|
|
|
பௌர்ணமி இரவில் பொங்கிவரும் நிலவொளியில் வானத்தில் ஆங்காங்கே மினுமினுக்கும் விண்மீன்கள் மொட்டை மாடியில் கொட்டி முடித்ததொரு மழை இரவு
விரித்து வைத்த பாய் மேலே விழித்திருக்கும் வாரிசுகள் இடப்புறம் இரண்டும் வலப்புறம் ஒன்றும் பாட்டி தாத்தா மடியில் தலா ஒன்றுமாக அமர்ந்திருந்து அமுதுண்ணும் அழகான தருணம்
காலாண்டு விடுமுறைக்கு கிழவன் கிழவியைக் காண வாரிசுகள் அனைவரும் வந்திருந்த அதிசய வருடம்
தட்டிலே பிசைந்த பருப்புசாதம் வீட்டிலே உருக்கிய நெய்யுடன் உருளைக்கிழங்கு வறுவல் குவளையில் சீரகத் தண்ணீர்
கதை சொல்லும் பாட்டிக்குத் தலையாட்டும் பேத்தி விடாது கேள்வியுடன் பொடியன் விரைந்து விடை சொல்ல மற்றொருவள் |
|
முதல் தலைமுறை கொடுக்க மூன்றாம் தலைமுறை ருசிக்க உருண்டை வடிவில் உணவு விநியோகம் கைகளில் இளைப்பாறிய பின் வாய் அடைந்தது சிலருக்கு நேராகச் சேர்ந்தது பலருக்கு
கதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் உருண்டை விரைந்தோடியது கை கழுவி வாய் கொப்பளித்து முந்தானையில் முகம் துடைத்து மடியில் இடம்பிடிக்க முந்தி ஓடிவந்து மீண்டும் பாட்டியைச் சூழ்ந்து கை நீட்டி அமர்ந்தனர்
மைய அரைத்த மருதாணி வெங்கலப் பாத்திரத்தில் வெள்ளியின் ஒளிக்கீற்றில் தங்கமாக மின்னியது உள்ளங்கை மத்தியில் வட்டப் பதக்கமாய் உருமாறியது
ஒவ்வொரு குழந்தையின் விரல்நுனிக்கும் மருதாணிக் குல்லாய் போட்டுவிட்டாள் கடைக்குட்டி கண்மணிக்கோ கட்டைவிரலை மறந்துவிட்டாள்
உலர்ந்த மருதாணி உதிர்ந்த சில துகள்கள் உறக்கதேவதை கண்களை வருட குழந்தைகளின் போர்வையில் மறைய நிலவொளியில் நித்திரை
சொந்தங்கள் சூழ நெஞ்சினில் நிம்மதி கடைக்குட்டி மார்பினில் கை சூப்பிக்கொண்டு கண்வளர்வாள்
கிருஷ்ணபிரசாத் பார்த்தசாரதி, ஹார்ட்ஃபோர்டு, கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|