Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
பொது
லாக்டவுன் நாட்கள்
- சிசுபாலன்|செப்டம்பர் 2020|
Share:
கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் பலருக்கும் மன உளைச்சலையே தந்திருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்ற அச்சத்தில் நாட்களைக் கடக்க வைத்திருக்கின்றன. ஆனால், எழுத்துலகை, கலையுலகைச் சேர்ந்த சிலர், இந்த வீடடங்கு நாட்களை தங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தீவிரச் செயலாற்றியிருக்கின்றனர். அதுபற்றி...

எழுத்துலகில்...
அருட்செல்வப் பேரரசனின் மகாபாரதம் நிறைவுற்றது. அடுத்து மகாபாரதத்தை அடியொற்றி 'வெண்முரசு' என்ற தொடரை எழுதிவந்த ஜெயமோகன் அதனை நிறைவு செய்திருக்கிறார். கிட்டத்தட்டப் பத்தாண்டுகாலம் என்று திட்டமிட்டு, 2014 ஜனவரியில் வெண்முரசைத் தொடங்கினார். தினந்தோறும் ஓர் அத்தியாயமாக ஏழு வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் எழுதி முடித்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தில் இது ஒரு மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. கூடவே இந்த வீடடங்கு நாட்களில் அவர் எழுதிக் குவித்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், உலகளாவிய நிலையில் தமிழ் வாசகர்களால் வாசிக்கப்பட்டதுடன், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. புதிய கதைக்களன்கள், மாறுபட்ட கதைகூறல், பாத்திரங்கள், சம்பவங்கள் போன்றவற்றால் இவை வாசகர்களால் விரும்பப்பட்டிருக்கின்றன.

நடப்பு சமூகப் பிரச்சனைகள் தொடங்கி உலக இலக்கியங்கள் வரை பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்லும் கட்டுரைகளை 'பூச்சி' என்ற தலைப்பில் தொடராக எழுதி வருகிறார் சாருநிவேதிதா. தமிழகத்தின் முதன்மையான படைப்பாளிகளைப் பற்றி அவர் ஆற்றிவரும் 'ஜூம் உரையாடல் நிகழ்வு' நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. "சி.சு.செல்லப்பா, க.நா.சு., நகுலன், கோபிகிருஷ்ணன் என மாறுபட்ட சிந்தனைப் போக்குடைய எழுத்தாளர்களின் பல்வேறு பரிணாமங்களை, எழுத்தாளுமையை, மேதைமையைக் காட்டுவதாக சாருவின் உரைகள் அமைந்திருக்கின்றன" என்பது பங்கேற்றோர் கருத்து. எஸ். ராமகிருஷ்ணன் சிந்தனையைத் தூண்டும் குறுங்கதைகளை எழுதி, பரவலான வாசகர்களை வாசிக்கவும் சிந்திக்கவும் தூண்டியிருக்கிறார்.

இளம் எழுத்தாளர் சுசரிதாவின் வரலாற்று நாவல் 'ஆதித்யன்' (இது இவரது முதல் நாவலும்கூட) கிண்டிலில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. யாவரும் பதிப்பகம், 'க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி', 'புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி' போன்றவற்றை நடத்தியதுடன், புதிய நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.



கலையுலகில்...
'Redemption' - இது ராஜேஷ் வைத்யா பங்குபெற்றிருக்கும் குறும்படம். அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். இரண்டே நிமிடப் படம்தான். கறுப்பு-வெள்ளையில் ஆரம்பிக்கிறது. மனிதர்கள் நடமாட்டமற்ற ஒரு சாலை. அதன் பின் காமிரா நகர்கிறது ஒரு வீட்டிற்கு. அங்கே ஓர் அறை முழுவதும் வீணைகள். நடு அறையில் தனியாகக் கிடத்தப்பட்டுள்ள வீணையைப் போலவே, தனியாக ஒரு சோபாவில் படுத்திருக்கிறார் ராஜேஷ் வைத்யா. களைப்புற்ற அந்த முகத்தில் மெல்ல மெல்ல ஒரு மலர்ச்சி தோன்றுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்.


பாடகி சின்மயி, இந்த கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், உதவுவோரை ஊக்கப்படுத்தும் விதத்தில், அவர்கள் செய்த ஒவ்வொரு உதவிக்கும் தனியாக ஒரு பாடலை அவர்களுக்கென்றே பாடி அனுப்பி வைக்கிறார். அப்படி இதுவரை, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டக் காரணமாக இருந்ததுடன், 2500 பாடல் வீடியோக்களையும் பாடி அனுப்பியுள்ளார். இது ஒரு பாராட்டப்பட வேண்டிய தனிநபர் சாதனை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

லிடியன் நாதஸ்வரம் உலக அளவில் சாதனை படைத்த குட்டி இசைக்கலைஞன். இந்தக் கோவிட்-19 வீடடங்கு நாட்களில், தந்தை, சகோதரி எனக் குடும்பத்தினருடன் இணைந்து இளையராஜா இசையமைத்த பாடல்கள், மொசார்ட் இசை, வெஸ்டன் க்ளாஸிகல் என்று பல பாடல்களைப் பாடி, இசையமைத்திருக்கிறான். (பார்க்க). இளையராஜா எழுதி, அவரது இசையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடி வெளியான கோவிட்-19 விழிப்புணர்வுப் பாடலான "பாரதபூமி" பாடலுக்கு பியானோ, கீ போர்ட், ட்ரம்ஸ், Harpeji, Merlin, Acoustic Guitar, Bass Guitar, பின்னணிக் குரல் என்று பலவற்றை, இந்த இளவயதில் லிடியன் செய்திருப்பது ஓர் உச்சபட்ச சாதனை.
பாடலைக் காண


ஏ.ஆர். ரஹ்மான் தயாரிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில் வெளியாகவிருக்கும் 'Atkan Chatkan' திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் லிடியன். இசையில் மிகுந்த ஆர்வமுள்ள சிறுவன் குட்டு (லிடியன்). இசைக் கலைஞனாக வேண்டும் என்பது அவன் கனவு. தனது நண்பர்களுடன் இணைந்து ஓர் இசைக்குழுவை அமைக்கிறான். புகழ்வாய்ந்த இசைப் போட்டி ஒன்றில் குழுவினருடன் பங்கேற்று, விளையாட்டாய் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே புதுமையான இசையமைத்து வெல்கிறான். மட்டுமல்லாமல், பிரிந்திருக்கும் இசைத்துறை சார்ந்த தன் பெற்றோரையும் ஒன்றிணைக்கிறான். இப்படம் செப்டம்பர் 5 அன்று ZEE 5 தளத்தில் வெளியாக இருக்கிறது.

படத்தின் ட்ரெய்லர் இங்கே


இன்னும் பல திரைக் கலைஞர்கள் தங்கள் புதிய படங்களுக்கான கதை உருவாக்கம் மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதி முடித்திருக்கிறார்கள். அனைவரும் இந்தப் பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று காத்திருக்கிறார்கள். நாமும்தான்.

சிசுபாலன்
Share: 




© Copyright 2020 Tamilonline