|
|
|
நல்ல காய்ச்சல் அடிக்கிறது. நீண்ட பயணத்தின் காரணமாகக்கூட இருக்கலாம். கூடாரத்தில் கம்பளியைப் போர்த்திக்கொண்டு பேசாமல் படுத்திருந்தேன்.
நம்ம ஊர வச்சு பாக்கும்போது இங்கே நேரம் தவறித்தான் பகலும், இரவும், மாலையும் வருகிறது. புல்வெளியின் பனி மறைய மதியம்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் செம்மறியாடுகள் கூட்டம் கூட்டமாகப் புல்வெளியைத் தேடிவருகின்றன.
கூடாரத்தில் படுத்தபடியே இரண்டு நாட்களாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன்.
உடல் நலமில்லையென்றாலும் கூட முகாம் அதிகாரி விடவில்லை. எனக்குப் பாதுகாப்புப்பணி தரப்பட்டிருந்தது. எல்லோரும் மிஸோராம் காடுகளில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காகப் போயிருக்கிறார்கள். உணவுப் பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் நிரப்பிய தோள்பைகளை மாட்டியபடி டிராக்கில் பாய்ந்து செல்லும்போது அவர்களின் உற்சாகம் கரைபுரளும். மிஸோராம் காடுகளில் ஏதாவதொரு மலைச்சரிவில், அவர்கள் எத்தனையோ குண்டுகள் நிரப்பப்பட்ட உறைகளைக் காலியாக்கியிருப்பார்கள். குறிபார்த்து, மிகத்துல்லியமாக வளையத்துக்குள் புல்லட் பாயும்போது கேப்டன் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்வார். எதிரிகளின் விலா எலும்புகளைத் துளைக்கப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் பின்தலைமுறையினருக்கு அவர் அளிக்கும் சன்மானம் இது
பின் துப்பாக்கி சுடும் வேகம் நிமிடங்களிலிருந்து நொடிகளாகக் குறையும். மிக வேகமாக எதிரிகளை கொல்பவனுக்கு ஒரு தங்கப்பதக்கம்!
துப்பாக்கிகளின் வெடிச்சத்தம் காதுகளை அடைந்தது. நான் அடுக்கி வைக்கப்பட்டிருந்த படுக்கையின் இடையில் எழுந்து உட்கார்ந்தேன். தூர தூரமாகப் பல்வேறு மாநிலங்களின் கூடாரங்களும், அவற்றின் முன்னால் காவல் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட ஒவ்வொரு கேடட்களும் காணப்பட்டனர். அவர்கள் நிலக்கடலை தின்றுகொண்டோ ஆங்கில நாவல்களை வாசித்துக்கொண்டோ உட்கார்ந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரக் கூடாரத்திலிருந்து பங்கஜ் உதாஸின் கஸல் உயர்ந்தெழுந்து, ஆட்டு மந்தையைப்போல் உயர்ந்த புல்மேடுகளைத் தழுவிச் சென்று மனதைக் கவ்வியது. ரொம்ப நேரம் காய்ச்சலை மறந்திருந்தேன். ஆனாலும் தாங்க முடியவில்லை. வயிற்றில் ஏதோ உருள்வது மாதிரி இருக்கிறது. கண்களில் இருட்டு வலை விரித்துவிட்டது. மூச்சுக்காற்று நெருப்பாகத் தகிக்கிறது. ஒருவாய் தண்ணீர் தரக்கூட இங்கே யாருமில்லை கடவுளே...!
பக்கத்திலிருந்த கூடாரத்தில் ஒரு பஞ்சாபி இருக்கிறான். அவனுடைய டர்பனும், பருத்த உடம்பும் மேல்நோக்கி நீண்டிருந்த மீசையும் என்னை பயமுறுத்தியது.
என்னுடைய இயலாமையைக் கவனித்த அவன் அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்த்தான்.
தாங்கமுடியாமல் போனபோது கூடாரத்தின் வெளியே வந்து வாந்தியெடுத்தேன். பின் குழப்பத்தோடு பஞ்சாபியைப் பார்த்தேன். அவன். "க்யா ஹை?" என்று கையசைத்துக் கேட்டான். நான் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் வாந்தியெடுத்தேன்.
அதோ அவன் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறான்.
கடவுளே.....!
கிளம்பும்போது சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கட்டியபடியே அம்மா சொன்னது என் நினைவுக்கு வந்தது.
"டேய் நீ அங்க போய் பஞ்சாபிங்க கூடயும் காஷ்மீரிங்க கூடயும் சேராதே. என்.சி.சி.ன்னெல்லாம் சொல்வாங்க, ஆனா வர்றவங்க ஒருவேள பயங்கரவாதிங்களா இருந்திட்டா நமக்கு எப்படித் தெரியும்?"
அவன் வந்துவிட்டான். நான் கட்டிலில் கவிழ்ந்துகொண்டு கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன். கத்தியால் ஒரு குத்து... இல்லன்னா லாடம் பதித்த பூட்ஸால் ஒரு மிதி போதும்.... வேறெதையும் நான் எதிர்பார்க்கவில்லை.
திடீரென, பருத்த உள்ளங்கை ஒன்று ஆதரவாக என் முதுகை வருடியது.
"வாட் ஹாப்பன்ட்....."
"ஓ, நத்திங்."
கண்களைத் திறந்து மல்லாந்து படுத்தேன். நடுங்கிக் கொண்டிருந்தேன்.
"காய்ச்சலடிக்குதா?" அவன் பஞ்சாபி கலந்த ஹிந்தியில் கேட்டான்.
"கொஞ்சம்...."
"இல்ல, ரொம்ப." பஞ்சாபி திருத்தினான்.
உடனே அவன் தன்னுடைய கூடாரத்திற்குப் போய் ஃபிளாஸ்க்கில் வெந்நீரும் இரண்டு மாத்திரைகளுமாக வந்தான். அவற்றை என் வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றியபோது நான், 'ஏதாவது விஷ மாத்திரையா இருக்குமோ.....?' எனச் சந்தேகித்தேன்.
அவன் கருணையோடு எனக்கு இதமான வெந்நீரைப் பருகக் கொடுத்தான். கம்பளியால் என்னைப் போர்த்தினான். தலையணையில் என் தலையை உயர்த்திவைத்துக் குளிர்ந்த நீரில் கைநனைத்து என் கன்னங்களிலும் கண்ணிமைகளிலும் தடவிவிட்டான். அப்போதும் பங்கஜ் உதாஸ் பாடிக்கொண்டிருந்தார். சினேகத்தின் ஸ்வரம் சமவெளியில் புல்வெளிகளுக்குள் ஒரு வெண்மையான ஆட்டுக் குட்டியைப்போல அடியெடுத்து வைத்தது.
"ஏன் சென்ட்ரி டியூட்டி வாங்கிக்கிட்ட, காடு பாக்கப் போயிருக்கலாமே?" என்று நான் கேட்டேன்.
"எதுக்கு? துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக்கத்தானே. நான் யாரையும் கொல்ல விரும்பல" என்றான்.
நான் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன். அவன் சிரித்துக் கொண்டான்.
"நீங்க கவனிச்சீங்களா..." அவன் பேசத் தொடங்கினான் "கேம்ப் ஆரம்பிச்சது முதல் இன்று காலைவரை எத்தனைமுறை எதிரி எதிரி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்?"
நான் யோசித்துப் பார்த்தேன். இந்தப் பஞ்சாபி சொல்றது உண்மைதான். எதிரியைக் கொல்வதற்கு ஆரோஹெட், ஸ்பியர்ஹெட், வட்டம், சதுரம் இப்படியான கணித வடிவங்களாலான குழுக்களாக பயிற்சி பெறுபவர்களை நிற்க வைக்கிறோம். புல்லட் தீர்ந்துபோனால் விஷக்கத்தியுடன் போரிட வேறுவிதமான பயிற்சி. காட்டுக்குளளே மறைந்திருக்கும் எதிரியை உருக்குலைக்கக் கண்ணிவெடிகள் ஏராளமுண்டு. ஆனால், எதிரி யாரென்று மட்டும் இன்னும் யாரும் நம்மிடம் சொல்லவேயில்லை…
"என்னால முடியல" நான் குழம்பிப் போனேன்.
செம்மறியாடுகள் தண்ணீர் தேடிப் பள்ளங்களில் இறங்கின.
நாங்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை நான் உணர்ந்தேன்.
மத்தியானம் மெஸ்ஸிலிருந்து பருப்பும், சப்பாத்தியும் கணக்காகத் தனியாக வந்தது. சுருட்டிய சப்பாத்தியை என் வாயில் ஊட்டி விட்டான். நான் நிறைந்து வழியும் கண்களுடன் அவனை ஏறிட்டபோது அவன் 'என்ன' என்று விசாரித்தான். |
|
நடுவில் ஒரு பஞ்சாபி நாட்டுப்புறப் பாடலின் வரிகளைப் பாடினான். அந்த வரிகள் முழுதும், பூத்திருக்கும் கோதுமை வயல்களும், இலட்சியமின்றிப் பறந்து திரியும் பறவைகளும் நிறைந்திருந்தன.
கடைசித்துண்டுச் சப்பாத்தியைக் கையில் வாங்கி, நான் அவனுக்கு ஊட்டிவிட்டேன்.
இருட்டினூடாக மரணக்கண்களுடன் சக்திமான் டிரக் வருவதைக் கண்ட பிறகுதான் அவன் என்னிடம் விடைபெற்றான்.
பயிற்சி மாணவர்கள் வெடிமருந்தும், கிரீசும் பூசப்பட்ட உடல்களோடு கூச்சலிட்டபடி வந்தனர். என் கூடாரத்திலிருந்த ஷாஃபிதான் தங்கப்பதக்கம் வாங்கியிருந்தான்.
என்னை யாரும் கவனிக்கவில்லை. யாரோ லேசை அவிழ்த்துத் தூக்கியெறிந்த கனமான பூட்ஸ் என் தலையில் வந்து விழுந்தது. அவர்கள் ஷாஃபியைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
மறுநாள் அந்தப் பஞ்சாபி இளைஞனுக்கும் காய்ச்சல் தொற்றியது. நாங்கள் இருவருமே காய்ச்சலுக்குள்ளான நாளொன்றில் முகாம் முடிவடைந்தது.
திரும்பும் பயணத்தின் ரயில் பெட்டியில் நாங்கள் அருகருகேதான் படுத்துக்கொண்டோம். ஒன்றாகவே உறங்கினோம். ஒன்றாகவே விழித்தோம். நான் நெல்வயல்களைப் பற்றியும், தென்னந்தோப்புகள் பற்றியும் சொல்லும்போது, அவன் கோதுமை வயல்களையும் தினையையும் பற்றிப் பாடினான்.
கல்கத்தாவில் நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளின் பிரிய நேர்ந்தபோது, யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் நெடுநேரம் அழுதோம். அகன்றுபோகும் ரயில்பெட்டியில் ஜன்னலின்வழியாக, விடைபெறும் அவனுடைய கைகள் ஒரு புள்ளியாய்க் கரையும் வரை எனக்காக அசைந்து கொண்டிருந்தன.
வீட்டிற்கு வந்து சேர்ந்து இரண்டு நாட்களாகியும் நான் பஞ்சாபி இளைஞனின் நினைவுகளிலேயே இருந்தேன். ஒரு கடிதம் எழுதலாம் என நினைத்துப் பேனாவை எடுத்தேன்.
தெளிவற்ற ஆற்றொழுக்கினைப் போலிருந்த லெட்டர்பேடின் முன்னால் நான் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். யாருக்குக் கடிதம் எழுதுவது?
முகவரிகள் எழுதப்பட்டிருந்த நோட்டின் பக்கங்கள் முழுவதையும் தேடித்தேடிப் பார்த்தேன். நீல டர்பன் கட்டியிருந்த அவனுடைய பெயர்மட்டும் எந்தப் பக்கத்திலும் இல்லை .
கண்களில் வழியும் நீரோடு நான் படுக்கச் சென்றேன். ஆனால் ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. மீண்டும் காய்ச்சல் அடிக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
உறக்கத்திற்குத் தவித்த அந்த இரவில், தூக்கத்தில் நடப்பவனைப்போல எழுந்து நிலவறையை நோக்கி நடந்தேன். தானியங்களின் வாசனைகளுக்கிடையில் ஒரு பிடி கோதுமையை அள்ளினேன். திரும்பி வந்து என் அறைக்குள்ளிருந்த பீங்கான் ஜாடியில் போட்டேன்.
நிலவொளிபோல் நித்திரை என்மீது பொழியும்போது, குளிர்காற்று வீசும் கோதுமைவயல்களிலிருந்து அவன் பாடும் ஒற்றைக்குரல் எனக்குக் கேட்கிறது....
அப்பாடல் என் நெல்வயல்களைத் தேடிக் காற்றில் மிதந்து வந்துகொண்டிருக்கிறது.....
மலையாள மூலம்: சந்தோஷ் எச்சிகானம் தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ |
|
|
|
|
|
|
|