அஸிஸியின் அற்புத ஞானி ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு பெயரன்
|
|
|
|
"அம்மா! என்னிக்காவது நான் ஒங்களைச் சித்தின்னு கூப்பிட்டிருக்கேனாம்மா? சொல்லுங்க" என்றாள் சுமதி.
"என்னடி சொல்ற, சித்தியா?" என்று ஒரே குரலில் கேட்டனர் சுமதியின் அப்பா கீர்த்திவாசனும், அத்தை விசாலமும்.
"எனக்கு எல்லாம் தெரியும்ப்பா. நம்ப சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு போறச்சே ஒவ்வொரு தடவையும், என்னோட அம்மா என் அஞ்சு வயசுலே போய்ச் சேர்ந்துட்டான்னும், அம்மாவோட தங்கையே எனக்கு அம்மாவா வந்திருக்கான்னும் யாராவது ஒருத்தர் என்ன வச்சுண்டே பேசுவாப்பா. ஆனா எனக்கு எப்பவுமே அம்மா இவாதாம்ப்பா" என்று அழுதுகொண்டே சொன்னாள் சுமதி.
"அம்மா! நான் என்ன தப்பு பண்ணினேன்னு, என்னை அத்தை ஆத்துக்குப் போகச் சொல்றேள் அம்மா!" என்று மீண்டும் மீண்டும் கேட்டாள் சுமதி.
எதற்குமே பதில் சொல்லாமல், முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் உம்மென்றிருந்தாள் கமலா. நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார் கீர்த்திவாசன். அவர்களின் மகன் ஐந்து வயது தேஜஸ்.
கீர்த்திவாசனுக்கு மூன்று வயது, அக்கா விசாலத்திற்குப் பதினோரு வயது இருக்கும்பொழுதே அவர்களுடைய அப்பா தவறிவிட்டார். அவர்களின் தாய்மாமன் உடனடியாகத் தன் தங்கையையும், குழந்தைகளையும் அழைத்து வந்து தன்வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த அவளது சீதன வீட்டில் குடியமர்த்தி விட்டார். ஊர்ப்பெரியவர்கள் நாலுபேரை உடன் அழைத்துச் சென்று, மாமியார் வீட்டில் தன் தங்கைக்குச் சேரவேண்டிய நிலம், வீடு, ஆகியவற்றை எழுதி வாங்கி வந்தார். நிலத்தில் நல்ல விவசாயமும் செய்துவந்தார்.
மாமாவுக்கு பூந்தோட்டம் கிராமத்தில் நூறு ஏக்கர் நிலம். நல்ல விளைச்சல், வரும்படி. அவருக்கு இரண்டே பெண்கள் - அகிலா, கமலா. கீர்த்திவாசன் பிறந்த இரண்டாம் நாள் அகிலா பிறந்தாள். அதன்பிறகு ஏழாண்டுகள் கழித்து கமலா பிறந்தாள்.
விசாலத்திற்குப் பதினெட்டு வயதில் கல்யாணம் ஆயிற்று. சென்னையில் வாசம். கல்யாணத்திற்குப் பிறகு விசாலம் பி.ஏ., எம்.ஏ., என்று படித்துவிட்டுச் சுமதி படிக்கும் பள்ளியில் ஆசிரியை ஆனார்.
அகிலாவும் கீர்த்திவாசனும் ஒரே வகுப்பு என்பதால் சிறந்த நண்பர்கள் ஆனார்கள். கமலா பிறந்ததிலிருந்தே "கீர்த்திக்கு ஆம்படையாள் பிறந்துட்டா" என்று சொல்லிச் சொல்லியே, இருவர் மனதிலும் பெரியவர்கள் காதலை வளர்த்தார்கள்.
ஆயிற்று, அகிலாவும் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, டீச்சர் டிரெயினிங் சேர்ந்து விட்டாள். மாமாவும் மகளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார். அகிலா பார்ப்பதற்கு நல்ல லட்சணம், நல்ல படிப்பு, எக்கச்சக்கமாகப் பரிசுகள் என்று இருந்தாலும் ஒரே ஒரு குறை, அவளுக்கு ஒரு கால் குட்டை. ஆகையால் விந்தி விந்தித்தான் நடப்பாள். வந்த வரன்களுக்கு எல்லாம் இந்தக் குறையே மிகையாகத் தெரிந்தது. நான்கு வருடங்களாகத் திருமணம் தட்டிக்கொண்டே சென்றது. வீட்டில் ஒருமாதிரியான இறுக்கம்.
இதற்கிடையில் கீர்த்திவாசன் மேற்படிப்பிற்காகச் சென்னை சென்று அங்கேயே நல்ல வேலையில் அமர்ந்துவிட்டார். ஒருநாள் விடுமுறையில் பூந்தோட்டம் வந்தார். அக்கா விசாலமும் வந்திருந்தாள்.
அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கீர்த்தியும் கமலாவும் ஒருவரையொருவர் காதல் பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். மாமா ஊஞ்சலில் அமந்திருந்தார். திடீரெனக் கீர்த்தியை அருகில் அழைத்து, "கீர்த்தி! நான் உன்ன ஒண்ணு கேப்பேன். நீ தப்பாம அதைச் செய்வியாப்பா?" என்று கேட்டார் மாமா.
"என்ன மாமா, இப்படி கேட்டுட்டேள்? நீங்க சொன்னா அதைச் செய்யறது என் கடமை மாமா" என்றான் கீர்த்தி.
"அப்புறமா வார்த்தை தவறக் கூடாதுப்பா" என்ற மாமாவிடம், "அப்படி செஞ்சா நான் மனுஷனே இல்ல மாமா" என்றான் கீர்த்தி. "அகிலாவை நீதான் கல்யாணம் செய்துக்கணும்" என்றார் மாமா. |
|
இதைக்கேட்ட மாமி கொதித்தெழுந்தாள். "ஏன்னா ! என்ன பேசறேள் நீங்க? கீர்த்திக்கும் கமலாவுக்கும்தான் கல்யாணம்னு சொல்லிச் சொல்லியே கொழந்தைகளே வளர்த்துட்டு, இப்ப திடீர்னு அகிலாவ செஞ்சுக்கோன்னு சொன்னா நியாயமா? எதுக்கு இப்படி மாத்திப் பேசறேள்?"
அகிலா ஒருபடி மேலே போய், "அப்பா! கீர்த்தி என்னோட ஃப்ரெண்டுப்பா. அவனை ஒருநாளும் என்னால புருஷனா நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது. அவனோடதான் கல்யாணம் அப்படின்னா, எனக்கு கல்யாணமே வேண்டாம்ப்பா" என்றாள்.
கமலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. கீர்த்தியின் அம்மாவும் அக்கா விசாலமும் என்ன சொல்வதென்றே தெரியாமல் விழித்தனர்.
மாமா தொடர்ந்தார், "அகிலாவுக்கு எத்தனையோ வரன் பார்த்துட்டேன். எல்லோருக்குமே அவள் விந்தி, விந்தி நடக்கறது ஒண்ணுதான் கண்ணுல படறது. நான் என்ன செய்வேன்! கீர்த்திக்கும் கமலாவுக்கும் உள்ள பிரியம் எனக்கு மட்டும் தெரியாதா? எனக்கு வேற வழியே தோணலை. கமலாவுக்கு எந்தக் குறையும் இல்லாததால, அவளுக்கு எப்படியும் நல்ல வரன் அமைஞ்சிடும். ஆனா அகிலா? அதனாலதான் நான் ரொம்ப யோசிச்சு இந்த முடிவுக்கு வந்தேன். இதுமட்டும் நடக்கலன்னா, என்னால தாங்கமுடியாது" என்று தன் இயலாமையைத் தெரிவித்தார்.
மாமாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போனது. வேறு வழியின்றி அகிலா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள். ஒரு வருடத்தில் சுமதி பிறந்தாள். ஆனால் தங்கைக்குத் தான் துரோகம் செய்துவிட்டோமோ என்று உருகி உருகியே, சுமதிக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது காய்ச்சலில் படுத்து உயிர் விட்டாள் அகிலா. தன் கடைசி தருணங்களில் கமலாவின் கையைப் பிடித்துக் கொண்டு தன்னை மன்னித்து விடும்படி கெஞ்சினாள்.
அகிலாவின் மறைவிற்குப் பிறகு, மாமாவின் குறுக்கீட்டால் கீர்த்திவாசனுக்கு கமலாவுடன் இரண்டாம் திருமணம் ஆயிற்று. கமலா, சுமதியைத் தன் சொந்த மகளாகவே நினைத்து அன்பு செலுத்தி வந்தாள். தனக்கென்று ஒரு குழந்தை வேண்டாம் என்று கூட முடிவெடுத்து விட்டாள். ஆனால் ஏழு வருடங்கள் கழித்து தேஜஸ் பிறந்து விட்டான். ஒரு தம்பி பிறந்ததில் சுமதிக்கு ஒரே குஷி. அவன்மீது பாசமழை பொழிந்தாள். படிப்பு, பாட்டு என்று சுமதி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.
தேஜசுக்கு மூன்று வயது ஆகும்வரை எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. தேஜஸ் யாராவது கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பான். ஆனால் வாயைத்திறந்து ஒரு ஒலிகூட எழுப்பவில்லை. டாக்டர்களிடம் காண்பித்தபோது, "குழந்தைக்கு எந்தக் குறையுமில்லை; எப்படியும் பேசி விடுவான்" என்று நம்பிக்கை வார்த்தை கூறினர். குழந்தைக்கு வயது ஐந்தாகி விட்டது.
கமலாவின் மனம் மெல்ல, மெல்ல மாறத் தொடங்கியது. அக்கா அகிலா தன் காதல் வாழ்க்கையைப் பறித்துக்கொண்டு, தன்னை இரண்டாம் தாரம் ஆக்கினாள். அவள் பெற்ற பெண், படிப்பு, பாட்டு, பேச்சு என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறாள். தன் மகனோ ஒரு வார்த்தைகூடப் பேசமுடியாமல் தவிக்கிறானே என்று மனதிற்குள் புழுங்க ஆரம்பித்தாள்.
இந்தப் புழுக்கத்தின் விளைவாக ஒருநாள் சுமதியின் ரெக்கார்டு நோட்புக்கில் காபியைக் கொட்டினாள். பாத்ரூமிலிருந்து வெளியே வந்த சுமதி எதேச்சையாக இதைப் பார்த்துவிட்டாள். அவள் பார்த்ததை கமலா கவனிக்கவில்லை. சுமதிக்கு அப்பாவிடம் சொல்லக் கொஞ்சம் தயக்கம். ஆதலால் நேரே அத்தையிடம் சென்று நோட்புக்கைக் காண்பித்தாள். இப்படி சுமதியின் படிப்பிற்குச் சிறுசிறு இடைஞ்சல்கள் செய்ய ஆரம்பித்தாள் கமலா.
கீர்த்தியின் கவனத்திற்கு இவை வந்தபோது, மெல்ல மெல்லக் கமலாவிடமே அவளுடைய நடவடிக்கைக்குக் காரணம் கேட்டான். "அவ வேணும்னா அவளோட அத்த வீட்டுக்குப் போகட்டுமே" என்று நிர்த்தாட்சண்யமாகக் கூறி விட்டாள் கமலா.
இதோ, அத்தை வீட்டுக்குப் புறப்படுவதற்கு முன் தான் செய்த தவறு என்ன என்று கேட்டு அழுதாள் சுமதி. அம்மாவிடமிருந்து பதில் வராமல் போகவே விக்கி, விக்கி அழுதுகொண்டே தம்பியிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் சுமதி.
அழுதுகொண்டே போகும் சுமதியைப் பார்த்து முதன்முறையாக வாயைத் திறந்து "அக்கா, அக்கா" என்று அழைத்துக்கொண்டே அவள் பின்னாலேயே ஓடினான் தேஜஸ்!
உமா ஹைமவதி ராமன், லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா |
|
|
More
அஸிஸியின் அற்புத ஞானி ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு பெயரன்
|
|
|
|
|
|
|