|
|
|
பாப்பாத்தி அம்மாளுக்கும் சரி, அவளது கணவர் தணிகாசல முதலியாருக்கும் சரி. கந்தனை வணங்காமல் பொழுது விடியாது. தினந்தோறும் காலையில் கந்தகோட்டம் சென்று சுவாமி தரிசனம் செய்வது அன்றாட வழக்கம். சிலசமயம் வேலை காரணமாகத் தணிகாசல முதலியாரால் கோவிலுக்குச் செல்ல முடியாது. அப்போதும் கூடத் தவறாமல் தான் மட்டுமாவது சென்று கந்தனை வழிபட்டு வருவதைத் தனது வழக்கமாக வைத்திருந்தார் பாப்பாத்தி அம்மாள். அன்றும் அப்படித்தான் கந்தகோட்டத்திற்கு நடக்க முடியாமல் நடந்து, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்திருந்தார் அவர். காரணம், அவர் நிறைமாத கர்ப்பிணி.
கண்களில் கண்ணீர் பெருகக் கந்தனை வணங்கி வழிபட்டவர், மெல்ல மெல்ல அடிமேல் அடி வைத்துப் பிரகாரத்தை வலம்வர ஆரம்பித்தார். இரண்டு சுற்று வந்தவர், மூன்றாவது சுற்றை ஆரம்பிக்கையில் நடக்க முடியாமல் அமர்ந்து விட்டார். பிரசவ வலி எடுத்துவிட்டது. வீட்டிற்கோ, மருத்துவமனைக்கோ உடன் கொண்டு செல்லமுடியாத வலி. அங்கேயே பிரசவம் ஆனது. 1874ல், கந்தனின் அருளால், கந்தகோட்ட ஆலயத்திலேயே பிறந்த அந்தக் குழந்தைக்கு 'கந்தசாமி' என்று பெயர் சூட்டினர் பெற்றோர்.
கந்தசாமி வளர்ந்தார். சென்னை சர்வ கலாசாலையில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் பயின்றார். பி.ஏ. பட்டம் பெற்றதும் மேற்படிப்புக்காக சென்னை கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். படிக்கும் காலத்திலேயே இவருக்கு நாடக ஆர்வம் இருந்தது. ஆசிரியராக இருந்த மில்லர் நடத்திய பாடங்களும், ஷேக்ஸ்பியர், இப்சன் போன்றோரின் படைப்புகளும் இவரது ஆர்வத்தை விசிறிப் பெரிதாக்கின. கல்லூரியில் பல நாடகங்களுக்கு வசனம் எழுதியதுடன் நடிக்கவும் செய்தார். படிப்பை முடித்ததும் சென்னை அக்கவுண்டென்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வேலை பார்க்கும் காலத்தில், ஓய்வு நேரத்தில் நாடகம் பார்ப்பார். அது நடிப்பு ஆர்வத்தை வளர்த்தது. பம்மல் சம்பந்த முதலியார் ஆரம்பித்து நடத்திவந்த 'சுகுண விலாச சபை'யில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது திறமையைக் கண்டு மகிழ்ந்த சம்பந்த முதலியார், தான் தயாரித்து நடித்த 'மனோஹரன்' நாடகத்தில் 'வசந்தசேனை' பாத்திரத்தை இவருக்கு அளித்தார். பெண்வேடம் பூண்டு, பெண் குரலில் பேசி வில்லி பாத்திரத்தில் நாடக மேடையை அதிர வைத்தார் கந்தசாமி முதலியார். அந்த நாடகத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுபற்றிப் பம்மல் சம்பந்த முதலியார் தனது நாடகமேடை நினைவுகள் நூலில், "எவரும் விரும்பாத வேடத்தை முதல் முதல் எங்கள் சபையில் அன்று பூண்டவர் ம. கந்தசாமி முதலியார் என்பவர். இவர் அக்காலத்தில் என் தமையனர் ஆறுமுக முதலியாருடன், சென்னை கவர்ன்மெண்ட் கலாசாலையில் படித்தவர். அதன்மூலமாக எனக்கு இவரைத் தெரியவந்தது. எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் இவர் எங்கள் சபையில் மிகவும் சில நாடகங்களில்தான் நடித்தார். பிறகு எங்கள் சபையைவிட்டு நீங்கி விட்டார். அதன் பிறகு சில நாடகக் கம்பெனிகளிற் சேர்ந்து என்னுடைய முக்கியமான சில நாடகங்களை அவர்களுக்குக் கற்பித்தார். இங்ஙனமே சில பால நாடகக் கம்பெனிகளிலும் சிறுவர்களுக்கு அவைகளைக் கற்பித்தனர்" என்கிறார்.
தொடர்ந்து பல நாடகங்களைப் பார்த்ததாலும், நடித்ததாலும் கந்தசாமி முதலியாருக்கு நாடக நுணுக்கங்கள் கைவந்தன. தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு முழுக்க முழுக்க நாடகத்துறையில் கவனம் செலுத்தினார். நடிப்பதையும், நடிப்பு சொல்லித் தருவதையும், வசனங்கள் எழுதுவதையும் தொழிலாகக் கொண்டார். ஒரு மகனை மட்டும் தந்துவிட்டு இளவயதில் மனைவி காலமாகவே தனிமை முதலியாரை வாட்டியது. அதனைப் போக்க மகன் எம்.கே. ராதாவுடன் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஆசிரியராகப் போய்ச் சேர்ந்தார். வசனம் எழுதுவதுடன், மாணவர்களுக்கு அவற்றைப் பயிற்றுவிப்பதும் அவரது முக்கிய வேலையானது. அங்கே மற்றொரு நாடக ஆசிரியராக காளி என். ரத்தினம் இருந்தார். அவர் கடுங்கோபக்காரர். ஒத்திகையில் தவறாக நடிக்கும் மாணவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். ஆனால், கந்தசாமி முதலியார் மாணவர்களை அன்போடும் மதிப்போடும் நடத்துபவராக இருந்தார். சிறுவர்களான அவர்கள் தங்கள் குடும்பத்தை, உறவுகளைப் பிரிந்து வந்திருக்கின்றனர் என்பதால் கருணை காட்டினார். அதே சமயம் கண்டிப்புக் காட்டவும் தவறியதில்லை. அவரது திறமையைப் பற்றிக் கேள்வியுற்ற பல இளஞ்சிறுவர்கள் தங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையுடன் அங்கு வந்து சேர்ந்தனர். சின்னப்பா துவங்கி, பாலையா, சக்ரபாணி, எம்.ஜி. ராமச்சந்திரன், கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன் எனப் பலர் கந்தசாமி முதலியாரின் மாணவர்களாக இருந்தனர். தனது மகன் எம்.கே. ராதாவைப் போலவே அனைவரிடமும் அன்பு காட்டி ஆதரித்தார் முதலியார்.
இவரது திறமையைப் பற்றி, பம்மல் சம்பந்த முதலியார், "இவர் சுகுண விலாச சபை நடத்திய எனது பல நாடகங்களை அநேக பால சபைகளுக்குக் கற்பித்தார். சிறு பிள்ளைகளை நடிக்கச் செய்வதில் மிகவும் நிபுணர் என்று பெயர் பெற்றதால் அநேக பால சபைகள் இவரை நாடினார்கள், அன்றியும் வேல் நாயர் கம்பெனி, பாலாமணி கம்பெனி, பாலாம்பாள் கம்பெனி முதலிய பெரிய கம்பெனிகளும் இவரது உதவியை நாடியது எனக்குத் தெரியும். தன் ஆயுளையெல்லாம் நாடகக்கலைக்கு அர்ப்பணம் செய்தவர்களுள் இவர் முக்கியமானவர்" என்று பாராட்டியிருக்கிறார்.
முதலியார் ஆங்கிலம் கற்றவர். ஆங்கில இலக்கியங்கள் பயின்றவர். அதனால் நாடகங்கள் புராண, இதிகாசக் கதைகளாகவே வெளிவருவதில் அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், அல்லி அராசாணி மாலை, பவளக்கொடி, சாவித்திரி ஆகிய நாடகங்களே மீண்டும் மீண்டும் எங்கும் நடத்தப்பட்டன. அதைப் பார்த்துப் பார்த்து மக்கள் மெல்ல சலிக்கத் துவங்கிய காலகட்டம் அது. ஆகவே புதுமையான முறையில் நாடகங்களை நிகழ்த்த விரும்பினார். அதற்கேற்ப பல புதிய நாடகங்களை உருவாக்கி, அரங்கேற்றினார். தமிழ் நாடகத் துறையை புராண, இதிகாச நாடகங்களுக்கு வெளியே பார்க்க வைத்தவர் என்ற பெருமை கந்தசாமி முதலியாருக்குண்டு. 'சுவாமி', 'பிராண நாதா', 'சகியே' என்றெல்லாம் வழங்கிக் கொண்டிருந்த சொற்கள் மாறி, "ஹேய் மிஸ்டர்..", "ஹலோ.. வாட் டூ யூ வாண்ட்?" என்றெல்லாம் ஆங்கிலச் சொற்களும், "கண்ணே", "கண்மணி" என்று தமிழ் வார்த்தைகளும் புழங்கும் களமாக மேடையை மாற்றி அமைத்தார். சமூக நாடகங்களுக்கு, சமூக சீர்த்திருத்தக் கருத்துக்கள் கொண்ட நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரங்கேற்றினார். குறிப்பாக அக்கால எழுத்துலகில் புகழ்பெற்று விளங்கிய ஜே.ஆர். ரங்கராஜுவின் கதைகளை நாடகமாக அரங்கேற்றிய பெருமை முதலியாரையே சாரும். 'இராஜாம்பாள்', 'இராஜேந்திரா', 'சந்திரகாந்தா', 'மோகன சுந்தரம்' போன்ற துப்பறியும் கதைகள், நாடகங்களாகிப் பெருத்த வரவேற்பைப் பெற்றன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய 'மேனகா' கதையை, நாடகமாக அரங்கேற்றியவரும் கந்தசாமி முதலியார்தான். 'மேனகா' நாடகம் பெருவெற்றி பெற்றதுடன் திரைப்படமாகவும் ஆனது. அதற்கு வசனம் எழுதிய கந்தசாமி முதலியார், தனது நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். கிருஷ்ணனை, அப்படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகப்படுத்தினார். மட்டுமல்ல. டி.கே.எஸ். சகோதரர்களுக்கும் அதுதான் முதல் படம். கே.ஆர். ராமசாமி, எஸ்.வி. சகஸ்ரநாமம், சிவதாணு என அனைவருக்கும் அதுதான் முதல் படம். பாரதியாரின் பாடல் முதன் முதலில் இடம்பெற்ற அப்படத்தை இயக்கியவர் ராஜா சாண்டோ. அப்படம் பெருவெற்றி பெற்றது. |
|
எம்.ஜி.ஆர். துவங்கி டி.கே.எஸ். சகோதரர்கள் வரை பலருக்கும் கந்தசாமி முதலியார்தான் வாத்தியார். நாடக நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை திரைத்துறைக்குள் நுழைத்தவரும் முதலியார்தான். வாஸனின் முதல் தயாரிப்பான 'சதி லீலாவதி'யில் எம்.ஜி.ஆர். அறிமுகமானார். அப்படத்திற்கு வசனத்தை எழுதியதுடன், எல்லிஸ் ஆர். டங்கனுக்கு உதவியாளராக, துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். முதலியாரின் மகன் எம்.கே. ராதா கதாநாயகனாக அப்படத்தில் அறிமுகமானார். படம் மகத்தான வெற்றி பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து 'தட்ச யக்ஞம்' போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடிக்க முதலியாரே காரணமானார். எம்.ஜி.ஆர்., முதலியாரைத் தந்தை போன்றும், எம்.கே. ராதாவை அண்ணன் போலவும் கருதினார். எம்.ஜி.ஆரால் பொதுமேடையில் காலில் விழுந்து வணங்கப்பட்டவர்கள் இருவர்தான். ஒருவர் எம்.கே.ராதா. இன்னொருவர் சாந்தாராம். அந்த அளவிற்கு கந்தசாமி முதலியாரையும் அவர் மகன் எம்.கே. ராதாவையும் மதித்தார் எம்.ஜி.ஆர். கந்தசாமி முதலியாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவர் தந்தையைப் போன்ற அன்பை என்மீது காட்டினார்" என்பார்.
தமிழில் புதினங்களை நாடகமாக்கும் வழக்கத்தை முதன்முதலில் தொடங்கி வைத்தவர் கந்தசாமி முதலியார்தான். மட்டுமல்ல, நாடகத்தில் பகல் காட்சி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவரும் இவரே. நாடகங்களுக்கு விதவிதமாக விளம்பரம் செய்வதில் வித்தகர். பல புதுமைகளை அதில் கையாண்டார். இவர் மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் காரணமாக 'நாடக மறுமலர்ச்சியின் தந்தை' என்று இவர் போற்றப்படுகிறார். தமிழ்த் திரையுலகில் அக்காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பலரும் கந்தசாமி முதலியாரிடம் மாணவராக இருந்து நாடகத் தொழில் பயின்றவர்கள்தாம். கே.பி. கேசவன், கே.பி. காமாட்சி, எம்.வி. மணி, கே.கே. பெருமாள், டி.எஸ். பாலையா, எம்.ஜி.ஆர். என அப்பட்டியல் மிக நீண்டது. 'சந்திரமோகனா', 'பக்த துளஸிதாஸ்', 'மாயா மச்சீந்திரா' போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியவர் கந்தசாமி முதலியார்.
சில வருடங்களுக்குப் பின் பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகிய முதலியார், ஸ்த்ரீ பார்ட் சுந்தரராவ் அவர்களின் நாடகக்குழுவில் பணியாற்றினார். பின் பாலாமணி அம்மாளின் குழுவில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அக்கால கட்டத்தில் வேல்ஸ் இளவரசருக்கு முன் நாடகங்களை நடத்தி அவரது பாராட்டுப் பத்திரத்தையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றார். அவருக்குள் இருந்த புதுமைத் தாகம் அவரை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தது. ஒரு நாள் அக்குழுவிலிருந்தும் வெளியேறி 'ஸ்ரீ குமார லட்சுமி விலாச சபா' என்ற பெயரில் புதிய நாடகக் குழு ஒன்றை உருவாக்கினார். மைசூரில் மகாராஜாவுக்கு முன்னால் நாடகங்கள் நடத்திப் பாராட்டுதலைப் பெற்றார். 1925ல் டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்த ஸ்ரீ பாலஷண்முகானந்த சபாவில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சில வருடங்களுக்குப் பின் 'ராமானுகூல சபா' என்பதை நிறுவி தமிழ்நாடெங்கும் சென்று நாடகங்கள் நடத்தினார். பின் பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்றும் நாடகம் நடத்திப் புகழ்பெற்றார். தமிழ் நாட்டில் அக்காலத்தின் முக்கிய நாடகக் குழுக்கள் அனைத்திலும் ஆசிரியராக, ஆலோசகராகப் பங்களித்த பெருமை முதலியாருக்கு உண்டு.
"டி.கே.எஸ். சகோதரர்களோ, அவர்களது நடிகர்களோ நன்றாக நடிக்கிறார்களென்றால் அப்பெரும் புகழ் முழுவதும் கந்தசாமி முதலியாரவர்களைச் சார்ந்தது" என்று புகழ்ந்திருக்கிறார் ஔவை டி.கே. சண்முகம் தனது சொற்பொழிவு ஒன்றில். மேலும் அவர், "நடிப்பின் முக்கியத்துவத்தை இப்பெரியாரால்தான் நாங்கள் நன்குணர்ந்தோம். நடித்துக்காட்டிப் பயிற்றுவிப்பதில் சினிமாவுலகில் திரு பி.கே. ராஜா சாண்டோ அவர்களையும், நாடக உலகில் இப்பெரியாரையுமே நாங்கள் உயர்ந்தவர்களாகக் கருதுகின்றோம்" என்கிறார். இவரது நடிப்புப் பயிற்சியைப் பற்றிக் கூறும்போது, "முதலியாரவர்கள் பயிற்சியளிக்கும்போது நடிகன் சலிப்புறுவானேயன்றி ஆசிரியர் முதலியாரவர்கள் சிறிதும் சலிப்படைய மாட்டார். ஒரு நடிகன் கீழே விழுவது இயற்கையாயிருக்க வேண்டுமென்பதற்காக ஆசிரியரவர்கள் ஐம்பது முறையானாலும் வெட்டுண்ட மரம்போல் விழுந்தே காண்பிப்பார். நாங்கள் மேடையிலிருந்து நடித்துக் கொண்டிருப்போம். எங்கள் ஆசிரியர் பக்கப்படுதாவில் நின்றுகொண்டு எங்களைப் பார்த்தபடி நடித்துக் கொண்டிருப்பார். அழவேண்டிய கட்டங்களில் நாங்கள் அழுவதுபோல் பாவனை செய்வோம். எங்கள் ஆசிரியர் உள்ளே நின்றபடி தேம்பித் தேம்பி அழுவார். அத்துணை நடிப்புணர்ச்சி! அத்துணை ஆர்வம் அவருக்கு. அதே சமயம் அவர் மிகவும் கண்டிப்பானவர். எவ்வாறு தமது மனதில் கற்பனை செய்திருப்பாரோ, அந்த அளவுக்கு நடிகர்கள் ஒத்திகையிலேயே நடித்துக்காட்டும்வரை எத்தனை நாட்களானாலும் நாடகத்தை நடத்த அனுமதிக்க மாட்டார்" என்கிறார் டி.கே. சண்முகம்..
நாடகக் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து, 65ம் வயதில், மார்ச், 8, 1939ல் காலமானார், தமிழ் நாடக உலகின் முக்கிய முன்னோடிகளுள் ஒருவரான கந்தசாமி முதலியார். என்றும் நினைவில் நிறுத்தத் தக்கவர்.
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|
|