மெகா மில்லியன்
|
|
கதவு தட்டப்பட்டது |
|
- சிவராமன்|நவம்பர் 2018| |
|
|
|
|
கதவு தட்டப்பட்டது.
அவன் யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா?
போய்த் திறந்தான்.
ஒரு பெரியவர், 80 வயது இருக்கும். கூடவே ஒரு வயோதிகப் பெண்மணி. ஓரிரண்டு வயது குறைவாக இருக்கலாம்.
"என்னய்யா வேண்டும்?" அவன் வெறுப்பாக.
"சாப்பிட்டு நாளாச்சு. எதனாச்சும் போடுங்கைய்யா" அந்தப் பெண்மணி.
"போம்மா போ... எனக்கு நெறைய வேலை இருக்கு."
"அப்படிச் சொல்லாதீங்கையா. உங்களப்போல பணம் உள்ளவங்க உதவி பண்ணாட்டா நாங்க எங்கேய்யா போக?"
"எங்கயாவது போய் கூலிவேலை செய். பைசா கிடைக்கும். போ."
"இந்தத் தள்ளாத வயசில யாரு வேலை தருவாங்க... இவருக்கு வேற காது கேட்காது, பேச முடியாது. எப்படியாவது சாகறவரை வாழணும் இல்லியா. தயவு பண்ணுங்கய்யா."
அவன் உள்ளே போனான். மேசைமீது அவன் செய்வதற்காக வாங்கி வைத்த பொருட்கள் அப்படி அப்படியே இருந்தன. அவைகளைப் பார்த்தபடியே பக்கத்து அறைக்குப் போய் 10 ரூபாயை எடுத்து வந்து அவளிடம் வெறுப்போடு போட்டு விட்டுப் போய் சோஃபாவில் உட்கார்ந்தான்.
கண்ணை மூடி 10 நிமிடம் ஏதோ சிந்தனை.
மறுபடி கதவு தட்டப்பட்டது.
இந்த முறை திறக்கவே கூடாது என்று தீர்மானித்தான். மறுபடி கதவு தட்டப்பட்டது.
அவன் மறுபடி யோசித்தான். திறக்கலாமா? வேண்டாமா?
போய்த் திறந்தான்.
ஒரு நடுத்தர வயதுப் பெண். கூடவே ஒரு வீல்சேரில் ஒருபையன். கடகடவெனப் பேச ஆரம்பித்தாள்.
"ஸார்... இவன் என் பையன். கழுத்துக்குக் கீழே விளங்காது. புருஷன் போய்ச் சேர்ந்துட்டாரு...எதனாச்சும் உதவி பண்ணுங்க ஐயா..."
அவன் வெறுப்போடு ஏதோ சொல்ல முற்பட்டான். அதற்குள் அவள், "ஏதோ உடம்பு நல்லா இருந்திருந்ததாக்கூட எங்கனாச்சும் பொழைச்சுப் போன்னு விட்டுட்டு நானும் ஏதோ வேலைன்னு போயி வாய் வயிறைப் பாத்துக்குவேன். ஆனா இப்ப இவனைக் கடைசிவரை காப்பத்தற பொறுப்ப ஆண்டவன் என்கிட்ட ஒப்படைச்சுட்டான். கடைசிவரை பாத்துத்தானே ஆகணும்."
அதற்குமேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் உள்ளே போய் ஏதோ கையில் கிடைத்த சில்லறையை எடுத்துக் கொடுத்துவிட்டு கதவைச் சாத்திவிட்டு சோஃபாவில் போய் உட்கார்ந்தான்.
மேசைமீது அவன் செய்வதற்காக வாங்கிவைத்த பொருட்கள் அப்படி அப்படியே இருந்தன. அவைகளைப் பார்த்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். |
|
பத்து நிமிடம் போனது. கதவு தட்டப்பட்டது.
இந்த முறை அவன் திறப்பதாக இல்லை. என்ன ஆனாலும் ஆகட்டும். ஆனால் இப்போது கதவு இன்னும் பலமாகத் தட்டப்பட்டது. ஏதோ டாக்டர், ஹாஸ்பிட்டல் போன்ற வார்த்தைகள் கேட்டது.
போய்த் திறந்தான். எதிர்த்த ஃப்ளாட் தாத்தா!
பேரன் கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் வருவதாகவும், வேற யாரும் வீட்டில் இல்லாததால் கொஞ்சம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் தாத்தா, "நல்லவேளை, தெய்வமா நீங்க இங்க இருந்தீங்க.." என்றார். கதவைச் சாத்தினான்.
அதற்குள் பேரனைத் தூக்கியபடி தாத்தா வெளியே வர, அவரிடமிருந்து பேரனை இவன் வாங்கி, தூக்கிக்கொண்டு போய்க் காரில் ஏற்றி, தாத்தாவையும் ஏற்றி ஹாஸ்பிடல் போய் தையல் போட்டு வீட்டுக்கு வந்தான். பேரனைப் படுக்கையில் போட்டுவிட்டு, தாத்தா சொன்ன ஆயிரம் தேங்க்ஸ்களையும் வாங்கிக்கொண்டு கதவை திறந்து சோபாவில் சாய்ந்தான்.
பொருட்கள் அப்படியே மேசைமேல் இருந்தன. இன்னும் எதுவுமே பண்ணவில்லை. மறுபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். அதன்பின் விறுக்கென்று எழுந்து மேசையை நோக்கிப் போனான்.
மீண்டும் கதவு தட்டப்பட்டது.
அவன் திறப்பதாக இல்லை.
மீண்டும் கதவு தட்டப்பட்டது.
அமைதியாக இருந்தான்.
இப்போது ஒரு குழந்தை "அங்கிள், அங்கிள்" என்று அழைப்பதைப் போலிருந்தது. கதவைத் திறந்தான். பெண் குழந்தை. 5 அல்லது 6 வயது இருக்கும்.
அதற்குள் மாடி ஃப்ளாட்டிலிருந்து படி வழியாக அந்தக் குழந்தையின் அம்மா இறங்கி வந்தபடியே, "நீ இங்கயா இருக்கே? வீட்டுக்கு வா" என்று சொல்ல, குழந்தையோ ஒடி இவன் வீட்டுக்குள் போய், "அங்கிள்கூட விளையாடிட்டுதான் வருவேன்" என்றது.
அவனுக்கு சாய்ஸ் தரப்படவில்லை.
குழந்தையின் அம்மா அவனிடம் சிறிது நேரம் கழித்துவந்து கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லிவிட்டு, விடுவிடுவெனப் படி ஏறிப்போய் விட்டாள். இன்று பார்த்து ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அவன் யோசிப்பதற்குள், குழந்தை உள்ளே இருந்தபடியே "அங்கிள், வா... கண்ணாமூச்சி விளையாடலாம்" என்றது.
குழந்தையுடன் விளையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை. மனது லேசானதுபோல் உணர்ந்தான். குழந்தையை அம்மா வந்து அழைத்துப் போனபின், மறுபடி சோஃபாவில் வந்து உட்கார்ந்தான் .
வாங்கி வந்த பொருட்கள் அப்படியே மேசைமேல் இருந்தன. இன்னும் எதுவுமே செய்யவில்லை.
அவன் பார்வை மூடியிருந்த கதவின்மேல் விழுந்தது. ஏதோ நினைப்பில் அதையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். கதவின் அந்தப் பக்கத்திலிருந்து சற்று முன்னால் கேட்ட சிலவார்த்தைகள் திரும்ப வந்து விழுந்தன.
"எப்படியாவது சாகறவரை வாழணும் இல்லியா... தயவுபண்ணுங்கய்யா";
"ஆனா இப்ப இவனை கடைசிவரை காப்பத்தற பொறுப்ப ஆண்டவன் என்கிட்ட ஒப்படைச்சுட்டான். கடைசிவரை பாத்துத்தானே ஆகணும்.";
"நல்லவேளை, தெய்வமா நீங்க இங்க இருந்தீங்க.";
"அங்கிளிடம் விளையாடி விட்டுத்தான் வருவேன்...கண்ணாமூச்சி விளையாடலாம் வா."
சடாரென்று எழுந்தான். மேசையை நெருங்கினான்.
தற்கொலை செய்துகொள்வதற்காக வாங்கி வைத்திருந்த அந்தப் பொருட்களை எடுத்தான். குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்தான்.
கதவு தட்டப்பட்டது.
புத்துணர்ச்சியோடு ஓடிப்போய்க் கதவைத் திறந்தான்.
சிவராமன், ஃபோல்சம், கலிஃபோர்னியா |
|
|
More
மெகா மில்லியன்
|
|
|
|
|
|
|