Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சித்தபுருஷர் சிவஸ்ரீ படேசாஹிப்
- பா.சு. ரமணன்|மே 2019|
Share:
கர்மபூமியாம் பாரதத்தில் அவதரித்த மகாஞானியரில் ஒருவர் சித்தயோகி சிவஸ்ரீ படேசாஹிப். பிறப்பால் இஸ்லாமியர். ஆனால், இம்மகானின் புனித வராலாறு மதம் கடந்து மனிதம் போற்றும் ஒன்று.

அவதாரம்
இம்மகான் எங்கு, எப்போது தோன்றினார் என்பது குறித்துச் சரிவரத் தெரியவில்லை. ஆனால், இமயமலை உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் தவம் செய்து, பின் தமிழகத்திற்கு வந்து வாழ்ந்தவர் எனத் தெரியவருகிறது. முதலில் தமிழகத்தின் வடபகுதிகளில் சிலகாலம் வசித்தவர், பின்னர் புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில் இருந்தார். தொடர்ந்து விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் என்ற ஊரை வசிப்பிடமாகக் கொண்டார்.

நடுத்தர உயரம். சிவந்த நிறம். தலையில் ஒரு குல்லா. இடுப்பில் அரையாடை. முகத்தில் பொங்கும் அருள், விழிகளில் கருணை, வாயில் எந்நேரமும் மந்திர ஜபம் அதுதான் படேசாஹிப். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். அவரது விழி நோக்கமே அவரை நாடி வருபவர்களுக்கு அருமருந்தாக விளங்கியது. வருவோரின் நோய்களைத் தீர்ப்பதில் மகான் தன்னிகரற்று விளங்கினார். விபூதி கொடுத்தே பல நோய்களைக் குணமாக்கினார்.

மகான்களாகவும் சித்த புருஷர்களாகவும் விளங்குபவர்கள் சாதி, மத, இன பேதத்தைக் கடந்தவர்கள். அவர்களுக்கு அனைவரும் ஒன்றே, அனைத்து மதங்களும் ஒன்றே! அவர்களைப் பொருத்தவரை யாவரும் மனிதர்கள். அதற்குமேல் எந்தவித வேறுபாடுகளுக்கும் இடம் கொடுப்பதில்லை. சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்பும் அவ்வாறே! அவருக்கு அல்லாவும், சிவனும் ஒன்றே.

நோய் தீர்த்த மகான்
சின்னபாபு சமுத்திரத்தில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மகான் அதன் அடியில் அமர்ந்திருப்பார். அருகில் ஒரு மண் கலயமும், சிறு பானை மற்றும் கொட்டாங்குச்சிகளும் இருக்கும். அவற்றில் பச்சிலைகளும், புனித நீரும் இருக்கும். தம்மை நாடி வருபவரின் குறைகளைச் செவிமடுப்பார். சிலரை அருகேயுள்ள மகிழ மரத்தை அப்பிரதட்சணமாகச் சுற்றி வரும்படிச் சாடை காட்டுவார். அவர்கள் சுற்றி வந்ததும் அவர்களது கண்களையே உற்றுப் பார்ப்பார். சிலர் அந்த விழிகளின் தீட்சண்யம் தாங்காது மயங்கி விழுவர். சிறிது நேரத்தில் எழுந்ததும் தமது நோய் முற்றிலும் நீங்கிவிட்டதை அறிந்து மகானை வணங்குவர். சிலர் அவரை வணங்கி விபூதிப் பிரசாதம் பெற்று அணிந்ததுமே நோய் நீங்கியதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைவர்.

சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்குச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதும் நோய் விலகிவிடும். வேறு சிலரை நோய் தாக்கப்பட்ட இடத்தில் கட்டை விரலால் அழுத்துவார். அவர்கள் சிறிது நேரத்தில் நோய் விலகிப் போனதை உணர்வர். சிலருக்குத் தாம் இமயமலைக் காடுகளில் சுற்றித் திரிந்தபோது கண்டறிந்த பச்சிலைகளை அளித்து நோய் தீர்ப்பார். இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் நோயினைத் தீர்க்கும் மருத்துவச் சித்தராகவும் படேசாஹிப் இருந்தார்.

Click Here Enlarge'சாஹிப்' என்றால் உயர்ந்தவர் என்பது பொருள். 'படே' என்றால் பெரிய. அதற்கேற்ப மிகப்பெரிய சித்த புருஷராக விளங்கினார் சிவஸ்ரீ படேசாஹிப். தன் பெயருக்கேற்றவாறு அன்பிலும் அருளிலும் பெரியவராகவும், உயர்ந்த நிலையில் வாழும் உத்தமராகவும் இருந்தார். அதனால் அன்பர்கள் அவரைப் 'பெரியய்யா', 'சாயபு', 'படே சாயபு' என்று அழைத்தனர்.

