Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கதை உலகில் ஒரு மேதை
- ம.ந. ராமசாமி|ஆகஸ்டு 2019|
Share:
காரை நிறுத்தினேன். வீட்டு வாயிலில் சிறு கூட்டம். அருகில் அமர்ந்திருந்த கமலாவிடம், "எதுக்கு இங்கே கூடி நிற்கிறாங்க?" என்று கேட்டேன். கமலா அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவள். ரிஸப்ஷனிஸ்ட், விரைவில் நான் மணக்கப் போகிறவள்; என்னை மணக்க இருக்கிறவள். அதாவது காதலர்களாக இருக்கிறோம்.

"இதுக்காகத்தான் உங்களை வீட்டுக்கு அழைத்தேன். உள்ளே வாருங்கள் இன்னும் கொஞ்சநேரத்தில் விவரம் தெரியும்" என்றாள் கமலா.

கார் எஞ்சினை நிறுத்தி சாவியை உருவினேன். இடதுபுறம் கதவைத் திறந்துகொண்டு கமலா இறங்கினாள். நானும் ஸீட்டில் வழுக்கி அவள் பக்கமாக இறங்கி, கார் கதவை அடித்துச் சாத்தி அவளைத் தொடர்ந்தேன். கமலாவுக்கு இசை நடை. அந்த நடைக்குத்தக்க தாளகதியில் நடக்க எனக்கும் பழக்கம் இருந்தது.

மரவள்ளிக் கிழங்கை வெவ்வேறு உருவங்களில் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் நாங்கள் பணிபுரிகிறோம். டை கட்டி வேலை பார்க்கும் தொழில் எனது. கமலா ரிஸப்ஷனிஸ்டாக வேலைக்கு வந்த பிறகு அலுவலகத்தில் களைகட்டியது. புவியில் அறுபத்தைந்து ஆண்டுகளை விழுங்கி விட்டு. இன்னும் முப்பத்தைந்து ஆண்டுகள் பணிபுரியப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் சேவகன் ஏழுமலைகூட ஒருநாள் விட்டு ஒருநாள் முகச்சவரம் செய்து கொண்டு வந்தான். பஞ்சகச்ச வேட்டி கட்டிப் பழகிய பஞ்சநாதம் டஜன் பாண்ட்களை ரெடிமேடாக வாங்கி, மார்பு வரை இழுத்துப் போட்டுக்கொண்டு வந்தார். கமலா போன்ற அழகியை வேலைக்கு வைத்துவிட்டு, சிப்பந்திகளுக்கு நூறும் நூற்றைம்பதும் சம்பளம் கொடுப்பதா என்று எண்ணிய நிர்வாகத்தினர் எல்லாருடைய சம்பளத்தையும் இருமடங்காக உயர்த்தினர். நிறுவனத்துடன் தொடர்புள்ளவர்கள் ரிஸப்ஷனிஸ்டை நாளுக்கு ஒரு தடவையாவது பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டுப் போகவேண்டும் என்று வர, நிறுவனத்தின் வியாபாரம் கூடியது. லாபம் உயர்ந்தது. வேலை நிறுத்தம் இல்லை. கதவடைப்பைக் காணோம். கமலா என்னும் நங்கையர் திலகத்தின் முகலாவண்ய விலாசம் அனைத்துக்கும் காரணம்.

எனக்குப் பெருமை பேசிப் பழக்கமில்லை. கமலாவை வேலையில் அமர்த்தியதே நான்தான். பழைய ரிஸப்ஷனிஸ்ட் திருமணம் புரிந்துகொண்டு சென்றதும், வெறொருத்தி தேவைப்பட்டாள். கமலாவைக் கூட்டி வந்து மானேஜிங் டைரக்டர் முன் நிறுத்தினேன். மானேஜிங் டைரக்டர் ஏதும் பேசாமல் அவளை ரிஸப்ஷன் ஹால் மேஜைக்குப் பின்னால் உட்கார்த்தி வைத்தார்.

கமலா காலஞ்சென்ற சுந்தரமூர்த்தியின் இரண்டாவது மகள். எந்த சுந்தரமூர்த்தி என்று கேட்கிறீர்களோ? பாவிகளே, அதற்குள்ளாகவா பேராசிரியர் சுந்தரமூர்த்தியை மறந்து விட்டீர்கள்? ஞாபகப்படுத்தித் தொலைக்கிறேன்.

சுந்தரமூர்த்தி பெரிய பத்திரிகாசிரியர். நாவலாசிரியர், கதாசிரியர். நகைச்சுவையாளர், சொற்பொழிவாளர், அரசியல்வாதி. இலக்கிய உலக ஜாம்பவான். இன்றைய எழுத்தாளர்கள் பலருக்கு அவர் குரு. நான் அவரது சீடன் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இந்தக் கதை எழுதுவதிலிருந்து நானும் ஓர் எழுத்தாளன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

இலக்கியம்பற்றி சுந்தரமூர்த்திக்குக் கொள்கை இருந்தது. இலக்கியம் என்பது சமுதாய முன்னேற்றத்துக்காக என்ற நோக்கம் கொண்டிருந்தார் அவர். "சமுதாயம் உயர வேண்டும் என்றால், மொபைல் கிரேன் கொண்டு வந்து யாராவது உயர்த்தட்டும்" என்பேன் நான். அவரது கொள்கை பிடிக்காவிட்டாலும், அவரை எனக்குப் பிடித்தது. அவரது பிரகாசப் பேச்சுப் பிடித்தது. அவரது மகளின் அழகு பிடித்தது.

சுந்தரமூர்த்தி காலமான பிறகு அவர் வீட்டுக்குச் செல்லும் வழக்கத்தைக் குறைத்துக் கொண்டேன். கமலாவைத்தான் அலுவலகத்தில் சந்திக்கிறேனே! கமலாவின் ஊதியம் வீட்டுக்குத் தேவை. அவளது இரு சகோதரர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் படிப்பு முடிந்து வேலையில் அமரும்வரை கமலா வேலையில் இருந்தாக வேண்டும். எங்கள் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

அது சொந்த வீடு. வீட்டைச் சுற்றி காம்பௌண்டு சுவர். வீட்டை அழகாக வைத்திருந்தார்கள். காம்பௌண்டு சுவரைத் தாண்டி வீட்டின் எதிரே பலர் கூடி நின்றார்கள். சிலர் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு புஸ்தகம். நாட்டில் அனைவரும் படித்தவர்களாகி விட்டார்களோ என்ற எண்ணம் எழுந்தது.

கமலா தன் அறையையும் நேர்த்தியாக வைத்திருந்தாள். மேஜை, அதன்மீது பூப்போட்ட அழகான விரிப்பு, விளக்கு, சில நூல்கள். மேஜை அருகே நான் வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலி. நாற்காலியில் சாய்ந்தேன்.

என்னை உட்கார வைத்துவிட்டு, உள்ளே சென்ற கமலா ஒரு கையில் ட்ரேயில் இரு ஹார்லிக்ஸ் டம்ளர்களுடனும், மறு கையில் மூன்று வயதுச் சிறுவன் ஒருவனைச் சுமந்து கொண்டும் வந்தாள். சிறுவன் கையில் நசுங்கிய மோட்டார் கார் பொம்மை இருந்தது.

"யார் இவன்?" நான் கேட்டேன் ஹார்லிக்ஸ் டம்ளரைக் கையில் எடுத்தபடி.

"இவன் என் அப்பா!" - முறுவலித்தாள் கமலா.

"இவன்னு சொல்லாதே; தகப்பனாருக்கு எப்பவும் மரியாதை கொடுக்கணும்!"

"சரி, இவர் என் அப்பா!"

"இத்தனை வயசுக்கு அப்பறம் உன் அம்மாவுக்கு இப்படி ஒரு ஆசையா வரவேணும்!"

"வாயை மூடுங்க. இவன் என் அம்மாவுக்குப் பேரன்."

"அப்பாங்கிறே, பேரன்கிறே, எனக்கு ஒண்ணுமே புரியலை போ!"

"இவன் என் தகப்பனாரின் மறுபிறவி."

"அப்படீன்னா ..."

"அப்படீன்னா, பம்பாயிலே இருக்கும் என் அக்காவுக்குக் குழந்தையாக அப்பா மறு அவதாரம் எடுத்திருக்கிறார்னு அர்த்தம்."

"நீ வேறே கதை எழுத ஆரம்பிச்சுட்டியா?"

"நீங்க மறுபிறவியை நம்பறீங்களா?"

"இல்லை "

"நான் நம்பறேன். என் தகப்பனார் இந்த சந்திரனாக வந்து பிறந்திருக்கிறார்."

"இவன் பேர் சந்திரனா?"

"சந்திரசேகரன்."

"அது சரி, இவன் உன் தகப்பனாரின் மறுபிறவின்னு எப்படிச் சொல்றே?"

"இப்போ வாசல்லே பார்த்தீங்களே கூட்டம், அத்தனை பேரும் கையில் புஸ்தகத்தோடு இருக்கிறாங்க இல்லையா? அவங்க அவ்வளவு பேரும் இவனுக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்க."

"இந்தக் குழந்தையிடம் வியாக்யானம் கேட்கிறதுக்காக?"

"கிண்டல் இருக்கட்டும். நேற்றுத்தான் என் அக்கா பம்பாயிலிருந்து வந்து இறங்கினாள். அவளுடன் இந்தப் பையன் வந்திருக்கிறான் என்பது தெரிந்து காலையிலேருந்து வீட்டுக்கு முன்னால் வந்து நின்று போனவங்க ஆயிரம் பேராவது இருக்கும்."

"விளக்கம் கேட்கிறதுக்கா?"

"விளக்கம் கேட்கிறதுக்கு இல்லே. ஒருவர் தன் கையில் இருக்கிற புஸ்தகத்திலே ஏதோ ஒரு பக்கத்தில் ரெண்டு மூணு வரி படிப்பார். அந்தப் புஸ்தகம் என்ன, யாரால் அது எழுதப்பட்டதுங்கிற விவரமெல்லாம் இவன் சொல்கிறான். உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா, சோதிச்சுப் பார்க்கலாம்."

"நான் நம்பத் தயாரில்லை."

"சோதிச்சுப் பாருங்கள் என்கிறேனே!"

"இத்தனை நாளாக நீ சொல்லவே இல்லையே, உன் அக்காவுக்கு இப்படி ஒரு மேதை பிறந்திருக்கான்னு?"

"எனக்கே இப்பத்தான் தெரியும். இதைப்பத்தி அக்கா எதுவும் கடிதாசிலே எழுதல்லே. அதுவுமில்லாம நேரில் குழந்தையின் திறமையை உங்களுக்குக் காட்டி உங்களை மலைக்கச் செய்யணும்னு நெனைச்சேன்."

"சரி, வா. இவனைக் கூட்டிக்கிட்டு வாசலுக்குப் போவோம். அவங்க எல்லாரும் எத்தனை நேரமா காத்துக்கிட்டு இருக்காங்களோ!"

கமலா சிறுவனைத் தூக்கிக் கொண்டாள். செலூலாயிட் பொம்மை மாதிரி இருந்தான் சந்திரன். பிறந்ததிலிருந்து முடி எடுக்காததால், அடர்ந்து வளர்ந்திருந்த மயிர் நெற்றியில் விழுந்து கண்களை மறைத்தது. முடியை இரு கைகளாலும் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கொள்ளும் ஒய்யாரம் ஓர் அழகாக இருந்தது.

கமலா பேசிக்கொண்டே உடன் வந்தாள். "காலையிலேருந்து வரும் கூட்டத்தை நீங்க பார்த்திருக்கணும். வருபவங்க கொண்டு வரும் கதைப் புஸ்தகங்களைப் பார்த்தால் தமிழில் இத்தனை புஸ்தகங்கள் அச்சாகி வந்திருக்கிறதான்னு ஆச்சர்யமா இருக்கும். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதை நாயகி அம்மாள், செய்யூர் சாரநாயகி அம்மாள், ஜே. ரங்கராஜு இப்படி பலபேர் எழுதின நாவல்களைக் கொண்டு வந்தாங்க."

வாயில் திண்ணையில் சந்துருவை இறக்கி உட்கார வைத்தாள் கமலா. "சந்துரு, இத்தனை பேர் புஸ்தகத்தை வச்சுக்கிட்டு காத்திருக்காங்களே, அவங்களுக்குப் பதில் சொல்றியா?" என்று அவள் சிறுவனிடம் கேட்டாள்.

சந்துரு கையிலிருந்த உடைசல் மோட்டார் பொம்மையின் சாவியைத் திருகியபடி தலையசைத்தான். கமலா அவனுக்கு வலப்புறமாக உட்கார்ந்தாள். நான் இடப்புறம் அமர்ந்தேன். குழுமி இருந்த கூட்டம் நெருங்கி வந்தது.

"சற்று நெருக்காமல் நில்லுங்க" என்று கமலா கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டாள். எதிரே நின்றிருந்த ஒரு பையனிடம், "இந்தா தம்பீ, நீ முன்னாலே வா முதல்லே நீ படி" என்றாள்.

பையன் கையிலிருந்த பழைய பத்திரிகையைப் பிரித்துப் படித்தான். "கண்ணாயிரம் ஒரு புதிய ஆசாமியுடன் தனியே பேசிக் கொண்டிருந்தான். புது ஆசாமியைப் போலீஸ் வட்டாரத்தில் பார்த்திருந்ததாக சோலைக்கும் மாரிக்கும் ஞாபகம் வந்தது..."

"நிறுத்து!" என்றாள் கமலா. பையன் படிப்பதை நிறுத்தினான், அவள் சந்துருவின் பக்கம் திரும்பி, "சந்துரு, இது என்ன கதை சொல்லு!" என்றாள்.

சிறுவன் கையிலிருந்த மோட்டார் பொம்மையில் நுணுக்கமாக ஆழ்ந்திருந்தான்.

"சொல்லு, சந்துரு!"

அவன் நிமிரவில்லை .

"என் கண்ணு இல்லையா? சித்தி சொன்னால் கேட்கணும்."

"மாத்தேன், போ!" மழலை சிந்தினான் சிறுவன்.

"சாக்லேட் வாங்கித் தரேன், சொல்லு."

"இப்போ வாங்கித் தா!"

"சொல்லு, வாங்கித் தரேன்.

சந்துரு விழித்தான். கமலா எதிரே நின்றிருந்த பையனிடம் பத்திரிகையில் அவன் படித்த வரிகளை மீண்டும் படிக்கச் சொன்னாள்.

பையன் படித்தான்.

"துப்பறியும் சாம்பு!" என்றான் சந்துரு கணீரென்ற குரலில். தரையிலிருந்து நான் ஜிவ்வென்று கிளம்பி அந்தரத்தில் ஒரு பல்டி அடித்து இறங்குவதாக உணர்ந்தேன்.
"எங்கே, அந்தப் பத்திரிகையைக் கொடு" என்று பையனிடம் கேட்டு வாங்கிப் பார்த்தேன். 'துப்பறியும் சாம்பு' கதைதான் அது. விளாங்காய்த் தலையுடன், குடமிளகாய் மூக்குமாக ராஜூ போட்ட படத்தோடு கதை இருந்தது. "இந்தக் கதை யாரால் எழுதப்பட்டது, சந்துரு?" கேட்டேன்.

"தேவன்!"

கண்களை மூடித் திறந்தேன். எதிரே நின்றிருந்தவர்கள் மறையவில்லை. கமலாவும் சந்துருவும் அருகில் உட்கார்ந்திருந்தனர். நிச்சயமாக இது கனவு அல்ல என்பது புரிந்தது.

"நீ போ தம்பீ! நீங்க வாங்க!" என்று ஒரு பெரியவரைக் கமலா அழைத்தாள். "படிங்க!" என்றாள்.

பெரியவர் புஸ்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். சிறுவனைத் திணற அடிக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

"தம்பிய ரல்லது தனக்கு வேறுயிர்
இம்பரில் இலதென எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் எதிர்ந்த போரிடை
அம்பிடை தொடுக்குமோ அருளின் ஆழியான்"


படித்துவிட்டுப் பெரியவர் மூக்குக் கண்ணாடியின் கீழ்ப்புற வில்லைகள் மூலம் சந்துருவை நோக்கினார்.

"சொல்லுடா, கண்ணா! யார் எழுதின கவிதை இது?" கமலா கேட்டாள்.

"சாக்லேத்!"

எதிரிலிருந்த கூட்டத்தினரிடமிருந்து சிரிப்புச் சருகுகள் உதிர்வது போல எழுந்தது.

"சாக்லேட் வாங்கித் தரேன். யார் எழுதின கவிதை அது சொல்லு."

"கம்பர்"

"என்ன புஸ்தகம் அது?"

"ராமாயணம்"

"எந்த அத்தியாயம்?"

சந்துரு விழித்தான்.

"எந்த அத்தியாயம்னு கேட்காதே எந்தக் காண்டம்னு கேள்" என்றேன்.

"எந்தக் காண்டம், சந்துரு?"

"கிஷ்கிந்தா காண்டம்."

தலைக்கு மேல் கை கூப்பிப் பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு விட்டுப் பெரியவர் நகர்ந்தார்.

அடுத்து எதிரே வந்து நின்றவன் இளைஞன். கையிலிருந்த புஸ்தகத்தில் ஒரு பக்கத்தை நோக்கிப் படித்தான்." இப்படி வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த ஆள் போய் இங்கே நிகழ்ந்தனவெல்லாம் சொல்ல, அவ்வித்வான், 'கொட்டினால் தேளும், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியுமா?' என்று கோபித்துக் கொண்டு அந்தச் செய்தியை அரசனுக்கு அறிவித்து, அவனுடைய அனுமதிப்படி வாதுக்கு வரச் சொன்னான்..."

"இது என்ன கதை, சந்துரு?"கமலா கேட்டாள்.

"மகா பண்திதனை சிறுபிள்ளை வென்றது!"

"யார் எழுதினது?"

"அஸ்தாவதானம் வீராசாமி செத்தியார்! அம்பத்தி எத்தாம் வருசம் வந்த புஸ்தகத்துலே அம்பத்து ஒம்பதாம் பக்கத்துலே இருக்கு!"

கூட்டம் மௌனமாக இருந்தது. மௌனம் என்பதே ஒரு மொழி. அம்மொழி மூலம் தனது வியப்பை வெளியிட்டது கூட்டம்.

கூடியிருந்த அனைவரும் வந்து எதிரே நின்று தங்கள் கையிலிருந்த புத்தகத்தில் ஓரிரு வரிகள் படித்து, சந்துரு கூறும் பதிலைக் கேட்டு வியந்து, மலர்ந்த முகத்துடன் சென்றனர். கடைசியாக ஒரு பையன் தயங்கி நின்றான்.

"ஏன் தம்பீ, நீயும் படிச்சுக் கேட்டு விட்டுப் போயேன்" என்றேன்.

பையன் புஸ்தகத்தைப் பிரித்தான். "கா...கா... காந்திம....மகான் ந ந...நம்முடைய முடைய...நா... நாட்டுக்காகவும் ம...ம...மனித ச... சமூகத்துக்காகவும் அ...அ...அனேக கா...காரியங்கள் செ...செ...செய்தார். அ...அவற்றில் ம...ம... மகோன்னதமான வெ...வெற்றிகள் அ...அ...அடைந்து பு...புகழ் பெற்றார்..." பையன் படிப்பதை நிறுத்தினான்.

சந்துரு குறுக்கிட்டான். "என்ன நீ இப்பிதிப் பதிக்கிறே? நான் சொல்றேன் பாரு. 'காந்தி மகான் நம்முதைய நாத்துக்காகவும் மனித சமூகத்துக்காகவும் அனேக காதியங்கள் செய்தார். அவத்தில் மகோன்னத வெத்திகள் அதைந்து புகழ் பெத்தார்.' இது தகுபதிராகவ, ராஜாஜியின் முன்னுதை."

நான் கேட்டேன். "சந்துரு, சோலைமலை இளவரசி யார் எழுதின கதை"

"கல்கி"

"ஷேக்ஸ்பியர் நாடகங்களிலே எது உனக்கு ரொம்பப் பிடிச்சது?"

"ஒதெல்லோ !"

சந்துருவை அழைத்துக்கொண்டு கமலாவும் நானும் வீட்டினுள் வந்தோம். இவன் உண்மையில் ஒரு மேதைதான் என்று மனம் கூறியது. இந்த மேதை பிற்கால இலக்கிய உலகில் எப்படி மலரப் போகிறான் என்பதை எண்ணிப் பார்ப்பதில் ஈடுபட்டேன்.

நான் சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். சந்துரு மேஜை அருகிலிருந்த நாற்காலிமீது ஏறி மேஜைமீது உட்கார்ந்து கொண்டான். அவன் கையிலிருந்த மோட்டார் பொம்மையின் ஸ்பிரிங் சுழன்று சக்கரங்கள் "விர்" என்ற ஓசையை எழுப்பின.

கமலா நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டாள். "இவன் மேதா விலாசத்தைப் பத்தி என்ன சொல்கிறீர்கள்? என் அப்பாவின் மறுபிறவி என்பதை ஒத்துக்கொள்றீங்களா?"

"மறுபிறவி என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி பண்ண வேண்டிய விஷயம் இது. உன் அப்பாவின் ஆதிக்கம் இவனிடம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.""

"அப்பா காலமான பிறகு பிறந்தவன் இவன். எங்களுக்கெல்லாம் அவர்தான் இவனாக வந்து பிறந்திருக்கார்னு எண்ணம்."

"கமல், உனக்கு மகாபாரதம் தெரியுமா?"

"ஏதோ கொஞ்சம் தெரியும்."

"மகாபாரதத்திலே அபிமன்யுவைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா?"

"எந்த அபிமன்யு?" கமலா யோசிக்கத் தொடங்கினாள்.

"அபிமன்யு ஒருத்தன்தான். பலர் அபிமன்யுன்னு பேர் வச்சுண்டு மகாபாரதத்திலே வரல்லே ."

"இல்லே, ராமாயணத்துலேயும் ஒரு அபிமன்யு வரதா ஞாபகம்."

"நாசமாப் போச்சு, நீ சுந்தரமூர்த்திக்குப் பெண்ணாகப் பிறந்தாயே என்பதுதான் எனக்கு வருத்தம்."

"எனக்குத்தான் தெரியல்லே. நீங்க சொல்லுங்களேன்."

"அபிமன்யு சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தவன். தாயின் வயிற்றில் அவன் வளர்ந்து கொண்டிருந்த போது, சுபத்திரையின் அண்ணாவான கிருஷ்ண பரமாத்மா தங்கைக்கு சக்ரவியூகத்தையும், போர் முறைகளையும் பத்திச் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டே சுபத்திரை தூங்கிவிட்டாள். சக்ர வியூகத்தினுள் எப்படி நுழைவது என்பதைச் சொல்லிக்கொண்டே வந்த கிருஷ்ணன் சுபத்திரை தூங்கிவிட்டதைக் கண்டு தன் பேச்சை நிறுத்தினார். பின்னால் பாரதப்போர் நடக்கிற போது அபிமன்யு போரிட்டுக்கொண்டே சக்ர வியூகத்தினுள் தைரியமாக நுழைந்துவிடுகிறான். ஆனால் அவனால் வெளிவர முடியவில்லை. அதனால் கொல்லப்படுகிறான். கிருஷ்ணன் சக்ரவியூகத்திலிருந்து எப்படி வெளிவருவது என்பதைப் பற்றிச் சொல்லவில்லை இல்லையா?"

"அபிமன்யு கதைக்கும் நம்ம சந்துருவுக்கும் என்ன சம்பந்தம்?"

"தாய் வயித்துலே அபிமன்யு இருந்தபோது கிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து போர் முறைகளைக் கத்துக்கொண்ட மாதிரி, சந்துருவும் உன் அக்கா வயித்துலே இருந்தபோது, உன் அப்பாவிடமிருந்து இலக்கியம் பற்றித் தெரிஞ்சு கொண்டிருக்கான். ஆனா, எதையும் தீர்மானமாகச் சொல்லிவிடமுடியாது. இவன் ஆராய்ச்சிக்கு உட்பட வேண்டியவன். பிற்காலத்துலே இவன் திறமை எப்படி வெளிப்படப் போகிறது என்பதில்தான் இவன் மேதைத்தனச் சிறப்பு இருக்கு."

"பொறுங்கள், வருகிறேன்" என்று சொல்லி விட்டுக் கமலா அறையை விட்டு வெளியே சென்றாள். சந்துரு நிமிர்ந்து என்னைப் பார்த்தான். "என்னடா பயலே!" என்றேன். சுந்தரமூர்த்தியின் சாயல் அவன் முகத்தில் இருந்தது.

கமலா திரும்பினாள். அவள் கையில் புஸ்தகம் ஒன்று காணப்பட்டது.

"இது என்ன புஸ்தகம் தெரியுமா?" கமலா என்னிடம் கேட்டாள்.

"உன் அக்கா மகனைப் போல நான் மேதை இல்லை. அது என்ன புஸ்தகம் என்பதை என்னால் சொல்ல இயலாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்."

"ரோஷத்தைப் பாரு" என்றாள் கமலா.

"இது உங்கள் புஸ்தகம்தான். உங்கள் சிறுகதைத் தொகுதி. 'என் அருமைக் கமலாவுக்கு'ன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கீங்களே, அது. இதுலே அப்பா காலமான பிறகு நீங்க எழுதின கதை ஒண்ணை நான் படிக்கிறேன். இவன் என்ன பதில் சொல்றான்னு கேட்கலாம்."

புஸ்தகத்தின் பக்கங்களைத் தள்ளி விட்டு ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு வரியைப் படித்தாள் கமலா. "'..அவனது எண்ணங்கள் மின்னலாக எழுந்தபோது, அந்த எண்ணங்களில் சக்திமிக்க உணர்ச்சி வேகம் இருந்தது. அவன் தன் நண்பனிடமிருந்து டார்ச் விளக்கைப் பிடுங்கிக் கொண்டான்...' சந்துரு, இது என்ன கதை சொல்லு."

"வயதான வெள்ளைப் பெண்."

நான் திடுக்கிட்டேன். கமலா என்னைப் பார்த்தாள்.

"இல்லைடா, கண்ணா , இது 'இளம் கறுப்புப் பெண்' என்கிற கதை. இந்த மாமா எழுதினது."

"மாமானு சொல்லாதே. சித்தப்பான்னு சொல்லு" நான் இடையில் வெட்டினேன்.

"இன்னும் உறவு ஏற்பட்டுவிடவில்லை" என்றாள் கமலா.

"நான் அவனுக்கு மாமான்னா, நீ எனக்குத் தங்கை முறை."

"ஓ... அப்போ சரி. இந்த சித்தப்பா எழுதின கதைடா இது" என்றாள் கமலா சந்துருவிடம்.

"இல்லே. இது நத்தானியல் ஹாதார்ன் எழுதினது" என்றான் சந்துரு.

உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலிக்குக் கீழே தரை பிளக்காதா என்று நான் ஏங்கினேன்.

"இந்த சித்தப்பா எழுதின கதைடா, கண்ணா!" என்று கமலா சந்துருவிடம் வாதாடிக் கொண்டிருந்தாள். மிக இக்கட்டான வேளை.

சந்துருவுக்குக் கோபம் வந்தது. கையிலிருந்த ஓட்டை மோட்டார் பொம்மையை நடு அறையில் வீசி எறிந்தான். உண்மைக்கு மறுப்புத் தெரிவிக்கப்படும்போது, குழந்தைக்குக்கூட கோபம் வருகிறது.

ம.ந. ராமசாமி
Share: 


© Copyright 2020 Tamilonline