Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 4)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2018|
Share:
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கேவின் மகளின் ஆராய்ச்சி பற்றி சூர்யா விசாரிக்கவும், என்ரிக்கே கொந்தளித்தார். அடுத்து நடந்தது என்ன என்பதை மேற்கொண்டு பார்ப்போம்!

*****


தன் மகள் சான் டியகோவில் மரபணுத் துறையிலேயே செய்யும் ஆராய்ச்சியில் பிரச்சனை எதுவுமில்லையே என்று சூர்யா விசாரித்ததும் மகளைப் பற்றிய விவரங்களை ஏன் சூர்யாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஷாலினியிடம் என்ரிக்கே சீறவும், அப்படியில்லை, சூர்யாவே யூகித்திருக்க வேண்டும் என்று ஷாலினி மறுத்தாள்.

என்ரிக்கே சாந்தமடையவில்லை. "அப்படியானால், நீங்கள் என்னைப் பற்றிக் கூறியதும், சூர்யா ஏதோ குடாய்ந்து என் மகளைப் பற்றிய விவரங்களைத் தேடி எடுத்திருக்கிறாரா? எதற்காக?"

ஷாலினி மீண்டும் கையசைத்து சாந்தமடையுமாறு சைகை காட்டி, "இல்லை என்ரிக்கே, சூர்யாவுக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது. இப்போ சில நிமிடங்களுக்கு முன்தான் தெரிவிச்சேன். இப்போ உங்களைப் பார்த்து ஏதோ யூகிச்சிருக்கார். விளக்கிடுங்க சூர்யா, என்ரிக்கே ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டிருக்கார்" என்றாள்.

என்ரிக்கே நம்பிக்கையில்லாமல் ஏதோ சொல்லப் போகவே சூர்யா இடைமறித்து, "ஓகே, ஓகே விளக்கிடறேன். அது ஒண்ணும் ரொம்பப் பிரமாதமான யூகமில்லை. உங்க மேல் கோட்டுடைய வலது கீழ் பாக்கெட்ல பாருங்க ஒரு ஆன்வலோப் இருக்கு. அந்த ஆன்வலோப்போட இடது மேல்மூலையில அனுப்பியவர் முகவரி இருக்கு. அதுல ஸெரா லின் காஸ்ட்ரோ அப்படிங்கற பேரும், மரபணு ஆராய்ச்சி மையம், கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், சான் டியகோன்னு போட்டிருக்கு. அதை வச்சு அது உங்க மகள் கிட்டேந்து வந்த எதோ விவரம்னு சும்மா யூகிச்சேன் அவ்வளவுதான்!"

சூர்யாவின் விளக்கத்தைக் கேட்ட என்ரிக்கே உரக்கச் சிரித்தார். "பிரமாதம்! எவ்வளவு ஸிம்பிள், ஆனா அதை வச்சு என்ன சரியான கணிப்பு! என் கவலையை ஒரு நிமிஷம் மறக்க வச்சீட்டீங்க. உங்களைப் பத்தி ஷாலினி சொன்னது சரிதான்! நீங்க ரொம்ப திறமைசாலின்னுதான் தோணுது!"

ஷாலினி தன் நேசத்துக்குரிய சூர்யாவைப் பெருமிதத்துடன் பார்த்துத் தனக்குள் மலர்ந்தாள். அவள் மந்தகாசத்தைக் கவனித்த கிரண் அவளைச் செல்லமாக இடிக்கவே, ஷாலினி நாணிக்கொண்டாள். சூர்யா அதைக் கவனித்துப் புன்னகைத்தார்.

இந்த சில நொடிச் செல்ல நாடகத்தைக் கண்டுகொள்ளாத என்ரிக்கே பூஜைவேளை கரடியாகத் தொடர்ந்தார். "சரி இப்போ நான் உங்களுக்கு என்ன சொல்லி ஆரம்பிக்கணும்?"

