Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர் கடிதம்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
இனிப்பு நீரின் மர்மம்
- ராஜேஷ்|டிசம்பர் 2020|
Share:
அத்தியாயம் - 12

ஹோர்ஷியானா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதிபர் டேவிட் ராப்ளே அன்றைய மின்னஞ்சல்களைப் படித்துக்கொண்டிருந்தார். அவர் மிடுக்காக சூட் போட்டுக்கொண்டு, ஒரு கையில் காஃபிக் கோப்பையை பிடித்தபடி ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தார். அவரது காஃபிக் கோப்பையில் ஹோர்ஷியானாவின் சின்னம் பெரியதாக இருந்தது. அவர் அவ்வப்போது ஒரு பென்சிலால் ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அது அவர் தினமும் செய்யும் வேலைதான்.

அன்று படித்ததில் ஒரு மின்னஞ்சல் சற்று வித்தியாசமாகப் பட்டது. அதன் தலைப்பு "Got you!" என்று இருந்தது.

ஏதாவது விளையாட்டாக இருக்குமோ என்று முதலில் நினைத்தார். பின்னர் அதைத் திறந்து படித்தார். அதில் அப்பட்டமாக ஃபோட்டோகளுடன் அவரது உணவுப்பொருள் பதப்படுத்தும் கிடங்கில் நடக்கும் தில்லுமுல்லுகள் எல்லாம் அம்பலம் ஆகியிருந்தது. அதை எழுதியவர் செய்திதாள்களுக்கும் அனுப்பப் போவதாக எழுதியிருந்தார்.

"ரோண்டா... ரோண்டா! இங்கே வாம்மா சீக்கிரம்" என்று தனது உதவியாளரை அழைத்தார். ரோண்டா உடனே ஓடிவந்தார்.

"சார் கூப்பிட்டீங்களா?"

"இதென்னம்மா இப்படி?" டேவிட் ராப்ளே பதட்டத்தோடு கேட்டார்.

ரோண்டாவிற்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. "என்ன சார், விளக்கமா சொல்லுங்க."

டேவிட் தனது கம்ப்யூட்டரில் சுட்டிக்காட்டி மின்னஞ்சலைப் படிக்கச் சொன்னார். ரோண்டா வேகமாக அதைப் படித்தார்.

"எப்படி? எப்படி நடந்துச்சுங்கிறேன்?" என்று அதட்டலாக டேவிட் கேட்டார்.

"எனக்குத் தெரியலை, சார். நான் வேணா உடனே விசாரித்துச் சொல்லறேன்" என்று சொல்லிவிட்டு ரோண்டா அறையிலிருந்து வெளியே போனார்.

"யார் நம்ம இடத்துல ஃபோட்டோ எல்லாம் எடுக்கவிட்டது? பாரு இதை அனுப்பிச்சவன் செய்திதாளில போடுவேன்னு வேற மிரட்டிருக்கான். என்ன நடக்குது இங்கே?" என்று டேவிட் பொரிந்து தள்ளினார்.

சில நிமிடங்களில் ரோண்டா வந்தார். அவர் முகத்தில் வேர்வைத் துளிகள். கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார் அவர்.

"என்ன ரோண்டா, யாரு இதுக்கெல்லாம் காரணம்?" என்று அதட்டலாகக் கேட்டார் டேவிட்.

"சார், நேத்திக்கு நம்ம வளாகத்துக்கு ஒரு பள்ளிக்கூடம் களப் பயணம் வந்திருக்கு. அவங்ககிட்ட நம்ம ஆளு சுத்திக் காட்டும்போது ஃபோட்டோ எடுத்துக்கலாம்னு சொல்லியிருக்காரு. அதுல யாரோதான் இதைப் பண்ணிருக்கணும்."

ரோண்டா தனது விசாரணையில் கிடைத்த தகவலை டேவிடுக்குக் கொடுத்தார்.

"யாரது பள்ளிக்கூட கும்பலுக்கெல்லாம் ஃபோட்டோ எடுக்க அனுமதி கொடுத்தது?"

"சார், நம்ப ஆள்தான், சார்."

"அந்த ஆள்கிட்ட பேசணும். லைன் போடும்மா." ரோண்டா ஒரு ரோபாட் போல டேவிட் சொன்னவுடன் டெலிஃபோன் ரிசீவரை எடுத்துப் பொத்தானை அமுக்கினார். மறுமுனையில் மணி அடித்தது.

"ஹலோ" மறுமுனையில் இருந்து பதில் வந்தது. "Hortiana food processing warehouse. யார் வேணும் உங்களுக்கு?"

"நான் டேவிட் ராப்ளே பேசறேன்."

"ஹலோ, யாரு? ராபர்ட்டா? அப்படி இங்க யாரும் இல்லைங்களே."

"டேவிட் ராப்ளே. புரியலை?" சினிமா வில்லன் கேட்பதைப் போலக் கேட்டார் டேவிட். மறுமுனையில் அதற்கு பிரதிபலிப்பு இருந்தது.

"சார், சார். உங்க குரலை அடையாளம் கண்டுபிடிக்க முடியல, சார். மன்னிச்சுடுங்க." பதட்டத்துடன் பதில் வந்தது.

"நான் எதுக்கு கூப்பிடறேன் தெரிஞ்சுதா?"

"இல்லை… இல்லை.. சார்."
"நேத்திக்கு பள்ளிக்கூட பசங்களுக்கு ஃபோட்டோ எடுக்க நீங்கதான் அனுமதி கொடுத்தீங்களாமே? யார் உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது?"

"சார்… ஏதோ குழந்தைங்கன்னு பண்ணிட்டேன், சார்."

"இப்ப அதனால என்ன விளைவு தெரியுமா?" என்று சொல்லி, கோபத்தில் டெலிஃபோன் ரிசீவரை டமால் என்று வைத்தார்.

ரோண்டா பயத்தோடு டேவிடைப் பார்த்தார்.

"சார்…"

"என்னம்மா? வழவழன்னு இழுக்காம சீக்கிரம் சொல்லும்மா."

"சார்… நேத்திக்கு அந்தப் பள்ளிக்கூட கும்பல் வந்தப்ப, எல்லோரும் ஒண்ணா நம்ப ஆளுகூடத்தான் இருந்திருக்காங்க. யாரும் எங்கேயும் அவர் கண்ணிலிருந்து மறையவே இல்லை. ஆனா, நடுவில் ஒரு பையன் மட்டும் ரெஸ்ட்ரூம் போகணும்னு நழுவி கொஞ்சநேரம் காணமா போயிருந்திருக்கான்."

டேவிடுக்குச் சாட்டையால் அடித்ததுபோல இருந்தது.

"என்னம்மா சொல்றே? அந்தப் பையன் யாருன்னு தெரிஞ்சு உடனேயே அவனை நாம கமுக்கமா விசாரிக்கணும். விவரம் கேளு" என்று உத்தரவு போட்டார்.

"சார், அதைப்பத்தியும் விசாரிச்சேன் சார். அந்தப் பையன் பேரு ஏதோ வருணோ இல்ல அருணோ வாம்."

டேவிட் உடனடியாக டெலிஃபோன் ரிசீவரைக் கையில் எடுத்தார். ஸ்பீட் டயல் செய்தார். "ஹலோ, வக்கீல் சாரா? நான்தான் டேவிட் பேசறேன் சார். ரொம்ப முக்கியமான விஷயம்."

★★★★★


மறுநாள் செய்தித்தாளில் "ஹோர்ஷியானா உணவு பதனிடும் தொழிற்சாலை மறு அறிவிப்புவரை மூடப்பட்டது!" என்று கொட்டை எழுத்துகளில் செய்தி வெளியானது. அருண் அந்தச் செய்தியைப் பள்ளியில் மிஸ் மெடோஸ் அவர்களிடம் காண்பித்தான். அவரும் அவனைக் கன்னத்தில் செல்லமாகத் தட்டினார். "நீ சூரனப்பா. வெல் டன் அருண்."

"நீங்கதானே எல்லா உதவியும் பண்ணினீங்க. உங்க நெருங்கிய நண்பர் மூலமா டேவிடை மிரட்டினதெல்லாம் நீங்கதானே."

"நீ முக்கால்வாசி கிணத்தைத் தாண்டினப்புறம் நான் கொஞ்சம் செய்தேன். பெரிசா எதுவுமில்லைப்பா!"

"இருந்தாலும் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாதான் இருக்கு. தப்பிச்சுட்டாங்களே."

"அருண், நீ Big Picture-ஐப் பாரேன். எத்தனை மாணவர்களுக்குக் கலப்படமான தண்ணீர் மூலமா தீங்கு நேராம நீ தடுத்திருக்கே."

ஒருமாத காலம் சென்றது. அருண் பள்ளிக்கூடத்தில் குடிநீரூற்று திரும்பத் திறந்துவிடப்பட்டது. அது வேலை செய்வதைப் பார்த்தான். ஓடிப்போய்த் தண்ணீர் குடித்தான். அதில் திகட்டலான தித்திப்பு ஏதும் இல்லை.

"ஆஹா! மறுபடியும் தண்ணியில வாசனையோ சுவையோ எதுவும் இல்லை!" என்று சொல்லி சந்தோஷமாகக் குதித்தான்.

முற்றும்.

ராஜேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline