Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
மா.அரங்கநாதன்
- அரவிந்த்|ஜூன் 2018|
Share:
தனக்கென்று ஒரு தனிப்பாணியை அமைத்துக் கொண்டு, நிறைவாக எழுதி வாசகர்களின் மனம் கவர்ந்தவர் மா. அரங்கநாதன். இவர் நவம்பர் 03, 1932ல் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் பிறந்தார். பெற்றோர் இருவருமே குறள், கம்பராமாயணம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள். அதனால் சிறு வயதிலேயே இவருக்கு இலக்கிய ஆர்வம் துளிர்த்தது. பள்ளி நூலகத்திலும், ஊரிலிருந்த நூல் நிலையத்திலும் வாசித்த நூல்கள் இவரது ஆர்வத்தைத் தூண்டின. எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி இவருடன் படித்தார். எழுத்தாளர் எம்.எஸ். என்று அழைக்கப்படும் எம். சிவசுப்ரமண்யம் இவரது உடன்பிறந்த சகோதரர். பள்ளியில் படிக்கும்போதே எழுத்தாளராகி விட்டார் அரங்கநாதன். முதல் சிறுகதை 'கோபுவின் கதை' என்ற தலைப்பில் கல்கண்டு இதழில் வெளியானது. தமிழ்வாணனின் பாராட்டையும் பெற்றது. அந்த ஊக்கம் மென்மேலும் வாசிக்கத் தூண்டியது. கலைமகள், சக்தி, விகடன், கல்கி போன்ற இதழ்களையும் புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, லா.ச.ரா. போன்றோரது நூல்களையும் வாசித்து இலக்கிய ஆர்வத்துக்குத் தீனி போட்டார். படிப்பை முடித்த உடனேயே இவருக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணி சேர்ந்தார். ஓய்வுநேரத்தில் கன்னிமாரா உள்ளிட்ட நூலகங்களுக்குச் சென்று வாசித்தார். உலக இலக்கியங்கள் பற்றி விரிவான அறிமுகம் ஏற்பட்டது. ஆங்கிலப் படங்களைப் பார்த்தும் தனது அறிவை விரிவாக்கிக் கொண்டார்.

முதல் கதை பிரசண்ட விகடனில் வெளியாகி, மேலும் எழுதத் தூண்டுகோலானது. தொடர்ந்து கணையாழி, பொன்னி, கலைமன்றம், தமிழரசு இலக்கிய மலர், தீராநதி, அமுதசுரபி, விருட்சம் எனப் பல இதழ்களில் எழுதினார். நாளடைவில் எழுதுவதை விட வாசிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். உலக இலக்கியங்கள், வரலாறு, சைவ சித்தாந்தம், மெய்யியல், சித்தரியல், சங்க இலக்கியம் என அனைத்திலும் தேர்ந்தவரானார். கவிதைகளையும் விரும்பி வாசித்து வந்தார். உடன் பணியாற்றியவரும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அவையின் செயலாளருமான நண்பர் பக்தவத்சலத்தின் ஊக்குவிப்பால் அங்கு தொடர்ந்து கவிதைகள் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதுவே அவரது முதல் மேடை. அந்தச் சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு 'பொருளின் பொருள் கவிதை' என்ற தலைப்பில் நூலானது. பின்னர் சில நண்பர்களின் வலியுறுத்தலால் ஆங்கில சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்படங்கள் பற்றி 'சினிமா கதிர்' இதழில் தொடர் எழுதினார். அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வந்தார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியானது. 'வீடுபேறு' என்பது இவர் எழுதிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பாகும். பிரபல இலக்கிய விமர்சகர் க.நா. சுப்ரமண்யத்தால் மிகவும் பாராட்டப்பட்ட தொகுப்பு இது. 'காடன்மலை' என்ற சிறுகதைத் தொகுதியும் பேசப்பட்ட ஒன்றாகும். 'உவரி', 'வீடுபேறு', 'அரணை', 'திருநீர்மலை' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைகளாகும்.

அரங்கநாதனின் நாவலாகட்டும், சிறுகதைகளாகட்டும் ஒவ்வொன்றிலும் 'முத்துக்கறுப்பன்' என்ற பாத்திரம் தவறாமல் இடம்பெறும். தன்னையும் தனது வாழ்க்கை அனுபவங்களையும் அவதானங்களையுமே முத்துக்கறுப்பன் பாத்திரமாக அரங்கநாதன் உலவ விடுகிறார் என்ற கருத்தும் உண்டு. இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து 'முத்துக்கள் பத்து' என்ற தலைப்பில் தனது அமிர்தா பதிப்பகம் மூலம் நூலாக்கியுள்ளார் எழுத்தாளர் திலகவதி. "சமகாலத்தின் முக்கிய சிறுகதை ஆசிரியர்" என்று அரங்கநாதனைப் பாராட்டுகிறார் பிரபஞ்சன். இவரது கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு "மா. அரங்கநாதன் கதைகள்" என்ற பெயரில் நூலாகியுள்ளது. இவரது இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு "மா. அரங்கநாதன் கட்டுரைகள்" என்ற பெயரில் நூலாகியுள்ளது. அரங்கநாதனின் நூல்களில் சிலவற்றைப் பேராசிரியர் தமிழ்ச்செல்வி கன்னடத்தில் பெயர்த்துள்ளார். இவரது 86 சிறுகதைளை சாந்தி சிவராமன் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். 'பறளியாற்று மாந்தர்' என்பது இவரது முக்கியமான நாவலாகும். இதுவே இவரது முதல் நாவல். சமீப காலத்தில் மிகவும் பேசப்பட்ட நாவல் 'காளியூட்டு'. இது சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. 'கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன்' பலராலும் பாராட்டப்பட்ட கட்டுரைத் தொகுப்பாகும். 'சிராப்பள்ளி', 'ஞானக்கூத்து' போன்ற படைப்புகளும் முக்கியமானவை.
"அனைத்துக் கதைகளிலும் முத்துக்கறுப்பன் ஊடாடுவான். அவன் பெயரில் ஒரு டீக்கடையாவது இருக்கும். அல்லது அவன் பெயரில் கள்ள ஓட்டாவது போட்டு விடுகிறார்கள். முத்துக்கறுப்பனா முத்துக்கருப்பனா என்பது கூட ஒரு பிரச்சனைதான். மா. அரங்கநாதனது எழுத்துச் சிறப்பே இப்படி ஒரு பாத்திரம், தப்பு, பல பாத்திரங்கள் ஒரே பெயரில் வந்து போவது வித்தியாசமான முயற்சி. நானும் என் படைப்புகளில் 'ஆறுமுகங்களை' படைப்பதற்கு இவரே உந்துசக்தி. இது சங்கர்லால் போலவோ கணேஷ்-வசந்த் போலவோ அல்ல. இவர் கதைகளில் இவர்தான் முத்துக்கறுப்பனா என்று பல இடங்களில் எண்ணத் தோன்றும்" என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். "நாவலாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும், அதில் கவிதையம்சம் இருக்கவேண்டும். கவிதையம்சம் இல்லாத எந்தஒரு படைப்பும் முழுமைத்தன்மையை அடைவதேயில்லை" என்பது அரங்கநாதனின் கருத்தாகும். இவரது படைப்புகள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரது எண்பது வயது நிறைவு விழாவில் 'முத்துக்கறுப்பன் எண்பது' என்னும் தலைப்பில் 80 கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சைவ இலக்கியங்கள் மீதும் சைவ சித்தாந்த சாத்திரத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எஸ். சண்முகம் இவரைக் கண்டு செய்த நேர்காணல், 'இன்மை-அனுபூதி-இலக்கியம்' என்ற பெயரில் தனி நூலாக வெளியாகியுள்ளது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

அரங்கநாதன் நடத்திய 'முன்றில்' இலக்கியச் சிற்றிதழ் மிகவும் புகழ் பெற்றதாகும். 1988முதல் 1996வரை 20 இதழ்களாக வெளியாகி, பலராலும் பாராட்டப்பட்ட இதழ் இது. நவீன தமிழிலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்புகளைத் தந்த இதழ் இது. அசோகமித்திரன், க.நா.சு, நகுலன், வல்லிக்கண்ணன், சா. கந்தசாமி, ஞானக்கூத்தன் உள்ளிட்ட பலர் முன்றிலில் எழுதினர். முதலில் க.நா.சு.வும், அவரது மறைவிற்குப் பின் அசோகமித்திரனும் இதன் சிறப்பாசிரியராகப் பணியாற்றினர். கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இவ்விதழ் வெளியானது. பின்னர் இவை தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளியாகினது. தி.நகரில் இருந்த இவரது 'முன்றில் புத்தக நிலையம்' பல எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக இருந்தது. இந்தப் பதிப்பகம் மூலம் நல்ல பல இலக்கிய நூல்களை வெளியிட்டார். புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரை அறிமுகப்படுத்தினார். முன்றில் கருத்தரங்கு என்ற பெயரில் பல இலக்கியக் கருத்தரங்குகளையும் நிகழ்த்திய அரங்கநாதன், இலக்கியக் கூட்டங்களையும் மாதந்தோறும் நடத்தி வந்தார்.

இவரது வாழ்க்கையை, 'மா. அரங்கநாதனும், கொஞ்சம் கவிதைகளும்' என்ற தலைப்பில் கவிஞர் ரவி சுப்பிரமணியம் ஆவணப் படமாக எடுத்துள்ளார். மா. அரங்கநாதன் 85 வயதில், ஏப்ரல் 16, 2017 அன்று பாண்டிச்சேரியில் காலமானார். தமிழ் இலக்கிய உலகம் மறக்கக் கூடாத படைப்பாளிகளுள் ஒருவர் மா. அரங்கநாதன்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline