Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
தவிப்பாய், தவிதவிப்பாய்
வீரம்
- பானுமதி பார்த்தசாரதி|செப்டம்பர் 2020|
Share:
நர்மதா சமையலறையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தாள். கீழே நின்றுகொண்டு கைக்கெட்டிய சாமான்களை இழுத்துப் போட்டுக்கொண்டு பொக்கைவாய் முழுவதும் சிரிப்பாகத் திரும்பி நர்மதாவைப் பார்த்துச் சிரித்தாள் வாசவி, அவளது இரண்டு வயதுக் குழந்தை.

அவள் செய்யும் குறும்பையும், கள்ளங்கபடமற்ற சிரிப்பையும் பார்த்து மெய்மறந்து நின்றாள் நர்மதா.

"இப்படியே இருவரும் ஒருவரையொருவர் ரசித்துக்கொண்டு நின்றால் சமையல் எப்போது முடியும்? நாங்கள் எப்போது ஆஃபீஸ் போவது?" சிடுசிடுத்தாள் பூமா, மூன்றாவது அண்ணி.

"சமையல் முடிந்துவிட்டது அண்ணி. டைனிங் டேபிள்மேல் கொண்டுவந்து வைத்துவிட்டு எல்லோருக்கும் சாப்பாடு கட்டி விடுகிறேன்" என்றாள் மெதுவாகத் தலை குனிந்துகொண்டு.

"சமையல் செய்து முடித்து விட்டாயல்லவா? எங்களுக்குத் தேவையானதை நாங்களே பேக் செய்துகொள்வோம். நீ போய் ரெடியாகிக் கொள். உனக்கும் நேரமாகிறது. குழந்தையையும் ரெடி செய்துவிடு. வாசவியை அவளுடைய டே-கேர் சென்டரில் நான் போய் விட்டுவிட்டுப் போகிறேன்" என்றாள் பெரிய அண்ணி கௌசல்யா.

கண்களால் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனாள் நர்மதா. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள் லட்சுமி, நர்மதாவின் தாய். அவளால் வேறென்ன செய்யமுடியும்? இவளால் பழைய நினைவுகளை அசைபோட மட்டும்தான் முடியும்....

எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் இந்த நர்மதா! சாதாரணமாகவே நடக்கமாட்டாள். ஒரு துள்ளலோடு எப்போதும், ஏதாவது ஒரு பாட்டைப் பாடிக்கொண்டுதான் இருப்பாள். அவள் அழகையும், உற்சாகமான, சுறுசுறுப்பான நடவடிக்கைகளையும் மட்டுமல்லாமல், எல்லோரிடமும் அன்பாகப் பழகும் அவள் குணத்தையும் பார்த்து மயங்கினான் கிருஷ்ணன். நர்மதாவின் பெரிய அண்ணாவின் உயிர் நண்பன்.

நர்மதாவின் பெரியண்ணா ரகுவுக்கு நண்பர்கள் அதிகம். வீட்டுக்குள் யாரையும் அழைக்க மாட்டான். ஆனால் கிருஷ்ணன்மட்டும் விதிவிலக்கு. இரண்டாவது அண்ணா ரவி, மூன்றாவது அண்ணா கோபி எல்லோரும் அவனுக்கு நண்பர்களே! பெரியண்ணி கௌசல்யாகூட அவனிடம் சொந்த சகோதரனிடம் பழகுவதுபோல்தான் உரிமையோடு பழகுவாள். இரண்டாவது அண்ணி ரமா தனக்குத் தேவைப்படும்போது மட்டும் பேசுவாள்.

