Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
வ.வே.சு. ஐயர் (பகுதி - 2)
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2018|
Share:
கப்பலில்
வ.வே.சு. ஐயர் இந்தியாவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பலில் ஓர் உளவாளி இருந்தான். அவனுக்கு ஐயர்மீது எப்படியோ சந்தேகம் வந்துவிட்டது. ஐயர் இருக்குமிடத்தையே சுற்றிச் சுற்றி வந்தான். ஆனால் ஐயர் அவனை லட்சியம் செய்யவில்லை. தினம் ஐந்துவேளை தொழுவதிலும், ஓதுவதிலும் தனது நேரத்தைச் செலவிட்டபடி இருந்தார். அவப்போது உடன் பயணித்த இஸ்லாமியர்களுடன் குரான் பற்றி உரையாடுவார். அதன் பெருமைகளைப் பேசுவார். இதனைப் பார்த்த அந்த உளவாளி இவர் யாரோ பெரிய 'மௌல்வி' போல இருக்கிறது என்று நினைத்து அவரை உளவு பார்ப்பதை விட்டுவிட்டான். கப்பல் பம்பாய் துறைமுகத்தை அடைந்தது. அங்கு இறங்கிய இஸ்லாமிய நண்பர்களுடன் ஐயரும் கலந்துவிட்டார். துறைமுகத்தை விட்டு வெளியேறிய ஐயரை, அவர் முன்பே செய்திருந்த ஏற்பாட்டின்படி மற்றொரு இஸ்லாமிய நண்பர் ஒருவர் வந்து சந்தித்து அழைத்துச் சென்றார். (அந்த நண்பர் யாரென்பதை ஐயர் இறுதிவரை வெளிப்படுத்தவில்லை)

பம்பாயில் சில நாட்கள் இருந்தார் ஐயர். பம்பாயின் தெருக்களைச் சுற்றிப் பார்த்தார். மக்களின் அறியாமை, அடிமை உணர்வு அவருக்கு மிகுந்த கோபத்தையும், கவலையையும் தந்தது. எப்படியாவது முயன்று விரைவில் பாரத தேசத்தை அன்னியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறச் செய்யவேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது. சில நாட்கள் அங்கே இருந்தவர் பின்னர் மீண்டும் அதே இஸ்லாமியர் வேடத்தில் கொழும்பு நகருக்குச் செல்லும் கப்பலில் ஏறினார். அந்தக் கப்பலிலும் ஐந்துவேளை தொழுகை. சக பயணிகளுடன் உரையாடல்கள் தொடர்ந்தன. கொழும்பில் இறங்கினார். அங்கே சில நாட்கள் தங்கினார். உளவாளிகளின் தொல்லைகளைத் தவிர்க்க இஸ்லாமியர் வேடத்திலேயே அவர் இருந்தார். ஒரே வேடத்தில் நாட்கணக்கில் இருப்பதும், கழிவறைக்குச் செல்லும்போதும் கூட அவ்வேடத்திலேயே இருக்கவேண்டியிருந்ததும் அவருக்கு அலுப்பையும் சலிப்பையும் தந்தது என்றாலும் மனம் சோரவில்லை. அதே வேடத்துடன் கல்கத்தா செல்லும் கப்பலில் ஏறினார். கப்பல் கடலூரில் நின்றிருந்தபோது அதிலிருந்து ரகசியமாக இறங்கிய ஐயர், யாருக்கும் தெரியாமல் துறைமுகத்திலிருந்து வெளியேறி மக்கள் கூட்டத்துடன் கலந்தார். அவர் புதுச்சேரி துறைமுகத்திலேயே இறங்கியிருக்கலாம் தான். ஆனால், அங்கே பிரிட்டிஷ் உளவாளிகளின் தொல்லை மிக மிக அதிகம் என்பதாலேயே கடலூரில் இறங்கினார். அங்கே ஒரு குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு பாண்டிச்சேரிக்குப் பயணப்பட்டார். அது 1910ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒன்பதாம் நாள்.

புதுச்சேரியில்
பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பகுதி. நேரடியாக ஃபிரெஞ்சு கவர்னரின் கண்காணிப்பில் இருந்தது. பிரிட்டிஷாரின் சட்டதிட்டங்கள் அங்கே செல்லுபடியாகாது என்பதால் அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி உள்ளிட்ட பல சுதேசிகள் அங்கு வந்து தங்கியிருந்தனர். அக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசால் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட 'இந்தியா' இதழ் பாண்டிச்சேரியில் இருந்து வெளியாயிற்று. பாரதியார் அதன் ஆசிரியர். மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் அதன் உரிமையாளர். அவர் வீட்டருகே இறங்கிக் கொண்ட ஐயர், வண்டியை அனுப்பிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார்.

வீட்டின் மேல்பகுதியில் பாரதியாரும், ஸ்ரீனிவாசாச்சாரியாரும் உரத்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். கீழ்ப்பகுதியில் ஆச்சாரியாரின் மகள் படித்துக் கொண்டிருந்தாள். முன் பின் அறிமுகமில்லாத ஓர் இஸ்லாமியர் தன் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்ட அவள் திகைத்தாள். யாரென விசாரித்தாள். தான் அவளது தந்தையின் நண்பர் என்று பதில் சொன்னார் வ.வே.சு. ஐயர். உடனே அப்பெண், "அப்பா, உங்களைப் பார்க்க உங்கள் நண்பர் சாயபு வந்திருக்கிறார்" என்று மாடியைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

உடன் ஆச்சாரியார் கீழே இறங்கி வந்தார். அவருக்கு ஐயரை அடையாளம் தெரியவில்லை. தனக்கு நண்பராக முஸ்லிம் யாரும் இல்லாததால் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். உடனே ஐயர், "என்ன ஆச்சாரியாரே, 'தாந்தே'யின் 'தெய்வ நாடகம்' நூலும், அகராதியும் வந்து சேந்தனவா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார்.

அப்போதுதான் ஆச்சாரியாருக்கு விஷயம் விளங்கியது. சில வாரங்களுக்கு முன் அவருக்கு ரோமாபுரியிலிருந்து ஒரு புத்தகப் பார்சல் வந்திருந்தது. அதில் அனுப்பியவர் முகவரி தெளிவாக இல்லை. ஆனால் உள்ளே இந்தத் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தன. கையெழுத்தும் பரிச்சயமானதாக இருந்தது. ஆனால் யாரெனத் தெரியவில்லை. நூல்கள் தனக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்குமோ என்று நினைத்தார் ஆச்சாரியார். அதன் ரகசியம் அவருக்கு இப்போதுதான் புரிந்தது. தான் அங்கே வரப்போவதை முன்கூட்டியே ஐயர் குறிப்பால் உணர்த்தியிருந்ததை இப்போது புரிந்துகொண்டார். உடனே ஐயரை வரவேற்று மாடிக்கு அழைத்துச் சென்றார். பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பாரதியும் ஐயரும்
பாரதியும், வ.வே.சு. ஐயரும் முதன்முறை சந்தித்தது அப்போதுதான். பத்திரிகைக் கட்டுரைகள் மூலம் முன்பே பரிச்சயம் இருந்தாலும் முதல் சந்திப்பு அதுதான். இந்தியா வந்து சேர்ந்த கதையை விரிவாக விவரித்தார் ஐயர். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து புறப்பட்டு ஆங்கிலேய உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவி ஐயர் வந்திருக்கும் சாகசப் பயணத்தை அறிந்து ஆச்சாரியாரும், பாரதியும் ஆச்சரியப்பட்டனர். ஐயர் பாண்டிச்சேரியிலேயே தங்குவதே அவருக்குப் பாதுகாப்பானது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஐயர் புதுவையில் யோகி அரவிந்தரைக் காணச் சென்றார். ஐயரைப் பற்றி நன்கு அறிந்திருந்த அரவிந்தர், அவரும் தன்னைப் போலவே உளவாளிகளை ஏமாற்றித் தப்பி வந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டார். அவரது வீர தீரத்தைப் போற்றிப் பாராட்டினார்.

புதுவையில் புதுக்குடித்தனம்
புதுச்சேரியில் உடனடியாக ஒரு வீடு பார்த்துக் குடியேறிய ஐயர் முதல் காரியமாக மூன்று தந்திகளை அனுப்பினார். முதல் தந்தி தனக்குப் பலவிதங்களிலும் உதவி செய்த காமா அம்மையாருக்கு. அவருக்கு நன்றி கூறியும், தான் பத்திரமாக வந்து சேர்ந்த விவரத்தையும் அதில் தெரிவித்திருந்தார். இரண்டாவது தந்தி லண்டனின் உளவுப் பிரிவுத் தலைவருக்கு. அதில் தான் புதுச்சேரிக்கு பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வந்து சேர்ந்து விட்டதாகவும், உளவாளிகளுக்கு மிக்க நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். ஐயர் அனுப்பிய மூன்றாவது தந்தி அவரது மனைவி பாக்கியலக்ஷ்மி அம்மாளுக்கு. தான் புதுச்சேரிக்கு வந்துவிட்டதாகவும் உடனடியாகப் புறப்பட்டு வந்து சேருமாறும் அதில் எழுதியிருந்தார். ஐயர் எங்கே இருக்கிறாரோ, என்ன ஆனாரோ என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த பாக்கியலக்ஷ்மி அம்மாளுக்கு அந்தத் தந்தி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உடனடியாகத் தனது சகோதரர் பசுபதி ஐயருடன் புறப்பட்டு புதுவை வந்து சேர்ந்தார். புதுச்சேரியில் ஐயரின் புதிய வாழ்க்கை தொடங்கியது.

உளவாளிகளின் தொல்லைகள்
Click Here Enlargeஆனால், அது நிம்மதியான வாழ்வு என்று சொல்ல முடியாது. காரணம், உளவுப் பிரிவுத் தலைவருக்கு ஐயர் அனுப்பிய தந்திதான். வ.வே.சு. ஐயர் லண்டனிலோ, ஃபிரான்ஸிலோ எங்கோ இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு அந்தத் தந்தி பேரதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தங்கள் கட்டுக்காவல்களையும், உளவாளிகளையும் மீறி அவர் புதுச்சேரிக்குச் சென்று சேர்ந்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. உடனடியாக இந்தியாவின் பிரிட்டிஷ் உளவுப்பிரிவுத் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வ.வே.சு. ஐயரை எப்படியாவது கைது செய்து புதுச்சேரியிலிருந்து வெளியேற்றி இந்தியாவுக்குக் கொண்டுவருவது என்று திட்டமிடப்பட்டது. அதற்காகத் தனியே சில உளவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தனர்.

ஐயர் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு அந்தத் தெருப்பக்கம் சுற்றிக் கொண்டிருப்பதும் அவர் செல்லும் இடமெல்லாம் பின்னால் போவதும் அவர்கள் வழக்கம் ஆனது. ஆனால், புதுச்சேரி ஃபிரெஞ்சு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பகுதி என்பதால் அவர்களால் உடனடியாக அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனால் வ.வே.சு. ஐயர் இதற்கெல்லாம் அசரவில்லை.

அவர் விடியற்காலையில் எழுவார். நேரடியாகக் கடற்கரைக்குச் செல்வார். சமயங்களில் அவருடன் பாரதியாரும் வேறு சில நண்பர்களும் உடன் வருவர். கடலில் நீந்தி ஆழத்துக்குச் சென்று குளிப்பார். பாரதியார் சிறிது நீந்திவிட்டு கரைக்குத் திரும்பிவிடுவார். பின் சூரியன் உதயம் ஆகும்போது இருவரும் காலைச் சூரியனையே பார்த்து தியானம் செய்வர். ஐயரின் வாய் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். பாரதியாருக்குப் புதிது புதிதாகக் கற்பனைகள் தோன்றும். அதைப் பாடலாகப் பாடுவார். வேத மந்திரங்களை முணுமுணுப்பார். இது சில மணி நேரம் தொடரும். பின்தொடர்ந்த உளவாளிகள், ஒன்றும் செய்ய இயலாமல் தொலைதூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பர்.

புதுவை மும்மூர்த்திகள்
கடற்கரையில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு ஐயர் வீடு திரும்புவார். பூஜை செய்துவிட்டு உணவை முடிப்பார். பின் தேடிவரும் நண்பர்களுடன் உரையாடல். பத்திரிகைகளுக்கு எழுதுவது, வரும் கடிதங்களுக்கு பதில் எழுதுவது என்று பகல்பொழுது கழியும். பின்னர் சற்று ஓய்வுக்குப் பின் திருக்குறள், கம்பராமாயணம் இரண்டு நூல்களையும் எடுத்து வைத்துக்கொண்டு படிப்பார். குறிப்பெடுப்பார். சிறு சிறு கட்டுரைகளை எழுதுவார். மாலையானதும் பாரதி வீட்டுக்குச் செல்வார். இருவரும் புறப்பட்டு மண்டயம் சீனிவாசாச்சாரி வீட்டுக்குச் செல்வர். பின் அங்கிருந்து புறப்பட்டு மூவரும் அரவிந்தர் தங்கியிருந்த இல்லத்துக்குச் செல்வர். அங்கு பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதம் நடக்கும். வேத, உபநிஷதங்களை அரவிந்தர் விளக்குவார். ஐயர் தான் படித்த உலக இலக்கியங்கள் குறித்து உரையாற்றுவார். பாரதியார் பக்தி, வேதாந்தம் பற்றி விரிவாகப் பேசுவார். சமயங்களில் அவர்களது உரையாடல்கள் ஆவியுலகவாசிகளைப் பற்றியதாகவும் இருக்கும். (ஸ்ரீ அரவிந்தர் இவ்வாறு ஆவிகளுடன் உரையாடி "யோகஸாதனம்" என்னும் நூலையும் எழுதினார். இந்நூல் ஸ்ரீரங்கம் வாணிவிலாச அச்சகத்தில் அச்சேறியது. அப்போது நூலுக்கு ஆசிரியர் அரவிந்தர் என்பதல்லாமல் 'உத்தரயோகி' என்று பதிப்பிக்கப்பட்டது. அரவிந்தர், உத்தர திசையிலிருந்து வந்த யோகி என்பதால் இப்பெயர். பின்னர் தான் அறிமுகப்படுத்திய 'பூரண யோகம்' என்பதற்கு மாறான கொள்கைகள் அந்த நூலில் இருந்ததால் அரவிந்தர் அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்) இவ்வாறு பிரம்மா, விஷ்ணு, சிவன் போல புதுவையின் மும்மூர்த்திகளாய் பாரதி, அரவிந்தர், வ.வே.சு. ஐயர் இருந்தனர்.

ரகசியப் பயிற்சிகள்
ஐயர், இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக 'தர்மாலயம்' என்ற பெயரில் ஓர் இல்லம் அமைத்து குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம் போன்ற பயிற்சிகளைக் கற்பித்தார். இந்நிலையில் இளைஞர் ஒருவர் திருநெல்வேலியிலிருந்து ஐயரைப் பார்க்க வந்தார். குடுமி வைத்து மிகவும் ஒல்லியாக இருந்த அந்த இளைஞரை யாருமறியாமல் தினந்தோறும் விடியற்காலையில் அழைத்துக்கொண்டு எங்கோ வெளியில் செல்வார் ஐயர். முற்பகலில்தான் திரும்பி வருவார். இது சில மாதங்கள் வரை தொடர்ந்தது. ஐயர், விடியற்காலையிலேயே சென்று விடுவதை அறியாமல் காலையில் ஐயரை நோட்டமிட அவர் வீட்டிற்கு வரும் உளவாளிகள், அவர் வீட்டினுள்தான் இருக்கிறார் என்று நினைத்தனர். ஆனால் ஐயரோ அந்த இளைஞரை 'கரடிக்குப்பம்' என்னும் மனிதர்கள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து வந்தார் என்பது அவர்கள் யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் தனது ஓய்வு நேரத்தில் ஃபிரெஞ்சு மொழியை முழுமையாகக் கற்றுத் தேர்ந்த ஐயர் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தார். அவன் பயன்படுத்திய போர் உத்திகள் அவரை மிகவும் கவர்ந்தன. ஆகவே அந்த முறைகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷாரை வெல்லமுடியும் என்று அவர் நம்பினார். அவற்றைக் குறிப்பெடுத்து ரகசியமாக அச்சிட்டு விநியோகிக்க ஆரம்பித்தார். இதுபற்றி அறியவந்த திலகர் தனது மருமகனைப் புதுவைக்கு அனுப்பினார். கொரில்லா போர் உத்திகளையும், இன்னும் பல ரகசிய முறைகளையும் சங்கேத மொழியில் எழுதிய ஐயர் அவற்றைத் திலகரின் மருமகனிடம் கையளித்தார். பின்னர் திலகர் மருமகன்மீது பிரிட்டிஷாருக்கு எந்தச் சந்தேகமும் வராமல் இருக்க ஒரு நாடோடி போன்ற வேடத்தை அவருக்கிட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதுபோன்ற பல செயல்களை மிக ரகசியமாக, பிரிட்டிஷ் உளவாளிகள் யாரும் கண்டுபிடிக்க முடியாதபடிச் செய்துவந்தார் ஐயர். ஆங்காங்கிருந்த புரட்சிக்குழுக்களுடனும் அவர் ரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால், இவை அனைத்தும் ஒற்றர்களால் அறிய முடியாதபடியே நிகழ்ந்து வந்தன.

ஆனால், ஜூன் 17, 1911ல், மணியாச்சியில் நிகழ்ந்த ஆஷ் கொலை வழக்கால் இவையனைத்தும் முடிவுக்கு வந்தன. ஐயரால் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்ட வாஞ்சி ஐயர் ஆஷைச் சுட்டுக் கொன்றதுடன் தானும் தற்கொலை செய்துகொண்டான். இதன் பின்னால் இருப்பது வ.வே.சு. ஐயர்தான் என்று பிரிட்டிஷ் அரசு சந்தேகித்தது. காரணம், கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி ஃபிரெஞ்சுத் தயாரிப்பு. ஆனாலும் அவர்களால் ஐயர்தான் வாஞ்சியிடம் அதனைக் கையளித்தார் என்று எந்தவித ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. புதுச்சேரியில் முன்பு இருந்தவரும், 'சூரியோதயம்' பத்திரிகையின் ஆசிரியருமாகிய நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன் வனத்துறையில் பணியாற்றியதால் தனக்கு அமர்ந்து தியானம் செய்ய ஒரு மான்தோல் வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை சங்கேத வார்த்தையாக நினைத்த பிரிட்டிஷ் அரசு, அவர்தான் ஆஷ் கொலைக்கு வித்திட்டவர் என்று முடிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் பலரையும் கைது செய்தது. ஆனால், வ.வே.சு. ஐயர்மீது எந்த நடவடிக்கையையும் அவர்களால் எடுக்க முடியவில்லை.
பிள்ளையார் துணை!
ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாதக் குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஐயருக்கும் பல துன்பங்கள் தொடரலாயின. ஐயரை எப்படியாவது கைது செய்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லத் திட்டம் வகுக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான பிரிட்டிஷ் உளவாளிகள் புதுவையில் முகாமிட்டனர். ஐயர் வீடும், பாரதியார், அரவிந்தர் வீடுகளும் மிகுந்த கண்காணிப்புக்கு உள்ளாகின. அதுமுதல் ஐயர் வெளியே செல்லும்போது ஆங்காங்கே பல உளவாளிகள் அவருக்குத் தொல்லை தர ஆரம்பித்தனர்.

ஒரு சமயம் எப்படியாவது ஐயரை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு செல்வது என்று முடிவு செய்த உளவாளிகள் அவர் சென்று கொண்டிருந்த தெருவை விட்டு வெளியே செல்ல இயலாதவாறு இருபுறமும் அடைத்து நின்றுகொண்டனர். இதனை அறிந்த ஐயர் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் தஞ்சம் புகுந்தார். அவர் எப்படியும் வெளியே வந்துதானே ஆக வேண்டும் என உளவாளிகள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஐயர் வெளியே வரவே இல்லை. உளவாளிகளில் ஒருவர் கோயிலுக்கு உள்ளே சென்று பார்த்தார். அங்கே ஐயரைக் காணவில்லை.

அவர்களுக்கு ஒரே அதிசயமாகப் போய்விட்டது. ஐயர் எப்படி மாயமாய் மறைந்திருக்க முடியும், ஏதாவது மந்திர, தந்திர வித்தைகள் தெரிந்தவரோ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பூஜை செய்யக் குருக்கள் வந்து பூஜை செய்துவிட்டுப் போனார். அதன் பின்னரும் ஐயர் வெளியே வரவில்லை. இனி அங்கிருப்பதில் பயனில்லை; ஐயர் எப்படியோ மாயமாகி விட்டார் என்று நினைத்து உளவாளிகள் கலைந்து சென்றனர். நன்கு இருட்டிய பிறகு, அந்தத் தெருவில் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு ஐயர் கோயிலை விட்டு வெளியே வந்தார். அவர், அதுவரை, கருவறையில் இருந்த மிகப் பெரிய விநாயகர் சிலையின் பின்னால் மறைந்திருந்தார். உளவாளிகள் மட்டுமல்ல; பூஜை செய்த குருக்களாலும் இதனை அறிய முடியவில்லை.

பிணம் எழுந்தது
மற்றொரு நாள், ஐயர் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது பிரிட்டிஷ் உளவாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரவுடிகள் கூட்டமாக அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். ஐயர் எப்படியும் வெளியே வருவார். அவரை மடக்கிவிடலாமென்பது அவர்கள் திட்டம்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டில் அழுகைச் சத்தம்கேட்டது. யாரோ இறந்து விட்டதாகத் தெரிந்தது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் நடந்தன. சற்று நேரத்தில் ஒரு பாடையில் பிணம் ஒன்று போனது. ரவுடிகள் அந்தப் பிணத்துடன் கூட ஐயர் வருகிறாரா என்று உற்று கவனித்தனர். ஐயர் வரவில்லை என்பதை அறிந்து, அவர் உள்ளேதான் இருக்கிறார், வரட்டும் வெளியில், ஒரு கை பார்த்துவிடலாம் என்று காத்திருந்தனர்.

பிணத்தை இடுகாட்டிற்குத் தூக்கி வந்தவர்களோ காடு வந்ததும் சுற்றுமுற்றும் பார்த்தனர். யாரும் தொடர்ந்து வரவில்லை என்பது தெரிந்ததும், பிணத்தின் முகத்திரையை விலக்கி, கை, கால் கட்டுக்களை அவிழ்த்தனர், அவ்வளவு நேரம் பிணம்போல் நடித்த ஐயர் எழுந்து கை, கால்களை உதறிக்கொண்டார். பின் நண்பர்கள் துணையுடன் வீடு வந்து சேர்ந்தார்.

பாதகம் செய்பவரைக் கண்டால்
ஒருநாள், ஐயர், இரவு நேரத்தில் தனது இல்லத்தில் உணவருந்திக் கொண்டிருந்தார். அது குழந்தை சுபத்திரா பிறந்திருந்த நேரம். மூன்று மாதக் குழந்தையான அவளை பாட்டுப்பாடி பாக்கியலக்ஷ்மி அம்மாள் தூங்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியே பலத்த கூக்குரல் எழுந்தது. கதவை யாரோ இடிஇடியென்று இடித்தார்கள். பாக்கியலக்ஷ்மி பயந்துபோய் விட்டார். கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தபோது உளவாளிகளின் தூண்டுதலின் பேரில் பல போக்கிரிகள் அந்தஇல்லத்தைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அவர்களின் கைகளில் பயங்கரமான ஆயுதங்கள்.

"உடனே ஐயரை வெளியே அனுப்பு" என்று அவர்கள் பயங்கரமாகக் கூக்குரலிட்டனர். "ஐயர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். காத்திருங்கள்; வருவார்" என்று சாந்தமாகப் பதில் சொன்னார் பாக்கியலக்ஷ்மி அம்மாள்.

அவர்களும் "உம் உம்.." என்று உறுமியவாறே வெளியே காத்திருக்க ஆரம்பித்தனர்.

அப்படியே பாதிச் சாப்பாட்டில் எழுந்தார் ஐயர். அவருக்கு விபரீதம் புரிந்தது. உரல், ஆட்டுக்கால், அம்மி போன்றவற்றை ஓசையில்லாமல் நகர்த்திக் கதவுக்குப் பின்னால் வைத்தார். பின் மனைவி, குழந்தையுடன் கொல்லைப்புறம் போனார். அங்கே அவர் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் இடையே மிகப் பெரிய சுவர் இருந்தது. அதன் மீது தாவி ஏறினார். குழந்தையை வாங்கிக் கொண்டவர். மனைவியையும் கஷ்டப்பட்டு மேலே ஏற்றினார். மறுபுறம் குதித்தார். இவ்வாறாகச் சென்று மூன்று வீடுகளைக் கடந்து மூன்றாம் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி விவரம் சொல்லி, அங்கே மனைவியையும், குழந்தைகளையும் சேர்ப்பித்தார். பின் மீண்டும் திரும்பிவந்து, தனது பெட்டிகள், புத்தகங்களையும், தனக்கு உதவிய காமா அம்மையாரின் படத்தையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் சுவரேறிக் குதித்து மூன்றாவது வீட்டில் அவற்றைப் பத்திரப்படுத்தினார். மனைவிக்கு "மீண்டும் வருவேன்" என்று தைரியம் கூறிவிட்டுத் தன் இல்லம் வந்ந்தார்.

தன் கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு. வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றார். அங்கிருந்து, கீழே பார்த்தார். குடித்துவிட்டுக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த அந்த ரவுடிகளின் கூட்டம், பலமுறை அழைத்தும் ஐயர் குரல் கொடுக்காததாலும், அரை மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும் கதவை இடிக்கத் தயாராய் நின்று கொண்டிருந்தது.

உடனே ஐயர் தன் கையை மேலே தூக்கி வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டார். அவ்வளவுதான். அந்த அதிர்வேட்டுச் சத்ததைக் கேட்ட கும்பல் பயந்துபோனது. மாடியைப் பார்த்தது. கையில் துப்பாக்கியுடனும் கண்களில் அளவற்ற கோபத்துடனும் நின்று கொண்டிருக்கும் ஐயரைப் பார்த்து, "ஐயையோ.. துப்பாக்கிடா... நம்பளையும் சுட்டுடப் போறாருடா... ஓடுங்கடா..." என்ற கூக்குரல் எழுந்தது. கூட்டம் நடுநடுங்கிப் போய் ஓட்டமெடுத்தது.

வெளிநாடுகள் தான் என்றில்லை புதுச்சேரியிலும் ஐயரின் வாழ்க்கை இத்தகைய சாகசங்களுடன் தான் கழிந்தது. அதே சமயம் தன்னால் இயன்ற சமூக நற்பணிகளையும் ஐயர் செய்து வந்தார். ஒரு சமயம் புதுச்சேரியில் திடீரென ஏற்பட்ட புயலால் ஏழை மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பலர் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். ஐயர், தனது நண்பர்கள் உதவியுடன் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, ஆடை முதலியன அளித்து உதவினார்.

பிரிட்டிஷாரின் சதி
ஐயரையும் மற்ற புதுவைச் சுதேசிகளையும் கைது செய்யத் தாங்கள் போட்ட திட்டங்கள் யாவும் தோல்வியுற்றதால் சதித்திட்டம் ஒன்றைத் தீட்டியது பிரிட்டிஷ் உளவுப்படை.

ஒருநாள் ஐயரின் வீட்டில் நீர் இறைத்துக் கொண்டிருந்த வேலைக்காரி பருவதம், கிணற்றில் ஜாடிபோல் ஒன்று இருப்பதைப் பார்த்தாள். "யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் போலிருக்கிறது" என்று பயந்து போன அவள், அலறிக்கொண்டு ஐயரிடம் ஓடிவந்து தகவல் தெரிவித்தாள். இது உளவுப் பிரிவினரின் வேலையாகத்தான் இருக்கும் என்று உடனே ஊகித்த ஐயர், அந்த ஜாடியைக் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். பெரிய கூடை ஒன்றைக் கயிற்றில் கட்டிக் கீழே இறக்கினார். ஜாடி கூடையில் வந்ததே தவிர, மேலே இழுக்கும்போது கீழே விழுந்தது. ஜாடியைச் சுற்றி ஒரு கயிறு கட்டியிருந்தது, கயிற்று நுனியில் ஒரு கல் இருந்தது. அதனால் அந்த ஜாடியை மேலே எடுக்க முடியவில்லை. உடனே ஐயர் ஒரு பையனைக் கிணற்றுக்குள் இறங்கச் சொல்லி, ஜாடிக் கயிற்றைத் துண்டித்து, அதனை மேலே கொண்டு வந்தார்.

யாரோ ஜாடியை மூடி, ஒரு கல்லைக் கட்டிக் கிணற்றுக்குள் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அதற்குள் இந்த விஷயம் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாருக்கும், பாரதியாருக்கும் தெரிந்துவிட்டது. ஸ்ரீ அரவிந்தருக்கும் தகவல் போனது. அனைவரது ஆலோசனையின்படி அந்த ஜாடியை பிரெஞ்சு கவர்னம் வசம் நேரடியாக ஒப்புவித்தார் ஐயர். நடந்த நிகழ்வுகளையும் முறைப்படித் தெரிவித்தார்.

கவர்னர் முன்னிலையில் அந்த ஜாடி திறக்கப்பட்டது. ஜாடியின் உள்ளே சில காகிதங்களும் ஒரு ரப்பர் ஸ்டாம்பும் இருந்தன. ரத்தம் சொட்டும் பல தலைகளைக் கையில் வைத்திருக்கும் காளியின் படமும் அதில் இருந்தது. ஒரு புரட்சிச் சங்கத்தில் அங்கத்தினராவதற்கான விண்ணப்பங்கள் இருந்தன. புரட்சியைத் தூண்டும் பிரசுரங்களும் சில கடிதங்களும் இருந்தன. ஒன்றில் மண்டயம் ஸ்ரீனிவாச்சாரியாரின் பெயர் இருந்தது. நீலகண்ட பிரம்மச்சாரி சங்கத்தில் சேர்ந்ததற்கான உறுப்பினர் படிவமும், சேர்க்கை ஒப்புதல் கடிதமும் அதில் இருந்தன. ஆச்சாரியார் தலைமையில் ஐயர், அரவிந்தர், பாரதியார் என அனைவரும் நீலகண்ட பிரம்மச்சாரியுடன் இணைந்து பிரிட்டிஷ் அரசிற்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினர் என்று குற்றஞ்சாட்டுவதற்கு வசதியாக அதில் (பொய்யான, ஜோடிக்கப்பட்ட) பல ஆவணங்கள், தகவல்கள் இருந்தன.

கவர்னர், தகவலை ஃபிரெஞ்சு போலீஸாருக்குத் தெரிவித்தார். அவர்கள் முறைப்படி ஐயர், அரவிந்தர், பாரதியார், ஆச்சாரியார் வீடுகளுக்குப் பெரும் போலீஸ் படையுடன் சென்று தீவிர விசாரணை செய்தனர் வீடு முழுவதும் கலைத்துப் போட்டுத் தேடிப் பார்த்தனர். எதுவும் கிடைக்கவில்லை. மறுநாள் கோர்ட்டில் விசாரணை நடந்தது. ஐயர் நடந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தார். ஃபிரெஞ்சு போலீஸும் கவர்னரும் இதில் தீவிர கவனம் செலுத்தினர். கடைசியில் இது பிரிட்டிஷ் உளவாளிகளின் சதி என்பது தெரிந்தது. வழக்கு தள்ளுபடி ஆனது.

இந்நிலையில் சென்னையின் மீது எம்டன் குண்டு வீசப்பட்டது. அதற்கு ஃபிரெஞ்சுப் பகுதியில் வசித்து வந்த சுதேசிகள் உதவியிருக்கலாம் என்ற எண்ணம் பிரிட்டிஷாருக்குத் தோன்றியது. அவர்களால் மென்மேலும் தொல்லைகள் பெருகாமல் இருக்க, ஆங்கில அரசாங்கம் ஃபிரெஞ்சு அரசாங்கத்தின் மூலம் புதுச்சேரி கவர்னருக்கு நெருக்கடி கொடுத்தது. கவர்னரும் சுதேசிகள் புதுச்சேரியை விட்டு நீங்கி அல்ஜீரியாவிற்குச் சென்று வசிக்கும்படி கேட்டுக் கொண்டார். பலவிதங்களில் அழுத்தம் தந்தார். ஆனால், சுதேசிகள் இதனை ஏற்கவில்லை. வாதங்கள் தொடர்ந்தன. அழுத்தங்களும் அதிகரித்தன.

இலக்கியப் பணி
வ.வே.சு. ஐயர் தான் எப்படியும் நாடு கடத்தப்பட்டுவிடுவோம் என நினைத்தார். அதற்குமுன் தமிழ் இலக்கிய உலகில் தன் பெயர் சொல்லும்படி ஒரு படைப்பையாவது தந்துவிட உறுதி பூண்டார். தினந்தோறும் காலைமுதல் இரவுவரை திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியைச் செய்தார். தமது படைப்புகளை வெளியிட 'கம்ப நிலையம்' என்ற ஒரு பதிப்பகத்தையும் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாருடன் இணைந்து ஆரம்பித்தார். ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளுக்கு, இதழ்களுக்கு சிறுகதைகள் எழுதினார். 'மங்கையர்க்கரசியின் காதல்', 'குளத்தங்கரை அரசமரம்', 'எதிரொலியாள்', 'கமலவிஜயம்', 'காங்கேயன்' போன்ற கதைகளை எழுதினார். 'சந்திரகுப்தனின் வரலாறு', 'புக்கர் வாஷிங்டன் வரலாறு' போன்ற நூல்களையும் எழுதினார். புனைபெயரிலும், நிஜப்பெயரிலும் தமிழகத்தின் சில இதழ்களுக்கும், புதுச்சேரியில் வெளிவந்த கலைமகள் இதழுக்கும் தொடர்ந்து எழுதினார்.

இலக்கியம் ஒருவர் மனதை மென்மையாக்கும்; மேன்மையாக்கும்; செம்மையாக்கும்; செழுமைப்படுத்தும். அந்த வகையில் ஐயரிடம் இருந்த தீவிர புரட்சிகரமான எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தன. ஏற்கனவே விசாலமான ஐயரின் மனம் மேலும் விசாலமானது. பண்பட்டது. எப்போதும் எவர்மீதும் பூரண அன்பு வெளிப்பட ஆரம்பித்தது.

காந்தியுடன் மீண்டும் சந்திப்பு
இந்நிலையில் 1915ல் தமிழகம் வந்த காந்தி, புதுச்சேரிக்கும் வந்தார். அவரை அரவிந்தர் சந்திக்க விரும்பவில்லை. உடல்நலக் குறைவால் பாரதியாலும் சந்திக்க இயலவில்லை. ஆனால், ஐயர் நேரடியாகச் சென்று காந்தியைச் சந்தித்தார். மகாத்மாவின் அந்த தரிசனம் அவரது வாழ்வை முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது. காந்தியுடனான சந்திப்பிற்குப் பிறகு அவரது வாழ்க்கை மாறிப்போனது. வாளேந்திய, துப்பாக்கி ஏந்திய கைகள் தினந்தோறும் ராட்டையில் நூல் நூற்றன. ஆவேசப் பேச்சு தணிந்து அமைதிப் பேச்சு உண்டானது. மென்மேலும் சாந்தமும், பணிவும், அன்பும் கொண்டவராக மாறிப்போனார். இதுபற்றி வ.வே.சு. ஐயர், பிற்காலத்தில் சுத்தானந்த பாரதியிடம், 'தென் ஆப்பிரிக்காவில் காந்தி பெற்ற வெற்றியைக் கண்டேன். அப்போதே அவரிடம் பற்றிருந்தது, லண்டனில் அவரைப் பார்த்தபோது சத்தியவான், தேஜஸ்வி என்று நினைத்தேன். அப்போது கத்தியில் நம்பிக்கையிருந்த காலம். அதற்கு மேல் ஆத்ம சக்தியொன்று உண்டென்று மகாத்மா விளக்கினார். தமது சாத்விக எதிர்ப்பைப் பற்றியும் யோசிக்கத் தூண்டினார். அதில் நம்பிக்கை வரப் பத்தாண்டுகள் ஆயின. மகாத்மாவின் வழியால் ரத்தம் சிந்தாது நமது காரியம் முன்னேறும் எனத் தெரிந்ததும் மனம் அவரையே தலைவராகப் பின்பற்றியது. மகாத்மா இணையற்ற தலைவர்' என்று சொல்லியிருக்கிறார்.

தமிழகம் திரும்பினார்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவில் சற்றே அமைதி திரும்பியது. மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்த்திருத்தம் அமலுக்கு வந்தது. தொடர்ந்து அரசியல் குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது என்றும் அவர்கள் தாராளமாக பிரிட்டிஷ் இந்தியாவிற்கு வந்து வசிக்கலாம் என்றும் அறிவிப்பு வந்தது. பாரதியார் முன்னமேயே சென்னை சென்று பின் கடையத்திற்குச் சென்றுவிட்டிருந்தார். அரவிந்தர் அரசியலிருந்து முற்றிலுமாக ஒதுங்கித் தீவிர யோக சாதனைகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதால் ஐயரையும் அவரது சென்னை நண்பர்கள் தொடர்ந்து அழைத்தவாறு இருந்தனர். ஐயரும் தமிழ்நாட்டிற்குச் செல்வது மென்மேலும் எழுதுவதற்கும், படிப்பதற்கும் நல்ல வாய்ப்பாக அமையும் என்று கருதினார். அதன்படி 1920ம் ஆண்டில், தன் குடும்பத்துடன் புதுச்சேரியை விட்டு வெளியேறி திருச்சி வரகனேரியை அடைந்தார்.

(தொடரும்)

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline