|
|
|
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்வதாகக் கூறினாள். மரபணு மாற்றத்தின் மர்மத்தை சூர்யா எப்படி தீர்க்கிறார் என்பதை மேற்கொண்டு பார்ப்போம்!
*****
மரபணு மாற்றத்தின் மர்மத்தை நிவர்த்திக்க சூர்யாவை அறிமுகப் படுத்துவதாக ஷாலினி கூறியதும், என்ரிக்கே அவநம்பிக்கையுடன் ஒப்புக் கொண்டதும், ஷாலினி உற்சாகமாக, "கவலைப் படாதீங்க என்ரிக்கே! சும்மா சூர்யாவை அறிமுகம் செஞ்சுட்டு விட்டுட மாட்டேன். நானும் அவரோடயும், உங்களோடயும் சேர்ந்து பிரச்சனையை ஆராய்ஞ்சு நிவாரணம் கண்டுபிடிக்க உதவுகிறேன்" என்றாள்.
ஷாலினியும் உதவுவதாகக் குறிப்பிட்டவுடன் சற்றே அதிக நம்பிக்கையுடன் என்ரிக்கெ முறுவலித்தார். "சரி ஷாலினி, இந்தக் கருத்தரங்கு முடிஞ்சு நாளைக்கு ஊர் திரும்பினதுமே சூர்யாவை சந்திச்சு ஆலோசிக்கலாம். இப்போ என்னோடு வாங்க ஒரு ரொம்ப முக்கியமான கூட்டமர்வு (panel session) இருக்கு. போய் என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்."
மறுநாள் - சிலிக்கான் வேலி விரிகுடாப் பகுதியில்...
சூர்யா தன் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு தன் ஐபேடில், இணையதளத்தில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். அங்கேயே கிரண் இன்னொரு நீள நாற்காலியில் படுத்துக்கொண்டு கைபேசியில் எதையோ விளையாடிக் கொண்டிருந்தான்.
சூர்யா படிப்பதை நிறுத்திவிட்டு, "ஏய் கிரண், சும்மா ஃபோன்லயே விளையாடி நேரத்தை விரயம் பண்ணாம, இந்த சுவாரஸ்யமான விஷயத்தைப் பத்திப் படியேன்! க்ரிஸ்பர்னு ஒரு பிரமாதமான நுட்பம் வந்திருக்கு. அதை வச்சு சரியில்லாத ஜீன்ஸ் எல்லாம்கூட மாத்தி ரிப்பேர் செய்யறாங்களாம். செயற்கையாகூட உற்பத்தி பண்ண முடியும்னு சொல்றாங்க!"
கிரண் அலட்சியமாகக் கொட்டாவி விட்டான். "அதுக்கென்ன இப்போ? ஜீன்ஸை மாத்தறதென்னெ கஷ்டமா? ஸ்கூல்ல படிக்கறச்சே, ஷாலினி கூட புதுசா ஜீன்ஸ் வாங்கி உடனே கத்திரியால வெட்டி, கல்லால தேச்சு ஆஸிட் வாஷ் பண்ணி கண்ராவியா மாத்தி போட்டுகிட்டா! எங்க அம்மா கூட லபோலபோன்னு கத்துவாங்க! ஏன் என்னோட ஸ்கூல்ல சில ஹாட் பேப்ஸ் ஜீன்ஸ் கால்களை மொத்தமா வெட்டி ஹாட் பேண்ட்ஸுன்னு போட்டுகிட்டு அலைவாங்க – ஆஹா, என்ன ஸீன், என்ன ஸீன்!" என்று கூறிவிட்டு, சூர்யாவை மறந்து விட்டு, தன் கனவுக் கன்னிகளோடு உலாவ ஆரம்பித்து விட்டான்!
சூர்யா அவனை மீட்டார். "எர்த் காலிங் கிரண், எர்த் காலிங் கிரண்! ஹே கிரண்!" என்றதும் கிரண் திடுக்கிட்டு அவரைப் பார்த்து "என்ன, என்ன?" என்றான்! சூர்யா ஒரு கையால் நெற்றியில் அடித்துக் கொண்டார். "சரியாப் போச்சு! உன் கனவுக் கன்னிகளை விட்டுட்டு, நான் சொல்றதை சரியாக் கேட்டுக்கோ!"
