Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்
Tamil Unicode / English Search
பயணம்
பாலியில் ஜாலியாகச் சில நாட்கள்
- கலா கிருஷ்ணசுவாமி|ஆகஸ்டு 2018|
Share:
ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே இந்தியப் பெருங்கடலில், சுமார் 18000 தீவுகளைக் கொண்ட நாடாகிய இந்தோனேசியாவின் பாலித் தீவிற்கு ஜாலியாக சுற்றுலா போய்வர ஒரு வாய்ப்புக் கிடைத்தது. விடுவோமா...

2018 ஜனவரி 30ம் தேதி இரவு கோவையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வழியாக பாலியின் டான்பாசார் விமானநிலையத்தை மறுநாள் மதியம் அடைந்தோம். எங்களை அழைத்துச் செல்ல திரு. கிம் (வழிகாட்டி) விமானநிலையத்தில் காத்திருந்தார். இன்முகத்துடன் வரவேற்று, 'அவான்சா' காரில் எங்களைக் கூட்டா கடற்கரை அருகில் 'ராமாயணா ரிசார்ட்' என்ற சுகமான தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார். பாலியின் பாரம்பரிய உடையில் ரிசார்ட் ஊழியர்கள் எங்களை வரவேற்று உபசரித்தனர். அன்று இரவு கப்பலில் நடைபெறப் போகும் விருந்திற்குத் (cruise dinner) தயாராகும்படிச் சொன்னார் கிம். அதற்கு முன்பாகப் பணமாற்றம் செய்வதற்குரிய இடத்தையும் காட்டிவிட்டுச் சென்றார்.

அலுப்புத்தீர குளித்துவிட்டுப் செலாவணி பரிமாற்றம் செய்யப் புறப்பட்டோம். பல்வேறு நாடுகளின் பணத்திற்கு ஈடான இந்தோனேசியாவின் ருப்பியா மதிப்பை எழுதி வைத்திருந்தார்கள் ஒரு இந்திய ரூபாய்க்கு, 165 ருப்பியா! நாங்கள் 1௦,௦௦௦ ரூபாய் கொடுத்தோம். 16 லட்சத்து 5௦ ஆயிரம் ருப்பியா கையில் கிடைத்து, ஒரே நொடியில் லட்சாதிபதி ஆகிவிட்டோம்.



ஆனால் அந்தப் பணம் செலவழிந்த வேகமும் நம்பமுடியாததுதான். ஏனென்றால் அங்கே விலைப்பட்டியல் இப்படி இருந்தது:
இளநீர் - 25௦௦௦ ருப்பியா
காபி - 5௦௦௦௦ ருப்பியா
வாழைப்பழம் (1 டஜன்) - 5௦௦௦௦ ருப்பியா.

இதெல்லாம் போகட்டும் என்று கழிப்பிடத்துக்குப் போனால் அங்கே ஒரு நபருக்குக் கட்டணம் 2௦௦௦ ருப்பியா. ஒவ்வொன்றின் விலையையும் கேட்டவுடன் செல்ஃபோன் கால்குலேட்டரில் நம் நாட்டுப் பண மதிப்பைக் கணக்கிட்டேன். காஃபியின் விலை மட்டுமே சுமார் 300 ரூபாய்.

கலைநிகழ்ச்சிகளுடன், இந்தியப் பெருங்கடலில் உலாவந்த கப்பலில் சுவையான இரவு விருந்தை ஒரு பிடி பிடித்தோம். புதுமணத் தம்பதியினரே அதில் அதிகம் இருந்தனர். கைகளில் சிவந்த மெஹந்தி, கண்களில் காதல் போதை, மனமெல்லாம் மகிழ்ச்சி இவற்றோடு, அங்கங்கே ஜோடிகள் செல்ஃபிகளைக் கிளிக்கிக் கொண்டிருந்தார்கள். இந்திய தம்பதிகள் மட்டுமல்லாமல், கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து, பெல்ஜியம், இரான் போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த தம்பதிகளையும் சந்தித்து உரையாடியது மறக்கமுடியாத அனுபவம்.

மறுநாள் எங்களுடைய 39வது திருமணநாளை முன்னிட்டு, கோவிலுக்குச் செல்வதற்காகத் திரு. கிம்முடன் காரில் புறப்பட்டோம். பாலியின் மக்கள்தொகையில் 80 சதவிகிதம் இந்துக்களே. 'கடவுள்களின் தீவு' என்றழைக்கப்படும் இவ்விடத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள்! எங்களைக் கவர்ந்த மூன்று கோவில்களின் மகத்துவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



உலுன் தானு பிரதான் கோவில்:
தபனான் என்ற இடத்திலிருக்கும் இக்கோவிலுக்கு பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற ஒரு தோட்டம்தான் நுழைவாயில். உள்ளே செல்லச் செல்ல, மலைகளால் சூழப்பட்டு, நீர் நிரம்பிய ஏரியில் பிரதிபலித்தபடி தெய்வீக அழகுடன் நின்ற வானுயர்ந்த குவிமாடம் எங்களை வரவேற்றது. அங்கு சிவன், .பிரம்மா, விஷ்ணு, துர்காதேவி, கணேசர் என்று அனைத்துத் தெய்வங்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் இருந்தன. கோவில்களின் உள்ளரங்கில் சென்று வழிபட உள்ளூர் மக்களுக்கு, அதுவும் அவர்களது பாரம்பரிய உடையில் (சரோங்) இருந்தால் மட்டுமே, அனுமதி உண்டு. சற்றே ஏமாற்றத்துடன் வெளியரங்கிலிருந்தபடி வழிபட்டுவிட்டுத் திரும்பினோம்.

தானா லாட் கோவில்:
மிகப்பெரிய பரப்பளவில், அலைகள் கொஞ்சி விளையாடும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாறைகளின் மீது வருண பகவானுக்காக அமைக்கப்பட்ட கோவில் இது. அலைகள் இல்லாத நேரத்தில் ஒரு சிறிய தீவின்மீது கட்டப்பட்ட கோவிலாகத் தெரியும். அங்கு ஒரு பாறையில் தோன்றிய நீருற்றிலிருந்து வரும் நீரை புனித தீர்த்தமாகக் கருதி, மக்கள் பூஜை செய்து தலையில் தெளித்துக் கொள்கின்றனர். இங்கே சூரிய அஸ்தமனம் கண்கொள்ளாக் காட்சி.



உளுவாட்டு கோவில்:
உயரமான மலைமீது இந்தோனேசியப் பாரம்பரிய கட்டடப் பாணியில் அமைந்த கோவில் இது. மேலே ஏறிச்சென்று வெளிப் பிரகாரத்திலிருந்தே இங்கும் வழிபாடு செய்தோம். குன்றின்மீது கோவிலும், அதன் கீழே அலைகள் மோதிவிளையாடும் புருட் தீபகற்பமும் இந்தியப் பெருங்கடலின் அழகுக்கு மேலும் மெருகூட்டின. இங்கு குரங்குகளின் அட்டகாசம் அதிகம். சுற்றுலாப் பயணிகளின் கண்ணாடி மற்றும் உணவுப் பொருட்களைப் பாய்ந்து பறித்துத் திகிலூட்டின. இங்கு மிகப்பெரிய ராவணன் சிலை உள்ளது.

பாலியில் பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் சிவன், விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, கணேசர் போன்ற தெய்வங்களுக்குத் தனித்தனியாக மாடங்கள் கட்டி வழிபடுகிறார்கள்.

பாலியின் பாரம்பரிய நடனத்தைக் கண்டுகளிக்க 'தி பாராங் & கிரிஸ் டான்ஸ்' என்ற இடத்துக்குச் சென்றோம். அதில் நல்லவனுக்கும் ,தீயவனுக்கும் நடக்கும் போராட்டத்தை அழகான நாட்டிய நாடகம் மூலம் எடுத்துரைத்தார்கள். அதில் பங்கேற்ற நடனமங்கைகள் தங்கள் கைவிரல்கள், கண்கள் மற்றும் நளினமான உடலசைவுகளின் மூலம் எங்கள் மனதைக் கொள்ளை கொண்டார்கள்.

பாலியில் பேசப்படும் 'பாலினீஸ்' மொழிச் சொற்களை அப்படியே ஆங்கில எழுத்துக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். உதாரணமாக pria (men) என்றும், wanita (women) என்றும் ஓய்வறைகளின் முன்பு எழுதிருந்தது. பாலினீசிய மொழியில் 'Gang' என்றால் தெரு. 'Gang Arjuna', 'Gang Nagula', 'Gang Rama' என்று தெருக்களின் நுழைவில் எழுதி இருந்தது.



இங்கு கல்லில் சிற்பம் செதுக்கும் தொழில் மிகவும் பிரபலம். சாலைகளில் காணப்பட்ட நாட்டிய மங்கையர், இசைக்கருவி வாசிப்போர் சிற்பங்கள் அழகு. குறிப்பாக விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் உள்ள நகுல, சகாதேவர் உருவங்கள் தத்ரூபம். மூங்கிலில் செய்யப்பட்ட கைப்பைகள், பெட்டிகள், கூடைகள் பார்க்க அழகாக இருந்தன. வேலைப்பாடுமிக்க மரப் பொம்மைகள், விலங்குகள் (சிறிதிலிருந்து பெரியதுவரை) கண்ணைக் கவர்ந்தன. இதை குலத்தொழிலாகப் பல குடும்பங்கள் செய்து வருகின்றன.

பின்னர், பாலி ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள 'பாஜ்ரா சந்தி' என்ற அரசுக் கட்டடத்திற்குச் சென்றோம். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி பெற்ற சுதந்திரத்தை நினைவுகூரும் விதமாக 8 வலுவான தூண்களையும், 17 மாடிகளையும் கொண்டு இந்தோனேசிய கட்டடக்கலை வல்லுநர்கள் கட்டிய இந்த 45 மீ. உயரம் கொண்ட இந்தக் கட்டடம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும்.

அங்கே, மணமுடிக்கப்போகும் ஒரு இளம்ஜோடி தங்கள் திருமணத்திற்கு முன்பான (pre wedding) ஃபோட்டோக்களை எடுத்துக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தோம். எங்களுடனும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அங்கிருந்து ஒரு மணி நேரம் பயணித்து 'மௌன்ட் ஆகுங்' எரிமலையை அடைந்தோம். அது தரை மட்டத்திலிருந்து 3௦௦௦ மீ. உயரத்தில் அமைந்துள்ளது. நாங்கள் சென்றபொழுது பனிமூட்டத்தில் மறைந்திருந்தது. சற்று நேரத்தில் பனிமூட்டம் விலகி பளிச்சென்று எங்களுக்குத் தரிசனம் தந்தது. அதனருகில் இருந்த ஏரியும் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி.

உபுடு குரங்குகள் காடு செல்லத் தீர்மானித்துப் புறப்படுகையில் ஒரு சூடான காஃபி குடிக்க வேண்டும்போல இருந்தது. கைடு திரு. கிம் உடனே எங்களை 'லுவாக்' (Luwak) காஃபி கடைக்கு அழைத்துச் சென்றார். 'லுவாக்' என்ற ஒரு சிறிய விலங்கு காஃபிப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அதன் கொட்டையை ஜீரணிக்காமல் வெளியே தள்ளிவிடுகிறது. அந்தக் கொட்டைகளைச் சேகரித்து, பக்குவமாக வறுத்துப் பொடித்துச் செய்வதுதான் 'லுவாக்' காஃபிப்பொடி. சுமத்ரா, ஜாவா, பாலி போன்ற இடங்களில் இந்த காஃபி மிகவும் பிரசித்தி பெற்றது. விலை என்ன தெரியுமா? 1 கிலோவுக்கு 5௦,௦௦௦ ரூபாய்! விலையைக் கேட்டதும் தலைசுற்றி விழப்போன என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார் என் கணவர்.

சற்று தூரம் பயணித்தபின் ஓரிடத்தில் இளநீர் குடித்தோம். சிறிய பானை வடிவில் இருந்த அதில் தாராளமாக நான்கு பேர் குடிக்குமளவுக்கு இளநீர் இருந்தது கண்டு ஆச்சரியமடைந்தோம். நாங்கள் சென்ற வழிநெடுக இருபுறமும், செழிப்பாக விவசாயம் நடந்துகொண்டு இருந்தது. அங்கு நெற்பயிர் வருடத்திற்கு இரு போகமாக விளைவிக்கப்படுகிறது. மங்குஸ்தான், டூரியன், ரம்புட்டான் போன்ற பழவகைகளும் பலவிதமான காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன. மேலும் பெரிய அளவில் அதே சமயம் எளிதான முறையில் நாற்றாங்கால் அமைத்திருந்த முறை வேளாண் விஞ்ஞானியான என் கணவரை மிகவும் கவர்ந்தது. 3 அடி உயரத்திற்கு மூங்கிலில் செய்யப்பட்ட மேடையில் மண் பரப்பி நாற்றாங்கால் அமைத்திருந்தார்கள்.

பாலித்தீவை ரசிக்க ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள் மிகவும் உகந்தவை. நான்கு நாட்கள் நல்ல ஹோட்டலில் தங்கி, வாடைகைக் காரில் வழிகாட்டியுடன் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இந்திய ரூபாய் 40,000 முதல் 5௦,௦௦௦ வரை செலவாகும். அங்கிருந்த 4 நாட்களில் குறுக்கும் நெடுக்குமாக பாலியில் சுமார் 6௦ கி.மீ. பயணித்திருப்போம். அழகிய மலையும் அதன்மீது வளைந்து நெளிந்து செல்லும் அகலமான மலைப்பாதையும் (குறிஞ்சி), அடர்ந்த உயர்ந்த மரங்களடங்கிய காடுகளையும் (முல்லை), பச்சைப்பசேலென்ற நெல்லும் வாழையும் செழிக்கும் வயலும் (மருதம்), அலைகள் கொஞ்சி விளையாடும் கடற்கரைகளையும் (நெய்தல்) சேர்த்து நான்கு திணைகளையும் ஒரே இடத்தில் கண்டு களித்த பாலியின் அழகு எங்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்றது.
கலா கிருஷ்ணசுவாமி
Share: 




© Copyright 2020 Tamilonline