|
|
|
முதலாவது மந்திரோபதேசம் - "ராமபிரஸாத் சந்தைக்குப் போய் சாமான்கள் வாங்கிவந்தது"
"நீங்கள் என்றைக்காவது ஒருநாள் சரியாய் சாமான்கள் வாங்கி வந்ததுண்டா? குப்பையும் கூளமுமாய் எல்லாச் சாமான்களையும் வாங்கி வந்தால் நஷ்டம் யாருக்கு? கடைக்காரன் எது கொடுக்கிறானோ அதை வாயைத் திறவாமல் வாங்கி வந்து விடுகிறீர்கள்! கடுகு பாதி மண்! ஆறு தடவை புடைத்தேன். இன்னும் மண் போகவில்லை. புளி கன்னங்கரேல் என்று அடையாயிருக்கிறது. உங்களுக்கு என்று ஒன்பது வருஷப் புளியை அந்தப் பாழாய்ப் போவான் எப்படிக் காப்பாற்றி வைத்திருக்கிறானோ! அவன் வாங்கின காசு கரியாய் மாறாதா? பருப்பு பார்த்து வாங்கினீர்களே! அதற்கு அடித்துக்கொள்ள இரண்டு கைகளும் போதாது. பூ என்று ஊதினால் பறக்கும் இலைப்பருப்பைக் கொடுத்து ஏய்த்துவிட்டான். குண்டுப்பருப்பு ஒரு கடையிலும் கிடைக்காமற் போயிற்றா? திருப்பத்தூர் குண்டுப் பருப்பு சிரிப்பாய் சிரிக்கிறது. உங்களுக்குமட்டும் எங்கிருந்து இலைப்பருப்பு கிட்டிற்றோ தெரியவில்லை? போகும்போதே எண்ணெய் ஒரு கடைக்கு ரெண்டு கடையாக பார்த்து வாங்குங்கள் என்று படித்துப்படித்துச் சொல்லியிருந்தேன்! காறல் எண்ணெயை ஒரு குடம் வாங்கிக் கொண்டு வந்து நிற்கின்றீர்கள். அதை யார் தொடப் போகிறார்கள்? உடனே அந்தக் குடத்தைக் கடையில் கொண்டுபோய் போட்டுவிட்டு வந்து மறுகாரியம் பாருங்கள். நெய் பிணநாற்றம் வீசுகிறது. இதற்கு விலை படிக்கு ஒரு ரூபா கொட்டிக் கொடுத்தீர்கள். குழந்தைகள் இந்த நெய்யை விரலால் தொடமாட்டா. இப்பொழுதே திருப்பி விடுங்கள். இந்த நெய்யை கலத்தில் போட்டுக் கொள்ளுவதைவிட வெறும் அன்னம் புசிக்கலாமே! அந்தப் பழம்புளியைக் கொஞ்சம் கரைத்து ஒரு குழம்பிட்டு இந்த நெய்யையும் குத்திக் கொண்டால் நீங்கள் கொண்டு வந்திருக்கும் இலைப்பருப்பு வாசனை கம் என்று ஊரைத் தூக்கும்! உங்களை எப்படித்தான் உங்கள் தாயார் பெற்றாளோ! வெல்லம் ஆய் விட்டது என்று நான் சொன்னால் உடனே ஒரு மனு வெல்லம் வாங்கிவிட வேண்டுமா? 'தெருப்புழுதி கைநிரம்ப' என்பது நீங்கள் வாங்குகின்ற சாமானுக்காகத்தான் வழக்கத்தில் வந்ததோ! சளிப்பு ஒரு நாழிகை வழி தூரம் அடிக்கிறதே. உங்கள் மூக்குக்குத் தெரியவில்லையா? ஒவ்வொரு நாளைக்கும் ஒரு அணா மூக்குப்பொடி போட்டுக் கொண்டால் உமக்கு வாசனை எப்படித் தெரியும்? இவைகளெல்லாம் போகட்டும். நல்ல அரிசியிருந்தாலல்லவா ஒரு அன்னமாவது சித்தப்படுத்தி, விளவின மோரையாவது விட்டுக்கொண்டு சாப்பிடலாம். புழுத்து வண்டுகள் ஊரும் அரிசியை வாங்கி வந்தீர்களே!"
"நாளை நீ போய் நல்ல சரக்குகள் பிடித்துவா. என்னை வீணாய் நிந்திக்காதே. எதை வாங்கி வந்தாலும் நீ குற்றஞ் சொல்லுகிறாய்"
"நான் சந்தைக்குப் போகிறேன், நீங்கள் சட்டி விளக்குங்கள்; இதுதான் நியாயம்! இந்தப் பேச்சு உங்களுக்குத்தான் அழகாயிருக்கிறது. நீங்கள் எதைக்கொண்டு வந்தாலும் வாய் திறவாமல் ஒப்புக்கொண்டால் நான் நல்லவள். ஒரு பெண்சாதி என்று இருந்தால் புருஷனைப் பார்த்து இப்படிப் பணத்தையும் பாழாக்கி உபயோகமற்ற சாமான்களை வாங்கி வரலாமா என்று கேட்க மாட்டாளா? அது பிசகா? ஏன் நான் ஒரு பேச்சு சொன்னால் வாயில் பொத்து, பொத்து என்று போடுகிறீர்கள்? எக்கேடு கெடட்டும், நமக்கென்ன என்றிருக்க எனக்கு மனம் வரவில்லையே! எனது பாழும் புத்தியை செருப்பாலடிக்க வேண்டும். நல்லது, ஒன்றுக்கும் உதவாத உழுந்து ஒரு மூட்டை கொண்டு வந்தீர்களே! உடைத்துப் பார்த்தால் வறுத்த உழுந்து போலிருக்கிறதே! தோசைக்கரைத்தால் விழுது காணுமா! அப்பளம் செய்தால் வெளுப்பாயிருக்குமா! அந்த மூட்டை உழுந்து அவ்வளவையும் அப்பளமிட்டு உமக்கே கொட்டுகிறேன். நீர்தான் தின்ன வேண்டும்" |
|
"'அப்படியே செய்' என்று வெகு சுலபமாய்ச் சொல்லிவிடுகின்றீர்கள். கண்ணுக்கும் பார்க்க அழகாய் இருந்தால் அல்லவா ஒரு காரியம் செய்யத் தோன்றும். அந்த உழுந்தால் அப்பளமிட்டால் ஓடு போலவே இருக்கும். என் வயிற்று எரிச்சல் தீர நாளை அந்த மூட்டையை மணிகர்ணிகையில் கொட்டி விடுகின்றேன். நல்லது. பாக்கு வாங்கி வந்தீர்களே யார் போட்டுக்கொள்கிறது என்று வாங்கி வந்தீர்கள்? ஒரு பாக்கு மாதிரிக்காக வாயில் போட்டேன். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் கசக்கின்றது. கிராம்பு கலந்த பாக்கு உயர்ந்த பாக்காய் இன்றைக்கு எல்லோரும் போட்டுக் கொள்கிறார்கள். கேடு கெட்டவள் நமது மனைவி என்று தொத்தல் துவர்ப்பாக்கை வாங்கி வந்து வீசி எறிந்தீர்கள். இன்று வெள்ளிக்கிழமை. ஒருவராவது பாக்கு, வெற்றிலை புசிக்காமல் படுக்கார்கள். இது நியாயமா? இதை நான் கேட்கப் போனால் பொல்லாதவள்!"
"நான் சொல்லவில்லையே!"
"நீங்கள் சொல்லாவிட்டால் என்ன! நானே சொல்லிக் கொள்ளுகிறேன். நீ போய் சாமான்கள் வாங்கி வா என்றால் போதாதா?"
"திருப்பித் திருப்பிச் சொல்வதில் என்ன பயன். தூக்கம் அதிகமாக வருகின்றது. பேச்சை நிறுத்தேன்."
"உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும் என்பார்கள். நானும் உள்ளதைச் சொன்னால் பொல்லாதவள்தான். என்ன! வாய் திறக்கவில்லை! தூங்கி விட்டீர்களா?"
அம்மணி அப்பொழுது சொன்ன சொல் ஒன்றுதான் உண்மையாயிற்று. ஏனெனில், இவள் இப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பாள் என்று ராமபிரஸாத் தூங்கிப் போய்விட்டான். மற்ற விஷயங்களைக் குறித்து மறுநாள் பேச நிச்சயித்து அம்மணியும் கண்ணயர்ந்தாள்.
S.M. நடேச சாஸ்திரி |
|
|
|
|
|
|
|