Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில் | கவிதைபந்தல் | சிறுகதை | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
தங்கக்குடம்
- டாக்டர் பிரேமா நந்தகுமார்|ஏப்ரல் 2020|
Share:
கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டன. பெத்தன்ன ராஜு செல்வந்தர். அரசியலில் பெரும்புள்ளி. அறுபத்தெட்டு வயதிலும் பீமன் போன்ற தோற்றம். இவரது மகன் திரிவிக்கிரம ராஜுவுக்கும் தந்தையின் தோற்றப்பொலிவு உண்டு. ஆனால் வயதில் சிறியவன். இருபத்தி ஐந்து வயதுதானே! உயரமாக, அகன்ற புஜங்களுடன் மிடுக்காக இருப்பான். எலுமிச்சம்பழ வர்ணம்; முகத்தில் புத்திசாலிக்களை, அமெரிக்காவில் ஓராண்டு படித்து, சென்னையில் சேர்ந்திருக்கிறான்.

பின் கேட்பானேன்! பெத்தன்ன ராஜு நாட்டுப்பெண்ணைத் தேடினார். படிப்பு, அழகு, செல்வம், செல்வாக்கு அனைத்திலும் பையனுக்கு ஈடு வேண்டும். அது சுலபத்தில் முடிகிறதா? மத்தியதரக் குடும்பத்துப் பெண் சுலோசனா கிடைத்தாள். விக்ரமனுக்கும் அவன் அம்மாவுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. பெத்தன்ன ராஜுவை ஒருவாறு சம்மதிக்க வைத்தார்கள்.

சுலோசனாவின் தந்தை சாதாரண விவசாயத்துறை ஆபீசர். தன் சக்திக்கும் மீறியே ஏற்பாடுகள் செய்தார். சொந்த நிலத்தில் இரண்டு ஏக்கரா, ரொக்கமாக முப்பதாயிரம், 30 சவரன் தங்கநகை என்று ஒரு குறைவும் வைக்கவில்லை. பி.எஸ்ஸி. படித்த சுலோசனாவின் கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை.

"நான் மாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லலாமா சுலோ? என் பெண்ணுக்குச் செய்கிறேன். இந்த மாதிரிப் பையன் கிடைப்பது ரொம்ப அதிர்ஷ்டம்."

"அதில்லை அப்பா, அந்தப் பையனின் தந்தை நிஜமான அரசியல் தந்திரவாதி. முதலில் ஒன்றும் வேண்டாம் என்று கூறி விட்டு, பிறகு ஒவ்வொரு நைச்சியம் செய்து கேட்டுப் பெற்றுக்கொள்கிறார். எனக்கப்புறம் கமலாவும், கருணாவும் இருக்கிறார்கள். யோசிக்க வேண்டாமா?"
"முதல்பெண் கல்யாணம். உனக்குப் புரியாது. பெரியவருக்குச் சின்னச் சின்ன ஆசை. அப்படி உயர்வான பிள்ளை எனக்கு இருந்தால் நானும் அப்படிக் கேட்பேனோ என்னமோ?"

"உன் நல்லதனம் அப்படிப் பேசச் சொல்கிறது. அவர் உன்னை இத்தோடு விடுவாரா என்ன?"

"சீ சீ அசடு, பெரியவர்களை அப்படிக் கூறுவது தவறு. நேற்றுக்கூட அவரிடம் பேசினபொழுது எவ்வளவு பிரியமாக இருந்தார் தெரியுமா? எனக்குச் சிரமம் கொடுக்கும் இப்பழங்கால வழக்கங்களைத் திட்டினார். எழுபத்தி ஐந்து காவடி பட்சணம் போதும், அதிகமாக வேண்டாம் என்றார்."

"எழுபத்தி ஐந்து காவடியா? இருபதே அதிகம் என்றேனே! என்ன அப்பா, முன்யோசனையே இல்லாமல் நீங்கள்?...."

"கவலைப்படாதே சுலோ. அம்மாவுக்கும் பெருமையாக இருக்கும். எனக்கு என்ன பிள்ளையிருக்கிறானா, சொத்து வைக்க? கடவுள் அருமையான மூன்று பெண்களைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் நல்ல இடத்தில் சேர்ந்து வாழ்வதைத் தவிர வேறு என்ன வேண்டும்? அடுத்த வாரம் உன் திருமணம் முடிந்ததும் நிம்மதியாக இருக்கும்."

நரசிங்கராஜு காற்றாடுவதற்காக வெளியில் கிளம்பிச் சென்றார்.

சுலோவின் குணம் தெரிந்தவராதலால் அவளிடம் கூறவில்லை. ஆனால், நரசிங்கராஜுவின் மனம் கவலையில் ஆழ்ந்திருந்தது. நேற்றுப் பெத்தன்ன ராஜு பிரியமாகப் பேசியபோது எழுபத்தி ஐந்து காவடி பட்சணம் தவிர ஒரு வெள்ளிக்குடமும் சீருடன் வைக்குமாறு கூறியிருந்தார். சுலோவின் தந்தை மெல்லத் தனது நிலையை விளக்கிக் கூறியும் அவ்வரசியல் மேதை மசியவில்லை. காந்தியும், கதரும், விவேகாநந்தரும் காஷாயமும் வெளிப்பார்வைக்குத் தானே!

யோசித்துக்கொண்டே நடந்த நரசிங்கராஜு, கோதா பீடத்தின் வாயிலுக்கு வந்ததை உணர்ந்தார். கோதா பீடம் என்பது ஒரு பெரிய ஆசிரமம். அந்த வட்டாரத்தில் உள்ள ராஜுக்கள், பல பிரபல வைசியர்கள், வைணவர்களுக்குக் குருவான ஸ்ரீமந் நரசிம்ம யதீந்திரர் அவ்வாசிரமத்துப் பீடாதிபதி. மகாயோகி. தபஸ்வி. வடமொழியிலும், தெலுங்கு இலக்கியத்திலும், திராவிட கிரந்தங்களிலும் தோய்ந்தவர். உள்ளே சென்று குருவை தண்டனிட்டால் மனதிற்கு அமைதி ஏற்படும் என்று ராஜுவுக்குத் தோன்றியது. ஆசிரமத்துள் நுழைந்தார். கேட்டிற்குள் பெத்தன்ன ராஜுவின் கார் நின்றது. தயங்கிய அவரிடம் ஆசிரமத்துக் காவலாளி வந்தான்.

"வாங்க! கல்யாணச் சாப்பாட்டை. அடுத்த வாரம் எதிர்பார்த்திட்டிருக்கேன். சம்மந்தி அம்மாதான் உள்ளே பேசிட்டிருக்காங்க. நீங்க திண்ணையில் இருங்க."

யதீந்திரரது திருவோலக்கத்தின் வெளியே ராஜு "ஸ்ரீனிவாசா! நீயே துணை!" என்றவாறு திண்ணையில் அமர்ந்தார். உள்ளே பெத்தன்ன ராஜுவின் மனைவி குரல் கேட்டது.

"ஐயாதான் வழி பண்ணணும் அவரு புடிச்ச புடிய விடமாட்டேங்கறாரு நேத்து சம்பந்தி ஐயா வந்திருந்தாங்களா? சபையில் சீருக்கு வெள்ளிக்குடம் வைக்கணுமாம். அந்த மனிசன் தலையைக் குனிஞ்சிட்டுப் போனது சங்கடமாக இருக்கு. பையன் வேற வந்து என்னிடம் கூப்பாடு போடுறான். இப்படி வியாபாரப் பேச்சுப் பேசிட்டே போனா பிளேனில் ஏறி அமெரிக்கா போயிருவேன் திரும்பவே மாட்டேன் என்கிறான்."