கிரண் கலகலவெனச் சிரித்தான். "சே போங்க பாஸ். உங்களோட பேசி போரடிக்கறதை விட என் கன்னிகள் சுவாரஸ்யம். சரி போகட்டும் அப்புறமா அவங்களைப் பாத்துக்கறேன். சொல்லுங்க, அப்படி என்ன சுவாரஸ்யமா இருக்கு?"
சூர்யா பெருமூச்சுடன் "உன்னைத் திருத்தவே முடியாது! சரி போகட்டும். க்ரிஸ்பர் நுட்பம்னு சொன்னேனே கேட்டயா?""
கிரண் குழம்பினான். "க்ரிஸ்பரா! எங்க வீட்டுல ப்ரிட்ஜ்ல க்ரிஸ்பர்னு ஒரு ட்ராயர் இருக்கும் அதுவா? அதுக்கும் ஜீன்ஸ் ரிப்பேர் செய்யறத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்தக் குளிர்லயே சரியாயிடுமா என்ன?"
சூர்யா மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தார். "சரியான ஆசாமிடா நீ! ரெண்டு வார்த்தையையும் அனர்த்தமா மாத்திட்டயே. நான் சொல்ற ஜீன்ஸ் உயிரியல் துறையில வர மரபணு. க்ரிஸ்பர்ங்கறது வார்த்தையில்லை ஒரு அக்ரோனிம் அதாவது பல வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைக் கோர்த்து சொல்றது, ரேடார் மாதிரி. C-R-I-S-P-R க்ரிஸ்பர். அது வந்து மரபணுக்களில் இருக்கற டி.என்.ஏ கோப்புக்களை வெட்டி, கோத்து மாத்தற நுட்பம். இப்ப உயிர்நுட்பத் துறையில் (Bio-tech) மிக மிக உச்ச நிலையில் வளர்ந்துவரும் நுட்பம். பல அற்புத முன்னேற்றங்களைத் தந்துகிட்டிருக்கு."
கிரண் முகம் சுளித்தான். "அய்ய, ஜெனடிக்ஸா! அது எனக்கு ஒத்து வராதுப்பா! போன கேஸ்ல பாத்த அந்த முப்பரிமாண மூல மரபணு பதிப்புன்னெல்லாம் கேட்டு மண்டை காஞ்சாச்சு. இது ஷாலினிக்குதான் சரிபட்டு வரும். அவகிட்டயே பேசிக்குங்க. மணி கணக்கா பேசுவா!" என்றவன் தன் கைபேசியில் "டிங்!" என்று செய்தி வரவு மணியடிக்கவும் எடுத்துப் பார்த்துவிட்டு ஆரவாரித்தான். "ஹா ஹா, டாக் ஆஃப் த டெவில்! எங்கப்பா பாடற மாதிரி நினைத்தேன் வந்தாய் நூறு வயது! சொன்னவுடனே டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பிச்சுட்டாளே. எதோ கருத்தரங்குன்னு போயிருந்தா இல்ல? அங்க சந்திச்ச யாரோ என்ரிக்கேயாம், அவருக்கு க்ரிஸ்பர், மரபணு மாற்ற நுட்பத்தில் எதோ பிரச்சனையாம்! அழைச்சிட்டு வராளாம், நாம சந்திக்கத் தயாரான்னு கேட்கறா!"
தன் ஆழ்ந்த நேசத்துக்குரிய ஷாலினியின் பெயர் கேட்டவுடனேயே இனிமையாகக் கனிந்த சூர்யா ஆச்சர்யப்பட்டார்! "பாத்தியா, நெனச்சதும் வந்தது ஷாலினி செய்தி மட்டுமில்ல, அதுவும் மரபணு பத்திய செய்தி, க்ரிஸ்பர் கூட! டபுள் செஞ்சுரி போலிருக்கு! சரி சரி, வரச்சொல் வரச்சொல், ஷாலினியை பாத்தே சிலநாள் ஆச்சு."
கிரண் 'அஹ்ஹா, சூர்யா, கூடிய சீக்கிரம் நீங்க ஷாலினிகிட்டயே உங்க நேசத்தைச் சொல்லத்தான் போறீங்க, அந்த நல்ல நாள் சீக்கிரமே வரட்டும்' என்று உள்ளுக்குள் நினைத்துப் புன்னகைத்தவன், சூர்யாவுக்குத் தெரியாமல் மறைத்துக்கொண்டு, "உக்கும் இதுல என்ன இருக்கு, நம்ம கேஸ் ஒவ்வொண்ணும் கிட்டத்தட்ட இப்படித்தானே ஆரம்பிக்குது! பார்ப்போம் இந்த என்ரிக்கே விஷயம் என்னன்னு!" என்று கூறிவிட்டு ஷாலினிக்கு "ரெடி!" என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
சில நிமிடங்களுக்குள்ளேயே ஷாலினி என்ரிக்கேயுடன் வந்து சேர்ந்தாள். சிலநாள் சந்திக்காத தன் அன்பு சூர்யாவைப் பார்த்து ஒரு நேசப் புன்னகை வீசினாள். சூர்யாவும் பதிலுக்குப் புன்னகைத்தார். கிரண் இந்தப் புன்னகை பரிமாற்றலால் உச்சி குளிர்ந்தான். "ஹைசிஸ்! கருத்தரங்கு எப்படி, விவரமா சொல்லு!" என்றான்.
ஷாலினி அவனைச் செல்லமாகத் தட்டி மறுதளித்தாள். "அதப் பத்தியெல்லாம் அப்புறம் விவரம் சொல்றேன். இப்ப வந்த விஷயம் உடனே பேசணும். இவர்தான் நான் சொன்ன என்ரிக்கே காஸ்ட்ரோ. இவர் உயிர்நுட்பத் துறையில் மிக முன்னேறிய நுட்பத்தைப் பயன்படுத்தி..."
கிரண் இடைமறித்தான். "ஆஹா! தெரியுமே. க்ரிஸ்பர், மரபணு மாற்ற நுட்பம்… அதானே?" |
|
என்ரிக்கே ஆச்சர்யமடைந்தார். "பரவாயில்லயே, கனகச்சிதமா சொல்றிங்க!"
ஷாலினி கலகலவென சிரித்தாள்! "உக்கும், கச்சிதமா நான் அனுப்பிச்ச டெக்ஸ்ட் செய்தியை ஒரு எழுத்து மாத்தாம சொல்றான் அவ்வளவுதான்!"
கிரண் பழிகாட்டினான். "ஹேய், அவ்வளவுதான்னு நெனச்சயா, க்ரிஸ்பரால ஜீன்ஸ் டி.என்.ஏ. எல்லாம் வெட்டி மாத்தி ரிப்பேர் செய்யலாம். அதெல்லாம்கூட தெரியும்!"
ஷாலினி வாய் பிளந்தாள்! "வாவ், கிரண்! ஃபன்டாஸ்டிக். எப்படிடா!"
சூர்யா சிரித்துக்கொண்டு, இப்ப ஒரு நிமிஷம் முன்னாடிதான் அவனுக்கு நான் படிச்சதப்பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன், அப்ப கரெக்டா உன் செய்தி வந்தது அவ்வளவுதான். அவனுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒப்பிச்சாச்சு. சரி அதை விடுங்க என்ரிக்கே. உங்க பொண்ணு சான் டியகோவில உங்க துறையிலேயே ஆராய்ச்சி செய்யறாங்க போலிருக்கு? அவங்க ஆராய்ச்சி எப்படிப் போயிட்டிருக்கு? அதுல ஒண்ணும் உங்களுக்கு இருக்கற மாதிரி எதுவும் பிரச்சனையில்லதானே?"
சூர்யாவின் இந்த குசல விசாரணை என்ரிக்கேவுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தது. அவர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிக்காமலிருக்கக் கிரண் முயன்றான்.
சுதாரித்துக் கொண்ட என்ரிக்கே கொந்தளித்தார். அடக்கமுடியாத கோபத்துடன், "ஷாலினி என்ன இது? என் பிரச்சனயைப் பத்தி விசாரிக்கக் கூப்பிட்டா எதுக்கு இவர்கிட்ட என் மகளைப் பத்தியெல்லாம் சொன்னீங்க?"
ஷாலினி முறுவலுடன் கையை உயர்த்தி என்ரிக்கேயை அமைதிப் படுத்தினாள். "சே சே, அதெல்லாம் ஒண்ணுமில்ல என்ரிக்கே! நான் சொல்லலை. சூர்யாவே யூகிச்சிருக்கார் போலிருக்கு. என்ன சூர்யா?"
சூர்யா என்ன பதிலளித்தார், அதை என்ரிக்கே ஏற்றுக்கொண்டாரா, என்பவற்றையும், மரபணு மாற்றத்தின் மர்மம் என்ன, சூர்யா அதை எவ்வாறு தீர்த்து வைத்தார் என்பதையும் வரும் பகுதிகளில் காண்போம்!
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|