Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
பொது
சு. வெங்கடேசனுக்கு இயல்விருது - 2019
பத்ம விருதுகள்
பால் புரஸ்கார் விருது
முழு மஹாபாரத மொழிபெயர்ப்பு - ஒரு பகீரத முயற்சி
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2020|
Share:
அருட்செல்வப் பேரரசன் செய்துவந்த மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றி முன்னர் அவரது நேர்காணலில் கண்டிருக்கிறோம். ஹரிமொழியில் கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கில மஹாபாரதத்தை ஹரி கிருஷ்ணன் நிரம்ப மேற்கோள் காட்டுவதையும் பார்க்கிறோம். முழு மஹாபாரதத்தைத் தினந்தோறும் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிடும் அரிய பணியை, ஜனவரி 9, 2013ல் தொடங்கினார் அருட்செல்வர். ஏழாண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் பணியை ஜனவரி 14, 2020 அன்று நிறைவு செய்திருக்கிறார். தமிழுக்கு இது ஓர் அருங்கொடை என்பதில் ஐயமில்லை. இது குறித்து அவரோடு பேசினோம்.

தொடங்கியது எப்படி
நண்பர்களிடம் அரசியல் பேசுகையில் ஏற்படும் சச்சரவுகளுக்கு விளக்கம் அளிப்பதற்காகத்தான் மஹாபாரதத்தில் ஆங்காங்கே சில பகுதிகளை மொழிபெயர்க்கத் தொடங்கினார் இவர். "ஏன் மெதுவாகவேனும் முழு மஹாபாரதத்தையும் மொழிபெயர்க்கக்கூடாது?" என்று எண்ணி, விளையாட்டுப் போலத் தொடங்கிய செயல் இது என்கிறார். அவரது நண்பர் ஜெயவேல் இதைப் பரவலாகக் கொண்டு சேர்த்தாராம். ஜெயமோகன் தனது வலைதளத்தில் முழுமஹாபாரதம் குறித்து அறிமுகம் செய்தார். இன்று ஐம்பது லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றிருக்கிறது. "வாழ்வின் முழுமையை அடைந்த நிறைவு ஏற்பட்டுள்ளது" என்கிறார் பேரரசன்.

கங்குலியின் ஆங்கிலம் விக்டோரியன் காலத்து உரைநடை. சற்றுப் பிசகினாலும் பொருள் மாறிவிடும். கங்குலி பல இடங்களில் முற்றுப்புள்ளி இல்லாமல் நீண்ட வாக்கியங்களை எழுதியிருப்பார். புரிந்துகொள்வதே கடினம். ம.வீ. ராமானுஜாச்சாரியாரின் கும்பகோணம் மஹாபாரதப் பதிப்பை அருகில் வைத்துக்கொண்டு இதைச் செய்திருக்கிறார் அருட்செல்வர்.

பிரபஞ்சன் கௌரவிக்கும் மேடையில் நட்சத்திரக் கூட்டம்



கங்குலியின் ஆங்கிலமும், கும்பகோணம் பதிப்பின் மணிப்பிரவாள நடையும் பெரும் சவால்கள். கையில் ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு, சொல் சொல்லாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டியிருந்ததாம். "சிறு பிழையும் ஏற்பட்டுவிடக்கூடாதே. அடிக்குறிப்பில், கும்பகோணம் பதிப்பு, மன்மதநாத தத்தர், பிபேக்தீப்ராய் ஆகியோரின் ஆங்கிலப் பதிப்புகள் ஆகியவற்றில் இருப்பதையும் குறிப்பிட வேண்டும். இதனால் பெருஞ்சோர்வு ஏற்படும். ஆனால் அந்த அத்தியாயத்தை முடித்ததும். அதன் உள்ளடக்கச் செறிவு பெரும் உற்சாகம் தரும்" என்று தான் எடுத்துக்கொண்ட முயற்சியின் கனத்தை விவரிக்கிறார்.

இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு
கும்பகோணம் பதிப்பில் பெரும்பாலான பர்வங்கள் திரு. தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களாலும், விராட பர்வம் திரு. அ. வேங்கடேசாசார்யர் அவர்களாலும், உத்யோக பர்வம் கருங்குளம் திரு. கிருஷ்ண சாஸ்திரிகள் அவர்களாலும், சாந்தி பர்வம் பைங்காநாடு திரு. கணபதி சாஸ்திரிகள் அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. வில்லிபாரதம் சௌப்திக பர்வத்துடன் முற்றுபெறுகிறது. இணையத்தில் உள்ள ஆங்கிலப் பதிப்புகளிலும், தமிழில் புத்தக வடிவில் உள்ள பதிப்புகளிலும் கூட சுலோக எண்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த முழு மஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் அனைத்தும் ஒருவர் கையாலேயே மொழிபெயர்க்கப்பட்டன என்பதை ஒரு சாதனையாகவே சொல்லலாம். ஸ்லோக எண்களும் இருக்கின்றன. மாறாக, கங்குலியின் ஆங்கிலப் பதிப்பில் பலரின் பங்களிப்பு உண்டு.

எழுதிச் சென்ற கடவுளின் கை...
மஹாபாரதம் தன்னளவில் உயிரோட்டம் கொண்டது. மஹாபாரதம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது என்ற எண்ணமே இந்த ஏழு வருடங்களாக என் மனதை நிறைத்திருந்தது. விராட பர்வம் படித்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். முழு மஹாபாரதத்தில் விராட பர்வம் நிறைவடைந்த போது கோடைக்காலம். ஆனால் மழை பெய்தது! சாந்தி, அநுசாஸன பர்வங்களை மொழிபெயர்க்கவோ, உரைக்கவோ அஞ்சுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பித்த பிரதாப் சந்திர ராய் அநுசாஸனம் முடியும் தருவாயில் இறந்து போனார். முன்பெல்லாம் சாந்தி பர்வத்தை முடித்துவிட்டு, பிறகுதான் ஆதி பர்வத்தைத் தொடங்குவார்களாம். கும்பகோணம் பதிப்பின் முன்னுரையிலும்கூட, தாம் சாந்தி பர்வத்தை முதலில் மொழிபெயர்க்கச் செய்ததைக் குறிப்பிடுகிறார் ம.வீ. ராமானுஜாச்சாரியார். அவரும் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்.



ம.வீ.ரா அவர்களின் முன்னுரைகளும், கிஸாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கிலப் பதிப்பைப் பதிப்பித்த பிரதாப் சந்திரராய் அவர்களின் முன்னுரைகளும், கண்ணீரை மட்டுமல்ல நம் நெஞ்சின் குருதியைப் பிழிந்தெடுக்கக்கூடியன. இதுபோன்ற காரியங்களில், 'நமக்கு ஒன்றும் ஏற்படாது' என்ற பெருந்துணிச்சல் எப்போதும் எனக்கு உண்டு. சரியாக அநுசாஸன பர்வத்தை முடிக்கும்போது என் தந்தை காலமானார். என் துணிச்சல் தவிடுபொடியானது. ஒரு மாத காலம் என்னைத் தளர்ச்சி ஆட்கொண்டது. மொழிபெயர்ப்பு தடைப்பட்டு நின்றது. மூடநம்பிக்கை என்று எண்ணினாலும், நடைமுறையில் நிகழும்போது ஏற்படும் தடுமாற்றம் சாதாரணமானதல்ல. மோக்ஷதர்மம், அநுசாஸனம் மொழிபெயர்த்தபோது கற்ற ஆன்ம அறிவியல், கடக்க அரிதான அந்தக் காலத்தைக் கடக்கப் பேருதவி செய்தது.

ஒவ்வொரு பர்வத்தின் தொடக்கமும் முடிவும் சரியாக ஏதோவொரு பண்டிகை தினத்திலேயே நேர்ந்திருக்கிறது. முதலில் அது தற்செயலாகத் தெரிந்தாலும், பொங்கல் சமயத்தில் முழு மஹாபாரதத்தையும் நிறைவு செய்யும்வரை இப்படித்தான். தெய்வீகத் தலையீடு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்றே நம்புகிறேன்.

மஹாபாரதம் - கற்றதும், பெற்றதும்
மஹாபாரதம் மூலம் நான் பெற்றதும், கற்றதும் மிக மிக அதிகம். ஒவ்வொரு பர்வமும் முடிவடையும்போது, தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக 'சுவடுகளைத் தேடி' என்ற பதிவை இடுவேன். என் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தை அவற்றில் உணர முடிந்தது. நடத்தையில் மாற்றம் இருக்கிறது என்று நண்பர்களும், உறவினர்களும் சொல்கிறார்கள். மஹாபாரதம் படித்து வந்த காலத்தில் சனத்சுஜாதீயம், பகவத் கீதை, மோக்ஷதர்மம், அநுசாஸனம், அனுகீதை போன்ற பல பகுதிகளைத் தவிர்த்துவிட்டே படித்திருந்தேன். சிறு வயதில் நான் படித்த மஹாபாரதத்தின் மூலம் நல்ல குணங்களைப் பேணி வளர்க்க முடிந்தது என்றும், இப்போது செய்த மொழிபெயர்ப்பின் மூலம் இந்திய ஞான மரபின் தத்துவங்கள் பலவற்றில் தேர்ச்சியடைய முடிந்திருக்கிறது என்றும் கருதுகிறேன். தொழிலில் முன்பு இருந்ததைவிடப் பல மடங்கு முன்னேறியிருக்கிறேன். இந்த மாறுதல்கள் வாழ்விலும் பிரதிபலிப்பதைக் காண்கிறேன்.
அடுத்து என்ன?
இப்பொழுது செய்திருக்கும் முழு மஹாபாரதத்தில் இவை சூதரால் {சௌதியால்} சொல்லப்பட்டவை, இவை வைசம்பாயனரால் சொல்லப்பட்டவை, இவை வியாசரால் சொல்லப்பட்டவை என்று பிரித்து, வியாசரால் சொல்லப்பட்டவை என்றெல்லாம் அநுமானிக்கப்படும் பகுதியைப் பிரித்தெடுத்து 'ஜெயம்' என்ற வரிசையில் மின்னூலாக்கும் திட்டம் இருக்கிறது. இவ்வரிசையில் ஏற்கனவே, 'வெற்றிமுழக்கம்', 'கொற்றங்கூடல்' என்று இரண்டு புத்தகங்கள் கிண்டிலில் வெளிவந்திருக்கின்றன.

ஆன்லைனில் படிக்க
எப்போதும் எவரும் படிக்க ஏதுவாக, ஆதிபர்வம் ஒன்றாம் அத்தியாயம் முதல் பதினெட்டாம் பர்வமான ஸ்வர்க்காரோஹணிக பர்வம் இறுதி அத்தியாயம் வரை உள்ள முழு மஹாபாரதமும் mahabharatham.arasan.info என்ற சுட்டியில் கிடைக்கும்.
ஒலி வடிவில் கேட்க/பதிவிறக்க: mahabharatham.arasan.info

கிண்டிலில் முழு மஹாபாரதம்
கிண்டில் மின்நூல்களாக 01. ஆதிபர்வம், 02. சபாபர்வம், 08. கர்ணபர்வம், 09. சல்லியபர்வம், 10. சௌப்திகஸ்திரீபர்வம், 11.சாந்திபர்வம் முதல் பாகம், 12.சாந்திபர்வம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள், 13. அநுசாஸன பர்வம் 14. அஸ்வமேதம், ஆஸ்ரமவாஸிகம், மௌஸலம், மஹாப்ரஸ்தானிகம், ஸ்வர்க்காரோகணிக பர்வங்கள் ஆகியன விற்பனைக்குக் கிடைக்கின்றன. https://mahabharatham.arasan.info அல்லது www. amazon.com என்ற சுட்டிகளில் அவை கிட்டும். மஹாபாரதம் தொடர்பான வேறு சில மின்னூல்களும் இங்கே கிடைக்கும்.


அரவிந்த் சுவாமிநாதன்
More

சு. வெங்கடேசனுக்கு இயல்விருது - 2019
பத்ம விருதுகள்
பால் புரஸ்கார் விருது
Share: 




© Copyright 2020 Tamilonline