|
|
|
அவர் ஓவியக் கல்லூரியில் கற்றவரல்ல. ஆனால், தமிழகத்தின் மிக முக்கியமான ஓவிய ஆளுமைகளில் ஒருவர். பள்ளியில் தமிழ் பயிலாதவர். ஆனால், அவர் எழுதிய முதல் நூலுக்கு - அதுவும் தமிழ் நூலுக்கு - இந்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில்நாடன் விருது, கோவை பார் அசோசியேஷனின் சாதனையாளர் விருது, ரத்னம் கல்லூரி வழங்கிய 'ஐகான் ஆஃப் கோவை' விருது உட்படப் பல்வேறு சிறப்புகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கும் அவர், ஓவியர் ஜீவானந்தன். கோவையில் 'சினிஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஓவிய ஆசிரியர், ஓவியப் பயிற்சியாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்பட விமர்சகர், நடிகர் எனப் பல முகங்களில் மிளிர்பவர். வாருங்கள், அவரோடு பேசிப் பார்க்கலாம்....
கே: சட்டக் கல்லூரியில் பயின்ற நீங்கள், ஓவியத்தை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தது ஏன்? ப: ஓவியராகவும், பேனர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்த என் தந்தைக்கு என்னை ஒரு பெரிய பதவியில் காணவேண்டும் என்று ஆசை. எனக்குச் சிறந்த கல்வியைத் தந்தார். வறிய சூழலிலும் சிறந்த பள்ளிக்கு என்னைப் படிக்க அனுப்பினார். ஆங்கிலமும், ஹிந்தியும்தான் படித்தேன். தமிழ் படிக்கவே இல்லை. பி.ஏ., எம்.ஏ. படித்து முடித்துச் சட்டம் பயின்றேன். சென்னை சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தந்தை காலமானார். நான்தான் மூத்த பையன். எனக்குக் கீழே ஐந்து பேர். தந்தையாரின் தொழில் அப்போது நன்கு போய்க் கொண்டிருந்தது. தொழிலையும் விடமுடியாது, படிக்கவும் வேண்டும்! எனக்கு நன்கு வரையத் தெரியும் என்பதால், குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற சூழலில் வேறு வழியில்லாமல் இந்தத் தொழிலில் இறங்கினேன். காலத்தின் கட்டாயம். அதே சமயம் சட்டத்தையும் விடவில்லை. படித்து முடித்து 10 வருடம் தொழில் செய்தேன். ஆனால், நாளடைவில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய முடியவில்லை. ஓவியமே முதன்மையானது.
கே: பத்திரிகையில் வெளியான உங்கள் முதல் ஓவியம் எது? ப: நான் அவசரநிலை காலகட்டத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன். கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஆர்வம் இருந்தது. அப்போது 'மனிதன்' என்று ஓர் இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் கட்டுரை ஒன்றுக்குப் படம் வரைந்தேன். அதுதான் அச்சில் வந்த என் முதல் ஓவியம். பள்ளி, கல்லூரி படிக்கும்போது மலர்களுக்காக நான் நிறைய வரைந்திருக்கிறேன். ஆனால் பத்திரிகைக்காக வரைந்தது இதுதான். பின்பு சட்டம் படிக்கும்போது 'சுதாங்கன்' என்று இன்று அழைக்கப்படும் ரங்கராஜன் 'மாணவ இளம்புயல்' என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். அதில் ஒரு சிறுகதை எழுதி, அதற்குப் படமும் வரைந்தேன். அதன்பின் மாலனை ஆசிரியராகக் கொண்டு 'திசைகள்' வெளிவந்தது. ஒரு மாணவப் பத்திரிகையாளனாக நான் அதில் நிறையப் படம் வரைந்திருக்கிறேன். என்னுடைய பயிற்சிப் பட்டறையே திசைகள்தான். குறிப்பாக, சில அறிவியல் புதினங்களுக்கு மாலன் அவர்களே ஆலோசனை சொல்வார். இணையம் இல்லாத காலம் அது. அவர் தேடி நகல் எடுத்து அனுப்புவார். அப்போது ஓவியராக இருந்தவர்தான் இன்றைக்குப் புகழ் பெற்றிருக்கும் அரஸ்.
கே: முதன் முதலில் நீங்கள் அட்டைப்படம் வரைந்தது யாருக்கு? ப: தமிழில் பிரபலமான எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன். அவருடன் எனக்கு 23-24 வயது முதலே நல்ல நட்பு. நாங்கள் சமவயதினர். அவரது 'காமதகனம்' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு என்னை அட்டைப்படம் வரையச் சொன்னார். அது நன்றாக வந்திருந்தது. அதுதான் எனது முதல் அட்டைப்படம். பிறகு நாஞ்சில்நாடனின் 'சதுரங்கக் குதிரைகள்' நாவலுக்கு அட்டையை, போஸ்டர் கலரில் கையால் வரைந்தேன். நாஞ்சில்நாடனின் பெரும்பாலான புத்தகங்களுக்கு அட்டை ஓவியம் நான்தான். கம்யூனிஸ்ட் கட்சி மலர்களுக்கும் லெனின், ஜீவா என்று நிறைய வரைந்திருக்கிறேன்.
கே: சினிமாவுக்கு பேனர் ஓவியம் பற்றி... ப: சினிமாவுக்கு முதன்முதலாக வரைந்தது 'மூன்று முடிச்சு' படத்துக்கு. அப்போது அதில் யார் நடிகர் என்பதே தெரியாது. பின்னால்தான் அது ரஜினிகாந்த் என்று தெரிந்தது. சிகரெட்டை வாயில் வைத்திருப்பது மாதிரி ஓர் ஓவியம். நான் அப்போது சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தேன். அதுவரை பேனர் ஓவியம் வரைந்ததில்லை. அப்பாவிடம் கேட்டேன், அவரும் 'வரை' என்று சொன்னார். உற்சாகமாக வரைந்தேன், வித்தியாசமாக 'பேட்ச் வொர்க்' ஆக, வண்ணங்களை அள்ளி முகத்தில் தேய்த்தது போன்ற பாணியில் வரைந்தேன். அப்பா மற்றும் சக ஓவியர்களுக்கு அது பிடித்துவிட்டது. காரணம், நான் சென்னையில் நிறைய பேனர்களைப் பார்த்து அந்த நுட்பத்தை உள்வாங்கியிருந்தது.
கே: நவீன ஓவியங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? ப: என் வாழ்க்கை முழுவதிலுமே பாரம்பரிய ஓவியங்களைத்தான் நான் வரைந்திருப்பேன். நவீன ஓவியங்கள் மீது எனக்குப் பெருங்காதல். அது love-hate உறவாக இருந்தது. சித்ர கலா அகாதமி என்ற அமைப்பு கோவையில் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது பிரகாஷ் சந்திரா அதன் தலைவர். அப்போது ஓவியக் கண்காட்சி ஒன்றை யூசுப் பூரா மற்றும் பிரகாஷ் சந்திரா இணைந்து நடத்தினார்கள். அவர்கள் இங்கிலாந்தில் படித்தவர்கள். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா ஓவியக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு வா என்றார். நானும் என் தம்பியும் சென்றோம். பிரகாஷ் சந்திராவிற்கு இரண்டு சிறுவர்களைக் கண்டதும் ஆச்சரியம். கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஒரு ரூபாய். அது எங்களிடம் இல்லை. இருந்தாலும் சிறுவர்கள் வந்திருக்கிறார்களே என்று அவர் எங்களை அனுமதித்தார். எல்லாம் அரூப (abstarct) ஓவியங்கள், கலர்கள் எல்லாம் தீற்றி, மாற்றி இருந்தன. நாங்கள் பார்த்துவிட்டு வந்ததும், "உனக்கு என்ன இதில் புரிந்தது?" என்று கேட்டார் பிரகாஷ் சந்திரா. "எனக்கு ஒண்ணுமே புரியலை" என்றேன். "உனக்கு வயசாகும்போது புரியும். இப்போது புரியாது" என்றார். பிற்காலத்தில் அது உண்மையானது. அவர் சித்ர கலா அகாதமிக்குத் தலைவராக இருந்தபோதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் அவரிடம் மாணவராகச் சேர்ந்தேன். நவீன ஓவியங்கள் பற்றிய பல புரிதல்களை அவர்மூலம் பெற்றேன். நிறையக் கற்றேன்.
நவீன ஓவியர்கள் ஆதிமூலம், அந்தோணிதாஸ், பாஸ்கரன், அல்போன்ஸா, ட்ராட்ஸ்கி மருது போன்றோரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலக்கணங்களை உடைத்துப் போட்டு அவர்கள் வரைகிறார்கள். மனதிலிருப்பதை வரைகிறார்கள். அது பிக்காஸோ உருவாக்கிய பாணி. ஆதிமூலத்தின் ஓவியத்தில் நான் அப்படியே உள்ளே போய்விடுவேன். ட்ராட்ஸ்கி மருதின் கோடுகளில் மயங்கிக் கிடப்பேன். ஆனால், ஒரு போலியை என்னால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். கலர்களை எடுத்து ஊற்றுவதையும், தீட்டுவதையும் சிலர் நவீன ஓவியமாக நினைக்கிறார்கள். அப்படிச் சிலர் 'நவீன ஓவியர்' என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பெயர் வாங்கியும் விடுகிறார்கள். உண்மையான கலையையும், போலிப் படைப்பையும் ஒரு ரசிகனால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.
கே: நவீன கேமராக்களும், செல்பேசிகளும் பெருகிவிட்ட இக்காலத்தில் ஓவியத்திற்கு வரவேற்பு எந்த அளவுக்கு இருக்கிறது? ப: கேமராக்கள் வந்தபோதே ஓவியம் அவ்வளவுதான் என்ற பேச்சு அடிபட்டது. ஆனாலும் ஓவியம் வளரத்தான் செய்தது. இன்றைக்கு அதிநவீன கையடக்கக் காமெராக்கள் வந்துவிட்டன. அது நிச்சயம் ஓவியக் கலைக்குப் பாதிப்புதான். அந்தக் காலத்தில் போர்ட்ரெய்ட் ஓவியர்கள் என்று ஒரு பெரிய குழுவே இருப்பார்கள். மறைந்து போனவர்களின் உருவத்தை வரைந்து கொடுப்பார்கள். நூறாண்டானாலும் அந்தத் தைலவண்ண ஓவியங்கள் அப்படியே இருக்கும். ஆனால், இன்றைக்கு அதெல்லாம் கிடையாது. செல்பேசியில் இன்றைக்கு ஹை ரெசல்யூஷன் ஃபோட்டோ எடுக்கலாம். ஏன் சினிமாவே எடுக்கலாம். பாதிப்பு இருந்தாலும் ஓவியத்திற்கு மதிப்பு இருக்கிறது. ஓவியரை மதிப்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முன்னெல்லாம் ஓவியர் வரைந்த இயற்கைக் காட்சி வீடுகளில் இருக்கும். இன்றைக்கு லேண்ட்ஸ்கேப்பில் ஹை-ரிசல்யூஷன் புகைப்படம் இருக்கிறது. அல்லது இணையத்திலிருந்து திருடப்பட்ட ஓவியம் இருக்கிறது. அதை பிரிண்ட் பண்ணி, பிரமிப்பைத் தரும்படி பங்களாக்களில் வைத்திருக்கிறார்கள். டைல்ஸுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வார்கள். ஆனால் சுவரில் இதுமாதிரி மலிவாக அலங்காரம் செய்திருப்பார்கள். இது மக்கள் ரசனை மற்றும் கலையுணர்வு சார்ந்தது. கலையுணர்வு கொண்டவர்கள் என்றுமே சிறுபான்மைதான்.
கே: ஓவியத்துறையில் இப்போது என்ன மாற்றத்தைக் காண்கிறீர்கள், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி, கணினியின் வரவு போன்றவை கலை நுணுக்கங்களை மேம்படுத்தியிருக்கிறதா? ப: இவற்றால் கலை நுணுக்கம் என்ன ஆனது என்பது உண்மையிலேயே கேள்விக்குறிதான். நிச்சயமாக இதற்கு ஒரு ரத்தசாட்சியாக இருப்பவன் நான்தான். நாங்கள் இரவும் பகலுமாக வேலை செய்த தொழில் சினிமா பேனர் வரைவது. காசு வரும், வராது என்றாலும் நாங்கள் பிசியாக இருப்போம். பணம் குறைவுதான் என்றாலும் நிறைவாக வேலை செய்துவந்தோம். நாங்கள் உழைத்த உழைப்புக்கேற்ற கூலி கிடைத்திருந்தால் இன்றைக்குக் கோவையில் பெரிய கோடீஸ்வரராக இருப்போம். இன்றைக்கும் லோயர் மிடில் கிளாஸ் வாழ்க்கைதான் வாழ்கிறோம். கணினி கொண்டு அச்சிடும் ராட்சத ஃப்ளெக்ஸ் வந்து எங்களை ஒரே இரவில் தூக்கி வீசிவிட்டது. சென்னையிலிருந்து ப்ரிண்டட் பேனர்கள் வர ஆரம்பித்தன. என்ன செய்வதென்று தெரியாமல் நாங்களும் வங்கியில் கடன் வாங்கி அந்த மிஷினைப் போட்டோம். போட்டவுடனேயே தரம், வண்ணம் எல்லாமே குறைந்து போய்விட்டன. பளீர் என்று இருந்த சினிமா பேனர்கள் மங்கித் தெரிந்தன.
குறைந்த விலைக்குப் பிரிண்ட் போடும் ஆட்களிடம் சென்று தரம் குறைந்து, வண்ணங்கள் மங்கிவிட்டன. ஒரு பேனரை நூறடி தூரத்தில் இருந்து ஒருவர் பார்த்தால் அது எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கேற்ப வடிவமைப்போம். இந்த நுட்பங்கள், இன்றைக்குப் படித்துவிட்டு வருகிறவர்களுக்குத் தெரியவில்லை. கணினியோடு ஒத்துப் போகாமல் பேனர் தொழிலைச் செய்தவர்கள் நாளடைவில் காணாமல் போனார்கள். தூரிகை பிடித்த ஓவியர்கள், வீட்டுக்குப் பெயிண்ட் அடித்தார்கள். சிலர் சுவரில் எழுதப் போனார்கள். சிலர் குடித்தே செத்தார்கள். நாளடைவில், தொழில் சாராத, பணம் போடக்கூடிய, புதுப் பணக்காரர்களிடம் சென்றது. பேனர் தொழிலே நசித்துப்போனது.
கணினியால் ஓவியத்தின் தரம் குறைந்துவிட்டதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். கணினியைத் திறம்பட உபயோகிக்கும் ஓவியர்கள் இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ட்ராட்ஸ்கி மருது மிகச் சிறப்பாகக் கணினி நுட்பங்களைப் பயன்படுத்துகிறார். அவருடைய தீற்றல்கள், வண்ணங்கள், காம்பினேஷன் எல்லாமே புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. என்னைப் போன்ற அடுத்த தலைமுறையினர் அதில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. நானாக ஓர் ஏகலைவன் போன்று அவருடைய ஓவியங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன். நானும் கணினிக்கு மாறினேன். அதற்கான கருவிகளைக் கையாளத் தொடங்கினேன். அதன்மூலம் தான் வரைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இன்றைக்குச் சாப்பாடே கணினிதான் போட்டுக் கொண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
கே: ஓவியத்தை மட்டுமே நம்பி ஒருவர் வாழ முடியுமா? ப: இல்லை. ஆனால் விதி விலக்குகள் இருக்கின்றன. ஓவியக் கல்லூரிப் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களில் சிலர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகச் செல்கின்றனர். சிலர் அனிமேஷன் துறைக்குச் செல்கின்றனர். சிலர் ஓவியம் கற்பிக்கிறார்கள். ஆனால், தன் சொந்தக்காலில் நின்று, ஓவியம் தீட்டுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் இன்று அதிகம் இல்லை. சில சுதந்திர ஓவியர்கள் இருக்கிறார்கள். எதை வரைந்தாலும் விற்கும் என்ற சூழல் இன்றைக்கு இல்லை. ஓவியம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், சிலர் பூதாகாரமாகத் தங்கள் பெயரை டெவலப் செய்திருப்பார்கள். அவர்கள் எதை வரைந்தாலும் அது லட்சக்கணக்கில் போகும். ஆனால், அது விதிவிலக்குத்தான். ஓவியத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட சாதாரண ஓவியர்கள், அதாவது 'கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட்' என்று சொல்லப்படுபவர்களால் வாழமுடியாது என்பதுதான் உண்மை.
கே: நீங்கள் வரைந்த ஓவியங்களில் சவாலாக அமைந்த ஓவியம் எது? ப: மாணவப்பருவத்திலேயே நான் துணிச்சலாக பிரஷ்ஷைக் கையாள்வேன். அப்பா மரபுசார்ந்த ஓவியர். அவருக்கென்று சில இலக்கணங்கள் இருந்தன. நான் முறையாக ஓவியம் கற்காததால் அது எதுவுமே எனக்குத் தெரியாது. அவர் ஏதாவது சொன்னால் கூட, இளமைத் திமிரில் நான் மறுத்து அவர் சொன்னதற்கு எதிராகச் செய்வேன். ஒரு சமயம் 'ராஜாதி ராஜா' படத்திற்காக ரஜினியை வரைந்திருந்தேன். கோயம்புத்தூரில் ஒரு முக்கியமான இடம் ஜெயில் ரோடு, சென்னை மவுண்ட் ரோடு மாதிரி. அங்கே ரஜினியின் முகம் மட்டும் பத்தடிக்குத் தெரிகிற மாதிரி பேனர் வரைந்திருந்தேன். கூலிங் கிளாஸ் போட்டிருப்பார். ஸ்டைலாகச் சற்று மேலே பார்த்துக் கொண்டிருப்பது மாதிரியான ஓவியம். அந்த கூலிங் கிளாஸில் இரண்டு மரங்களை வரைந்திருந்தேன். (பார்க்க படம்) பார்த்த எல்லோருமே அதைப் ற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அதுவும் ரஜினியின் கூலிங் கிளாஸைப் பார்த்துவிட்டு எதிரே மரம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். இல்லை. உண்மையில் எதிரே கட்டிடம்தான் இருக்கிறது. அதற்கு எனக்கு நல்ல பாராட்டுக் கிடைத்தது.
என் தந்தை இல்லாத குறை வரக்கூடாது, அந்தப் பேரை நிலை நாட்ட வேண்டும் என்ற வெறியில், விதவிதமாக, இலக்கணங்களை உடைத்து, வண்ணக் கலவைகளைக் குழைத்துப் பல புதுமைகளைச் செய்து வரைந்து தள்ளினேன். எனக்கென்று கோவையில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இன்றைக்கும் அவர்கள் இருக்கிறார்கள்.
கே: சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நாடகக்குழுவிற்காக வரைந்த ஓவியங்கள் குறித்து... ப: சுவிட்சர்லாந்தில் இருந்து ஆக்கர்மேன் என்றொருவர் வந்தார். அவர் ஒரு விளம்பர நிறுவனம் வைத்திருந்தார். அவருக்கு திருப்பூரில் நிறையத் தொழில் தொடர்புகள் இருந்தன. அவர்கள் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, தொழிலாளர்நலம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்கள். அதை மக்களிடம் கொண்டு சேர்க்கச் சினிமா பேனர்போல் ஓவியங்கள் வரைந்து பொது இடங்களில் வைத்தால் விழிப்புணர்வு உண்டாகும் என்று கருதினார்கள். மும்பை, சென்னை இங்கெல்லாம் போய்ப் பார்த்தார்கள். சினிமா பேனர் வரைபவர்களுக்கே உள்ள சாபக்கேடு என்னவென்றால் அவர்களுக்கு கையில் ஸ்டில் ஒன்றைக் கொடுக்க வேண்டும். அதை அப்படியே பார்த்து வரைவார்கள். கற்பனையில் வரைய முடியாது. பின்னர் திருப்பூருக்கு வந்தபோது என்னைப்பற்றி யாரோ சொல்லவே, என்னைத் தொடர்பு கொண்டு அழைத்தார்கள். நான் சென்றேன்.
நான் உயர்கல்வி படித்த வழக்குரைஞர், தொழிலாளர் உரிமை குறித்த பட்டயப் படிப்பும் படித்திருக்கிறேன். ஆக்கர்மேன் சொல்லச் சொல்ல, நான் ஒரு பென்சிலால் அங்கேயே வரைய ஆரம்பித்தேன். அவர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். அமெரிக்காவிலிருந்து ஃபோட்டோகிராஃபர், ஐரோப்பாவிலிருந்து ஒருவர் என்று பன்னாட்டு அணி - அவர்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள், எனது பேனர் வரையும் பட்டறைக்கு வந்தார்கள். எதற்கென்றால் நான் வரைவதை ரெகார்ட் செய்ய! நான் சினிமா பேனர் வரைவதை ரெகார்ட் செய்தார்கள். பின்னர் அவர்கள் சொன்ன ஒரு கருத்தை நான் பேனராக வரைந்தேன். அதையும் ரெகார்ட் செய்தார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடவே, முழு ப்ராஜெக்டையும் செய்யச் சொன்னார்கள்.ஈரோடு அருகே பெருந்துறையில் அதை மிகப்பெரிய கண்காட்சியாக வைத்து நடத்தினார்கள். என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை.
இதே குழுவினர் பின்னால் தங்கள் ஊர் நாடகங்களுக்குக் கையால் வரைந்த பேனர்கள் தேவை என்று அணுகினார்கள். இப்சன் போன்றவர்களின் நாடகங்கள் அவை. அந்த நாடகங்களைப் படித்துத் தெரிந்து கொண்டு, எனது கற்பனையில் வரைந்தேன். சுமார் 10 நாடகங்களுக்கு வரைந்திருப்பேன். அவை சிறிய அளவிலானவை. அந்த பேனர்களை ஸ்விட்சர்லாந்தில் நாடக அரங்கின் முன் வைத்தார்கள். அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கும் பெருமை. அவர்கள் மூலம் மேலும் பல போர்ட்ரெய்ட் வரையும் வாய்ப்புகள் வந்தன.
கே: வெளிநாடுகளுக்கு அங்கிருக்கும் ஓவியக் கூடங்களுக்கு, கேலரிகள், கண்காட்சிகளுக்குச் சென்றிருப்பீர்கள். அந்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்…
ப: 'தாய்வீடு' என்ற பத்திரிகை கனடாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. வெளிநாடுகளில் தமிழ்ப் பத்திரிகை நடத்துவது கடினமான விஷயம். கதை, கட்டுரை எல்லாம் கடைசி நேரத்தில்தான் வரும். நானும் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய உடனே படம் வரைந்து அனுப்பி விடுவேன். அந்த வேகம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. திரு. முத்துலிங்கத்தின் சிறுகதைகள், திரு. மகாலிங்கம் மொழிபெயர்த்தவை என்று நிறைய வரைந்திருக்கிறேன்.
ஒரு சமயம் எங்கள் பத்திரிகை ஆண்டு விழாவிற்காக கனடா வர முடியுமா என்று கேட்டனர். அந்த அழைப்பின் பேரில் கனடா சென்றேன். கிட்டத்தட்ட 22 நாட்கள் அங்கே இருந்தேன். கருணா, திலீப்குமார் ஓவியக் கண்காட்சிகளுக்கு என்னை அழைத்துச் சென்றனர். மாண்ட்ரியால் ஓவியக் கூடம் சென்றேன். அங்கே அகஸ்டே ரோடேன் சிற்பமான 'கை', பிக்காஸோவின் அசல் ஓவியங்கள் போன்றவற்றை வெகு அருகில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது. டொராண்டோவில் உள்ள ஓவியக் கூடங்களையும் பார்த்தேன். ஒட்டாவாவில் ஐஸ் கல்ச்சர் சிலை பார்த்தேன். பத்துக்கும் மேற்பட்ட ஓவியப் பயிலரங்குகளை அங்கு நடத்தினேன்.
கே: பல எழுத்தாளர்களுடன் உங்களுக்கு நட்பு உண்டு. அவர்களுடனான அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்... ப: நிறைய எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பிட வேண்டியவர் இரவிச்சந்திரன். குங்குமம் போன்ற இதழ்களில் எழுதிப் புகழ்பெற்றவர். பெங்களூரில் இருந்தார். சுஜாதா கூடவே இருப்பார். அவர் கோவைக்காரர். நல்ல நண்பர். நான் பெங்களூர் சென்றால் அவருடன் தங்குவேன். சுஜாதாவைப் பார்க்க அழைத்துச் செல்வார். ஒரு தடவை அப்படி பைக்கில் போகும்போது ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது. ரத்தக் காயங்களுடன் சென்றோம். சுஜாதா குடும்பமே பதறிப் போய்விட்டது. ராஜேந்திரகுமார், மாலன் ஆகியோரும் நண்பர்கள்தாம். மாலன் எனக்கு குருஸ்தானத்தில் இருந்தார். நாஞ்சில்நாடனின் எழுத்தில் எனக்கு அதிகப்பற்று. அவர் குடும்ப நண்பர். கோவைஞானி, வண்ணதாசன், பாவண்ணன், ஜெயமோகன், சுதேசமித்திரன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோவையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்றால் சுப்ரபாரதி மணியன், இளஞ்சேரல், சி.ஆர். ரவீந்திரன், சூரியகாந்தன் என்று பலர் இருக்கிறார்கள். அது போல கனடா சென்றிருந்த போது கவிஞர்கள் முத்துலிங்கம், சேரன், செழியன் ஆகியோரைச் சந்தித்தேன்.
கே: உங்களைக் கவர்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஓவியர்கள் பற்றி.. ப: உள்நாட்டு வரிசையில் முதல் இடம் ஆதிமூலத்திற்குத்தான். ஓவியர் என்பது ஒருபுறம் இருக்க அவர் ஓர் அற்புதமான மனிதர். ரியலிசத்தில் வாழ்க்கையைத் துவங்கி, அப்படியே அப்ஸ்ட்ராக்ட், சிதைவான வண்ணங்களைப் பயன்படுத்துவது, மனவெளி ஓவியம் எனப்படும் அரூப ஓவியங்கள் என அவருடைய பயணம் அற்புதமானது. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதுபோல ட்ராட்ஸ்கி மருது. வாழும் கலைஞர்களில் பெருங்கலைஞர் அவர். ரியலிஸ ஓவியர்களில் என்னைக் கவர்ந்தவர் அந்தோணிதாஸ். சென்னை கலைக்கல்லூரி முதல்வராக இருந்தவர். அல்ஃபோன்ஸோ ஓர் அற்புதமான அப்ஸ்ட்ராக்ட் ஓவியர். அதுபோல ஆர்.பி. பாஸ்கரன். நீர்வண்ண ஓவியத்தில் மனோகரன். இளந்தலைமுறையினரில் இளையராஜா, சுவாமிநாதன், ராஜ்குமார் ஸ்தபதி, கதவுகளை மட்டுமே செய்யும் 'கதவு சந்தான கிருஷ்ணன்' என்று பலரைச் சொல்லலாம்.
வெளிநாட்டு ஓவியர்கள் என்றால் டாவின்ஸி, மைக்கல் ஏஞ்சலோ, ரெம்ப்ரான்ட், பிக்காஸோ, பின்னர் வந்த மறுமலர்ச்சிக் கால ஓவியர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். சால்வடார் டாலி கோட்பாடுகளைத் தகர்த்தார். இவர்கள் எல்லா ஓவியர்களுக்குமே ஆதர்ச புருஷர்களாகத்தான் இருப்பார்கள்.
கே: ஓவியத் திருட்டு, அனுமதியின்றி படத்தைத் திரும்பப் பயன்படுத்திக் கொள்ளுதல் குறித்து உங்கள் கருத்து என்ன? இதனை மாற்ற என்ன செய்யலாம்? ப: கணினியுகத்தில் இது சர்வ சாதாரணமாகி விட்டது. ஓவியத் திருட்டு முன்பும் இருந்தது. என் ஓவியத்தை எடுத்து அதில் தன் பெயரைப் போட்டு காட்சிக்கு வைப்பதும் விற்பதும் நடந்ததுண்டு. ஓர் ஓவியம் பொதுவெளிக்கு வந்துவிட்டால் அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கையாளலாம் என்பது மாதிரியான முறையற்ற விஷயங்கள் நடக்கின்றன. சில பதிப்பாளர்கள் ஓவியர்களின் அனுமதி பெறாமலேயே படத்தைத் தங்கள் நூலுக்கு அட்டைப்படமாகப் பயன்படுத்துகின்றனர். கூகிளில் தேடி எடுத்துக் கூச்சமில்லாமல் பயன்படுத்துகின்றனர். புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது வெவ்வேறு சப்ஜெட்களுக்கு என்னுடைய ஒரே ஓவியத்தை அட்டைப்படமாகப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கிறேன். ஓவியருக்குப் பணம் தர மனமில்லை. இது மிகப்பெரிய அவலம்.
நான் வரைந்த கண்ணதாசன் படம் ஒன்று உலகம் பூராவும் பரவியிருக்கிறது. விட்டால் நிலவில்கூட பேனர் வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஒரு சமயம் ஃபேஸ்புக்கில் நான் வரைந்த சிவாஜி படத்தில் என் பெயரை நீக்கிவிட்டு, தன் பெயரைப் போட்டு ஓர் ஓவியர் பதிவிட்டிருந்தார். இதை எதிர்த்து சத்தம்தான் போட முடியுமே தவிர, வேறெதுவுமே செய்ய முடியவில்லை. இதைத் தவிர்க்க, என் கையெழுத்தை முகத்தின் மேலேயே போடுகிறேன். வேறு வழியில்லை.
கே: உங்கள் சகோதரர், மகன் இருவருமே திரைத்துறையில் உள்ளனர் அல்லவா, அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள்… ப: எனக்குப் பெரிய கனவுகள் இல்லை என்றாலும் ஒரு ரகசியக் கனவு இருந்தது - திரைப்பட இயக்குநர் ஆகவேண்டும் என்பது. ஒரு சமயம் என்னுடைய தந்தையாரிடம் இதுபற்றிச் சொல்லி புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு விண்ணப்பிதேன். அது நடக்கவில்லை. பிறகு சட்டக் கல்லூரியில் படிக்கும் போது தந்தை இறந்துவிட்டார். என் கடைசித் தம்பி மணிகண்டனை நான் மெள்ள மெள்ளத் திரைப்படம் நோக்கி ஊக்குவித்தேன். அவர் படித்து முடித்ததும் திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் மேலே வந்தார். இன்றைக்கு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக இருக்கிறார். மும்பையில் ஷாருக் கான் போன்றவர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாய்ஸ், அந்நியன், ராவணன், கட்டா மீட்டா, ஓம் ஷாந்தி ஓம், ரா-ஒன் போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு அவர்தான். இந்தியாவின் டாப் 5 ஒளிப்பதிவாளர்களுள் என் தம்பியும் ஒருவர் என்பது எனக்கு மிகவும் பெருமைதரும் விஷயம்.
என்னுடைய மகன் ஆனந்த் ஜீவா. இவர் விஸ்காம் படித்தபின் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஒளிப்பதிவு படித்தார். கட்டப்பாவைக் காணோம், நவீன சரஸ்வதி சபதம், விண்மீன்கள் போன்ற நான்கைந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவரும் திருப்புமுனைக்காகக் காத்திருக்கிறார்.
கே: உங்களிடம் பயின்று இன்றைக்கு முன்னணிக் கலைஞர்களாக இருப்போர் குறித்துச் சில வார்த்தைகள்... ப: என்னுடைய வாழ்க்கையில் சித்ரகலா அகாதமியும், சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. நிறையப் பெற்றோர்கள் பள்ளி விடுமுறையில் ஓவியம் கற்கக் குழந்தைகளைக் கொண்டுவந்து விடுவார்கள். எங்களிடம் பத்மராஜன் என்ற ஓவியர் இருந்தார். என் உறவினர்தான், பள்ளி ஆசிரியர். அவர் நிறைய மாணவர்களுக்கு ஏணியாக இருந்திருக்கிறார். பலர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயிலக் காரணமாக, ஊக்கமளிப்பவராக இருந்திருக்கிறார். நிறைய ஏழைக் குடும்ப மாணவர்களைச் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர வழிகாட்டி இருக்கிறார். அவர்கள் எங்களிடம் வந்து பயிற்சி எடுப்பார்கள். சித்ரகலா அகாதமியின் ஞாயிறு வகுப்புகளுக்கு வருவார்கள். அவர்களை என் மாணவர்கள் என்று சொல்ல முடியாது. நான் வரைவதைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டவர்கள் நிறையப் பேர்.
அப்படி வந்தவர்தான் மணிராஜ் என்ற கலை இயக்குநர். தில், தூள் போன்ற படங்களுக்கு கலை இயக்குநர் அவர் தான். அவரும் என் தம்பி மணிகண்டனும் ஒரே படத்தில்தான் அறிமுகமானார்கள். முத்துராஜ், ரஜினி படங்களுக்குச் செய்து கொண்டிருக்கிறார். வைத்தி என்ற ஒளிப்பதிவாளர், ஓவியர் ஆக நினைத்து, இயலாமல் திரைப்படக் கல்லூரிக்குப் போய் பின்னர் ஒளிப்பதிவாளர் ஆனவர். ராம் ப்ரசாத் என்பவர் துணை கலை இயக்குநராக இருக்கிறார்.
கே: உங்கள் வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? ப: நான் பல வேலைகளைச் செய்துகொண்டே இருந்திருக்கிறேன். ஓவியராக, ஓவிய ஆசிரியராக எப்போதும் இருக்கிறேன். வழக்குரைஞராக, எழுத்தாளனாக இருந்திருக்கிறேன். சமீப காலமாக, கதைகளுக்கு ஓவியம் வரைவது, அட்டைப்படம் வரைவது என்று போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் என்னுடைய வருவாயும் கூட. சமீபத்தில், வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலுக்கு உள் ஓவியங்கள் முழுவதும் வரைந்திருக்கிறேன். நன்றாக வெளிவந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க பங்கு எனக்கும் இருக்கிறது என்று அவரே சொல்லியிருக்கிறார்.
சினிமாவில் நான் நடித்துமிருக்கிறேன். சின்ன வேடம்தான். விவேகானந்தர் பாறை என்ற நினைவுச் சின்னத்தை அமைத்த ஏக்நாத் ரானடேயின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தார்கள். அந்த நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து அவர் அண்ணாவைச் சந்தித்தார். அஜய் ரோஹில்லா நாயகனாக நடித்தார். அதில் நான் அண்ணா பாத்திரத்தில் நடித்தேன். சென்னையில் திரையிட்டார்கள். என்னால் போக முடியவில்லை.
அதுபோல மறைந்த தமிழக முதல்வர் பற்றி ஒரு வெப் சீரிஸ் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் அண்ணாதுரையாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அது கௌதம் மேனன், பிரசாத் இருவரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
சோதனைகளும் சாதனைகளுமாக அமைந்த தன் வாழ்க்கையைத் தனது சொல்லெனும் தூரிகையால் நமக்காக வடித்துத் தந்த ஜீவானந்தம் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் கூறி விடைபெற்றோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் |
|
*****
தந்தைவழிச் செல்வம் என் தந்தை வேலாயுதம் மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். கன்யாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர். அது தோழர் ஜீவா பிறந்த ஊர். அவர் எங்களுக்கு உறவினர். அவருடைய நினைவாகத் தந்தை எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார். கடும் வறுமையில் வாழ்ந்தவர். ஓவியம் கற்றவர். 25 வயதிலேயே கோவைக்கு வந்துவிட்டார். அதனால் சினிமா பேனர் வரையும் தொழில் தொடங்கிக் கடுமையாக உழைத்தார். உயர்ந்தார். அவர் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட். தீவிர கடவுள் நம்பிக்கை எல்லாம் அவரிடம் கிடையாது. இரவு, பகல் பாராமல் உழைப்பார்.
எந்தத் தியேட்டரில் என்ன படம் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும். சொன்னவுடனே பேனரை ரெடி செய்து, சொன்ன நேரத்திற்கு முன்பாக வைத்துவிட வேண்டும். முன்பணம் கிடையாது. நிதானமாகத்தான் பணம் வரும். வராமலும் போகலாம். மிகுந்த மன உளைச்சலைத் தரும் தொழில். ஆனால், அப்பா எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார். காலை நேரத்தில் ஜனசக்தியை வாசிப்பார். கோவையில் நடக்கும் அனைத்து இலக்கிய, அரசியல் கூட்டங்கள், கம்யூனிஸ்ட் கருத்தரங்குகள் எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்வார். சிறுவனான என்னையும் அழைத்துச் செல்வார்.
வேலை முடித்த பிறகு சினிமா பார்ப்பார். அதுவும் ஆங்கிலம், ஹிந்திப் படங்கள்தாம். தமிழ்ப் படம் பார்ப்பது அபூர்வம். படம் பார்க்க என்னையும் அழைத்துச் செல்வார். அவர் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். மற்ற ஓவியர்கள் எப்படி வரைகிறார்கள் என்பதையும் குழந்தைப் பருவத்திலிருந்து கூடவே இருந்து பார்த்து வளர்ந்தேன்.
என் தந்தையிடம் இருந்து சினிமா குறித்த ஒரு நல்ல ரசனையைப் பெற்றுக் கொண்டேன். இலக்கியம், அரசியல் குறித்த பாடங்களைத் தெரிந்துகொண்டேன். தமிழ் எழுத்தாளர்கள் பலரை அறிந்துகொண்டேன். சுய முயற்சியால் தமிழ் கற்று நூல்களை வாசிக்கத் துவங்கினேன். வேகத்தையும், அயராத கடும் உழைப்பையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஓவியத்தில் வேகம் மிக முக்கியமானது.
எளிமை, பணிவு, அடக்கம் என எனது அடையாளங்களாக என் நண்பர்கள் சொல்கிற இவற்றை நான் பெற்றது என் தந்தையாரிடமிருந்துதான். அவர் சாதாரண, எளிய உடைகளைத்தான் அணிவார். தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். அது எனக்குள்ளும் படிந்துவிட்டது. நானும் அதுபோலவே வாழ்ந்து வருகிறேன். என் தந்தை தந்த கல்வியும், ஓவியமும், கலையும் எந்தச் சபையிலும் தலைநிமிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கையை, ஆற்றலை எனக்குத் தந்துள்ளன.
- ஓவியர் ஜீவானந்தன்
*****
"வக்கீல் வரஞ்ச ஓவியம்!" 2000த்தில் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு அதற்குத் திறப்பு விழா நடந்தபோது கலைஞர் ஆட்சி இருந்தது. ஒவ்வொரு குறள் அதிகாரத்துக்கும் ஓர் ஓவியம் வீதம் 133 ஓவியங்கள் வரைந்து ஒரு கண்காட்சி நடத்த வேண்டும்; கண்காட்சி முடிந்ததும் வள்ளுவர் கோட்டத்தில் நிரந்தரக் கண்காட்சியாக வைக்கவேண்டும் என்று அரசு தீர்மானித்தது. ஓவியம் வரைந்த 133 பேரில் 130 பேர் ஓவியக் கல்லூரியில் படித்தவர்கள். எஞ்சிய மூவரில் ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்தனர். அதை சென்னை ஓவியக்கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும். எனக்கும் முதல்வர் பாஸ்கரனுக்கும் நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை இல்லை. ஆனாலும் சென்று ஒப்படைத்தேன்.
பாஸ்கரன் ஓவியத்தை அப்படியே நின்று சற்றுநேரம் பார்த்தார். உடனே தனது சக பேராசிரியர்களைக் கூப்பிட்டார். அவர்கள் வந்ததும், அவர்களிடம், "நாம எல்லாம் ஓவியக் கல்லூரியில படிச்சிருக்கோம். இந்த வக்கீல் (அவர் என்னை கேலியாக 'வக்கீல்' என்றுதான் குறிப்பிடுவார்) தானா வரைஞ்சு கொண்டு வந்திருக்கார். எவ்ளோ பிரமாதமா இருக்கு பாரு" என்று வியந்து சொன்னார். தனிப்பட்ட மனஸ்தாபம் ஓவியத்தின் முன் அவருக்கு மறந்து விட்டது.
- ஓவியர் ஜீவானந்தன்
*****
திரைச்சீலை 2005ல் கோவையிலிருந்து மரபின் மைந்தன் முத்தையா ஆசிரியர் பொறுப்பில் 'ரசனை' என்ற மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. முத்தையா என்னைச் சினிமா குறித்து எழுதச் சொன்னார். முதல் கட்டுரை 'திரைச்சீலை'. 'யவனிகா' என்ற மலையாளப்படம் பற்றிய கட்டுரை அது. யவனிகா என்றால் திரைச்சீலை. தொடர்ந்து 60 மாதங்கள் எழுதினேன். எப்போதோ நான் பார்த்த படங்கள் பற்றி நான் உள் வாங்கியவற்றை எழுதினேன். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் புத்தகமாக வெளியாகின. எனது நண்பர் நாடக, திரைப்பட நடிகர், எழுத்தாளர் பாரதிமணி அந்த நூல் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறி, அதனை தேசியத் திரைப்பட விருதுக்கு அனுப்புமாறு கூறினார்.
ஆச்சரியப்படும்படியாக அந்த நூலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரே ஒரு புத்தகம்தான் நான் எழுதியிருக்கிறேன். அதற்கு தேசிய விருது! விருது வாங்க டெல்லி சென்றேன். உடன் தாதாசாகிப் பால்கே விருது பெற கே. பாலசந்தர், சிறந்த நடிகர் விருது பெற தனுஷ் வந்திருந்தனர். ஆதர்ச புருஷர்களாக நான் நினைக்கும் கௌதம் கோஷ், சாதி கரண் போன்றவர்களைச் சந்திக்க முடிந்தது. 1983க்குப் பிறகு, 28 வருடங்கள் கழித்து தமிழுக்கு விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.
- ஓவியர் ஜீவானந்தன்
*****
சித்ர கலா அகாதமி கோவை சித்ர கலா அகாதமி 42 வருடங்களைக் கடந்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் ஓவியப் போட்டி, கண்காட்சிகள் வைக்கிறோம். ஞாயிறு வகுப்புகள் நடத்துகிறோம். நான் பயின்ற கிக்கானி பள்ளியில் ஒவ்வொரு ஞாயிறன்றும் இரண்டு மணி நேரம் ஓவியம் சொல்லித் தருகிறோம். நானே சித்ர கலா அகாதமியின் மாணவராகச் சேர்ந்துதான் இன்றைக்குத் தலைவராக இருக்கிறேன்.
கோவை ஒரு தொழில் நகரம். கலைக்கு முக்கியத்துவம். கலைக்கான மரியாதையை எங்கள் நீண்ட பயணம் மூலம் உருவாக்கியிருக்கிறோம். இன்று கோவையில் ஓவியம் என்றால் அதன் முகம் நாங்கள்தான். சித்ர கலா அகாதமி எட்டு வருடங்களில் பொன் விழா கொண்டாட இருக்கிறது. உலகில் எந்தக் குழுவும் இவ்வளவு வருஷம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
- ஓவியர் ஜீவானந்தன்
*****
ருமேனியப் பாராட்டு ருமேனியாவில் பிரபலங்களை கேலிச்சித்திரமாக வரையக் கூடிய ஒரு இயக்கமே இருக்கிறது. அவர்கள் மூலம் எனக்கு அவர்கள் நாட்டு இலக்கியவாதிகளை வரையும் வாய்ப்பு வந்தது. நிறைய வரைந்தேன். அது ஓர் ஆர்வத்தினால் செய்த விஷயம். அதற்குச் சன்மானம் கிடையாது. அவர்கள் இரண்டுமுறை உலகின் தலைசிறந்த 100 ஓவியர்களுள் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்துச் சான்றிதழ் அளித்தார்கள்.
- ஓவியர் ஜீவானந்தன்
*****
கோவையும் நானும் கோவையில் ஒரு ஏரி இருக்கிறது. மக்கள் சேர்ந்து அதைச் செம்மைப்படுத்தினார்கள். 6 கி.மீ. நீள அழகான நடைபாதை. அழகான பறவைகள். நான் அவற்றைக் கேமராவிலும், மொபைலிலும் எடுத்திருக்கிறேன். 3000 படங்களுக்கு மேல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறேன். அவற்றில் சாதாரண மனிதர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வண்டியோட்டுபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் என்று மக்கள் திரளை பதிந்திருக்கிறேன். 20 வருடம் கழித்துப் பார்த்தால் வேறு கட்டடம் வந்திருக்கும். அப்படி நடந்திருக்கிறது. இவற்றை ஆவணமாக்குவதில் ஆர்வமாகப் பணி செய்துகொண்டிருக்கிறேன். இன்ஸ்டாகிராம்: instagram.com/jeevartist ஃப்ளிக்கர்: flickr.com/photos/jeevartist - ஓவியர் ஜீவானந்தன்
*****
பிரம்மாண்ட சுவர் ஓவியங்கள் Street Art என்னும் குழுவினர் உலகின் பல நகரங்களின் சுவர் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துவார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுத்த நகரம் கோவை. அப்போது கோவையில் இருந்த ஆணையாளர், நண்பர் ராக் ரவீந்தர் போன்றவர்களின் முயற்சியில் 9 சுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஓவியர்கள் வந்து 40, 50 அடி உயரச் சுவர்களில் வரைந்தார்கள். இதில் பெண்கள், திருநங்கைகள் எனப் பலர் பங்கேற்றனர். இதற்கு ஒருங்கிணைப்பாளனாக நான் இருந்தேன். இந்த அற்புதமான, பிரம்மாண்டமான சுவரோவியங்களை நீங்கள் இன்றும் பார்க்கலாம். - ஓவியர் ஜீவானந்தன்
***** |
|
|
|
|
|
|
|
|