யதீந்திரர் வெண்கல மணி ஒலிப்பது போன்ற குரலில் அவளைச் சமாதானப்படுத்தினார்.

"அம்மா கல்யாணப் பேச்சு சமயத்தில் கண்ணைத் துடைச்சுண்டு நிப்பாங்களா? கூடாது. உங்களுக்குப் பொண்ணு பிடிச்சிருக்குத்தானே?"

"ஐயா! அது அப்பிடியே ஆண்டாளம்மா தானுங்களே! அழகு, படிப்பு, குணம் - சின்ன வயசுலேர்ந்து கவனிச்சிட்டு வரனே! இவருதான் பணம் பணம்னு கழுதையும் குதிரையும் காட்டிட்டே போனாரு. நல்ல வேளை, என் பிள்ளை நான் சொல்வதைக் கேட்கிறவன்."

"இப்ப வெள்ளிக்குடம் வேணுமாக்கும்."

"எதுக்குங்க? எங்க வீட்டுல இல்லாததா? வெள்ளிக் குடத்தை வச்சிண்டு இவ கோதாவரியில் ஸ்நானத்துக்குப் போகப் போகிறாளா? இந்த மனுசன் கிட்ட ராத்திரிபூராப் பேசினேன். கேட்டாத்தானே? தங்கக் குத்துவிளக்கு மாதிரிப் பொண்ணு வரது. அது இவரு கண்ணுக்கு தெரியலை."

வெளியில் பொங்கி வரும் நன்றியுடன் ராஜு மனம் நெகிழ்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

யதீந்திரர் சிரித்தார்.

"அம்மா, உங்க நல்ல மனசுக்குக் கோதா தேவிதான் அந்தப் பெண் ரூபத்தில் நாட்டுப் பெண்ணாக வரப்போகிறாள் கோதா தேவி சொன்னாள் இல்லையா ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்று? அப்படி உங்க வீடு நிறைந்து இருக்கப்போகிறது. பிள்ளை சம்பாதிப்பதை ஏந்துவதற்கு ஒரு வெள்ளிக்குடம் அல்ல, ஆயிரம் வெள்ளிக்குடம் தேவைப்படும். இன்று மாலை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க."

"ஆகட்டுமய்யா.."

"தீர்த்தம் இதோ வாங்கிக்கொள்ளம்மா."

"மகாப் பிரசாதம்."

தெண்டனிட்டு வெளியில் வந்த பெத்தன்ன ராஜுவின் மனைவி, தன்னுடன் வந்த இரண்டு பெண்மணிகளுடன் காரில் ஏறிச்சென்று விட்டாள்.

நரசிம்ம ராஜு உள்ளே சென்று யதீந்திரரைப் பணிந்தார்.

"உங்க சம்மந்தி வந்துட்டுப் போனாங்க. வெள்ளிக்குடம் என்று ஒரு பிரச்சினையாமே..."

"ஐயா, நான் ஐவேஜி இல்லாதவன் அல்ல. மூன்றும் பெண்கள். அதுதான் யோசனை. இந்த மாதிரி இடத்தை விடவும் மனசு வரலை. எங்கேயேனும் புரட்டணும். இல்லை, நிலத்தை விக்கணும்."

"பிறகு தங்கக்குடம் என்றால்?" யதீந்திரர் ‘கணகண’ என்று சிரித்தார்.

"ஐயாதான் வழிகாட்டணும். ஞானமில்லாதவன் வேறு என்ன சொல்ல?"

ராஜுவுக்குத் தீர்த்தம் கொடுத்து அவரையும் மாலையில் வருமாறு கூறி அனுப்பினார் நரசிம்ம யதீந்தரர்.

மாலையில் கோதா பீடத்தில் பெரிய சபை நடந்து கொண்டிருந்தது. யதீந்திரர் பகவத் விஷயம் சொல்லிக் கொண்டிருந்தார். "ஓங்கி உலகளந்த உத்தமன்" திருப்பாவை விளக்கம். பாவை நோன்பினால் வரும் நன்மைகள், வாடாத பயிர் நிலைகள், ஞானநிறைவு, உலககளந்த உத்தமனாம் திரிவிக்கிரமனின் பெருமை, திருப்பாவையைத் தந்த ஆண்டாளின் பரவச மதுர பக்தி முதலிய விஷயங்கள் குறித்து அமுதமான தெலுங்கில் யதீந்திரர் பேசினார். பேச்சு முடிந்ததும் முன்வரிசையில் உட்கார்ந்திருந்த பெத்தன்ன ராஜுவையும் நோக்கி முகம் மலர்ந்தார்.

"பெத்தன்ன ராஜுகாரு! வெள்ளிக்குடம் வேண்டும் என்கிறீர்களாம்."

உல்லாசப் புன்னகையுடன் ராஜு "ஐயாவுக்குத் தெரியாததும் உண்டோ" என்றார்.

"நரசிங்க ராஜுகாரு, உங்க சம்பந்தி வெள்ளிக்குடம் கேட்கிறார்."

பதில் இல்லை.

"பெத்தன்ன ராஜு... சாக்ஷாத் நந்தகோபன். தெரியுமில்லையா? நம்ம ஊருக்கே அரசன்."

"அம்மா சாக்ஷாத் யசோதா தேவி தானுங்களே" என்று ரங்கராஜு கூறித் தப்பித்தார்.-

"மரி வெண்டி பிந்தி சாலா? சங்காரு பிந்தி இவ்வாலி" (வெள்ளிக்குடம் போதுமா? தங்கக்குடம் தரவேணும்) யதீந்திரரது சிரிப்பு கணீர் என்றிருந்தது.

"தங்கக்குடமா?" நரசிம்ம ராஜு அதிர்ந்து போனார்.

"அதேனய்யா! ஸ்வர்ணபிந்தி ஸாரதோ பெட்டவலே" (ஆமாம் தங்கக் குடமும் சீருடன் வைக்கவேண்டும்.)

தன்னையே கூர்மையாகப் பார்க்கும் யதீந்திரரின் விழிகளைச் சந்திக்க முடியாது தலை குனிந்தார் நரசிங்கராஜு. அவ்விழிகளில் தோன்றியது கடுமையா? கனிவா?

"திருப்திதானே பெத்தன்ன ராஜுகாரு? நான் உத்திரவாதம்."

யதீந்திரர் கண்களில் தெரிவது கேலியா, கோபமா என்று புரியாமல் விடைபெற்றார் பெத்தன்ன ராஜு.

கல்யாணம் விமரிசையாக நடந்தது. ராஜுக்கள் வழக்கப் பிரகாரம் பிள்ளைவீட்டுப் பெண்கள் எவரும் வரவில்லை. வீட்டில் காத்துக் கொண்டிருந்தார்கள். திருமணம் முடிந்து பெண்ணைக் கொண்டு விட்டார்கள். கார், லாரி, வேன், தலைச்சுமை என்று வந்த சாமான்கள் பெத்தன்ன ராஜுவின் கப்பல் போன்ற கூடத்தை நிறைத்தன.

ஆசீர்வாதம் செய்யும் சமயம் யதீந்திரர் பரிவாரத்துடன் வருகிறார் என்று தெரிந்து ஆரவாரம். சம்பந்திகள் அவரை எதிர்கொண்டு நல்ல ஆசனத்தில் அமரச் செய்தார்கள். ஒளிக்கூட்டம் போன்ற காந்தியுடன், உடலெங்கும் பன்னிரு நாமங்கள் துலங்க, முப்புரி நூல் மின்னலாக விளங்க, துவராடை தரித்து, திரிதண்டத்துடன் அமர்ந்திருந்த யதீந்திரர், ஆயிரமாண்டுகள் பின்பு உடையவரே மீண்டும் அவதரித்து வந்துள்ளது போல் தோன்றினார். மணமகனும் மணமகளும் வந்து சேவித்து அவரது ஆசிகளைப் பெற்றனர்.

அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீர் வரிசைகளைப் பார்வையிட்ட யதீந்திரர், தன் சீடனுக்கு சைகை காட்ட, அவன் ஒரு குடத்தைக் கொண்டு சீர் வரிசைகளுடன் வைத்தான். வெள்ளிக் குடத்தையும் தங்கக் குடத்தையும் எதிர்பார்த்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.

"பெத்தன்ன ராஜுகாரு! கோதா தேவி அவதரித்துப் பொன் விளக்காக, இந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்திருக்க்கிறாள். இதுவே அவள் கொண்டுவரும் ஸவர்ண பாத்திரம். இது வற்றாது பால் பொங்கட்டும்" என்றார் யந்தீரர்.

அழகிய வெண்மலர்கள் தீட்டிய அம்மண்குடம் கண்ணிற்கு விருந்தாக இருந்தது. எளிமையில் தெய்வீகத்தை நிலைநாட்டும் சிவந்த மண்குடம். வாடாத செல்வத்தின் பிரதிநிதியாக மாவிலைகளும் தேங்காயும் ஏந்திய மௌன கீதம். பணப்பித்துப் பிடித்தவர்களைக் கண்டு நகைகக்கும் தேர்ந்த ஓவியம். எளிமையில் நிறைவு காட்டும் சாகம்பரி தேவி புகழ்பாடும் புனிதகாவியம்.

யதீந்தரரது கனிவான சொற்கள் கூடத்தில் இருந்தோர் நெஞ்சங்களைக் குளிர்வித்தன.

"பெத்தன்ன ராஜு! நம் பெரியவர்கள் ஸ்வர்ண பாத்திரம் என்றது மண்பாண்டங்களைத்தான். அதற்கு ஈடு வேறில்லை உறவினர் மனம், செல்வநிலை, நல்ல சிந்தனை இவற்றைப் புரிந்துகொள்பவர் நீங்கள் என்ற தைரியத்தில் இப்படிச் செய்தேன்."

நரசிங்கராஜு மனதைக் கவ்விய பயத்துடன் நின்றார். ஆனால் பிள்ளையின் தந்தை நெடுஞ்சாண்கிடையாக யதீந்திரர் முன் தெண்டனிட்டு எழுந்து நின்றார்.

"சுவாமி! மேலும் வார்த்தைகளால் என்னைச் சோதிக்கலாகாது. உங்கள் ஆசீர்வாதம் ஆயிரம் பொற்குடங்களுக்குச் சமானம்" என்று சிறிய குரலில் கூறினார்.

"இது அரசியல்வாதியின் பேச்சு அல்ல என்று நானறிவேன். என் ஆத்மார்த்தமான சிஷ்யன் கூறும் நல்வார்த்தை. கோதா தேவியின் திருவருள் இவ்வீடு நிறைந்து விளங்கும்" என்று வாழ்த்திவிட்டு ஆசிரமத்திற்குப் புறப்பட்டார் யதீந்திரர்.

யதீந்திரரை வழியனுப்பச் சம்பந்திகள் வாசலுக்குச் சென்றார்கள். மனத்தில் நிறைந்த நிம்மதி கண்ணில் கசிய, பிள்ளையையும் நாட்டுப் பெண்ணையும் பார்த்து முறுவல் செய்து, யதீந்திரர் அளித்த பொற்குடத்தை அணைத்தெடுத்து மகிழ்ந்தாள் கலிகாலம் தந்த யசோதா தேவி.

டாக்டர் பிரேமா நந்தகுமார்
Share: 




© Copyright 2020 Tamilonline