முதல் துளி
|
|
|
|
மகளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. "வேலையிலிருந்து வீடு திரும்ப தாமதமாகும்."
குழந்தை நவநீதனை உறங்கவைக்க முயன்றுகொண்டிருந்த துளசியின் மனம் அலைபாய்ந்தது. விடிந்தால் காரடையான் நோன்பு. நினைவுதெரிந்த நாளிலிலிருந்து சிரத்தையாக நோன்பு செய்துவருகிறாள் துளசி. சின்னவயதில் பாட்டி சொல்வாள் "டீ துளசி! சத்தமாச் சொல்லுடி, ஓரடையும், உருகாத வெண்ணெயும் வைத்துப் படைத்தேன். ஒருநாளும் என் கணவன் என்னைவிட்டு நீங்காதிருத்தல் வேண்டும்". பின்னர் மஞ்சள் சரடு கழுத்தில் கட்டிவிடுவாள்.
பள்ளியில் கேலி செய்வார்கள். 'கழுத்துல மஞ்சக்கயிறு கட்டிண்டு வந்திருக்கியே, கல்யாணமாய்டுத்தா? யார் புருஷன்?"
தோழி உமா சொன்னாள், "இதுக்குத்தான் நா ஸ்கூலுக்கு வந்த ஒடனே, கயத்த அவுத்துக் கைல கட்டிடுவேன். வீட்டுக்குப் போம்போது கழுத்துல கட்டிப்பேன்".
அம்மா சொன்னாள், "பெரிய அத்தையோட ஆத்துக்காரர் அவள விட்டுட்டு வேற யார்கூடயோ போய்ட்டதால, அத்தை மனசொடிஞ்சு, அரளிக்கொட்டைய அரச்சுக் குடிச்சுச் செத்துப் போய்ட்டா. அதனாலயே பாட்டி விடாப்பிடியா வீட்டுப் பொம்மனாட்டிகள் சிரத்தையாக் காரடையான் நோன்பு செய்யணும்கறா. அவாவா நம்பிக்க அவாவாளுக்கு".
பாட்டியை ஏமாற்ற விரும்பவில்லை துளசி. கயிறு சோபை இழந்து இற்று விழும்வரையில் அதை ஒன்றும் செய்யமாட்டாள். தோழிகளும், ஒவ்வொரு வருஷமும் 2, 3 நாட்கள் கேலிசெய்தபிறகு ஓய்ந்துவிடுவார்கள்.
துளசிக்குத் திருமணமாவதற்கு ஒரு வருடம் முன்பு பாட்டி இறந்துவிட்டிருந்தாள். நோன்பின் பயனோ என்னமோ, கணவன் கணேசன் நல்லவனாயிருந்தான். எந்தப் பிரச்சனையும் இல்லை அவர்களிடையே. ஆனால் இப்பொழுது வேறுவிதமான சங்கடம்.
அமெரிக்காவிலிருந்த மகள் மஞ்சுளாவிடமிருந்து 2 மாதம் முன் திடுக்கிடும் தகவல் வந்தது. அவள் கணவன் பாபு விவாகரத்து கோருவதாக. அதிர்ந்து போனார்கள் துளசியும், கணேசனும். பாபு வேலை செய்யுமிடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் காதல் கொண்டுவிட்டானாம். அவளை மணந்துகொள்ள விரும்புகிறானாம். |
|
கணேசன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, எலும்பு முறிந்து, திண்டாடித் தேறி வந்துகொண்டிருந்த சமயம் அது. "நான் வெளில சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்டுக்கறேன். என்னப்பத்திக் கவலப்படாதே. நீமட்டும் ஒடனே பொறப்பட்டுப் போ" என்றதால் அரக்கப்பரக்கக் கிளம்பி வந்திருந்தாள் துளசி. கீழே குடித்தனக்காரர்களிடம் கணவனுக்கு உதவி செய்யுமாறு சொல்லிவிட்டு வந்திருந்தாள்.
இன்று காலை கணேசனிடம் பேசும்பொழுது அவர் சொல்லியிருந்தார் நாளை காரடையான் நோன்பு என்று. மகளிடம் 'நோன்புச் சாமான் வாங்கி வா' என்று எப்படிச் சொல்வது? அவளைத்தான் நோன்புசெய்யச் சொல்ல முடியுமா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஆகாதோ? "எந்தப் புருஷன் என்னைவிட்டு நீங்காதிருக்கணும்னு வேண்டிக்கணும்னு!" சீறினால்?
தான் செய்யாமலிருந்தால் தப்பா? கணேசனுக்கு உடம்பு முடியாமல் போய்விடுமோ? துளசியின் மனம் குழம்பியது.
குழந்தை தூங்கிவிட்டிருந்தான். முன்னறைக்கு வந்து தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு அதில் மனம் ஒட்டாமல் மகளின் வருகையை எதிர்பார்க்கத் தொடங்கினாள்.
ஒன்பது மணிக்குக் கை நிறையப் பைகளுடன் மகள் மஞ்சுளா உள்ளே வந்தாள். "அம்மா! நாளைக்குக் காரடையான் நோன்புனு எனக்குத் தெரியும். அதான் யூ ட்யூப்ல எல்லாரும் வெல்ல அடை, உப்படை எப்படிப் பண்றதுனு போட்டு வச்சுருக்காளே. ஒனக்கு நோம்பு பண்றதுல எவ்ளோ ஆசைன்னும் எனக்குத் தெரியும். அதான் வேலைலேர்ந்து திரும்பறச்ச இண்டியன் ஸ்டோருக்குப் போய் எல்லாம் வாங்கிண்டு வந்தேன். நீ நாளக்கி அப்பா நன்னாருக்கணும்னு ஜாம்ஜாம்னு நோம்பு பண்ணு. ஆஃபீஸ்லேருந்து வந்து அடைய ஒரு பிடி பிடிக்கிறேன்" என்றாள்.
கண்களில் தளும்பிய நீருடன், வெற்றிலை, பாக்கு, பழம், பசுமஞ்சள் ஆகியவற்றை எடுத்து வைக்கத் தொடங்கினாள் துளசி.
லக்ஷ்மி சங்கர், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
More
முதல் துளி
|
|
|
|
|
|
|