சிவஸ்ரீ என்னும் அடைமொழிக்கு ஒரு காரணம் உண்டு. இமயமலையில் தவம் செய்துகொண்டிருந்த காலத்தில் பல ஆண்டுகளாக, பல அடிகள் ஆழத்தில் புதைந்திருந்த உளி படாத 'நிஷ்டதார்யம்' என்னும் கல்லை ஆழ்நிலை தியானத்தில் கண்டறிந்து, அதனை இறையருளால், சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஒரு கிணற்றினுள்ளிலிருந்து வெளிக் கொணர்ந்தார். தமது சித்தாற்றலால் அதனை அழகிய லிங்கமாக உருவாக்கினார். தாம் வசித்த இடத்திற்கு அருகிலேயே அருணாசலேஸ்வரர் ஆலயம் ஒன்று எழுப்பி, அதன் கருவறையில் அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டித்தார். ஒரு இஸ்லாமியர் கட்டிய சிவன் கோயில் என்ற பெருமை அந்த ஆலயத்திற்கு உண்டு.

அட்டமா சித்திகள்
படேசாஹிப்பின் அற்புதங்கள் அளவிடற்கரியவை. சின்னபாபு சமுத்திரத்திலிருந்து மகான் அவ்வப்போது அருகில் உள்ள திருக்கனூருக்குச் செல்வார். சமயங்களில் ரெட்டியார் குப்பத்தில் தங்குவார். சில சமயம் பண்ணைக் குப்பத்தில் இருப்பார். இப்படி அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். சமயத்தில் அவர் எங்கு, என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. யாருமறியாமல் ஏதாவது காட்டுக்குள்ளோ, தண்ணீருள் மூழ்கியோ தவம் செய்து கொண்டிருப்பார். அல்லது சூட்சும உடலில் உலவிக் கொண்டிருப்பார். ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில், பல நபர்களுக்குக் காட்சி அளித்ததும் உண்டு. அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசிக்கொள்ளும் போதுதான் மகான் செய்த திருவிளையாடல் பற்றித் தெரியவரும். அட்டமா சித்திகளையும் அவர் பெற்றிருந்தார். 'நவகண்ட யோகம்' எனப்படும், உடலை ஒன்பது துண்டுகளாகப் பிரித்து, மீண்டும் ஒன்றாக்கும் சித்திலும் மகான் தேர்ந்திருந்தார். குளத்திற்குள் நீராட இறங்குவார். ஆனால் வேறு ஊரில் ஒரு குளத்திலிருந்து எழுந்து வருவார். இல்லாவிட்டால் குளத்திற்குள்ளேயே மூச்சடக்கி வெகுநேரம் அமர்ந்திருப்பார். சூரியன் உச்சிக்கு வரும்போது குளத்திலிருந்து எழுந்து வெளியே வருவார். இப்படி அவர் செய்த அற்புதங்கள் ஏராளம்.

கம்பு சூத்திரம்!
ஒருமுறை கட்டிலோடு ஒரு சிறுவனை நான்கு அன்பர்கள் வேகமாகத் தூக்கி வந்தனர். சித்தரின் அருகே வந்ததும் கட்டிலை இறக்க முற்பட்டனர். அவ்வளவுதான், சித்தர் மிகுந்த சீற்றத்துடன் ஒரு கம்பை எடுத்து வந்தவர்களை விரட்டத் தொடங்கினார். அவர்களும் பயந்து போய், சித்தரின் சீற்றத்துக்கு என்ன காரணம் என்பது புரியாது கட்டிலை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிலில் படுத்திருந்த சிறுவன் பயந்து போய் எழுந்து வேகமாக ஓடினான். சித்தர் வேகவேகமாக அவனைத் துரத்த, அவனும் விரைந்து ஓடினான். உடனே சித்தர் அமைதியாக அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து விட்டார்.

அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று புரியாமல் ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்த அன்பர்கள், கட்டிலில் தூக்கி வந்த சிறுவனும் திரும்பி ஓடி வருவது கண்டு ஆச்சரியம் கொண்டனர். பெருமகிழ்ச்சி அடைந்தனர். காரணம், பிறந்தது முதல் இதுநாள்வரை நடக்கவே நடக்காத, கால்கள் செயலிழந்த சிறுவன் அவன். அவனுக்காகவே அங்கு வந்தனர். கோபப்படுவது போல் நடித்து சிறுவனின் ஊனத்தைப் போக்கிய சித்தரின் கால்களில் விழுந்து அனைவரும் வணங்கினர். அவரோ ஏதும் அறியாதவர்போல் எங்கேயோ பார்த்துக் கொண்டு மரத்தடியில் அமைதியாக வீற்றிருந்தார்.

வெள்ளம் வழி விட்டது
ஒருநாள் திருக்கனூரிலிருந்து சின்னபாபு சமுத்திரத்துக்கு வந்து கொண்டிருந்தார் படேசாஹிப். வழியில் செல்லிப்பட்டுக்கு அருகே பெரிய ஆறு ஒன்று இருந்தது. அதில் அவ்வப்போது வெள்ளம் பெருகெடுக்கும். அன்று பார்த்தால் அதில் வெள்ளம். பக்கத்தில் உள்ள கண்டமங்கலத்திலிருந்து திருமணத்துக்காக மாட்டு வண்டிகளில் வந்திருந்த பெண் வீட்டார், வெள்ளம் வடிவதற்காகக் கரையில் காத்துக் கொண்டிருந்தனர். வெள்ளம் குறையவில்லை, நேரம் கடந்து கொண்டிருந்தது. திருமணம் நின்று விடுமோ என்ற அச்சத்தில் மூழ்கியிருந்தது அந்தக் குடும்பம். அந்தப் பக்கமாக வந்த படேசாஹிப் இதனைக் கண்டார். நிலைமையை உணர்ந்தார். வண்டிக்காரனைப் பார்த்துச் சைகை செய்துவிட்டு ஆற்றில் இறங்கினார். வேண்டாம் என்று மற்றவர்கள் எச்சரித்தனர். அதைக் கண்டு கொள்ளாமல் அவர் வேகமாக ஆற்றில் இறங்கி நடக்கத் துவங்கினார்.

என்ன ஆச்சரியம், அவரது கழுத்து மட்டத்துக்கு ஒடிக் கொண்டிருந்த நீர், சற்று நேரத்தில் முழங்கால் அளவு குறைந்தது. அவர் நடக்க, நடக்க வெள்ளம் வடியத் தொடங்கியது. 'ஆஹா, ஆற்றில் வெள்ளம் வடிந்துவிட்டது' என்று நினைத்த பெண்வீட்டார், வண்டிகளுடன் ஆற்றில் இறங்கி அக்கரையை அடைந்தனர். அடைந்ததும் திரும்பிப் பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! காரணம், ஆற்றில் முன்போலவே நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததுதான்.

கற்சிலைகளா? கள்வர்களா?
ஒருமுறை சித்தர், ரெட்டியார் என்ற அன்பரின் வீட்டுக் குடிலில் தங்கியிருந்தார். அப்போது ரெட்டியாருக்குச் சொந்தமான வயலுக்குள் சில திருடர்கள் நுழைந்தனர். நெற்கதிர்கள் அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கட்டாகக் கட்டி வண்டியில் ஏற்றிச் செல்ல முயன்றனர். அவர்கள் புறப்ப்டும் சமயம் திடீரென்று அங்கே வந்தார் படேசாஹிப். திருடர்களால் கை, கால்களை அசைக்க முடியவில்லை. அப்படியே சிலையாக நின்றுவிட்டனர். அது மட்டுமல்லாமல் அவரது உருவம் மெல்ல மெல்லப் பெரிதாகி பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றதைப் பார்த்த அவர்கள் பயந்துபோய் மயக்கமடைந்து விழுந்தனர். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது சித்தர் தன் இயல்பு உருவத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

திருடர்கள் அவரை வணங்கி மன்னிப்புக் கோரியதுடன், திருட்டுத் தொழிலை விட்டுவிடுவதாகவும் வாக்களித்தனர். சித்தர் அவர்களை ஆசிர்வதித்தார்.
குழந்தைகளோடு குழந்தையாக
சித்தருக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் அன்பு. சிறிது மணலைக் கையில் எடுத்து, அவர்கள் கையில் வைத்து கையை மூடச் செய்வார். குழந்தைகள் கையைத் திறந்து பார்த்தால் அம்மணல் கல்கண்டாகவோ, சர்க்கரையாகவோ, மிட்டாயாகவோ மாறியிருக்கும். குழந்தைகளும் 'தாத்தா, தாத்தா' என்று சொல்லி அவரைச் சுற்றி வந்து ஆடுவர். சித்தரும் புன்னகையுடன் அமர்ந்திருப்பார். சில சமயங்களில் அருகில் இருக்கும் சிறிய பள்ளத்தில் அமர்ந்து கொள்வார். தம்மீது மணலைப் போட்டு மூடச் சொல்வார். பார்த்தால், வேறோர் இடத்திலிருந்து எழுந்து வருவார். குழந்தைகள் கைகொட்டி மகிழ்வர். குழந்தைகள் மீண்டும் மீண்டும் வேண்ட, அவரும் சலிக்காமல் பலமுறை அதுபோல் விளையாடுவார்.

ஜீவசமாதி
பற்பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைப் புரிந்த சித்தர் மண்ணுலகில் இனி தூல உடலுடன் பணியாற்றுவதை விட சூட்சும உடலில் பணி செய்வதே சிறந்தது எனத் திருவுளம் கொண்டார் போலும். பொது சகாப்தம் 1868ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி செவ்வாய்க்கிழமை. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளை அழைத்தார். அவர்கள் கையில் சிறிது மணலைக் கொடுத்தவர், அருகிலிருந்த பள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். அருகிலிருந்த மணற்குவியலைக் கொண்டு தம்மை மூடுமாறு சைகை செய்தார். குழந்தைகளும் தாத்தா வழக்கம்போல ஏதோ விளையாட்டுக் காண்பிக்கப் போகிறார் என நினைத்தவாறே மணலைக் கொட்டிக் குழியை மூடினர். சில நிமிடம் காத்திருந்தனர். நிமிடங்கள், மணி ஆனதுதான் மிச்சம். அவர் வரவில்லை. 'தாத்தா', 'தாத்தா' என்று அரற்றினர் குழந்தைகள். அப்போதும் சித்தர் வரவேயில்லை.

வெகு நேரமாகியும் தாத்தா வராததால் பயந்துபோன குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். அப்போது அந்தக் குழியிலிருந்து சித்தரின் கரம் மட்டும் வெளிப்பட்டது. அதில் நிறைய மிட்டாய்கள் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்ட குழந்தைகள் ஊருக்குள் போய் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினர். அவர்கள் வந்து பார்த்து சித்தர் ஜீவசமாதி ஆகி விட்டதை உணர்ந்தனர். சித்தருக்கு திருமந்திர முறைப்படி சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.

சமாதி ஆலயம்
சித்தரின் புகழ்பெற்ற இச்சமாதி ஆலயம் விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் (கண்டமங்கலம் வழி) சின்னபாபு சமுத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பேருந்தில் செல்பவர்கள் கண்டமங்கலத்தில் இறங்கி அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள சின்னபாபு சமுத்திரத்தைப் பேருந்து அல்லது ஆட்டோவில் அடையலாம்.

இந்த ஜீவசமாதியைச் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறன்று தரிசித்து நீர்மோர், பானகம், அன்னதானம் விநியோகம் செய்து ஏராளமானோர் பலன் பெற்றிருக்கின்றனர். வியாழக்கிழமை தோறும் இந்து, இஸ்லாமிய மக்கள் இங்கே திரளாக வந்து வழிபடுகின்றனர். மனநோய், செய்வினை, ஏவல் கோளாறுகள் போன்றவை நீங்கும் தலம் என்று ஆலய அறிவிப்பு தெரிவிக்கின்றது. இங்கு சைவ முறைப்படி திருநீறு கொடுத்தும், வைணவ முறைப்படி துளசி தீர்த்தம் அளித்தும், இஸ்லாமிய முறைப்படி மயிலிறகு கொண்டு ஓதி, சந்தனம் அளித்தும் என சர்வ சமய வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தை அப்பிரதட்சிணமாகச் சுற்றி வரவேண்டும். அது போன்றே இங்குள்ள மகிழமரத்தையும் அப்பிரதிட்சிணமாகச் சுற்றி வரவேண்டும். தீபம் ஏற்றி வழிபடுதல் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அனுமதி பெற்றுச் சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தில் இரவில் தங்கித் தீவினை தீர்ந்து செல்வோர் எண்ணற்றோர்.

ஆண்டுதோறும் மாசி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்பின் குருபூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயம் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அருகிலுள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம், மகத்தான சக்திமிக்க ஆலயமாகும். சித்தரின் ஜீவசமாதிக்கும், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கும் இடையேயுள்ள யாருமறியாச் சுரங்கப் பாதையில் எண்ணற்ற யோகிகளும், சித்த புருஷர்களும் அமர்ந்து தியானம் செய்து வருவதாக நம்பப்படுகிறது.

ஆலய முகவரி: சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப் ஆலயம், சின்னபாபு சமுத்திரம் (அஞ்சல்), கண்டமங்கலம் (வழி), விழுப்புரம் மாவட்டம் - 605 102

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline