Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
அமெரிக்காவில் அமைச்சர் அன்புமணி
பத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம்
காதில் விழுந்தது...
லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது
- மதுரபாரதி|ஜூலை 2005|
Share:
Click Here Enlargeஈழத்தமிழ் எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டாகத் தன் நேரம், உழைப்பு, கைப்பொருள் எல்லாவற்றையும் செலவழிப்பதில் மகிழ்வடைகிற லண்டன் பத்மநாப ஐயர் அவர்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்வி மையமும் தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வாழ் நாள் சாதனைக்கான விருதை வழங்கின. பரவலாக 'இயல் விருது' என்று அறியப்படும் இந்த விருதை இதற்கு முன்னால் பெற்றவர்களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் இலக்கிய விமரிசகர் வெங்கட் சாமிநாதனும் அடங்குவர்.

சாதனைகளைக் குறிக்கும் பட்டயத்துடன் 1500 கனேடியன் டாலர்களும் இந்த விருதில் வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஜூன்12, 2005 அன்று டொரான்டோ பல்கலையின் சீலி அரங்கத்தில் நடந்தேறியது.

"தமிழ்த்தொண்டு வகைமைப் பாட்டிற்குள் அடங்க மறுக்கும் அதே வேளை பலர் கால் பதிக்காத புதிய தடம். நாற்பது ஆண்டுகளாகப் பல தியாகங்களுக்கு மத்தியில் தன்னலமற்று, முழுநேரப் பணி போல ஈழத்தமிழ் வெளியீடு, தொகுப்பு வெளியீடு, ஈழ எழுத்தாளர்களைப் பொது நீரோட்டத்திற்கு அறிமுகம் செய்தல், ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்துவைத்துப் பிரசுரித்தல், எழுத்தாளர்களை லண்டன் வரவழைத்துக் கலந்துரையாடல்கள் செய்தல் என்று பலவகைகளில் இவர் செயலாற்றியுள்ளார்" என்று ஐயர் பற்றிக் குறிப்பிடுகிறார் வெங்கட்ரமணன் தன் வலைப்பதிவான http://domesticatedonoin.net/blog என்பதில்.

தான் ஓர் எழுத்தாளராக இல்லாத போதும் சிறு வயதிலேயே தமிழ்நாட்டின் ஜனரஞ்சகச் சஞ்சிகைகளால் ஈர்க்கப்பட்ட ஐயர் பின்னர் தீவிர இலக்கிய வாசகராக மாறினார். ஈழத்தில் வசித்து வந்த அந்தக் காலத்தி லேயே பெரும் எண்ணிக்கையில் அப்போதைய இலக்கியப் பத்திரிகைகளாகப் பெயர் பெற்ற கணையாழியைத் தருவித்து அங்கிருந்த எழுத்தாள நண்பர்களுக்கும் இலக்கிய அன்பர்களுக்கும் கொடுக்கத் தொடங் கினார். தமிழ்நாட்டின் எழுத்துக்களைப் பற்றி ஈழத்திலும், ஈழத்தமிழ் எழுத்தைப் பற்றித் தமிழ் நாட்டிலும் இருந்த அறியாமை அவருக்குப் பெரும் வருத்தத்தைத் தந்தது. இதைச் சரிக்கட்டும் பாலமாக அமைவது என்று தீர்மானித்தார்.

தமிழ்நாட்டுக்கு வந்து காவ்யா சண்முகசுந்தரம், க்ரியா ராமகிருஷ்ணன் இன்னும் பல தரமான பதிப்பாளர்களைப் பார்த்து ஈழ எழுத்துக்களைப் பதிப்பிக்கச் செய்தார். இவ்வாறு செய்வதில் அவர் எழுதியவரின் கொள்கை, அரசியல் சார்பு, பின்புலம் என்று எதையும் பார்க்காமல் தரமான எழுத்து என்ற ஒரே துலாக்கோலில் நிறுத்துச் செயல்பட்டார். பின்னர் லண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னும் அவர் பல ஈழ எழுத் தாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தவும், ஆங்கிலத்தில் அவர்களது எழுத்துக்களை மொழிபெயர்த்து வெளியிடவும் தன் நேரத் தையும் பொருளையும் அர்ப்பணித்தார்.

அண்மையில் திருப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் விருதைத் தனது 'அரசூர் வம்சம்' நாவலுக்காகப் பெற்ற இரா. முருகன் லண்டனுக்குச் சென்றபோது, அவர் ஐயர் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் தொலை பேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். பேசிய ஓரிரு நாட்களிலேயே ஐயரிடமிருந்து ஒரு பெரிய புத்தகப் பொதி ஒன்று அவர் தங்கியிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டதாம். அவ்வளவும் ஈழத்தமிழ் எழுத்துக்கள். தமிழ் எழுத்தாளர்கள் அவர்களை அறியவேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம் ஐயருக்கு. அதுமட்டுமல்ல, ஐயரவர் களின் வீட்டை இரா. முருகன் சென்றடைந்த போது அங்கே பெரும் ஈழத்தமிழ் எழுத்தாளர் பட்டாளமே இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

பத்மநாப ஐயர் தனது துணைவியாரை இழந்த போதும், அவரது வீடு இலக்கிய ஆர்வலர்களின் சங்கப் பலகையாகவே இருந்துவருகிறது.

தொண்ணூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும் கொண்டு தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த யாழ்ப்பாண நூலகத்தை இலங்கை அரசுப் படைகள் ஒரு ஜூன் மாதத்தில் தீக்கிரையாக்கின. இது ஐயரின் மனத்தில் பெரும் சோகத்தை உண்டாக்கியது. அதனை ஈடுகட்டுமுகமாக அவர் இவ்வாறு நூற்பதிப்பு, தொகுப்பு, வெளியீட்டுப் பணிக்குத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டார்.

இந்த திசையில் இவரது முதல் வெற்றிகரமான முயற்சி சென்னையில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வந்த வாசகர் வட்டம் வெளியிட்ட தொகுப்பில் தொடங்கியது. ஐயரின் தூண்டுதலால் வாசகர் வட்டம் 1968-ல் 'அக்கரை இலக்கியம்' என்ற தலைப்பில் வெளியிட்ட 400 பக்கத் தொகுப்பின் முற்பாதி முழுவதும் இலங்கைத் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் தமிழியல் என்ற அமைப்பின் மூலமும் பத்து நூல்களை வெளியிட்டார். தவிர ஐயரின் முயற்சியால் கே.பி. அரவிந்தன் உட்பட்ட பல ஈழ எழுத்தாளர்களின் படைப்புக்கள் மதுரைத்திட்டத்தில் (http://www.tamil.net/projectmadurai/) மின்வடிவில் காணக் கிடைக்கிறது.
எழுத்தாளர்களுக்கோ தம்மை முற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சக எழுத்தாளர்களின் உயர்வைக் காணச் சகிப்பதில்லை. அல்லது குழு அரசியலிலும் கொள்கை அரசியலிலும் சிக்கி இவற்றுக்கு அப்பால் உள்ள நல்லதைக் காணமுடியாது தவிக் கின்றனர். பொருள் மட்டும் படைத்த புரவலர்களில் பலருக்கு நல்ல இலக்கியச் சுவை இருப்பதில்லை. ஆனால் ஐயர் எழுத்தாளரல்ல, தேர்ந்த வாசகர். தன் மொழிமீதும் தேசியத்தின் மீதும் மாளாத அபிமானம் கொண்டவர். அவரது சாதனை களுக்கு இந்தக் கவுரவம் மிகப் பொருத்தமே.

விருதுடன் வந்த தொகை தவிர இன்னொரு பொற்கிழியை முன்னறிவிப்பின்றிப் பிற நாட்டு அன்பர்கள் சார்பில் வழங்கினார் பேராசிரியர் ஸ்ரீதரன். இந்த விழாவில் பங்கு கொள்வதற்கென்றே கனடாவின் கிழக்குக் கோடியான நியூ பிரன்ஸ்விக், குவெபெக் மாநிலங்களிலிருந்தும், அமெரிக்காவின் பாஸ்டன், டெட்ராயிட் ஆகிய இடங்களிலி ருந்தும் பலர் வந்திருந்தனர் என்றால் ஐயர் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பை ஓரளவு ஊகிக்கலாம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் லண்டன் தீபம் தொலைக்காட்சி நித்யானந்தன் ஐயர் பற்றித் தயாரித்திருந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அந்த விழாவின் பிரதம விருந்தினரான பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுப் பேராசிரியர் டேவிட் கிளான்பீல்ட் (David Clandfield) 2006-ம் ஆண்டுமுதல் அங்கே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். இது டொராண்டோ பல்கலைக்கழகத்தைக் கனடாவில் தமிழ் கற்பிக்கும் முதல் பல்கலை என்ற பெருமைக்கு ஆளாக்கும்.

விருது வழங்கும் விழாவுக்கு முன்னோட்டமாக வேறு பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. அவற்றில் பாலா ரிச்மனின் 'Setting the Record Straight: Rethinking the Motivations of Ramayana Characters in Modern South India' என்ற உரை, செல்வா கனகநாயகம், வெங்கட்ரமணன், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம், கோவர்தனன் இராமச்சந்திரன் ஆகியோர் நடத்திய மொழிபெயர்ப்பு குறித்த நிகழ்வுகள் ஆகியவை அடங்கும். தவிர வலைப்பதிவர் சந்திப்பு, புத்தகக் கண்காட்சி, புத்தக வெளியீடு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மதுரபாரதி
More

அமெரிக்காவில் அமைச்சர் அன்புமணி
பத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம்
காதில் விழுந்தது...
Share: 




© Copyright 2020 Tamilonline