|
|
இந்தியாவின் மத்திய அரசு ஒரு ஆண்டில் என்ன சாதித்தது (அல்லது சாதிக்கவில்லை) என்று அரசியல் கட்சிகள் கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தடங்கல்களுக்கு நடுவில் நொண்டியடித்து ஒரு வழியாக 'இனிதே' நிறைவேறியது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், மன்மோகன் சிங் நன்றாகத்தான் செயல்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் சற்று எதிர்பாராதவை என்று சொல்லத் தேவையில்லை. அதேபோல, அம்முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தல் முன்னே வரக்கூடும் என்ற பேச்சுக்களும், எதிர்க் கட்சிகளின் மீதான வழக்குகளின் வேகமும் எதிர்பார்க்கப்பட்டவையே. அதிகாரிகளின் மாற்றங்களும் பலரால் சொல்லப்பட்டவை. மொத்தத்தில், அரசியல்வாதிகளின் கணக்குப் போடும் முறை பரவலாகப் புரிந்து விட்டது. சுனாமியின் பின்விளைவுகளில் மீனவர் மற்றும் கடல்சார்ந்து வாழ்வோரது மனப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியமானவை. கடலை நம்பி வாழ்ந்தவர்கள், அக்கடலைக் கண்டு அஞ்சும் நிலை மிகவும் வருந்தத் தக்கது. மாற்றுவேலை வாய்ப்புகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் என்று தன்னார்வ, சமுக சேவை நிறுவனங்கள் யோசிக்க வேண்டும்; செயல்படுத்த வேண்டும். வெறும் பண உதவி, வீடு கட்டிக் கொடுத்தல் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. |
|
·பார்முலா 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்போது தமிழில் வர்ணனையுடன் வருகிறது. 'தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் தமிழ் கொடுமையானதா? இந்த வர்ணனைத் தமிழ் கொடுமையானதா?' என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அவ்வளவு பேத்தல்கள்.
மீண்டும் சந்திப்போம் பி. அசோகன் ஜூன் 2005 |
|
|
|
|
|
|
|