Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
பூர்ணிமாதேவி பர்மன்
- சற்குணா பாக்கியராஜ்|மார்ச் 2020|
Share:
சர்வதேசப் பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களுக்கு இந்திய அரசு 'நாரிசக்தி புரஸ்கார்' விருதை வழங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டு விருதுபெற்ற பெண்களில் ஒருவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த முனைவர் பூர்ணிமாதேவி பர்மன். இவருடைய சேவை, வாழ்விடம் இழந்து அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்ட பெருநாரை எனப்படும் அஜுடன்ட் நாரைகளுக்காகத் (Greater Adjutant stork - Leptoptilos dubius) தனித்துப் போராடி அவற்றுக்கு மறுவாழ்வு கொடுத்தது.

பெருநாரைகள் (ஹார்கிலா)
பெருநாரைகள் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் மாராபு நாரை இனத்தைச் சார்ந்தவை. 'ஹார்கிலா' என்ற இந்தப் பறவையினம் 19ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் ஏராளமாகக் காணப்பட்டது. இவை ஊனுண்ணிகள் (carnivore). கழுகுகள் போன்று பிணங்களையும் அழுகும் பொருள்களையும் உண்டு தெருக்களைத் துப்புரவாக வைப்பதில் பெரும்பங்கு ஆற்றின.

20ஆம் நூற்றாண்டில், மனிதரின் ஆக்கிரமிப்பால் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டதாலும், சதுப்பு நிலங்கள், நன்னீர்ப் புலங்கள் அழிக்கப்பட்டதாலும் இவை வாழிடத்தை இழந்தன. இனப் பெருக்கத்திற்காகக் கூடுகட்ட மரங்கள் இல்லை. இரை கிடைக்கும் நன்னீர்ப்புலங்கள் குறைந்தன. விளைவு, இவற்றின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துவிட்டது.

குப்பை மேட்டில் பெருநாரை



தற்போது பெருநாரைகள் கம்போடியாவிலும் இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கிராமங்களிலும், பீஹார் மாநிலத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன. 2010ஆம் ஆண்டு உலகில் காணப்பட்ட 1200 பெருநாரைகளில் 800 அஸ்ஸாமில் இருந்தன. இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் இந்த நாரைகள் கௌஹாத்தி நகரின் வெளிப்புறத்திலுள்ள குப்பை மேடுகளில் இரை தேடுவதைக் காணலாம்.

பெருநாரைகள் அழகற்றவை. இவை கூடுகளிலிருந்து எழுப்பும் ஓசை, இடும் எச்சம், உண்ணும்போது விழும் மீன், பாம்பு போன்றவற்றின் அழுகிய துண்டுகள் ஏற்படுத்தும் துர்நாற்றம் ஆகியவற்றுக்காக ஊரார் இவற்றை வெறுத்தனர். இவை வியாதிக் கிருமிகளைப் பரப்பக்கூடுமென்று நம்பினர். எனவே, தங்கள் நிலத்தில் கூடுகட்டுவதைத் தடுக்க மரங்களை வெட்டினர். நஞ்சு வைக்கவும் சிலர் தயங்கவில்லை. இந்த நாரைகளால் சுற்றுச்சூழலுக்கு நன்மை உண்டு என்பதை அவர்கள் அறியவில்லை.

குஞ்சுகளோடு பெருநாரை



கூடுகளோடு விழுந்த குஞ்சுகள்
பூர்ணிமாதேவி கல்லூரியில் விலங்கியல் படித்தபோது பெருநாரைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் ICUN (International Union for Conservation of Nature) பட்டியலில் அழியும் நிலையில் காணப்படும் பறவையாகச் சேர்க்கப்பட்டிருப்பதையும் பார்த்தார். 2007ஆம் ஆண்டு, முனைவர் பட்ட ஆய்வுக்குப் பெரிய அஜுடன்ட் நாரைகளைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தார். அவை காணப்படும், அஸ்ஸாமிலுள்ள காம்ரூப் மாவட்டத்தில் தாதரா (Dadara) கிராமத்துக்குப் போனார். முன்போல் இவை வயல்வெளிகளில் காணப்படவில்லை!

தாதரா கிராமத்தில் இருந்தபோது, ஒரு மரம் வெட்டப்படுவதை அறிந்து அங்கே சென்றார். மரத்திலிருந்த ஒன்பது கூடுகள் குஞ்சுகளோடு கீழே விழுந்தன. காயமடைந்த குஞ்சுகளைப்பற்றி எவரும் கவலைப்படவில்லை. இப்படி மீண்டும் மீண்டும் நடப்பதை அங்கே காணநேர்ந்தது. பெருநாரைகளின் அவலநிலை பூர்ணிமாதேவிக்கு வேதனை கொடுத்தது. ஏதேனும் செய்யாவிட்டால் இந்தப் பறவையினம் அழிந்துவிடும் என்று அவருக்குத் தெளிவாகப் புலப்பட்டது. தன்னுடைய ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, குடும்பத்தினர், நண்பர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பறவைகளைக் காப்பாற்றும் பணியில் முழுமையாக இறங்கினார்.

இது என் குழைந்தை போல



இவை நம் குழந்தைகள் போல
"எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் வீட்டை அழுக்காக்கினால், நான் அவர்களை வெறுப்பேனா? சுத்தம் செய்ய மாட்டேனா? அதுபோல் இந்தப் பறவைகளும் நம்முடையவை. இவற்றைக் காப்பது நமது கடமை" என்று பூர்ணிமாதேவி புரியவைத்தார். சுற்றுச்சூழலுக்கு இவை தேவை என்பதை எடுத்துக்காட்டினார்.

நெசவு அவ்வூர்ப் பெண்களின் முக்கியக் கைத்தொழில். அதற்கு அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்று, அவர்களுக்கு வேண்டிய உயர்தரப் பட்டு, பருத்தி நூல்கள், கருவிகள் வாங்கிக் கொடுத்தார். பெரிய அஜுடன்ட் பறவையின் படம்போட்ட கம்போச்சா (துவாலைகள்), புடவைகள் நெய்தும், பூவேலை, தையல் போன்ற தொழில் செய்தும் வருமானம் பெருக வழிவகுத்துக் கொடுத்தார்.
விழிப்புணர்வால் நடந்த விந்தை
பறவைகளைக் காப்பாற்ற, அவை கூடுகட்டும் மரங்கள் வெட்டப்படுவதை முதலில் நிறுத்தவேண்டும். அது எளிதல்ல. மரங்களை வெட்ட அரசாங்கத் தடை இருந்த போதிலும் மரங்கள் தனியார் நிலத்தில் இருந்ததால் அரசால் ஒன்றும் செய்யமுடியவில்லை. நில உடைமையாளர்களை அணுகுவது எளிதான காரியமல்ல என்பதும் பூர்ணிமாவுக்குத் தெரியும்.

இளவரசி ஆன் கையால் பசுமை ஆஸ்கார்



முதலில் நில உடைமையாளர் குழந்தைகள் செல்லும் பள்ளிகளில் ஆசிரியர்களின் உதவியுடன் பறவைகளைப் பற்றிய செய்திகளைக் கூறியும், படக்காட்சி காண்பித்தும் மாணவர்களை விழித்தெழச் செய்தார். பறவைகளைக் காக்க வேண்டி நடந்த ஊர்வலங்களில் அவர்கள் உற்சாகத்தோடு பங்கெடுத்தனர். பெற்றோரிடம் பறவைகளைப் பற்றிப் பேசினர்.

அடுத்ததாகப் பெண்களை அணுகினார். ஒவ்வொரு வாரமும் நில உடைமையாளர் வீட்டுப் பெண்கள் செல்லும் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனைகளில் பங்கேற்றார். அவர்களின் நட்பைப் பெற்றபின், மெல்ல மெல்லப் பெருநாரைகளைப் பற்றிய தகவல்களைக் கூறி, படக்காட்சி காட்டி, ஊராரின் கடமை அவற்றைக் காப்பது என்றும், அதனால் அவர்கள் ஊர் பெருமையடையும் என்றும் விளக்கினார். பெண்களுக்குச் சமையல் மற்றும் விளயாட்டுப் போட்டிகள் நடத்தினார். அங்கே பெருநாரையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளை விளக்கினார்.

புறப்பட்டது ஹார்கிலா சேனை
காலப்போக்கில் பெண்களிடம் இந்தப் பறவைகளைப் பற்றிய தாழ்ச்சி மனப்பான்மை மாறத் தொடங்கியது. அவர்கள் தமது பிரார்த்தனையில் ஹார்கிலா பறவைகளின் வாழ்வுக்காக வேண்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இவைபற்றிப் பாடல்கள் எழுதப்பட்டுக் கிருஷ்ண ஜெயந்தி போன்ற விசேட நாட்களில் கோவில்களில் பாடப்பட்டன. பழமையில் ஊறிய இந்தப் பெண்கள், ஹார்கிலாவைத் தங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக் கொண்டது பூர்ணிமாதேவிக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்று.

ஹார்கிலா டிசைன் கொண்ட துணிமணிகள்



அவர்களுக்குப் பூர்ணிமாதேவி 'Hargila Baideu' (ஹார்கிலாவின் சகோதரி) ஆனார். அவற்றைக் காக்கப் பெண்கள் 'ஹார்கிலா சேனை' ஒன்றும் அமைந்தது. ஹார்கிலா பறவை கூடுகட்டும் மரங்கள் வெட்டப்படாமல் பார்த்துக்கொண்டனர். காயமடைந்த மற்றும் மரத்திலிருந்து விழும் பறவைகளையும் குஞ்சுகளையும் பூர்ணிமாதேவியிடம் கொண்டு வந்தனர். இவை, சிகிச்சைக்காகக் கௌஹாத்தி மிருகச்சாலைக்கு அனுப்பப்பட்டன. போலீசார் அதற்கு வாகனங்கள் கொடுத்து உதவினர்.

2012 முதல் இன்றுவரை தாதரா கிராமத்திலும் அருகிலுள்ள இரண்டு கிராமங்களிலும் பெரிய அஜுடன்ட் நாரை கூடுகட்டும் மரங்களை யாரும் வெட்டுவதில்லை. அவை மரத்திலிருந்து விழுந்து காயமடையாமலிருக்க வலைகள் கட்டப்பட்டுள்ளன. பெருநாரைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2007ஆம் ஆண்டில் பூர்ணிமா தேவி ஆராய்ச்சிக்கு வந்தபோது 30 கூடுகள் மட்டுமே இருந்தன. 2016ஆம் ஆண்டில் 150 கூடுகள் ஆயின. இன்று, பறவைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு ஆகியுள்ளது. 70 பெண்களுடன் ஆரம்பித்த ஹார்கிலா சேனையில் இன்று 200 உறுப்பினர்கள் உள்ளனர்.

பூர்ணிமா உயர்த்தியது பெருநாரைகளின் எண்ணிக்கையை மட்டுமல்ல. கிராமத்துப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும்தான் (பார்க்க: பெட்டிச்செய்தி). இதற்காக 2017ஆம் ஆண்டு அவருக்குப் பிரபல 'கிரீன் ஆஸ்கார்' எனப்படும் Whitley Award பிரிட்டிஷ் அரசால் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய அரசாங்கம் நாரிசக்தி விருதும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுத்தது.

கோவிலில் ஊட்டும் விழிப்புணர்வு



இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் முக்கியமானவை:
The UNDP India (United Nations Development Program) Biodiversity Award - 2016
The Royal Bank of Scotland 'Earth Hero Award' (save the species category) - 2016
The Balipara Foundation 'Green Guru Award' - 2016

2019ஆம் ஆண்டு, பெரிய அஜுடன்ட் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். தற்போது கௌஹாத்தியிலுள்ள 'ஆரண்யக்' எனப்படும் காட்டுயிர்ப் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் அவர் பணியைத் தொடர்கிறார்.

பரிசாகக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை மூன்று கிராமங்களில் பெண்களுக்கு நெசவு நூல் வாங்கக் கொடுத்தார்.

"என் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் இந்தப் பறவைகளைக் காப்பேன்" என்ற உறுதியோடு செயல்படும் முனைவர் பூர்ணிமாதேவியின் பணி சிறக்கட்டும். அவரது சேவை உலகில் இன்னும் பலருக்கு உந்துவிசை ஆகட்டும்.

சற்குணா பாக்கியராஜ்,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline