Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
சாதனையாளர்
பிரணவ் ரவிச்சந்திரன்
ராஜலக்ஷ்மி நந்தகுமார்
- மதுரபாரதி|ஜனவரி 2019|
Share:
செல்பேசி பலரது உறக்கத்தைக் கெடுப்பது நமக்குத் தெரியும். ஆனால் உறக்கத்தில் மூச்சடைப்பு (sleep apnea) என்கிற நோயினால் தொல்லைப்படுபவர்களுக்கு உதவும் கருவியாக ராஜலக்ஷ்மி நந்தகுமார் செல்பேசியைத் தனது குறுஞ்செயலி ApneaApp வழியே மாற்றி அமைத்திருக்கிறார்!

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் ராஜலக்ஷ்மி மதுரையில் பிறந்து, சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியியலில் பட்டம் பெற்றவர். இரண்டாண்டுகள் பெங்களூருவில் ஆய்வு உதவியாளராகப் பணிசெய்த பின் வாஷிங்டனுக்கு வந்தார்.

வௌவால்கள் ஒலியைப் பயன்படுத்திப் பொருள்களைப் 'பார்ப்பது' நமக்குத் தெரியும். "அண்மையில் Dark Knight என்கிற சூப்பர் ஹீரோ படத்தில் லூஷியஸ் ஃபாக்ஸ் தனது செல்பேசியின் ஒலியலைகளால் பார்ப்பதைக் கண்டோம். இது 'ஒலிப் பார்வை' (sonar vision) என்கிற கருத்தை அதீதக் கற்பனைக் கதைகளிலும் கணினி விளையாட்டுகளிலும் நாம் பார்க்கிறோம். இதுதான் என்னை ஊக்குவித்தது. இங்கே அறிவியல் கற்பனை உண்மையாகிறது" என்கிறார் ராஜலக்ஷ்மி.

ராஜலக்ஷ்மியின் இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு மார்க்கோனி கழகத்தின் பால் பரான் இளம் ஆய்வாளர் விருதை (Paul Baran Young Scholar award) பெற்றுத் தந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் காப்புரிமம் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் ஒரு பெரிய மருத்துவ நிறுவனம் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கவும் பட்டுள்ளது.ஒருவர் உறங்கும்போது அவரது செல்பேசி அருகே இருந்தபடி அவரது உறக்கத்தைக் கவனிக்கும். எப்படி? ஆண்டிராய்டு செல்பேசியின் ஸ்பீக்கர் வழியே சாதாரணமாக மனிதக் காதுகளுக்குப் புலப்படாத உயர் அதிர்வெண் ஒலியலைகளை இந்தக் குறுஞ்செயலி அனுப்புகிறது. அது அவர்மீது பட்டுத் திரும்பி வருகையில் அதைச் செல்பேசியின் மைக் பதிவுசெய்து கொள்கிறது. இவ்வாறு, உறங்குகிறவரிடம் ஏற்படும் மிகச்சிறிய மாற்றத்தையும் இவ்வாறு துல்லியமாகக் கவனிக்க முடிகிறது. அதாவது விரலசைவு, மூச்சு விடுவதில் மாற்றம், இதயத்துடிப்பில் மாற்றம் எல்லாமே தெரியும். இந்தப் பதிவுகளை அதற்கான கணினி நிரல்கள் வாசித்து, நமக்கான நோய்க்குறியீடுகளாகக் காட்டிவிடும்.

கேட்க நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு முன்னால் என்ன செய்தார்கள்? "முதலில் பாலிசோம்னாகிராஃபி என்ற எந்திரத்தோடு நோயாளியின் பல பகுதிகளை மின்கம்பிகளால் இணைத்துவிடுவார்கள். அதை ஒரு தேர்ந்த உதவியாளர்தான் செய்யவேண்டும். இரவெல்லாம் அப்படியே பதிவாகும். அவ்வளவு நீண்ட நேரம் இருக்கும்போது நோயாளி அசைந்துவிட்டால் சில சமயம் மின்கம்பி இணைப்பு விட்டுவிடும். அப்போது கிடைக்கும் பதிவு சரியானதாக இருக்காது. செலவும் சில ஆயிரம் டாலர் ஆகும். ஆனால் அப்னியா குறுஞ்செயலி கொண்ட மொபைல் ஃபோன் சற்றுத் தூரத்தில் இருந்தபடியே வேலையை மிகச்சரியாகச் செய்யும்." அருகே அப்னியா ஆப் இருந்திருந்தால் இதைக் கேட்டு நமது மூச்சு நின்றதையும் பதிவு செய்திருக்கும்.
சரி, இந்த உறக்கத்தில் மூச்சு தடைப்படுவதால் என்ன நஷ்டம்? "20 மில்லியன் அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கவனக்குறைவு, மிகைச்செயல்பாடு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், வாதம், வாகனம் ஓட்டுகையில் உறங்கிவிடுவதால் விபத்து என இதற்குப் பல விளைவுகள் உண்டு." அதுமட்டும் அல்ல. ஒவ்வொரு நாளும் அபின் (Opium) என்கிற போதைப்பொருளை அளவுக்கதிகமாக உட்கொள்வதால் அமெரிக்காவில் 100 பேர் இறந்துபோகிறார்களாம். அதைத் தடுக்கவும் 'அப்னியா ஆப்' உதவும் என்கிறார் ராஜலக்ஷ்மி.

"சமுதாயத்தின் மீது பெரிய தாக்கம் ஏற்படுத்துகிற பிரச்சனையைச் சரியாகத் தேர்ந்தெடுக்கும் தனித்திறன் ராஜலக்ஷ்மியிடம் இருக்கிறது" என்கிறார் ஆலன் ஸ்கூலின் இணைப் பேராசிரியரும், ராஜலக்ஷ்மியின் ஆலோசகருமான டாக்டர் ஷ்யாம் கொல்லகோட்டா. மேலும் அவர் விளக்குகிறார், "ஏதோ அறிவியல் புனைகதையில் வரும் தொழில்நுட்பம் போன்ற ஒன்றைக் கையிலெடுத்து, அதை நிஜ உலகில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் கருவிக்கு ஏற்ப மாற்றியமைத்து விட்டார்!"

"ஒரு மார்க்கோனி விருதாளரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இணையற்ற அறிவுத்திறன், தொழில்முனைப்பு, தமது செயல்பாட்டால் மனிதகுலத்தை உயர்த்துதல் என்பவை ஆகும். ராஜலக்ஷ்மியிடம் இவை அனைத்தும் உள்ளன" என்கிறார் மார்க்கோனி கழகத்தின் தலைவர் டாக்டர் வின்டன் செர்ஃப். "கம்பியில்லாத் தொழில்நுட்பத்தின் தந்தை மார்க்கோனி. அவர் பெயரால் வழங்கப்படும் விருதைவிட ஊக்கமும், பணிவும் தருவது வேறென்ன இருக்க முடியும்?" என்கிறார் ராஜலக்ஷ்மி.ராஜலக்ஷ்மியின் தந்தை திரு நந்தகுமார், தாயார் திருமதி ஜெயந்தி நந்தகுமார். இருவரும் மதுரைவாசிகள். அங்கே மருத்துவ உபகரணங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார் தந்தை. அதனால், ராஜலக்ஷ்மிக்குச் சிறுவயதிலிருந்தே மருத்துவ உபகரணங்களில் ஈடுபாடு இருந்து வந்ததாம்.

"ஓர் உயர்ந்த லட்சியத்தை எடுத்துக்கொண்டு அதை அடைய உழைக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார் என் தந்தை. அதேபோல அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் நிறுவனர் டாக்டர் வி. சாந்தா அவர்களைச் சந்தித்தது மறக்கமுடியாது. பெண்கள் பெரிய வெற்றிகளை எட்டமுடியும் என்பதை வெகுகாலம் முன்னரே நிரூபித்தவர் அவர்" என்று தனக்கு உயரங்களை எட்ட உள்ளூக்கம் தந்தவர்களைப் பற்றிச் சொல்கிறார் ராஜலக்ஷ்மி.

மார்க்கோனி விருது புதியது என்றாலும் ராஜலக்ஷ்மிக்கு விருதுகள் பழகிப்போனவைதாம். பட்டியல் இதோ:
• Best Paper award SenSys 2018
• UW Medicine Judy Su Clinical Research award 2018
• CoMotion Graduate Student Innovator award 2016
• Best Presentation award Microsoft Student summit 2016
• Honorable Mention CHI 2016
• Madrona Venture Group award 'Runner up' for ApneaApp 2015
• Best paper nominee MobiSys 2015
• Best Presentation award SenSys 2014

இன்னும் பயனுள்ள பலவற்றைக் கண்டுபிடித்து மேலும் பல பெருமைகளைச் சேர்க்கத் 'தென்றல்' வாழ்த்துகிறது.

தொகுப்பு: மதுரபாரதி
More

பிரணவ் ரவிச்சந்திரன்
Share: 
© Copyright 2020 Tamilonline