|
|
|
"வீணர்களைச் சீறும், வெந்தணலும் தானுமிழும் பழகுதமிழ் 'வானமுதம்' பாரிக்கும் சுந்தரனின் பண்மகிழ்ந்து பயனுண்டு பல்லாண்டு கூறுதுமே"
இப்படிப் 'பல்லாண்டு' கூறி வாழ்த்தியவர் கவிஞர் திருலோகசீதாராம்.
"கன்னிப் பெண்ணைக் கண்ட ஜோக்கிருக்கு - அதில் கடவுள் அருளிய வாக்கு இருக்கு தென்னங் குரும்பைபோல் அழகிருக்கு - அதில் தேங்காயின் பூரணம் தானிருக்கு கன்னித் தமிழ்த் தொண்டர் வாழியவே - எங்கள் கவிஞர் சுந்தரம் வாழியவே!"
இவ்வாறு பாராட்டுகிறார் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. இப்படி அறிஞர் பெருமக்கள் பலரால் பாரட்டப்பட்ட கவிஞர் எஸ்.டி. சுந்தரம், திரைப்பட வசன ஆசிரியர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர். சிறந்த தேசபக்தர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவரும்கூட. ஜூலை 22, 1921ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் துரைசாமி - பூங்கோதை அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே இவருக்கு மனப்பாடம் செய்யும் திறன் மிகுந்திருந்தது. ஒருமுறை கேட்டாலே அதை எப்போது வேண்டுமானாலும் திருப்பிக்கூறும் ஆற்றல் கொண்டிருந்தார். அடிப்படைக் கல்வி பயின்ற இவர், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். இனிய குரல் வளமும், வசனங்களை ஒருமுறை கேட்டவுடன் நினைவில் வைக்கும் திறனும் இருந்ததால் ஆரம்பத்தில் பாலபார்ட் வேடங்களில் நடித்தார்.
இவரது தமிழார்வத்தை அறிந்த ராஜமாணிக்கம் பிள்ளை, திருவையாறு அரசு கலைக்கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தார். உடன் பயின்றவர் பிற்காலத்தில் எழுத்தாளராகப் புகழ்பெற்ற கு. ராஜவேலு. வித்வான் படிப்பில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார் சுந்தரம். அது விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம். நாடெங்கும் சுதந்திர தாகம் எழுச்சி பெற்று விளங்கியது. சுந்தரத்தையும் அப்போராட்டம் ஈர்த்தது. 1942ல் நிகழ்ந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். நாட்டைப்பற்றி எண்ணி வருந்தினார். சிறையில் கிடைத்த நேரத்தில் இவருள் உதித்த கற்பனையை 'கவியின் கனவு' என்னும் பெயரில் நாடகமாக எழுதினார்.
சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 'சக்தி' கிருஷ்ணசாமியின் நட்பு கிடைத்தது. நாடகத்திலும், கவிதையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவருடன் இணைந்து 'சக்தி நாடக சபா' நாடகக்குழுவை உருவாக்கினர். அதன்மூலம் தான் எழுதியிருந்த 'கவியின் கனவு' நாடகத்தை மேடையேற்றினார். இதில் சிவாஜி கணேசன், எம்.என். நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்ட அக்காலத்தின் பிரபல திரைப்பட, நாடக நட்சத்திரங்கள் நடித்தனர். நாடகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான முறைக்குமேல் இந்நாடகம் மேடையேறியது. 'கவியின் கனவு ஸ்பெஷல்' என்று திருச்சியிலிருந்து நாகப்பட்டினத்துக்குத் தனி ரயில் விடப்பட்டதிலிருந்தே இந்த நாடகத்தின் புகழைப் புரிந்துகொள்ள முடியும்.
எழுத்தாளர் கல்கி, "தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் திரு எஸ்.டி. சுந்தரமும் ஒருவர்" என்று விமர்சனம் எழுதினார். "நல்ல கவிஞர். உயர்ந்த குறிகோள்கள் உடையவர்" என்று பாராட்டினார் பேராசிரியர் டாக்டர் மு.வ. நாடக வெற்றி, திரைப்பட வாய்ப்பையும் தேடித் தந்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் - ஜானகி இணைந்து நடித்த 'மோகினி' திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. 1948ல் சுந்தரத்துக்கு ஜெயலட்சுமியுடன் திருமணம் நடந்தது. ஒரு மகள், மூன்று மகன்கள் என நற்பேறும் வாய்த்தது. 'மனிதனும் மிருகமும்' என்ற பெயரில் சொந்தமாகத் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வேம்புவுடன் இணைந்து இயக்கினார் எஸ்.டி. சுந்தரம். இதில் எம்.என். கண்ணப்பா, சிவாஜி கணேசன், மாதுரிதேவி, சாரங்கபாணி, டி.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கதை, வசனம், பாடல்கள் அனைத்தும் சுந்தரம்தான். சிவாஜி நடித்து வெற்றி பெற்ற 'சாரங்கதாரா' படத்திற்கும் திரைக்கதை, வசனம் இவர்தான். அடுத்து நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்துத் தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற 'விப்ரநாராயணா' படத்திற்குத் தமிழில் வசனம், பாடல்கள் எழுதினார். 'ஓன்றே குலம்', 'பொம்மை கல்யாணம்', 'அவன்', 'பாட்டாளியின் சபதம்' போன்ற திரைப்படங்களும் இவரது வசனத்தில் வெளியானவையே. 'கப்பலோட்டிய தமிழன்' படத்தின் பரபரபக்கும் வசனங்களை எழுதியதும் எஸ்.டி. சுந்தரம்தான். "காலமெனும் காட்டாறு" போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதியது அவரே! |
|
அப்போதைய காங்கிரஸ் கட்சி மீதும், காமராஜர் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் சுந்தரம். நாடு உயர வேண்டும்; தொழில் பெருக வேண்டும்; வறுமை ஒழியவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், நாடகங்களாகவும் எழுதினார். 'அரவிந்தர்' நாடகம் அரவிந்தரின் தூய வாழ்க்கையைத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. 'நம் தாய்' என்ற நாடகத்தை எழுதி, அது தமிழகமெங்கும் நடிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தில் புத்தகமாக வெளியிட்டார். 'வீர சுதந்திரம்' நூல் தேச சுதந்திரத்திற்காப் பாடுபட்ட தியாகிகளைப் பற்றிக் கூறும் நாடக நூல். இவர் எழுதிய சில கட்டுரைகள் மற்றும் நாடகத்தின் தொகுப்புதான் 'இந்தியா எங்கே?' என்ற நூல். 'மகா புத்திசாலி', 'கவியின் குரல்' போன்றவை பிற கட்டுரை நூல்களாகும். 'சிரிப்பதிகாரம்' நூல் நகைச்சுவை நாடகம். 'வானமுதம்', 'காந்தியுகம்' போன்றவை கவிதைத் தொகுப்புகள். 'வானமுதம்' கவிதை நூலை காமராஜ் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். இந்த நூல், காமராஜர் தலைமையில் கவிஞர் கண்ணதாசன் முன்னிலையில் வெளியிடப்பட்ட சிறப்பை உடையது. அந்த நூலில் இவர் எழுதியிருந்த, "சிங்கநாதம் கேட்குது சீன நாகம் ஓடுது" என்ற பாடல் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமானது. பின்னர் அதே தலைப்பில் தனது சொந்தச்செலவில் குறும்படம் ஒன்றையும் எடுத்து வெளியிட்டார். 'உலக நாடகம்' என்ற மாத இதழைத் தொடங்கிச் சிலகாலம் நடத்தினார்.
சிந்திக்க வைக்கும் பல கருத்துக்கள் எஸ்.டி.சுந்தரத்தின் படைப்புகளில் வெளிப்பட்டன. "தர்மத்தை மறந்தவன் ஒரு புழு. நத்தைக்குக்கூடப் பயப்படும் கோழையாகத்தான் இருக்க முடியும். அப்படி பயந்து நடுங்கும் அரசியல் பொம்மைகளுக்கு இனிப் பொது வாழ்வில் வேலையில்லாமல் செய்யும் துணிச்சலை நாம் பெறவேண்டும்" (இந்தியா எங்கே?). "கேவலம் உண்ணுவதும், உறங்குவதும், ஜனத்தொகை பெருக்குவதும், சாவதும், பிறப்பதும், சங்கடப்படுவதும் மட்டுமல்ல வாழ்க்கை. பிறப்பின் பெருங்காரியங்களை ஆற்ற வேண்டும். இறவாத இலட்சியங்களை அடைய வேண்டும். நினைப்பின் நீண்ட செயல்களை நிரந்தரச் சின்னங்களாக்க வேண்டும். வேத ரிஷிகளும், சங்கப் புலவர்களும் கண்ட ஞானச் செல்வங்களை ஞாலமறிய நல்கும் பண்பாட்டுத் தகுதியை சுதந்திர பாரதம் பெற்றே தீரவேண்டும். இமயமும், குமரியும் கண்ட தருமத்தின் செல்வம் வடதுருவ முதல் தென் துருவம்வரை உறவுகொள்ள வேண்டும். இது முடியும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் (வானமுதம் - கவிதைத் தொகுப்பு). "இந்த நாடு இமயம்போல் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். தனக்கு மட்டுமல்லாமல் தாரணிக்கே ஒரு நாகரிக அரணாக விளங்க வேண்டும். அதற்கேற்றபடி பாரதநாடு, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையதாய், பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியதாய்' விளங்க வேண்டும்" என்று கனவு காண்கிறார். (வீர சுதந்திரம் - நாடகம்)
1964 முதல் 1968 வரை தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். இயல், இசை, நாடக மன்றச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது பெற்றவர். சிறந்த நாடக ஆசிரியர் என்ற வகையில், 1974ல், இவருக்கு சங்கீத நாடக அகாதமியின் ஃபெல்லோஷிப் கிடைத்தது. "பாரதத்தின் புகழ் உயரவேண்டும்; நாடு வல்லரசாக வேண்டும்; மக்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்" என்று கனவு கண்ட எஸ்.டி.சுந்தரம், மார்ச் 3, 1979 அன்று மாரடைப்பால் காலமானார். மறைவுக்குப் பின், தமிழக அரசு 1979ல் சிறந்த எழுத்தாளருக்கான 'பாரதிதாசன் விருது' வழங்கி இவரைச் சிறப்பித்தது. இவரது நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
2021ம் ஆண்டு, கவிஞர் எஸ்.டி.சுந்தரத்தின் நூற்றாண்டு. இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் முத்திரை பதித்த மறக்கக் கூடாத முன்னோடி எஸ்.டி.சுந்தரம்.
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|