|
|
விடியற்காலையில் எழுந்து மறவன்புலவு ஐயாவின் வீட்டிற்கு வெளியில் வந்தேன். வீட்டுச்சுவர் முழுவதும் சிறிதும் பெரிதுமாக ஓட்டைகள். எப்படி இத்தனை ஓட்டைகள்? என் அருகில் வந்து நின்ற மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா, புன்னகை மாறாமல் "இவை உள்நாட்டுப் போரின் நினைவுச் சின்னங்கள். குண்டு பாய்ந்த தடங்கள்!" என்று விளக்கினார்.
ஏன் சாந்து பூசி அடைக்கவில்லை என்று கேட்கிறேன். "நிகழ்ந்த பயங்கரம் மீண்டும் நிகழக்கூடாது. அமைதி எத்தகைய விலை கொடுத்துப் பெறப்பட்டது என்பது பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ள இது சாட்சியாக இருக்கும்" என்றார். அவரது சிரிப்புக்குள்ளே புதைந்திருந்த வேதனையை என்னால் உணரமுடிந்தது.
அவர் வீட்டருகே உள்ள வள்ளக்குளம் பிள்ளையார் கோவிலும் போரில் முழுவதும் சேதமடைந்திருந்தது. குண்டுக் காயங்களோடு கோவில் மணிக்கூண்டு இருக்கிறது. யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்த்தால், போரில் சேதமான நூற்றுக்கணக்கான வீடுகள் கூரையில்லாமல், இடிபாடுகளாக, புதர்கள் அடர்ந்து காணப்பட்டன. "உரிமையாளர்கள் இங்கு இல்லை. யாரும் உரிமை கோராததால் இப்படியே கிடக்கின்றன" என்று விளக்கம் கிடைத்தது. மற்றொரு இடிந்த வீட்டின் அருகில் ஒரு பட்டுப்போன மரம்!
யாழ்ப்பாணம் கோட்டையைப் பார்த்தபோதும் இதே அழிவின் கோலம்தான். பதினேழாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அங்கு ஒரு கோட்டையைக் கட்டினர். அது டச்சுக்காரர்களால் இடிக்கப்பட்டு, புதிதாக வேறொன்று கட்டப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள், இலங்கை இராணுவம் இவற்றின் கையில் மாறி, மாறி வந்தது. இப்போது மதில்சுவரைத் தவிர மற்றெல்லாம் இடிபட்டு, பழைய மரபுச்சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோட்டைச் சுவர்மீது ஏறி நின்றால் உள்ளே தென்படும் அழிவு நெஞ்சை உலுக்குகிறது. யாழ்ப்பாணத்தில் கடைகள் புதுப்பொலிவுடன் விளங்குகின்றன. பொருள்களால் கடைகள் நிறைந்திருக்கின்றன. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சிறிதுநேரம் சுற்றினோம். கிறிஸ்துமஸ் அலங்காரம் கண்ணைப் பறித்தது. மறவன்புலவு ஐயா சுவையான பனைவினைத் தின்பண்டங்களை வாங்கி எனக்கு அன்பளித்தார்.
இலங்கையின் ஐம்பெரும் சிவன்கோவில்களில் ஒன்றான நாகுலேஸ்வரம் யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ளது. இதுவும் போர்ச்சுகீசியரால் இடித்துத் தள்ளப்பட்டு மீளக் கட்டப்பட்டதுதான். உள்நாட்டுப் போரில் இதன் கோபுரம் சேதமடைந்தது. கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
எதிரில் கடற்கரையருகில் கீரிமலை கோவிலும், அதற்கருகில் வெந்நீர்க்குளம் ஒன்றும் இருந்தன. கடலுக்கருகில் வெந்நீரா என்று வியந்தேன். அங்கும் ஓரிருவரே இருந்தார்கள். கடற்கரையோரமாக மேற்கே சென்றால் மிக அமைதியான சூழலில் சங்கமித்திரை விகாரமும், பெரிய சிவபெருமான் சிற்பமும் உள்ளது. யாழ்ப்பாணம் நகர் புதுப்பிக்கப்பட்டு, கலைமகள் யாழுடன் நம்மை வரவேற்கும் யாழ்நூலகமும், நினைவுத்தூணும், அருகிலேயே இலங்கைத் தமிழ் மன்னர்கள் எல்லாளன், பரராஜகேசரி இவர்களின் பொன்வண்ணம் பூசப்பட்ட சிலைகளும் கண்ணைக் கவர்கின்றன. புதுப்பிக்கப்பட்டு வரும் கோவில்களில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலும் அடங்கும். தமிழகச் சிற்பிகள் இங்கே புனரமைப்புப் பணிகளைச் செய்வதைப் பார்க்க முடிந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து காரைக்கால்/நாகைப்பட்டினத்திற்கு கப்பல் பயணத்தைத் துவக்கும் விஷயம்பற்றிப் பேசுவதற்காக மறவன்புலவு, என்னையும் அழைத்துச் சென்றார். யாழ் மாவட்டச் செயலர் (இந்தியாவில் மாவட்ட கலெக்டர்) வேதநாயகம் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அவரும் தமிழர். எங்களுடன் அன்பாகத் தமிழில் உரையாடினார். அமெரிக்காவாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டார்.
என்னுடன் தொலைபேசித் தொடர்பிலிருந்த நீர்வேலி மயூரகிரிசர்மா அவர்களையும் சந்தித்தேன். அரசுப் பணியாற்றிய போதிலும், நீர்வை செல்லக்கதிர்காமக் கோவிலில் அர்ச்சகராகவும் தமது தந்தைக்கு உதவியாகத் தொண்டாற்றிவருகிறார். இளவயதில் உள்நாட்டுப் போர் நடந்தபோது அவ்வப்போது ஒளிந்து ஓடிய நினைவுகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். இருப்பினும் இலங்கையின்மீது அவர் வைத்திருக்கும் பற்று என் நெஞ்சை நெகிழ்த்தியது. மறவன்புலவு அவர்களின் சிறந்த நண்பரான அவர் அடுத்த நாள் எங்களை நல்லூர் கந்தசாமி கோவில், காரைநகர் ஈழச்சிதம்பரம், பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவில்களுக்கு அழைத்துச்சென்றார்.
நல்லூர் கந்தசாமிகோவில் புதுப்பிக்கப்பட்டு கருத்தைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. அங்கு கருவறையில் முருகனின் வேலுக்குத்தான் பூசை. மூலவர் சிலை இல்லை. இங்கு இந்துக்கள் மட்டுமன்றி, சிங்கள பவுத்தர்களும் வழிபடுகிறார்கள். தீவாக இருந்த காரைத்தீவுக்குச் சாலையமைத்து காரைநகர் என்று பெயரை மாற்றியிருக்கிறார்கள். அங்கு இருக்கும் ஈழச்சிதம்பரம் சென்றபோது, அக்கோவிலில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அக்கோவிலுக்கு மூன்று, ஐந்து நிலைகளுள்ள இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கின்றன. கோவில் உட்பிரகாரச் சுவர்களை ஆடலரசன் அம்பலவாணனின் நூற்றெட்டு தாண்டவக் கோலங்கள் அலங்கரிக்கின்றன. முருகனின் பிறப்பு-வளர்ப்புச் சுதைச்சிற்பங்கள் மிளிர்கின்றன.
பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார். அவர் கேட்ட சில கேள்விகளுக்கு விடையளிக்க இயலாமல் வழிகாட்டி திகைத்தபோது, அவரது கேள்விகளுக்கு நான் விளக்கம் அளித்தேன். காரைநகரில் இருந்த காசுவரினா கடற்கரையில் மயூரகிரி அவர்கள் கொணர்ந்திருந்த உணவைப் பகிர்ந்துகொண்டு கடற்காற்றை அனுபவித்தோம். பயணிகளுக்காக அங்கு மூங்கில் பெஞ்சுகளுள்ள அலங்காரக் குடிசைகளும் ஓடுவேயப்பட்ட திறந்தவெளிக் கட்டிடங்களும் உள்ளன.
கல்வியைக் கடைச்சரக்காக விற்கும் இந்நாளில் வேதத்தை இலவசமாகக் கற்பித்து வருகிறார் ஆயிரம் பிறைகண்ட எண்பது வயது இளைஞர் மகாதேவ குருக்கள். இணுவில் சென்று அவரைச் சந்தித்து அளவளாவினேன். அரிசோனாவில் ஆனைமுகன் ஆலயம் ஆகம முறைப்படி எழும்பி வருவதை அறிந்த அவர் மிகவும் மகிழ்ந்தார்.
மறுநாள் காலையில் பிரிய மனதில்லாமல் யாழ்ப்பாணத்தை விட்டுக் கிளம்பினோம். கிழக்கே உதித்த செங்கதிரைக் கண்டபோது, குருதிக் குளியல் கண்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் அமைதி புத்தொளி பரப்பும் என்று மனம் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தது. |
|
கிளிநொச்சி, வவுனியா வழியாக அநுராதபுரம் சென்றோம். அநுராதபுரத்தில் புத்தர் காலடி உள்ள இசுருமுனிய விகாரம், தமிழ் மன்னன் எல்லாளனின் சமாதி இவைகளைப் பார்த்தோம். அங்கிருந்து திரிகோணமலை செல்லும் வழியில் ராவணன் தனது தாயாருக்குத் திதி செய்வதற்காகத் தோண்டியது என்று சொல்லப்படும் வெந்நீர் ஊற்றுகளில் காலை நனைத்து, முன்னோர்களை நினைத்துக்கொண்டோம். திரிகோணமலையில் கோணேஸ்வரரைத் தரிசித்ததைச் சொல்லத் தனிக் கட்டுரையே எழுதவேண்டும்.
அங்கேயே நிலாவெளி என்னும் ஊரிலிருந்த லட்சுமிநாராயணர் கோவிலுக்குச் சென்று தரிசித்தோம். இரவு திரிகோணமலையில் தங்கினோம். மறுநாள் பொலனருவா சென்று, ராஜராஜன் கட்டிய சிவன் கோவில், பராக்கிரம பாகு கட்டிய பவுத்த விகாரங்கள், மாளிகை இவற்றைப் பார்த்தோம். அனைத்தும் கலிங்கமாகனின் படையெடுப்பினால் அழிக்கப்பட்டு இடிபாடுகளாகவே இருக்கின்றன. போரினால் கலைச்செல்வங்கள் எப்படி அழிந்து போகின்றனஎன்பதைக் காணும்போது கண்களும், நெஞ்சும் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை.
நாங்கள் உணவருந்திய போது நாங்கள் தமிழில் பேசுவதைக் கண்டு அங்கு வந்திருந்த இளம் இஸ்லாமிய தம்பதியினர் எங்களிடம் பேச்சுக்கொடுத்தனர். சிறிது நேர உரையாடலுக்குப் பின்னர், தமது வீட்டுக்கு வந்து உணவருந்திச் செல்லுமாறு அழைத்தனர். அவர்களது அன்பு எங்களை நெகிழ்த்தியது. நாங்கள் உடனே புறப்படவேண்டி இருந்ததால் இணங்க முடியவில்லை. கண்டி வழியாக நுவரா எலியா என்னும் மலைவாசத் தலத்தில் இரவு தங்கினோம். ஊட்டியில் இருப்பது போலவே அங்கும் ஓர் அழகான ஏரி. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை, தேயிலைத் தோட்டங்கள்.
காலையில் சீதா எலியாவில் இராவணன் சீதையைச் சிறை வைத்த இடத்தையும், மே 2016ல் குடமுழுக்குச் செய்விக்கப்பட்ட ராமர் கோவிலையும் கண்டோம். மிகவும் அமைதியான இடம். கோவிலுக்கும் சீதையின் சிறைக்கும் இடையில் ஒரு அழகிய ஓடை சலசலத்துப் போகிறது. கோவில் நிர்வாகி ஜீவராஜா, அர்ச்சகர் திலகேஸ்வர சர்மா, அங்கு ஒரு புத்தவிகாரம் கட்டமுயன்றதைத் தடுத்து சீதையம்மன் கோவிலைக் கட்டியதை விளக்கினார்கள். அங்கிருந்து கதிர்காமம் செல்லும் வழியில் கந்தசாமிகோவில் ஒன்று மூடப்பட்டு அதனருகில் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டிருப்பதையும் கண்டோம்.
செல்லக் கதிர்காமப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, கதிர்காம முருகனைத் தரிசித்தோம். அங்கு ஒரு திரையில்தான் முருகன் காட்சியளித்தார். வழிபாடும் சிங்களவர்களால்தான் நடத்தப்பட்டது. அனைவருக்கும் திருநீறு வழங்கிய சிங்களவர் என்னையும், என் மனைவியையும் அன்புடன் அழைத்து அங்கு நிற்கச் செய்தார். மனம் நிறைவடையும் வரை கண்குளிர மனக்கண்ணால் கதிர்காம முருகவேளைத் தரிசனம் செய்துவிட்டு வந்தோம். அங்கு முருகனைத் தொழ வந்தவர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே! வெள்ளாடை அணிந்து கோவிலுக்கு வருகின்றனர். வழியில் புத்தர் கோவிலில், பிள்ளையார், சிவன், முருகன் ஆகியோருக்கும் சிலைள் இருக்கக் கண்டேன்.
கொழும்பு திரும்பினோம். வள்ளவத்தையில், மறவன்புலவு ஐயாவின் நண்பரும், அமெரிக்காவிலிருக்கும் இலங்கை நண்பர் அரவிந்தன் தயாபரனின் தந்தையுமான காசிப்பிள்ளை தயாபரன் அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். அவர் எழுதிய மலேசிய நினைவுகள் என்ற ஆங்கிலப் புத்தகத்தை நினைவுப் பரிசாக அளித்தார்.
அன்று மாலை சென்னை திரும்பினோம். விமானத்தின் சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மரகதத்தீவு மெல்ல மெல்ல என் கண்களை விட்டு விலகிப் போனது, மனதை விட்டல்ல. அப்படி என்னவொரு பிணைப்பு அந்தப் பத்து நாள்களில் ஏற்பட்டுவிட்டது என்றே தெரியவில்லை!
(முற்றும்)
ஒரு அரிசோனன் |
|
|
|
|
|
|
|