Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
Tamil Unicode / English Search
நேர்காணல்
சாய் ஷ்ரவணம் (பகுதி - 2)
- மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்|செப்டம்பர் 2018|
Share:
Life of Pi படத்தின் ஒலி வடிவமைப்புப் பணியில் பங்கேற்று, அதன்மூலம் ஆஸ்காரைத் தொட்டவர் சாய் ஷ்ரவணம். இளைஞர். கருவிலேயே இசையைத் திருவாகப் பெற்றவர். இவருக்குப் பெயரிட்டவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. இந்தியாவில் ஒலிப்பதிவா, கூப்பிடு சாய் ஷ்ரவணத்தை என்கிற அளவுக்கு ஆகிப்போய், 'The Man Who Knew Infinity' படத்துக்கும் இவரே இந்திய இசைக்குப் பொறுப்பேற்றார். பல பிளாக் பஸ்டர் தமிழ்ப் படங்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. சங்கீத நாடக அகாடமியின் யுவ புரஸ்கார் அண்மையில் இவரது மகுடத்தில் ஏறிய இறகு. தபலா வித்தகர், இசைசார் கணினித் தொழில்நுட்ப ஆய்வாளர். சென்ற இதழில் தொடங்கிய உரையாடலைத் தொடரலாம் வாருங்கள்...

*****


சாய் ஷ்ரவணத்திடம் ஒரு சந்தேகம் கேட்கிறோம். சவுண்டு எஞ்சினியர், சவுண்டு ரெகார்டிஸ்ட் எல்லாம் கேள்விப்பட்டது உண்டு. அது என்ன சவுண்டு டிசைன்?

சிறிய புன்னகையோடு விளக்குகிறர். Sound engineering என்பதில் எஞ்சினியரிங் என்பது ஒரு சயன்ஸ். ஒலிப்பதிவுக் கருவியில் இருக்கும் கண்ட்ரோல்கள், மைக், அது என்ன மாதிரி கேபிளில் வருகிறது, அதற்கு என்ன பவர் கொடுத்தால் எப்படி வேலை செய்யும் என்பதையெல்லாம் ஆராய்வது சயன்ஸ்.ஒருவர் பக்க வாத்தியங்களோடு பாடும்போது நான் மைக்குகள் பலவற்றை வைத்துப் பலவகை ஒலிகளையும் ஒன்றிணைத்து கம்ப்யூட்டரில் பதிவுசெய்வது ரெகார்டிங். பதிவு செய்த பிறகுதான் எடிட்டிங் வருகிறது. அது பதிந்த ஒலியைத் தெளிவாக்குவது. (ஒரு பதிவில் உள்ள குரல் ஒலி, நடுநடுவே வரும் மூச்சொலி, மிருதங்க ஒலி, அதன் வலங்கைச் சத்தம், இடங்கைச் சத்தம் என எல்லாவற்றையும் தனித்தனியாகவும், ஒன்றாக்கியும் டெமோ செய்து காட்டுகிறார்.)

மைக்கைப் பொறுத்தவரை அதற்கு சங்கீதமும் ஒன்றுதான், சத்தமும் ஒன்றுதான். பாட்டையும் வாங்கிக்கொள்ளும். மூச்சுச் சத்தத்தையும் எடுத்துக்கொள்ளும். மிருதங்கத்தின் இரண்டு பக்கமும் மைக் வைத்தாலும் ஒரு பக்கத்தின் ஒலி மறுபக்கம் வரக்கூடாது. ஒரு எடிட்டர் தனக்கு எந்த ஒலி தேவை, எந்த லெவலில் தேவை, அதற்கு எந்த பேண்ட்விட்த் தேவை, என்ன அதிர்வில் வைக்கவேண்டும், எப்படி வைத்தால் இனிமையாக ஒலிக்கும், எது தேவையில்லை என்பதை அறிந்து அதனை அதற்கேற்றவாறு அமைப்பதுதான் சவுண்ட் எடிட்டிங். இதற்கு மென்பொருள்கள் உதவும்.

அப்படியானால், எடிட்டிங் அதிக முக்கியமோ என்று கேட்கிறோம். அப்படிச் சொல்ல முடியாது என்கிறார் ஷ்ரவணம். ஒழுங்காக ரெகார்டிங் செய்யவில்லை என்றால் பிறகு வேலையே கிடையாது. ரெகார்டிங் ரொம்ப நன்றாக இருந்தால் எடிட்டிங்கிற்கும் நிறைய வேலை இருக்கும். எடிட்டிங் ரொம்ப நன்றாக இருந்தால், ஓட்டை ரெகார்டிங்கையும் கூட நன்றாகச் செய்துவிடலாம். இதற்குத்தான் 'மிக்ஸிங்' என்பது இருக்கிறது. அதாவது நீங்கள் ஸ்டூடியோவின் ஒரு சிறு அறையில் பாடுவதை, ஒரு பெரிய அரங்கத்தில் பாடுவது போல ஒலிக்கச் செய்யலாம்; எதிரொலி எஃபெக்ட் கொடுக்கலாம். அதை எந்த அளவுக்குச் செய்வது என்பதுதான் மிக்ஸிங்.

அடுத்து மாஸ்டரிங். ஒரு ஆல்பத்தில் 10 பாடல்கள் இருந்தால், ஒவ்வொன்றையும் வெவ்வேறு சமயத்தில் ரெகார்டு செய்திருப்போம். சில பாட்டுக்கள் மென்மையாக இருக்கும். சிலது துள்ளல் இசையாக இருக்கும். சிலது மெலடியாக இருக்கும். சிலது உரத்ததாக இருக்கும். இவற்றை அப்படியே சி.டி.யில் பதிந்தால், கேட்பவர் ஒவ்வொரு பாடலுக்கும் ஒலி அளவைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டியிருக்கும். நீங்கள் டி.வி. பார்க்கும்போது விளம்பரம் வந்தால் திடீரென்று அலறும். இதற்குத்தான் மாஸ்டரிங் தேவை. இது இஸ்திரி போடுவது மாதிரி. ஒலியின் அளவை குறுந்தகடு முழுவதும் ஒரே அளவில் ஒலிப்பதாக வைப்பது மாஸ்டரிங். சவுண்ட் ரெகார்டிங், எடிட்டிங், மிக்ஸிங், மாஸ்டரிங் என்று எல்லாம் சேர்ந்ததுதான் ஆடியோ எஞ்சினியரிங்.சவுண்ட் டிசைனிங் என்றால், ஒரு சங்கீதக்காரன் என்ற முறையில் எனக்கு எந்த ஒலி எவ்வளவு தேவைப்படும், எது சரியாக இருக்கும் என்பது தெரியும். ஒலிப்பதிவின் போதே அதைக் கலைஞர்களிடம் கேட்டு வாங்குவதுதான் டிசைனிங். இந்த ஸ்தாயி வேண்டாம், கொஞ்சம் கீழே போகலாம்; மைக்கைப் பார்த்துப் பாடுங்கள், குரலில் ஸ்ட்ரெய்ன் தெரிகிறது, மிருதங்கக்காரர் ஃபிங்கரிங் மாத்துங்கள், தப்பைல வாசிக்காதீங்க என்றெல்லாம் சொல்லிக் கேட்டு வாங்குவது சவுண்டு டிசைனிங். சங்கீதம் தெரிந்திருந்தால்தான் இது சாத்தியம்.

இதற்காகத்தான் பலர் என்னை நாடி வருகின்றார்கள். எவ்வளவு பெரிய இசைக்கலைஞராக இருந்தாலும், இது சரியா, இப்படிப் பாடலாமா, இது நன்றாக வருமா என்று என்னிடம் கேட்டு, அதைப் பின்பற்றுவார்கள். பொதுவாக மற்ற ஸ்டூடியோக்கள் சவுண்டு எஞ்சினியரிங்கோடு நிறுத்திக் கொள்வதால், கலைஞர்கள் என்ன பாடுகிறார்களோ அதுதான்.

கலைஞர்கள் கோபிப்பார்களா?
கலைஞர்கள் சற்றே பெருமிதம் உள்ளவர்கள் ஆயிற்றே, நீங்கள் திருத்தினால் கோபப்படுவார்களா என்று நமது சந்தேகத்தைக் கேட்கிறோம். பெரும்பாலும் அப்படி யாரும் இல்லை என்கிறார் ஷ்ரவணம். மேலே தொடர்கிறார், சில சமயங்களில் அப்படி நடப்பதுண்டு. நான் சொல்வதைச் சொல்வேன். கேட்காவிட்டால் விட்டுவிட வேண்டியதுதான். இதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை. சொல்வதைக் கேட்டுச் சரி செய்துகொள்பவர்கள் 90 சதவீதம். ஒரு 10 சதவீதம் "நீ உன் வேலையைப் பாரு; நான் என் வேலையைப் பார்க்கிறேன்" என்பார்கள். நான் சொல்வது அவர்களைக் காயப் படுத்துவதாகத் தெரிந்தால், சொல்வதை நிறுத்திவிடுவேன். ஒரு குடும்பத்தில் எப்படி பேலன்ஸ் செய்கிறோமோ அப்படித்தான் கலைஞர்களைக் கையாள்வதும்.

காலத்துக்கேற்ற மாறுதல்
அந்தக் காலத்தில் ஒரு சின்ன இடத்தில் 100, 150 பேருக்குப் பாடினார்கள். அப்போது மியூசிக் அகாடமியோ, ஷண்முகானந்தா ஹாலோ, கார்னகி மெல்லனோ, கென்னடி சென்டரோ கிடையாது. அவர்கள் உரக்கப் பாடவேண்டி இருந்தது. பாடினார்கள். இன்றைக்கு 2000 பேர் இருக்கும் அரங்கில், ஒரு இசைக் கலைஞருக்குச் சரியான மைக் கொடுக்காமல் பாடச்செய்தால் இரண்டே வருடங்களில் தொண்டை போய்விடும். மிருதங்கம் வாசிப்பவருக்குக் கை போய்விடும். ஆகவே டெக்னாலஜி மிகவும் அவசியம்.

அந்தக் காலத்தில் சங்கீதம் பொழுதுபோக்கு அல்ல, வழிபாடு. மக்கள் மூட்டை முடிச்சுக்களோடு, சாப்பாடு கட்டிக்கொண்டு போய் கச்சேரி கேட்ட வரலாறு இருக்கிறது. இன்றைக்கு? குழந்தைகளுக்கு பாட்டுப் போட்டுச் சொல்லிக் கொடுக்கிறோம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பிஸியாக இருக்கிறோம். காரில் பாட்டுக் கேட்கிறோம். நடக்கும்போது, ஓடும்போது, பயணத்தின் போது பாட்டுக் கேட்கிறோம். ஆக டெக்னாலஜி இல்லாமல் முடியாது.'Life of Pi' அனுபவம்
பாம்பே ஜெயஸ்ரீ ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, "வெளிநாட்டிலிருந்து ரெகார்டிங் கேட்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் பேசுங்கள்" என்று சொன்னார். பேசினேன். அவர்கள் எனக்கு இமெயில் அனுப்பி உங்களிடம் 'சோர்ஸ் கனெக்ட்' மென்பொருள் இருக்கிறதா என்று கேட்டார்கள். அது ஒரு ஊரில் இருந்தபடி மற்றொரு ஊரில் ஒலிப்பதிவு செய்யப் பயன்படும் சாஃப்ட்வேர். விலை சுமார் $5000. ஒரே ஒரு பாட்டுக்காக வாங்கிப் பயன்படுத்தினால் மறுபடியும் தேவை இருக்குமா என்று தெரியாது. "எனக்கு உங்கள் ப்ராஜெக்ட் செய்ய ஆர்வம்தான். சாஃப்ட்வேரை என்னால் வாங்க முடியுமா என்று தெரியவில்லை. வாங்கினால் மீண்டும் பயன்படுமா என்று தெரியாது. ஆகவே என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்" என்று பதில் அனுப்பினேன். "நாங்கள் லைசைன்ஸ் வாங்கித் தருகிறோம். நீங்கள் செய்வீர்களா? உங்களை இங்கு பலபேர் ரெகமண்ட் செய்திருக்கிறார்கள்" என்று பதில் வந்தது. ஒப்புக்கொண்டேன்.

அவர்கள் உடனடியாக அதற்கான லைசென்ஸ் கொடுத்தனர். நான் அதைக் கற்றுக்கொண்டு, லண்டனில் உள்ள அவர்கள் நிறுவனத்தோடு சில டெஸ்ட் ரெகார்டிங்குகளைச் செய்து சரிபார்த்து, கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. எல்லாம் நன்றாக செட் ஆனதும், பாம்பே ஜெயஸ்ரீயை அழைத்து ரெகார்டிங் செய்தோம். அது ஒரு தாலாட்டுப் பாட்டு. (கேட்க)

அப்போதுதான் ஆங் லீ பேசினார். அவர் எவ்வளவு பெரிய டைரக்டர்! மைக்கேல் டானா (ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்) போன்ற மிகப்பெரிய ஆட்கள் அதில் இருப்பது புரிந்தது. அவர் அங்கிருந்து என்னிடம் பாட்டு இப்படி வரவேண்டும், இந்த வரியை இப்படி டேக் எடுங்கள். அப்படி அனுப்புங்கள் என்று சொல்வார். நானும் அப்படியே செய்வேன். பாம்பே ஜெயஸ்ரீ என் ஸ்டூடியோவில் இருந்து பாடினார். அது ரெகார்ட் ஆனது லாஸ் ஏஞ்சலஸில். ஒரு அமெரிக்கப் படத்துக்காக இந்தியாவில் இப்படி நடந்தது இதுதான் முதல்முறை.

இது நடந்து ஒரு ஏழெட்டு மாசம் இருக்கும். திடீரென்று Fox அலுவலகத்திலிருந்து, ஒரு ஃபோன். "கங்க்ராஜுலேஷன். நீங்கள் ரெகார்ட் செய்த பாடல் ஆஸ்கருக்கு நாமினேட் ஆகியிருக்கிறது" என்றார்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. உண்மையான கால்தானா என்று திரும்பி நம்பரைச் சரிபார்த்தேன். Fox ஸ்டூடியோவிலிருந்து அதன் வி.பி.தான் பேசினார். "பாம்பே ஜெயஸ்ரீயைக் கூப்பிட்டோம். கிடைக்கவில்லை. உங்களுக்குத் தகவல் சொல்கிறோம். நன்றி. ரொம்பப் பெருமையாக இருக்கிறது" என்று சொன்னார்கள். கேட்க ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.

பாபா சொன்ன வார்த்தை
பாபா ஸ்டூடியோவைத் தொடங்கி வைத்தபோது சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன: "நீ சிரத்தையோடு வேலை செய். எல்லாரும் உன்னைத் தேடி வருவார்கள்" என்றார். "Duty, Devotion, Discipline இது மூன்றும் ரொம்ப முக்கியம். நீ ஈடுபாட்டோடு செய்தால் யாரையும் நீ தேடிப் போகவேண்டாம். அவர்களே உன்னைத் தேடி வருவார்கள்" என்றார். பாபா சொன்னதை அப்படியே உணர்வில் அனுபவித்த தருணம் அது. இன்றுவரை ஆங் லீயை நான் பார்த்ததில்லை. மைக்கேல் டானாவைப் பார்த்ததில்லை. ஆனால் உலகம் முழுக்க என் பெயர் போயிருக்கிறது அவர்களால். இந்த ஸ்டூடியோவிற்குப் பெரிய பெயர் கிடைத்திருக்கிறது. அவர்கள் சொல்லி, உலகெங்கிலுமிருந்தும் பலர் என்னைத் தேடி வருகிறார்கள். பாபா சொன்ன வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியத்தைத் தவிர வேறில்லை என்பது எனக்கு முழுமையாகப் புரிந்தது.

'The Man Who Knew Infinity'
'Life of Pi' படத்துக்குப் பின்னர் வந்த வாய்ப்பு 'The Man Who Knew Infinity'. "நீங்கள்தான் இந்தப்படத்தின் இந்திய இசைப் பகுதிக்கு உதவவேண்டும் என்று அதன் தயாரிப்பாளர்கள் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது. ஆனால் வேறொரு பிரச்சனை. என் அப்பா நன்றாகத்தான் இருந்தார். ரெகார்டிங் ஆரம்பிக்க ஒரு வாரம் முன்பாக ஜெனரல் செக் அப் போனார். உடனடியாக இருதய ஆபரேஷன் செய்யவேண்டும், அடைப்பு நிறைய இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். என்றைக்கு ரெகார்டிங் ஆரம்பமோ அன்றைக்குத்தான் அப்பாவுக்கு ஆபரேஷன். அருகில் நான் இல்லாமல் எப்படி? ஆபரேஷன் நடக்கும்போது ரெகார்டிங் ஸ்டூடியோவில் போய் உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா? அப்படி என்னை என் குடும்பத்தார் வளர்க்கவில்லை.தர்மசங்கடம் தவிர்த்தார் பாபா
ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை ஏற்றால் ஏற்றதுதான். ஒப்புக்கொண்ட பின் செய்யவில்லை என்றால் ரொம்பக் கஷ்டம். என் பெயர் கெட்டுப்போகும். இழப்பீடு தரவேண்டி வரும்.

பாபாவிடம் நான் வேண்டிக் கொண்டேன்: "சுவாமி, இந்த ப்ராஜெக்ட் பண்ண வேண்டும் என்றுதான் நினைத்தேன். முடியவில்லை. ப்ராஜெக்டா, அப்பாவா என்றால் எனக்கு அப்பாதான் முக்கியம். அப்பாவை நான் உடனிருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது நான் அவர்களுக்கு இமெயில் அனுப்பப் போகிறேன். எப்படி எழுதினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. என்னால் அவர்களுக்கு நஷ்டம் வந்துவிடக் கூடாது. நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்".

யோசித்து, "என் அப்பாவுக்கு ஹார்ட் ஆபரேஷன். உடனடியாக என்னால் இந்த ப்ராஜெக்டைச் செய்ய முடியாது. செய்வதாக இருந்தால் 25 நாட்கள் கழித்துத்தான் செய்யமுடியும்" என்று எழுத முடிவு செய்து, லேப்டாப்பை எடுத்து, மெயில் பாக்ஸைத் திறந்தால் இன்ப அதிர்ச்சி.

எனக்கு அவர்களிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. நான் மெயில் பாக்ஸ் திறந்த நேரம் 5.28. எனக்கு 5.26க்கு ஒரு மெயில். "அன்புள்ள சாய், இந்த ப்ராஜெக்டில் நாங்கள் எதிர்பார்த்த ட்ராக்ஸ் இன்னமும் ரெடியாகவில்லை. ப்ராஜெக்டை உங்கள் கைகளில் கொடுக்க இன்னும் 3 வாரம் வேண்டும். இதனால் உங்களுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படுமென்றால் அதை உங்கள் பில்லில் சேர்த்து விடுங்கள். நாங்கள் கொடுத்து விடுகிறோம்" என்று மெயில் வந்திருந்தது. இந்த அற்புதத்தை நடத்திக் கொடுத்தது யார்? சந்தேகமில்லாமல் சுவாமிதான். என்னை எழுதக்கூட விடாமல் நல்லபடியாக நடத்திக் கொடுத்தது சுவாமி அல்லாமல் வேறு யார்? அவரிடம் சரணடைவது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டியது. மற்றதை அவரே பார்த்துக் கொள்வார்.

'The Man Who Knew Infinity' கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு. அவர்கள் இசைக்கு என்னையே நம்பினார்கள். ஆனால், சரோட், சிதார் எல்லாம் போடு என்றார்கள். நான், "ராமானுஜன் வாழ்ந்தது தென்னிந்தியா. இங்கே வீணையும் மிருதங்கமும் தான் உண்டு. இந்த ஊர்க்காரருக்கு இந்த வாத்தியம்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் இயல்பாக இருக்கும்" என்று சொன்னேன். அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ராமானுஜன் படத்தில் எனக்கு ஐந்து க்ரெடிட்கள் வந்தன: இசை தயாரிப்பாளர், சவுண்டு எஞ்சினியர், சவுண்டு எடிட்டர், மிக்ஸர், இண்டியன் மியூசிக் கம்போஸர். எல்லா வேலைகளையும் நான் இங்கிருந்தேதான் செய்தேன். இன்றுவரைக்கும் அவர்கள் அதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் அப்படத்தின் டைரக்டர் "சாயியால் இந்தப் படத்தின் மியூசிக் எங்கேயோ சென்றுவிட்டது" என்று புகழ்ந்து சொன்னாராம். அந்தப் பல்கலையில் ஒரு மாணவர், எங்கள் அக்காவின் கணவருக்கு நண்பர். அப்படித்தான் எனக்கு இது தெரியவந்தது.

இதில் சுவையான மற்றொரு விஷயம். இந்த இரண்டு ப்ராஜெக்டிற்கும் நான் பில் அனுப்பியிருந்தேன். என் ஸ்டூடியோவிற்கு என்று ஒரு கட்டண விகிதம் இருக்கிறது. வெளிநாடு என்பதற்காக நான் கட்டணத்தை ஏற்றவில்லை. அதன்படி 'Life of Pi' படத்திற்கு ஒரு பில் அனுப்பினேன். அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. நீங்கள் இவ்வளவு வேலை செய்திருப்பதற்கு நாங்கள் ஒரு பில் அனுப்புகிறோம். நீங்கள் கையெழுத்துப் போடுங்கள் போதும் என்றார்கள். அது நான் கேட்டதைப்போல் 20 மடங்கு அதிகம். நான் எதற்கு இவ்வளவு தொகை என்று கேட்டதற்கு, "இங்கே அந்த வேலையைச் செய்தால் என்ன செலவாகுமோ அதைத்தான் கொடுக்கிறோம்" என்றார்கள்.

'The Man Who Knew Infinity' வேலை முடிந்தபிறகு நான் கேட்டிருந்ததை அனுப்பி வைத்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அதன் கம்போஸர் தன் கையிலிருந்து $2000 எனக்கு அனுப்பினார். நான் மறுத்தேன். "எனக்குத் தரத் தோன்றுகிறது. நீங்கள் எனக்காக அவ்வளவு வேலை பார்த்திருக்கிறீர்கள். வேண்டாம் என்று சொல்லாதீர்கள்" என்றார். ஏன் சொல்கிறேன் என்றால், எல்லாம் பகவான் செய்வதுதான். நான் எதுவும் செய்யவில்லை.என்னைக் கவர்ந்த இசையமைப்பாளர்
சங்கீதத்துக்கு நான் அடிமை என்பதுபோல சப்தத்துக்கும் நான் அடிமை. என்னைக் கவர்ந்த இசையமைப்பாளர் என்றால் ஏ.ஆர். ரஹ்மான் தான். ஒரு சின்ன ஜால்ரா ஒலியைச் சிறப்பாக உலகுக்குக் காண்பித்தார் ரஹ்மான். 'பாம்பே' தீம் மியூசிக்கில் அதை நீங்கள் கேட்கலாம். அதை மட்டுமே வைத்து ஃபுல் ட்ராக்கை ஓட்டியிருப்பார். அது ஒரு விஷன். அந்த அளவுக்கு மிகுந்த திறமைசாலி ரஹ்மான். கற்பனை வளம் கொண்டவர். இளையராஜா கடவுள், சந்தேகமில்லை. அவரது சங்கீதத்துக்கு நான் அடிமை. புதிது புதிதாக ஒலிகளைக் கொண்டு வருபவர் என்ற வகையில், ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் என்னைக் கவர்ந்தவர் ரஹ்மான். அவரது இசையைக் கேட்டே நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். To me he is a legend and a great human being. அவரை மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது அரிது அதுபோல Hans Zimmer என்று ஒருவர் ஜெர்மனியில் இருக்கிறார். அவரை எனக்குப் பிடிக்கும். க்ளாஸிகல் மியூசிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படிப் பலரைப் பிடிக்கும். மிகவும் பிடித்த மேதைகள் என்றால் ரஷீத் கான். குலாம் அலி.

சவுண்டு எஞ்சினியரிங்கின் எதிர்காலம்
"இப்படி ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தால் யாருடா கல்யாணம் பண்ணிப்பா" என்று அம்மா கேட்பார். அப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்றைக்கு என்னிடம் நிறைய ஆடியோ எஞ்சினியரிங் படித்தவர்களின் பெற்றோர் வந்து, "எப்படி செட்டில் ஆவார்கள், எதிர்காலம் உண்டா?" என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்வது ஒன்றுதான். "என்னைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நான் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறேனா இல்லையா" என்று திருப்பிக் கேட்கிறேன். எனது விருப்பம் என்ன என்றால், எப்படி சிவில் எஞ்சினியரிங், மெக்கானிகல் எஞ்சினியரிங் எல்லாம் இருக்கிறதோ அதுபோல சவுண்டு எஞ்சினியரிங், லைட் எஞ்சினியரிங், ஆப்டிகல் எஞ்சினியரிங் எல்லம் வளர வேண்டும். பெர்க்கலியில் சவுண்டு எஞ்சினியரிங் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வரவில்லை. வந்தால் அதற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

நான் இவற்றை முறையாகக் கற்றுக் கொள்ளாததால் எனக்கு ஒரு அனுகூலம் இருக்கிறது. நானே நுணுகி ஆராய்ந்து, வழிமுறைகள் எல்லாம் எனக்கென ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகம், ஒரு International School for Audio Engineering ஏற்படுத்திக் கற்றுத்தர விரும்புகிறேன். உலக அளவில் நாம் இதில் பெரிய உயரங்களைத் தொட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், என் ஆய்வுகளைக் கட்டுரைகளாக எழுத இப்போது நேரமில்லை. என்னுடைய வருமானத்தில் 99 சதவிகிதத்தை ஸ்டூடியோவிற்காகச் செலவு செய்கிறேன். என் கருத்துகளை, முடிவுகளை என்னுடைய கூகிள் ட்ரைவில் ஏராளமாக எழுதியும், ஒலிப்பதிவு செய்தும் வைத்திருக்கிறேன். முன்பெல்லாம் எல்லா டெக்னாலஜிக்கும் பாம்பே என்று இருந்தது. இப்போது சென்னையாக மாறி இருக்கிறது. அதுபோல, லாஸ் ஏஞ்சலஸ் என்று இருப்பது இந்தியாவாக மாறவேண்டும். அதுதான் என் கனவு.

மனைவியும் இசைக் கலைஞர்தான்
என் மனைவி பிரமாதமாகப் பாடுவார். குடும்பப் பொறுப்பு காரணமாகக் கச்சேரி செய்வதில்லை. நிறைய விளம்பரங்களுக்குப் பாடுகிறார். Sacred Chants என்ற குழுவில் வழமையாகக் கச்சேரி செய்கிறார். 8 வயதில் பையன் இருக்கிறான்.

சந்திப்பு: மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்

*****
கலைஞர்களின் பெரிய மனது
எனது அம்மாவுக்கு கேன்சர் வந்திருந்தது. கீழ்வீட்டில் இருந்தார். மேலே ரெகார்டிங் நடக்கும். பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லை. திடீரென அவருக்கு உடல் முடியவில்லை என்றால் அழைப்பு மணி அடிப்பார். நான் ஓடிப் போவேன். அது சுதா ரகுநாதன், மல்லாடி சகோதரர்கள், பாம்பே ஜெயஸ்ரீ என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். பெல் அடித்ததும் போட்டது போட்டபடி அப்படியே கீழே ஓடிப்போவேன். ஒருமணி நேரம்கூட ஆகலாம். இசையுலகின் பிரபலங்கள் நான் வரும்வரை காத்திருப்பார்கள். முகச்சுளிப்போ, கோபமோ இருக்காது. அவர்கள் நினைத்தால் ரெகார்டிங்கை நிறுத்திவிட்டு வேறு ஸ்டூடியோ போயிருக்கலாம். மீண்டும் முதலிலிருந்து ஒலிப்பதிவை ஆரம்பிப்பார்கள். அந்த அளவுக்குப் பண்பானவர்கள். அவர்களின் அந்தப் பெரியமனதுதான் என்னை இந்த அளவுக்கு தாக்குப்பிடிக்க வைத்திருக்கிறது. அவர்களின் அன்பில் நடைபெறும் ஸ்டூடியோ இது.

- சாய் ஷ்ரவணம்

*****


முதலில் வரும் இசை இறைவனிடமிருந்து!
அது 'ராக் ஸ்டார்' என்ற படத்துக்கான தேர்வு. ரஹ்மான் சார் உள்ளே வந்தார். "கேளுங்கள்" என்று சொல்லிப் பாடலைப் போட்டார். நான் கூடவே வாசித்தேன். வாசித்து முடித்ததும், "சரி சார், நான் ரெடி" என்றேன். உடனே அவர் "தேங்க் யூ" என்றார். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. "என்னடா இது, நாம் இன்னமும் வாசிக்கக்கூட இல்லையே, ஏன் நன்றி சொல்கிறார்?". எனக்குப் புரியவில்லை.

வெளியே வந்ததும், "வாசிக்கலாமா சார்?" என்றேன். "ஆங். ஆயிடுச்சி ரெகார்டிங்" என்றார். நாம் சரியாக வாசிக்கவில்லையோ, வாசித்தது அவருக்குப் பிடிக்கவில்லையோ, அதனால் அப்படிச் சொல்கிறாரோ என்றெல்லாம் என் மனதில் எண்ணங்கள். அவரோ "நல்லா வந்திருக்கு. கேக்கறியா?" என்றார். நான் சும்மா வாசித்ததை அப்படியே ரெகார்டு செய்யப்பட்டிருந்தது. திடீர் என்று வாசித்திருப்பேன். நடுவில் விட்டிருப்பேன். திருப்பி ஆரம்பித்திருப்பேன். அதெல்லாம் அப்படியே பதிவாகி இருந்தது.

படம் ரிலீஸ் ஆனது. சரி அந்தப் பாடல் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கப் போனேன். தபலாவை விட்டு வைத்திருப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் அந்தப் பாடலுக்கு நான் வாசித்தது படத்தில் அப்படியே இருந்தது. நான் எங்கே இடைவெளி விட்டிருந்தேனோ அதெல்லாம் கூட அப்படியே இருந்தது.

அடுத்த தடவை ரஹ்மான் சாரைச் சந்தித்தபோது அவர் சொன்னார். "சிலருக்கு முதன்முதலில் வருவது இறைவனிடம் இருந்து வரும். அதற்குப் பிறகு முயற்சி செய்தால் அந்த மனிதருடைய பாவம் சேர்ந்துவிடும். தன்னிச்சையாக வருவது இறைவனிடம் இருந்து வருகிறது. ஆகவே அது அப்படியே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன்" என்றார். அது எனக்கு ஒரு பெரிய பாடம்.

- சாய் ஷ்ரவணம்

*****


ரஹ்மானின் எளிமை
துபாயில் ஒரு சமயம் ரஹ்மான் சாருக்காகத் தபலா வாசிக்கப் போனேன். ஏனோ அன்று அது சரியாக அமையவில்லை. என் முகத்தைப் பார்த்தே அதைக் கண்டுபிடித்துவிட்டார். "என்னய்யா சவுண்டு நல்லால்லையா?" என்றார். "இல்லை சார், பரவாயில்லை" என்றேன். "இரு" என்றவர், நேரே சவுண்டு எஞ்சினியர் அருகே சென்று, தபலாவுக்கான மைக் ஒலியைச் சரி செய்துவிட்டு, என்னிடம் வந்து "இப்ப சந்தோஷமா?" என்றார். அவர் மாதிரி ஒரு உலகப் புகழ்பெற்றவர் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

- சாய் ஷ்ரவணம்

*****


சந்தோஷ் நாராயணனின் அன்பு
சந்தோஷ் நாராயணனுக்கு நான் என்றால் உயிர். ஆடியோ எஞ்சினியரிங், இசை ஆகட்டும், எதுவாக இருந்தாலும் என்னிடம் ஃபோன் செய்து கேட்டுக்கொள்வார். ஏதாவது செய்தால் அதை ஆர்வமாகக் கொண்டுவந்து ஸ்டூடியோவில் என்னிடம் போட்டுக்காட்டி, 'நல்லாருக்கா, நல்லால்லையா, மாத்தணுமா' என்றெல்லாம் கேட்டு - அது கபாலியாக இருந்தாலும் சரி, காலாவாக இருந்தாலும் சரி - ஆலோசனை பெறுவார். அவருக்கு மிக்ஸிங், மாஸ்டரிங் எல்லாம் நான்தான் செய்கிறேன்.

- சாய் ஷ்ரவணம்

*****


சாய் குளோபல் சிம்ஃபொனி
சாய் குளோபல் சிம்ஃபொனிக்காக வேலை செய்ததை என்னால் மறக்க முடியாது. இசை வரலாற்றில் உலக அளவில் மிகப்பெரிய ஏற்பாடுகளில் ஒன்று இது. இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், உக்ரெய்ன், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா என 16 நாடுகளிலிருந்து, உலகின் மிகப்பெரிய இசை நடத்துநர்கள், இசைக்கலைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி 'சாய் குளோபல் சிம்ஃபொனி.' இது ஜெர்மனியில் நடந்தது. அரங்கம் நிரம்பி வழிந்தது. எழுந்து நின்று ஆறு நிமிடத்துக்கு மேல் கை தட்டினார்கள். இப்படிப் பல நாட்டவர் ஒன்று சேர்ந்து நடத்துவது மிகவும் அரியது. மைக்கேல் ஹெர்ட்டிங் (Michael Herting) என்ற கம்போஸருடன் இந்த சிம்ஃபொனிக்காக அவர் சென்னையில் கால் வைத்த நாளிலிருந்து, அது முழுமை அடையும்வரை கூடவே இருந்தேன். இந்திய இசைக்கலஞர்களை வரவழைத்து அவர்களுக்கு வெஸ்டர்ன் நோட்ஸ் சொல்லிக் கொடுத்து, இந்திய இசையாக எழுதிக் கொடுத்தோம். மைக்கேல் ஹெர்ட்டிங் (இசையமைப்பாளர்), மைக்கேல் கோஹ்லர் (நடத்துநர்), ஆண்ட்ரியா ரொமானஸோ, ஹெய்னர் விபர்னி போன்றோருடன் சேர்ந்து இசை வழங்கியது அற்புதமான அனுபவம். (பார்க்க)

- சாய் ஷ்ரவணம்
Share: 
© Copyright 2020 Tamilonline