பாஸ்டன்: ஸ்ரீலலிதா கல்யாணம் அட்லாண்டா: லட்சுமி தமிழ் பயிலும் மையம் ஆண்டுவிழா அரங்கேற்றம்: ஜனனி சிவகுமார்
|
|
|
|
மார்ச் 22, 2019 அன்று சாஹித்யகர்த்தா முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு நடனாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆக்டன் தேவாலயத்தில் நடைபெற்றது. 'சாஹித்ய கர்த்தாக்கள் வரிசை' (Composer's Series) என்ற தலைப்பில் கர்நாடக சங்கீத கவிச்செம்மல்களை நினைவுகூரும் வகையில், அவர்களது சாஹித்யங்களை நாட்டிய வடிவில் அபிநயித்து அஞ்சலி செலுத்தும் இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை நடத்தி வருபவர் பாஸ்டன் மாநகரத்து ஆக்டன் நகரில் நாட்டியப்பள்ளி நடத்திவரும் திருமதி சுமன் ஆதிசேஷ்.
தீக்ஷிதர் சங்கீத மும்மூர்த்திகளில் இளையவர், பாரத தேசமெங்கும் பயணித்தவர்; சமஸ்க்ருதம், தெலுங்கு மொழிகளில் பாண்டித்யம் கொண்டிருந்தார். அவரது பெரும்பாலான பாடல்களில் தலங்களின் அல்லது தல மூர்த்திகளின் சிறப்பு எடுத்தியம்பும் வகையில் பாடப்பட்டிருக்கும்.
முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு நிருத்ய ஆராதனை செலுத்தும் நிகழ்ச்சியை வடிவமைத்து வழங்கியவர் வெஸ்ட்போர்ட் நாட்டியாஞ்சலி பள்ளியின் நிறுவனர் திருமதி ஜெயந்தி கட்ராஜு. தீக்ஷிதரின் முத்தான ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நாட்டியபாவம் வழங்கினார். விவரம் இதோ:
"ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி" என்னும் மாயாமாளவகௌளை ராகக் கிருதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்தக் கிருதி ராக அமைப்பு விதிக்கு உட்பட்டு எளிய ஆரோகண, அவரோகண ஸ்வரங்களுடன் பல்லவி, அனுபல்லவிக்குச் சரளை வரிசை நடையிலும், சரணத்திற்கு ஜண்டை வரிசையிலும் பயணிக்கிறது. இவ்விதம் சாகித்யம் வழங்கிய வளமிக்க வாய்ப்பினைச் செவ்வனே பயன்படுத்திக்கொண்ட ஜெயந்தி, கிருதியின் உள்ளார்ந்த பல நேர்த்தி நிலைகளை நிருத்திய பாணியில் லாகவமாகச் சித்தரித்தார். முக்கியமாக முருகவேளின் பஞ்சபூத வியாபகத்தை விளக்கும் வகையில் நடனமணியின் அபிநயம் வெகு அற்புதம். |
|
இரண்டாவதாக வந்தது "அர்த்தநாரீஸ்வரம்" (குமுதக்ரியா ராகம்). திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைப் போற்றிப் பாடும் கிருதி. இதில் ஆண்-பெண் பாவனைகளை நளினமான அபிநயத்தால் வேறுபடுத்தி விவரித்ததில் ஜெயந்தியின் கலை நேர்த்தியும் அழுத்தமும் சபையோரை வியக்க வைத்தன. மூன்றாவது பாடல், "சூர்யமூர்த்தே நமோஸ்துதே" ராகம் சௌராஷ்ட்ரம், தாளம் சதுஸ்ரதுருவம். தமது சிஷ்யரின் உடல் உபாதையை நிவர்த்திக்க தீக்ஷிதர் இயற்றிய நவக்ரஹ கிருதிகளில் இடம்பெறும் சூரியவந்தனப் பாடல். இதில் நடன பாவத்திலே சூரிய நமஸ்காரத்தை அபிநயித்தது சபையோருக்குப் புதுமையாக இருந்தது. அடுத்ததாக, "கஞ்ச தளாயதாக்ஷி", ராகம் கமலா மனோஹரி. காஞ்சியில் அருள்புரியும் அன்னை காமாக்ஷியின் திவ்ய சொரூபத்தைப் போற்றி வந்தனை செய்யும் பாடல் இது. அன்னையின் அருள் லக்ஷணங்களை இந்தக் கிருதியில் வர்ணித்து லயிக்கிறார் தீக்ஷிதர். வர்ணனைகளைத் தத்ரூபமாக நிருத்யத்தில் சித்தரித்தார் ஜெயந்தி.
கடைசியாக நோட்டுஸ்வரம். இது ஒரு புது முயற்சி, தீக்ஷிதர் காலத்தில் வழக்கத்தில் இல்லாதது. இந்த முயற்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது கீழை-மேலை நாடுகளின் கலாச்சார சங்கமிப்பு. இதற்கு வாய்ப்பாக இருந்தது அப்போதைய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி. இந்த முயற்சியில் மேலைநாட்டு இசை மெட்டுக்களை பரதநாட்டிய நடையில் மெருகூட்டி அபிநயிப்பதும் அடங்கும். இந்தப் புத்தாக்கத்தின் உள்ளார்ந்த உன்னதங்களை மிக ஆர்வத்துடன் அபிநயித்துச் சபையோரை, குறிப்பாக பரதம் பயிலும் இளம் கலைஞர்களை, மகிழ்வித்தார் ஜெயந்தி. அதிலும் மூன்று நடை, நான்கு நடை இணைவுகள் பல காலவித்யாசங்களில் இனிய மெருகுடன் சோபித்தன. இசையும் ஜதியும் அப்படியொரு அற்புதக்கூட்டணி அமைத்திருந்தன.
பின்னர் நடந்த கலந்துரையாடலில் சாஹித்ய கர்த்தாக்களை கௌரவிக்கும் நடன நிகழ்ச்சி பரவலாக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அத்துடன் நோட்டுஸ்வரம் போன்ற ஜனரஞ்சக அம்சங்களும் கையாளப்பட்டு கலாச்சார ஒற்றுமையைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தெரிவிக்கப்பட்டது.
நிருத்யோபாசனத்தின் துவக்க நிகழ்ச்சியில் சத்குரு தியாகராஜரின் கிருதிகள் நாட்டிய வடிவம் பெற்றுச் சங்கீத ரசிகர்களுக்கு அரிய இசை-நாட்டிய விருந்தாக அமைந்தது நினைவுகூரத் தக்கது.
ச. ராமமூர்த்தி, பாஸ்டன் |
|
|
More
பாஸ்டன்: ஸ்ரீலலிதா கல்யாணம் அட்லாண்டா: லட்சுமி தமிழ் பயிலும் மையம் ஆண்டுவிழா அரங்கேற்றம்: ஜனனி சிவகுமார்
|
|
|
|
|
|
|