சூர்யா பதிலளித்தார். "நான் முன்னால் சொன்னபடி எனக்கு க்ரிஸ்பர்னா என்னன்னு ரொம்ப மேலோட்டமாத்தான் தெரியும். அதுனால, எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கற மாதிரி முதல்லேந்தே ஆரம்பியுங்க என்ரிக்கே. கிரணுக்கும் அது பயன்படும். அவனும் எல்லா கேஸ்லயும் எனக்கு உதவறான்... ஷாலினிக்கு வேணா போரடிக்குமாயிருக்கும், இருந்தாலும் பரவாயில்லை, அடிப்படையிலிருந்தே ஆரம்பியுங்க."

ஷாலினி, "எனக்கும் சுவாரஸ்யந்தான். மரபணு மாற்றத் துறையில எனக்கும் கொஞ்சந்தான் தெரியும். பரவாயில்லை, அடிப்படையிலிருந்து விவரமாவே சொல்லுங்க என்ரிக்கே" என்றாள்.

வாழ்நாள் முழுவதும் ஆழ்ந்து பாடுபட்ட தன் ஆசைத் துறையைப் பற்றி என்ரிக்கெ உத்வேகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார். "மரபணுத் துறைக்கு அடிப்படை விஷயம் டி.என்.ஏ. தான். அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?"

கிரண் குதித்தான்! "ஓ! ஓ! பிக் மீ, பிக் மீ!". ஷாலினி அவனை அடக்கினாள். "சே என்ன இது கிரண் சின்னப் பையன் மாதிரி! சும்மா இரு!" என்ரிக்கேவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உரக்க சிரித்துக் கொண்டு, கையால் கிரணுக்கு மேலே தொடருமாரு சைகை செய்தார்.

கிரண் உற்சாகத்துடன் தொடர்ந்தான். "டபுள் ஹீலிக்ஸ்!" என்று கூறிக் கொண்டு இரு விரல்களைப் பிணைத்துக் காட்டினான்.
என்ரிக்கெ கைதட்டிச் சிலாகித்தார். "யெஸ், அஃப்கோர்ஸ்! டி.என்.ஏ, ஒரு நீளமான ரெட்டைச் சுருள் வடிவமுள்ளது. அடினைன் (A), சைடஸீன் (C), குவானைன் (G), தயமின் (T) என்கிற நான்கு அடிப்படை வேதியியல் பொருட்கள் ஜோடிகளா சேர்ந்து நீளமான சங்கிலித் தொடரா அமையறதுதான் டி.என்.ஏ."

கிரண் மீண்டும் துள்ளினான்! "A, C, G, T! A Caged Growling Tiger! எங்க பயாலஜி டீச்சர் ஹைஸ்கூலில, ஞாபகம் வச்சுக்க சொல்லிக் குடுத்தாங்க!"

என்ரிக்கே மீண்டும் கைதட்டிச் சிலாகித்தார்! "ஆஹா, இது நல்லா இருக்கே! என் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கறேன். மிக்க நன்றி! இந்த நாலு பொருட்களில, A வந்து T-யோட மட்டும் தான் இணையும். C இணையறது G-யோட மட்டுந்தான். அதுனால, AT, CG அடிப்படை ஜோடிகள் மீண்டும் மீண்டும் சேர்ந்து சங்கிலியாகறதுதான் டி.என்.ஏ. அந்த ஒவ்வொரு ஜோடியையும் ஒரு ஏணிப் படியா வச்சுக்குங்க. அப்படின்னா, டி.என்.ஏ நிறையப் படிகள் உள்ள ஒரு வெகு உயர ஏணின்னு வச்சுக்கலாம் இல்லையா?"

கிரண் குழம்பினான். "ஓகே, ஆனா ஏணி நேரா இருக்கும், டி.என்.ஏ. ஒரு ரெட்டைச் சுருள் வடிவமாச்சே!"

என்ரிக்கே முறுவலித்தார். "நல்ல கேள்வி. ஆனா, அதே ஏணியை, படிகளின் மையங்களைச் சுத்தி முறுக்க முடிஞ்சா? அது ரெட்டைச் சுருளா ஆயிடும் இல்லையா? அதான்!" என்று கூறி தன் இரு விரல்களை சுற்றிப் பிணைத்து காட்டிப் புன்னகைத்தார்.

சூர்யா "ஓ! பிரமாதம் என்ரிக்கே! எனக்கு இப்ப அந்த வடிவம் நல்லாப் புரியுது!" என்றார். ஷாலினியும் பாராட்டினாள். "ஒரு கஷ்டமான விஷயத்தை எளிதா விளக்கிட்டீங்களே என்ரிக்கே?! சபாஷ்! நானும் இதை பயன்படுத்திக்கறேன்!"

என்ரிக்கே தொடர்ந்தார். "இன்னொரு உதாரணம்: டி.என்.ஏ.வை ஒரு மொழின்னு வச்சுப்போம். அப்படின்னா, ஜோடிகளான AT-யையும், CG-யையும் அந்த மொழியின் எழுத்துக்களா வச்சுகிட்டா, உயிரினங்களின் இனப்பெருக்க அடிப்படையான க்ரோமோஸோம்களை வாக்கியம்னு சொல்லலாம். அந்த எழுத்துக்களின் கோர்வை மாறுபடறதுதான் வெவ்வேற வாக்கியங்களான க்ரோமோஸோம்களின் சாராம்சம்."

சூர்யா தலையாட்டினார். "இதுவரைக்கும் நல்லா புரியுது. எழுத்து, வாக்கியம்னு சொன்னீங்க. அப்படீன்னா அந்த டி.என்.ஏ. மொழியில் வார்த்தைகள் என்ன?"

என்ரிக்கே மீண்டும் கைதட்டிச் சிலாகித்தார். "ஆஹா, பிரமாதமான கேள்வி. சரியான ஆணி அடி அடிச்சீங்க சூர்யா! எழுத்துக்களின் தொடர்கள் வார்த்தை. வார்த்தைகளின் தொடர்தானே வாக்கியம்? அப்போ க்ரோமோஸோம் வாக்கியம்னா, வார்த்தைகள் என்னவாக இருக்கும்?"

இம்முறை ஷாலினி குதித்தாள். "ஆஹா, என்ன பிரமாதமான உதாரணம்! அப்போ மரபணு (gene) தானே வார்த்தையாகும்?"

சூர்யாவும் ஆமோதித்தார். "ஆமாம் என்ரிக்கே, பிரமாதம்!"

என்ரிக்கே மீண்டும் பெருமிதப் புன்னகை பூத்தார். "மிக்க நன்றி.

இப்போ இனப்பெருக்கத்துல இந்த மொழி எப்படி பயன்படுதுன்னு பாக்கலாம். எந்த உயிரினமும் பெருகணும்னா அதோட க்ரோமோஸோம்கள் அதாவது மரபணுத் தொடர்கள் அதன் குழந்தைக்கோ குட்டிக்கோ போய்ச் சேரணும். மனிதர்கள்னு எடுத்துகிட்டா, ஒரு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிறக்கற குழந்தையின் டி.என்.ஏ, அவங்களோட 23 க்ரோமொஸோம்களின் கலவை."

கிரண் களுக் என்று சிரித்தான். என்ரிக்கே சினத்துடன் அவனை முறைக்கவே, கைகளைத் தூக்கிக் காட்டி மன்னிப்புக் கேட்டான்.

"ஸாரி என்ரிக்கே, அந்தக் க்ரோமோஸோம் கலவை ஏற்படறதுக்கு என்ன நடக்கணும்னு நினைப்பு வந்துடுச்சு, சிரிச்சுட்டேன். ப்ளீஸ் ப்ரோசீட்!"

என்ரிக்கேவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது! "ஓகே, ஓகே, பரவாயில்லை. நீ சொன்னப்புறம் எனக்குந்தான் சிரிப்பு வருது. சரி, அடுத்து நாம எப்படி அப்பா அம்மாவின் மரபணுத் தொடர்கள் பிரிக்கப்பட்டு, மரபணுக்கள் கலக்கப்பட்டு, குழந்தையின் மரபணுத் தொடர்களா சேர்க்கப்படுதுன்னு விவரிக்கறேன்."

என்ரிக்கே அடுத்து மரபணுத் தொடர்களைப் பற்றி விவரித்தார். என்ன ஒரு மாய உலகம் அது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: