள்', 'ஒளி நிலா', 'பன்னீர் புஷ்பங்கள்', 'பகலில் தெரியும் நட்சத்திரங்கள்' போன்ற நாவல்கள் வெளியாகின. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'சில ஏமாற்றங்களும், சில நியாயங்களும்' என்ற தலைப்பில் வெளியானது. நாடகத்துறையில் ஈடுபாடு ஏற்படவே நாடகங்கள் எழுதினார். திருச்சி வானொலியில் அவை ஒலிபரப்பாகின. 1975ல் 'நவரத்னா' என்ற அமெச்சூர் நாடகக்குழுவை ஆரம்பித்தார். முதல் நாடகமே 'Aமாறச் சொன்னது நாNo?' என்ற தலைப்பில் வித்தியாசமானதாக அமைந்து பலரையும் ஈர்த்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பம்பாய், கேரளா என்றெல்லாம் பயணப்பட்டு தனது நாடகங்களை அரங்கேற்றினார். இவரது 10க்கும் மேற்பட்ட நாடகங்கள் நூற்றுக்குமேல் மேடையேறியிருக்கின்றன. சென்னை தொலைக்காட்சியிலும் பல நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட இவரது நாடகங்கள் திருச்சி மற்றும் கோவை வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன. அகில பாரத வானொலி நாடக விழாவில் இவரது 'பகத்சிங்' சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 மொழிகளில் பெயர்க்கப்பட்டு, 1978ல், ஒரே நேரத்தில் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது 'திரைகளுக்கு அப்பால்' நாடகம், கோவையில் ஒருநாள் மாலைவேளையில் மேடையில் அரங்கேறி, அதே நாள் இரவு வானொலியிலும் புதிதாக மீண்டும் நடிக்கப்பட்டு ஒலிபரப்பானது அக்காலத்தில் ஒரு புதுமை.தினந்தோறும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து, தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர் விமலா ரமணி. அந்தப் பயிற்சியே ஆயிரக்கணக்கான படைப்புகளை படைக்கக் காரணமாக அமைந்தது. ஆர்வத்தால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி வழியே பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். 'எதிர்மறை விஷயங்களை எழுதக் கூடாது' என்பது இவரது முக்கியக் கொள்கை. இவரது படைப்புகள் குமுதம், குங்குமம், சாவி, மாலைமதி, ராணிமுத்து, மோனா, மேகலா, மங்கை, ஓம்சக்தி, வாசுகி, குடும்ப நாவல், பெண்மணி, தினமணி கதிர், தினமலர், மாலைமுரசு, வான்மதி எனப் பல இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. 'மர்ம மாளிகை' என்ற தலைப்பில் சிறுவர் நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. சரித்திர நாவல், துப்பறியும் நாவல்களும் எழுதியிருக்கிறார்.

கணவர் ரமணியுடன்விமலா ரமணியின் படைப்புகளுக்கு பெண்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. எளிய, வாசகர்களைக் கவரும் நடை இவருக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது. தேவையற்ற வர்ணனை, எதிர்மறைச் சித்திரிப்பு இல்லாமல் யதார்த்தத்தை, அனுபவங்களைப் பேசுவதாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன. லக்ஷ்மியும் ஆர். சூடாமணியும் இவரது மனம் கவந்த எழுத்தாளர்கள்.

சிறுகதைகள்
விமலா ரமணி சிறுகதைகள், 'ஒரு பட்டாம்பூச்சியின் காதல்', 'ஜனனீ ஜகம் நீ', 'லாஸ்ட் வார்னிங்', 'நந்தவனத் தென்றல்', 'சில வேஷங்கள் கலைப்பதற்கல்ல', 'ஊஞ்சலாடும் உறவுகள்', 'வசந்த கால வானம்பாடிகள்', 'தவறுகள் திருத்தப்படும்', 'மாத்ரு ரூபேண', 'மாணிக்கப் புதையல்' மற்றும் பல.


தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகள், பட்டங்களை விமலா ரமணி பெற்றுள்ளார். கலைமகள், கல்கி, தினமணி கதிர், குங்குமம் போன்ற இதழ்கள் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் பலமுறை பங்கேற்றுப் பரிசுகள் பெற்றிருக்கிறார். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் இவரது நாடகத்திற்குச் சிறந்த நாடகத்திற்கான பரிசு கிடைத்துள்ளது. உரத்த சிந்தனை அமைப்பு 'எழுத்துச் சுடர்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது. கோவை ரோட்டரி கிளப் இவரை, 'Outstanding novelist' ஆகத் தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. புதினப் பேரரசி, நாவலரசி, மனிதநேய மாண்பாளர், சாதனைப் பெண்மணி, சமூகநலத் திலகம், முத்தமிழ் வித்தகி போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில. எழுத்துச் சேவைக்காக வி.ஜி.பி. விருதும் பெற்றிருக்கிறார்.

நடிகர்கள் மேஜர் சுந்தரராஜன், சிவகுமாருடன்தொலைக்காட்சிக்காக 'கல்யாணப்பந்தல்', 'உறவைத் தேடிய பறவை' போன்ற தொடர்களை எழுதியுள்ளார். குமுதம் இதழ் ஆரம்ப காலத்தில் வெளியிட்ட 'மலர் மல்லிகை' இதழுக்கு ஆசிரியராகவும் சிலகாலம் பணிபுரிந்திருக்கிறார். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் கட்டுரை வாசித்துள்ளார். இவரது நாவல்களை ஆராய்ந்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது 'உலா வரும் உறவுகள்' என்ற நாவல், 'கண்ணே கனியமுதே' என்ற தலைப்பில் திரைப்படமானது. கோவை வானொலியிலும் தூர்தர்ஷன், சன், ராஜ், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறார்.

கட்டுரைகள்
'வாழ நினைத்தால் வாழலாம்', 'அனுபவம் பழமை', 'உழைப்பால் உயர்ந்த உத்தமர்' (பொள்ளாச்சி மகாலிங்கத்தின் தந்தை நாச்சிமுத்துக் கவுண்டரின் வாழ்க்கை வரலாறு), 'கண்ணில் தெரியுதொரு தோற்றம்' மற்றும் பல.


கணவர் ரமணி 2019ல் காலமாகிவிட்டார். ஒரே மகள் ரூபா.சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லும் பாங்கு, கால மாற்றத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை போன்றவற்றால் இவரது படைப்புகள் இன்றும் புஸ்தகா.இன் அமேசான் போன்ற தளங்களில் அதிகம் விற்பனையாகின்றன. தமிழின் சிறந்த பெண் நாவலாசிரியர்களுள் விமலா ரமணிக்கு தனித்ததோர் இடமுண்டு.
அரவிந்த்
Share: 


© Copyright 2020 Tamilonline