மூன்றாவது அண்ணி பூமா அவனை ஏனோ மனிதனாகக்கூட மதிக்கமாட்டாள். வேலையில்லாமல் ஊரைச் சுற்றுபவன் என்பாள். மற்றவர்களிடம் சொல்லும்போதோ அவனை கோயில்மாடு என்றும் ஓசிச் சாப்பாட்டுக்காக இங்கே சுற்றுகிறான் என்றும் ஏளனமாகச் சொல்லுவாள். ஆனால் அவன்தான் அந்த வீட்டுக் குழந்தைகளுக்குத் தன் கைக்காசில் பிஸ்கட், சாக்லெட், பொம்மைகள் என்று காசை வாரியிறைப்பான். பூமா கிருஷ்ணனைத் திட்டும்போதும், கேலி பேசும்போதும் நர்மதாவின் இதயத்தில் எங்கோ வலிக்கும். கோபம்கூட வரும். ஆனால் வாய்விட்டுச் சொன்னால் பூமா ஏதாவது கொச்சையாகப் பேசிவிட்டால் என்ன செய்வது என்று நர்மதா அமைதியாகி விடுவாள்.

அவனைத் திட்டினால் எனக்கு ஏன் வலிக்கவேண்டும் என்ற கேள்வியோடு தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அமைதியாகி விடுவாள். அப்படியும் தன்னை மீறி ஒருநாள் அவனிடம் கேட்டு விட்டாள்.

"ஏன் இப்படி பெரியண்ணாவை சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்? ஏதாவது ஒரு வேலை தேடிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகலாம் இல்லையா?" நர்மதா.

"நான் உன் பெரியண்ணாவைச் சுற்றி வருவதாக யார் சொன்னது நான் உன்னைப் பார்க்கத்தான் வருகிறேன்" என்றான் நமுட்டுச் சிரிப்படன்.

என்ன நினைத்து அவனுக்குக் கிருஷ்ணன் என்று பேர் வைத்தார்களோ தெரியாது. நிறம் மட்டுந்தான் மாநிறம். குறும்புப் பார்வை, குறுஞ்சிரிப்பு, கொள்ளை அழகு எல்லாமே கேலண்டரில் பார்க்கும் கிருஷ்ணன் போலவே. நமுட்டுச் சிரிப்பும், குறும்புப் பார்வையும் நர்மதாவின் கன்னங்களை சிவக்க வைத்து, தலையைக் குனிய வைத்தது.

"அடப்பாவி! இத்தனை நாட்களும் நீ ரகுவையும், குழந்தைகளையும் பார்க்கத்தான் இவ்வளவு ஆசையாக வருகிறாய் என்றல்லவா நினைத்தேன்" என்ற பெரியண்ணி அவன் தலையில் லேசாக, செல்லமாகக் குட்டினாள்.

"நினைப்புத்தான் பொழப்பைக் கெடுக்கும்" என்றவன் அதே சிரிப்புடன், "இல்லையா நர்மதா" என்றான் நர்மதாவைப் பார்த்து லேசான கண் சிமிட்டலுடன். உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் நர்மதா.

பிறகு சில நாட்கள் கிருஷ்ணன் ஆளே காணவில்லை. நர்மதாவின் கண்களும்,நெஞ்சமும் அவனைத் தேடின. "இவனுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்? அவனைப் பார்க்காவிட்டால் எந்த வேலையிலும் மனம் லயிக்கவில்லையே ஏன்?" என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

இரண்டு மாதங் கழித்துத் திடீரென்று ஸ்வீட், சாக்லெட் என்று பை நிறைய என்னென்னவோ வாங்கிக்கொண்டு "ரகு, டேய் ரகு" என்று கூவிக்கொண்டு உள்ளே நுழைந்தான் கிருஷ்ணன்.

"எங்கே போயிருந்தீர்கள் இத்தனை மாதமாய், இப்போது ரகு, ரகு என்று காட்டுக்கூச்சல் போடுகிறீர்கள்?" என்றாள் நர்மதா அதட்டும் குரலில்.

"நர்மதா நான் இல்லாமல் மிகவும் ஏங்கினாயா? குரலில் இத்தனை கோபம் தெரிகிறதே" என்றான் அவளைச் சீண்டும் குரலில்.

"ஏங்கவும் இல்லை, தூங்கவும் இல்லை" என்றவள் டக்கென்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

இருவரும் பேசிக் கொணடிருந்ததைப் பார்த்த பூமா, "எப்போது பார்த்தாலும் அவளோடு என்ன கலாட்டா?" என்றாள் சிடுசிடுத்த குரலில்.

"ஒன்றுமில்லை சின்ன அண்ணி. எப்போது பார்த்தாலும் ஏன் என் அண்ணாக்களோடே சுற்றிக் கொண்டிருக்கிறாய்? ஏதாவது நல்ல வேலை தேடிக்கொள்ளக் கூடாதா?" என்று எப்போதும் நச்சரிக்கிறாள் சின்ன அண்ணி" என்றான் வழக்கமான அவன் குறும்பு புன்னகையுடன்.

"நம்பிட்டோம்" என்ற பூமா உதட்டைச் சுழித்தவாறு உள்ளே சென்றுவிட்டாள்.

பிறகுதான் தெரிந்தது, அவன் ராணுவத்தில் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டான் என்று.

"ஏன் கிருஷ்ணா, மிலிட்டரியில் சேர்ந்தாய்? அம்மா,அப்பாவின் அருகில், அடிக்கடி இங்கே வந்து போகும்படி ஏதாவது ஒரு பாதுகாப்பான வேலையாக தேடிக்கொள்ளக் கூடாதா?" என்றாள் ஆற்றாமையுடன்.
"என்ன அண்ணி அப்படிச் சொல்கிறீர்கள்? மிலிட்டரியில் வேலை செய்பவர்கள் முட்டாள்களா? யாரோ ஒருவன் எல்லையில்,துப்பாக்கி முனையில் நம் உயிரையும், மானத்தையும் காக்கப் போராடிக் கொண்டிருப்பான்! நாம் சுகமாக அம்மா கையால் சாப்பிட்டுக்கொண்டு, கொசுவுக்குக்கூட பயந்துகொண்டு போர்வையில் ஒளிந்து தூங்கவேண்டுமா? ஒருவர் எல்லையில் நின்று போராடும்போது நாம் வீட்டில் நிம்மதியாக இருந்தால், எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவர் உழைக்க, குடும்பம் மொத்தமும் உட்கார்ந்து சாப்பிடுவது போல்தான். நம் அரசாங்கம் வீட்டிற்கு ஒருவர் ஆணோ, பெண்ணோ கட்டாயம் மிலிட்டரியில் பணிபுரிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும்!" ஆவேசமாகக் கூறினான் கிருஷ்ணன்.

தற்செயலாக தனிமையில் கிருஷ்ணனைச் சந்தித்தபோது தன் வாழ்த்துகளைத் தெரிவித்தாள் நர்மதா. "எப்படி இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்றாள் சிரித்துக்கொண்டு.

"பகவான் கிருஷ்ணனின் தொழில் காத்தல்தானே! அவர் பெயரை நான் காப்பாற்ற வேண்டாமா! அது மட்டுமல்ல, எனக்குப் பிடித்தது ராணுவ வீரன் வேலை. எனக்கு பிடித்த பெண் நர்மதா. வேலை இப்போது என் கையில்! நர்மதா எப்போது என் கையில்?" என்றான். நர்மதா சிரித்துக்கொண்டு போய்விட்டாள்.

அன்று மாலையே நர்மதாவைப் பெண்கேட்டுத் தன் பெற்றோருடன் வந்துவிட்டான். பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஒருவனுக்குப் பெண் தர முதலில் நர்மதா வீட்டில் எல்லோரும் மறுத்தனர். நர்மதாவின் பிடிவாதத்தாலும், கிருஷ்ணனின் விடாமுயற்சியாலும் திருமணம் இனிதே முடிந்தது.

பட்டாம்பூச்சிகள் போல இருவரும் பறந்து திரிந்தனர். ஒருவரில்லாமல் ஒருவர் வாழமுடியாது என்று மற்றவர்கள் கூறும்படி வாழ்ந்தனர். வானவில்லைப் போன்ற அவர்கள் வாழ்க்கை வானவில்லைப் போலவே விரைவில் மறைந்தது. பாகிஸ்தான் சோல்ஜர் அடித்த ஒரு குண்டால் அவன் உயிர் பிரிந்து உடல்மட்டும் வீட்டிற்கு வந்தது.

"நாங்கள் அப்போதே சொன்னோம். மிலிட்டரிக்காரனுக்கு அற்பாயுசு என்றால் எங்கள் பேச்சை யார் கேட்கிறார்கள்!" என்று அந்த நேரத்திலும் குத்தலாகப் பேசினாள் பூமா. கௌசல்யாவின் கடுமையான பார்வையால் அமைதியானாள்.

அன்றில் பறவைகள் இரண்டில் ஒன்று இறந்தால் மற்றொரு பறவை உயிர் வாழாது என்று தெரியும். அதேபோல் தன்னைத்தானே முடித்துக்கொள்ள நினைத்த போதுதான் கிருஷ்ணனின் உயிர் தன் உயிரில் கலந்திருப்பதை உணர்ந்தாள் நர்மதா. கிருஷ்ணனின் வாசம் தன்னில் அடிப்பதை உணர்ந்தாள். பிறந்த குழந்தையிலும் தன் கிருஷ்ணனின் வாசம் அடிப்பதை உணர்ந்ததால் வாசவி என்று பெயரிட்டாள். கிருஷ்ணனின் வீரத்திற்கு அளித்த 'வீர் சக்ரா' விருதைக் குழந்தைக்கு அணிவித்து மகிழ்ந்தாள்.

ஒருநாள் மூன்று அண்ணன்களும் ஒன்றாக உட்கார்ந்து, அவள் மறுமணம் பற்றிப் பேசினர். அவளுக்கும், குழந்தை வாசவிக்கும் ஒரு ஆண் துணை வேண்டும், கணவன் ஒருவனால்தான் தைரியமும், நல்லதுணையும் தரமுடியும் என்றனர்.

உள்ளே சென்ற நர்மதா, தன் கணவன் வாங்கிய 'வீர் சக்ரா' விருதை எடுத்து வந்தாள்.

"அண்ணா,இந்த வீர் சக்ரா விருதைவிட வேறொரு ஆண்துணை வேண்டுமா? இதைத் தவிர வேறு எந்த ஆண் என் குழந்தைக்கு தைரியமும்,பெருமையும் தரமுடியும்? என் கணவரின் வாசனையை நான் என் குழந்தையிடம் உணர்ந்தேன். அதனால் தான் வாசவி என்று பெயரிட்டேன். மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நான் உறுதியாக இருப்பவள். வீர் சக்ரா வாங்கிய ஒரு மாவீரர் என் கணவர். அவரைத் தவிர வேறொருவர் எனக்குக் கணவனாகவோ, என் மகளுக்குத் தந்தையாகவோ ஆகமுடியாது. ஆகவே இந்த முயற்சிகளைக் கை விடுங்கள். அண்ணா, அண்ணி எனக்கு ராணுவ மருத்துவ மனையில் நர்ஸ் வேலைக்கு உத்தரவு வந்துள்ளது. வாசவியையும் அங்கேயே ஸ்கூலில் சேர்த்துவிடலாம்."

"நிமிர்ந்த நன்னடையும்,நேர்கொண்ட பார்வையும்தான் நர்மதா" என்றாள் கௌசல்யா.

பானுமதி பார்த்தசாரதி
More

தவிப்பாய், தவிதவிப்பாய்
Share: 




© Copyright 2020 Tamilonline